Friday 23 June 2017

JAFFNA FORTயாழ்ப்பாணக் கோட்டை வரலாறு

JAFFNA FORT யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு



கலாநிதி க.குணராசா அவர்கள் எழுதிய யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு என்னும் புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. நானூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை, இலக்கிய வடிவில் விறுவிறுப்பு குறையாமல் படிக்கும்படி தந்துள்ளார். இன்றைய சூழ்நிலையில் யாழ்ப்பாணக் கோட்டை தொல்லியல் ஆய்வுத்தளமாகவும், சுற்றுலாத் தளமாகவும் முக்கியத்துவம் பெற்றுவரும் வேளையில், கோட்டையின் கட்டமைப்பு பற்றிய அத்தியாயத்தை இங்கு பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன்.

ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட கோட்டை கட்டமைப்பில் மிக அற்புதமானதாகும். கீழைத்தேசத்தில்லுள்ள கோட்டைகள் யாவற்றிலும் யாழ்ப்பாணக் கோட்டை மிகப்பலமானதும் பாதுகாப்பானதும் என அனைத்துக் கட்டிடக்கலை விற்பன்னர்களாலும் விதந்துரைக்கப்பட்டது. யாழ்ப்பாணக் கோட்டை அமைக்கப்பட்ட காலத்தில் இந்து சமுத்திர நாடுகள் பலவற்றிலும் பலமான கோட்டைகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் அவை எதுவும் யாழ்ப்பாணக்கோட்டையின் முழுமைக்கும் நிறைவுக்கும் தொழில்நுட்பத்திறனுக்கும் நிகராகாது என பலரும் போற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணக்குடா நாட்டின் தென் விளிம்பில் யாழ்ப்பாணாக் கடனீரேரியின் கரையில் கம்பீரமாக யாழ்ப்பாணக் கோட்டை அமைந்த்திருந்த்தது. ஒல்லாந்தர் யாழ்ப்பாணக்கோட்டையை மீளப் புத்துப்பித்து கட்டிய போது ஐங்கோணவடிவில் வடிவமைத்தனர். முதன் முதலின் உள்கோட்டையின் ஐங்கோண வடிவம் கட்டப்பட்டத்தாக அறியப்படுகிறது.. 

இதனை அவர்கள் 1680ம் ஆண்டு கட்டிமுடித்தனர் என்பது கோட்டை வாயில் கதவில் பொறிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடுகின்றது. கோட்டையின் வெளியமைப்பு சுற்றுக்கட்டமைப்புகள் 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கி 1792ம் ஆண்டு நிறைவுற்றது என்பது கோட்டையின் வாயில் வளைவில்(வெளி?) பொறிக்கப்பட்டிருக்கும் ஆண்டு குறித்து நிற்கின்றது. இதில் அவதானிக்க வேண்டிய பரிதாபம் யாதெனில், ஒல்லாந்தர் இந்த ஐங்கோணக் கோட்டையை 1792இல் அதாவது பிரித்தானியரிடம் கோட்டையை பறிகொடுப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே பூரணமானது என்பதாகும். இந்த மாபெரும் கோட்டையை ஒல்லாந்த்தர் 1795ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி பிரித்தானியரிடமிழந்தனர்.

யாழ்ப்பாணக்கோட்டை ஐந்து கொத்தளங்களை (Bastions) கொண்டிருந்தது. கடனீரேரி பக்கமாக இரண்டு கொத்தளங்களையும், நிலப்புறமாக மூன்று கொத்தளங்களையும் கொண்டிருந்தது. இந்த ஐந்து கொத்தளங்களும் தெளிவாகப் பெயரிடப்பட்டிருந்தன. கோட்டையின் வடபுறக் கொத்தளம் உற்றெச் (Utrecht) என அழைக்கப்பட்டது. வடகிழக்குப்புறக் கொத்தளம் ஹெல்டர்லாந்து(Gelderland) என்றும், தென்கிழக்குப் புறக் கொத்தளம் ஒல்லாந்த்து(Holand) என்றும் தென் மேற்குப் புறக் கொத்தளம் சீலாந்து(Zeeland) என்றும் வடமேற்குப்புறக் கொத்தளம் பிறிஸ்லாந்து(Friesland) என்றும் அழைக்கப்பட்டன. இந்த ஐந்து கொத்தளங்களும் நெடும் மதில்களினால் இணைக்கப்பட்டிருந்தன. கொத்தளங்களை இணைக்கின்ற மதில் ஒவ்வொன்றினதும் நீளம் ஏறத்தாள 554 அடிகளாகும். கொத்தளங்களின் சுற்றளவைத் தவிர்த்து சுற்று மதிலின் மொத்த நீளம் 3960 அடிகளாகும். முக்கோண வடிவினதான கொத்தளங்கள் ஐந்த்தினையும் உள்ளடக்கியதாக உட்கோட்டையின் சுற்றளவை பார்க்கில் 6300 அடிகளாகவுள்ளது.

1960களில் கோட்டை மதிற் சுவர். 
பின்னணியில் தெரிவது தூக்கு மேடை

யாழ்ப்பாணக் கோட்டை மதில் உச்சியில் இருபது அடி அகலமானது அடித்தளதிற்கு அது நாற்பது அடிவரை அகன்று விரிந்து செல்கிறது. வெகு அற்புதமாக அம்மதில்களை அமைத்துள்ளனர். மதிலின் வெளிப்புறம் ஏறத்தாள ஆறடி அகலத்தில் முருகைக்கற்களினால் கட்டப்பட்டது. உட்பக்கம் நான்கு அடி அகலக்கட்டமைப்பை கொண்டுள்ளது. இவ்விரு கட்டுக்களுக்கும் இடைப்பட்ட பரப்பு மண்ணால் நிரவப்பட்டுள்ளது. இம்மதில்கல் அகழி மட்டத்திலிருந்து ஏறத்தாழ முப்பது அடிகள் கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றன. உண்மையில் இவை பலமான‌அரண்களே. எவ்வளவு வலிமைவாய்ந்த பீரங்கிகளாலும் தகர்ந்தெறியமுடியாத மதிற் சுவர்கள்.

உட்கோட்டையைச் சுற்றி அமைந்துள்ள சுரியும் நீரும் கொண்ட அகழி அற்புதமான அழகும், பாதுகாப்பும் கொண்டது. உயர் கொத்தளப்பகுதியில் அகழியின் அகலம் 132 அடிகளாகவும், மதிலின் நடுப்பகுதியிலிருந்து நோக்கும் போது அகழியின் அகலம் 158 அடிகளாகவும் இருப்பதைக் காணலாம். 3960 அடிகள் நீளமான இக் கோட்டையின் சுற்றுமதிலைச் சூழ்ந்து 6400 அடிகள் நீளமான அகழியின் வெளிச் சாய் சுவர் அமைந்திருக்கிறது.

அகழி வெளிமதிற் சாய் சுவரோடு, தாழ் கொத்தளங்கள் நான்கு அமைந்துள்ளன. இந்த தாழ் கொத்தளங்கள் கோட்டை மதில் ஒவ்வொன்றின் நடுப்பகுதிக்கு நேர் எதிரில் அகழுக்கு அப்பால் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை வடிவில் சிறிய கோட்டை அமைப்பின. அதனால் இவற்றினை சின்னக்கோட்டைகள் எனவும் கூறுவர். முற்றவெளியின் முனியப்பர் கோயில் அருகே இத்தகை தாழ் கொத்தளக் கோட்டையுள்ளது. வடக்கில் வீரசிங்கம் மண்டபத்தை நோக்கியும், மேற்கில் பண்ணை பொலிஸ் விடுதியை நோக்கியும் சின்னக்கோட்டைகள் எனப்படும் தாழ் கொத்தளங்கள் உள்ளன. இன்னொரு தாழ் கொத்தளம் பிரதான வாயிலின் நுழை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்றது. இத்தாழ் கொத்தளங்கள் முருகைக்கற்களினால் கட்டப்பட்டு உட்புற ஒடுங்கிய பாதைகளைக் கொண்டனவாகவும் முருகைக்கற்களினால் மூடப்பட்ட கூரை கொண்டனவாகவும் உள்ளன.

இத்தாழ் கொத்தளங்களில் ஒவ்வொரு காவலரண் கூடுகள் உள்ளன. உயர் கொத்தளங்களில் முக்கோணத்தின் முனைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றாக மூன்று காவலரண்கள் இருந்த்தன. ஆக மொத்தமாக 19 காவலரண் கூடுகள் கோட்டையில் இருத்தன. அகழி வெளிச்சுவரின் மத்தியில் முற்றவெளியோடு அமைந்த பாதுக்காப்பற்ற தாழ் கொத்தளங்கள் எதிரிகளின் வருகையை முதலில் தடுக்கும் நிலைகளாகும். இத்தாழ் கொத்தளங்களினால் எதிரிப்படையை தடுக்க முடியாவிடில், உயர் கொத்தளங்கள் அடுத்து செயற்படும். தாழ் கொத்தளங்கள் நில மட்டத்தோடு அமைந்த்தவை உயர் கொத்தள்ங்கள் அகழிக்கு அப்பால் முப்பதடி உயரத்தில் பாதுகாப்பாக அமிக்கப்பட்டிருப்பவையாகும். இவற்றை விட மதிலில் பத்தடிக்கு ஒரு பீரங்கி பொருத்தக்கூடிய இடைவெளி அமைக்கப்பட்டிருந்தது.

போர்த்துக்கேயரினாலும் ஒல்லாந்தராலும் கட்டப்பட்ட கோட்டைகள் உண்மையில் பலம் வாய்ந்தவை. பெரும்பாலான கோட்டைகள் முருகைக்கற்களால் உருவாக்கப்பட்டன. முருகைக்கற்களை தாம் விரும்பியவடிவத்திற்கு கற்தற்சர்களால் வெட்ட முடிந்தது. முருகைக்கற்கள் இலகுவில் நொருங்குந்தன்மையற்றவை; அழுத்த நெகிழ்ச்சி கொண்டவை. முருகைக்கற்களை சுவர்கற்களாக கனவடிவில் வெட்டுவது இலகுவாக இருந்தது. பின்னர் சுவர்களில் பொருத்தப்பட்டன.
இவர்களால் அமைக்கப்பட்ட கோட்டைகள் அனைத்தும் கடற்கரையோரங்களில் அமைந்திருந்தன.

 யாழ்ப்பாணக் கோட்டை ஊர்காவல்துறை கெமன் ஹீல் கோட்டை, காங்கேசன் துறை கோட்டை, வெற்றிலைக்கேணியிலிருந்த பாஸ் பைல்(Parss Pyl) கோட்டை ஆகியன கடற்கரையோரங்களிலும், இயக்கச்சி பெஸ் சுட்டர் கோட்டை, ஆனையிறவுக் கோட்டை, பூநகிரிக் கோட்டை என்பன பாதைக் கடவைகளிலும் அமைந்திருந்தன. இத்தகைய முக்கியத்துவத்தினால் கடலில் இருந்தும் தரையிலிருந்தும் வரும் எதிரிகளின் தாக்குதலை எதிர்கொண்டு முறியடிப்பது இலகுவாக இருந்தது.

யாழ்ப்பாணக்கோட்டை சுண்ணக்கற்களாலும் முருகைக்கற்களாலும் அடுக்கிக் கட்டப்பட்டது. கொத்தளங்கள்(Bastion) அரன் சுவர்கள்(Rampart), அரண் சுவரிலிருந்து இறங்கும் படிகள்(Ramp) என்பன அனைத்தும் கட்டிமுடிக்கப்பட்டன. ஐங்கோணவடிவில் யாழ்ப்பாணக் கோட்டை கம்பீரமாக எழுந்து நின்றது. இராணுவப் பாதுகாப்புக்கும் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் உரிய கட்டிடங்கள் கோட்டைக்குள் அமைந்திருந்தன. ஒல்லாந்தரின் வதிவிட நகரமாக கோட்டைக்கு வெளியே பறங்கிதெரு அமைந்திருந்தது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒல்லாந்தர் காலத்தில் பல கோட்டைகள் இராணுவ முக்கியத்துவத்துடன் விளங்கியிருந்தன. ஆனால் அவற்றில் எதுவும் யாழ்ப்பாணக்கோட்டையின் தொழில் நுட்ப நேர்த்திக்கும் முழுமைக்கும் ஈடாகாது என டபிள்யு ஏ நெல்சன் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டை வெளிச்சுற்று அமைக்கப்படமுன்.
கோட்டையின் வாயில் கதவு ஆறுஅங்குலத்திற்கு மேல் தடிப்பான மரக்கதவு ஆகும். அதில் போர்யானைகள் முட்டி பிளக்காதிருக்க வேண்டி கூரான ஈட்டி முனைகள் பொருத்தப்பட்டிருந்தன. வில்வளைவான வாயில் கடவையில் இருந்து அகழியைக்கடப்பதற்கு தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்த்து. இக்கதவில் கோட்டை கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டான 1680 குறிக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஒலாந்தக்கம்பனியின் ”VOC” யோடு கூடிய சின்னமும் பொறிக்கப்பட்டிருந்த்து. கோட்டையின் வெளிச்சுற்று வேலைகள் 18ம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து கட்டமைக்கப்பட்டு 1792இல் முடிவடைந்த்தன.

கோட்டையின் வெளிச்சுற்று-1960களில்

கோட்டைக்குள் ஒல்லாந்த லெப்ரின்ண்ட் கவர்னர்களின் பங்களா பின்னர் ராணி மாளிகை(Queens House) அமைந்த இடத்தில் கட்டப்பட்ட்து. போர்த்துக்கேயரின் கத்தோலிக்க தேவாலயம் ஒல்லாந்த்தரால் புதுப்பிக்கப்பட்ட்து டன் சதுரங்கப்பலகை வடிவத்தையும் பெற்றது. இத் தேவாலயம் கோட்டையினுள் வடபகுதியில் காணப்பட்ட்து. சிறைக்கூடங்கள், அதிகாரிகளின் நிர்வாகப் பகுதிகள் என்பன கோட்டையினுள் அமைந்திருந்தன. கோட்டையின் மையம் ஏறத்தாள நான்கு ஏக்கர் பரப்பளவினைக்கொண்ட மைதானமாகும், அது படையணியினரின் பயிற்சிக்கும் நடைபவனிக்கும் உதவியது.
கோட்டையின் உட்புறம்- ஒல்லாந்தர்கால ஓவியம்
கோட்டை இரண்டு வாயில்களை கொண்டிருந்த்து ஒன்று நீர்வழி (Water Gate), மற்றையது நிலவழி (Land Gate). கோட்டையின் தென்மதிற் சுவரில் நீர் வழி அமைந்திருந்த்து. கடனீரேரியூடாக வரும் ஒருவர் கோட்டையின் மதிலருகில் சிறு கலத்தினை நிறுத்தி விட்டு, நீர்வழியூடாக, காவலர்கள் அனுமத்தித்தால் கோட்டைக்குள் நுழையமுடியும்(இந்த நீர் வழியூடாகத்தான் இரண்டாம் ஈழயுத்தம் ஆரம்பமான போது இராணுவத்தினர் வெளியேறினர்). 

நிலவழி தொங்கு பாலத்தினூடாக இணைக்கப்பட்ட பிரதான வாயில்புறமாகும். ஒல்லாந்தர் அப்பாலத்தை உள்மதிலோடு தூக்கி பாதையைத் துண்டிக்கவும், தேவையான போது பாலத்தை இறக்கி இணைக்கவும் வசதிகளைக் கொண்டிருந்தனர். வாயில் சுவரின் மேல் மணிக்கோபுரம் ஒன்று கட்டப்பட்டிருந்த்து. அதில் பிணைக்கப் பட்டிருந்த காண்டாமணி தேவாலய வழிபாட்டு நேரத்தையும், கால நேரத்தையும் ஒலி எழுப்பி அறிவித்து வந்தது. கோட்டைக்குள் இருந்த சதுரங்க வடிவத் தேவாலயம் குருய்ஸ் கேர்க் (Kruys Kerk) எனப்பட்டது. இது சமவளவான பக்கங்களைக் கொண்ட கிரேக்கச் சிலுவை(Grees Cross) வடிவினது. இக் கிரேக்கச் சிலுவை வடிவை “குருய்ஸ் கேர்க்” என்பர். கோட்டையின் தென் கிழக்கு பகுதியில் இத் தேவாலயம் அமைந்திருந்தது. இதன் பிரதான வாயில் மேற்குப் பக்கத்தில் அமைந்திருந்தது. வடக்கு வாயில் ஊடாகவும் தெற்கு வாயில் ஊடாகவும் ஆலயத்தினுள் பிரவேசிக்க முடியும். தேவாலயத்தினுள்ளே 1660ஆம் ஆண்டுக்குரிய கல்லறைக் கற்களைக் காணலாம். ஆனால் பிரதான வாயிலின் இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட்து 1706ஆம் ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேவாலயம் அடம் வன் டேர் டுயின் (Adem Van Der Duyn) என்ற கம்மாந்தர் காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட்து. இத் தேவாலயம் இருபாலையில் இதற்கென அரியப்பட்ட செங்கற்களைப் பயன்படுத்தியது. இச் செங்கற்களுக்கு ஆயிரத்து மூன்றரைப் பணம் கொடுக்கப்பட்ட்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேவாலயம் ஒல்லாந்தர்கால வரைபு.

தேவாலயம்-1960களில்  இத் தேவாலயத்தில் இரு பாரிய மணிகள் பொருத்தப்பட்டிருந்த்தன. அவை போர்த்துக்கேயர் காலத்தவை என்பது அவற்றில் பொறிக்கப்பட்டிருக்கும் “N.S. Dos Milagres De Jaffnapatao 1648” என்ற எழுத்துக்கள் சான்று பகிர்கின்றன. ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட அற்புதமான யாழ்ப்பாணக் கோட்டை வாயிலில், ஒல்லாந்தர் கம்பனியைக் குறிக்கும் “VOC” என்ற எழுத்தோடு கூடிய யாழ்ப்பாணக் கம்மாந்தரின் ஆள் புலத்திற்குரிய கேடயச் சின்னம் (Shield) பொருதப்பட்டிருந்த்து. அந்த கேடயச்சின்னத்தில் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் கற்பகதருவான பனை மரம் வரையப்பட்டிருந்த்து. இது இந்த ஆள் புலத்தின் சரியான குறியீடாக விளங்குவதை 17ஆம் நூற்றாண்டில் இந்த மண்ணில் கால்பதித்து நிலைகொண்ட ஒல்லாந்தர் உணர்ந்திருந்தனர்.

ஒல்லாந்தர்கால யாழ்ப்பாணிகள்



No comments:

Post a Comment