Friday 9 June 2017

PETER THE GREAT ரஷ்ய மன்னர்களுள் மிகப் புகழ் பெற்றமகா பீட்டர் (1672 - 1725)



PETER THE GREAT

ரஷ்ய மன்னர்களுள் மிகப் புகழ் பெற்றமகா பீட்டர் (1672 - 1725)


மகா பீட்டர் ரஷ்ய மன்னர்களுள் மிகப் புகழ் பெற்றவராகப் பொதுவாகக் கருதப்படுகின்றார். மேல்நாட்டு மயமாக்கும் அவருடைய கொள்கை ரஷ்யாவை ஒரு பெரிய அரசாக மாற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

PETER 1672 ஆம் ஆண்டு ரஷ்யாவின் முதலாம் அலெக்சிஸ் அரசருக்கும் அவரது இரண்டாவது மனைவியான நத்தாலியா கிரிலோவ்னா நரிஷ்கினாவுக்கும் மாஸ்கோவில் பிறந்தார். 1676 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் முதலாம் அலெக்சிஸ் இறக்க அரசுரிமை அலெக்சிசின் முதல் மனைவியின் மகனும் பீட்டருக்கு மூத்தவருமான மூன்றாம் பியோடோருக்குக் கிடைத்தது. ஆனால் பியோடோர் வலுவற்ற வராகவும், நோயாளியாகவும் இருந்தார். இவர் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் 1682 ஆம் ஆண்டு இறந்தார்.
பியோடோருக்குப் பிள்ளைகள் இல்லாததால் அரசுரிமை குறித்து நரிஸ்கின் குடும்பத்துக்கும், மிலோலவ்ஸ்கி குடும்பத்துக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது. பீட்டரின் இன்னொரு அரைச் சகோதரரான ஐந்தாம் இவான் வாரிசு உரிமைப்படி அடுத்த இடத்தில் இருந்தார். ஆனால் அவரும் நோய்வாய்ப்பட்டு இருந்ததோடு உறுதியற்ற மனநிலை கொண்டவராகவும் இருந்தார்.
முடிவில் போயர் டூமா எனப்படும் ரஷ்யப் பிரபுக்கள் அவை 10 வயதேயான பீட்டரை அரசராகத் தெரிவு செய்தது. பீட்டரின் தாயார் பீட்டருக்காக அரசைக் கவனித்துக் கொண்டார். ஆனால் அலெக்சியின் முதல் மனைவியின் மகளான சோபியா அலெக்சேயெவ்னா என்பவர் ஸ்ட்ரெல்சி எனப்படும் ரஷ்யச் சிறப்புப் படையணியின் உதவியுடன் கலகம் விளைவித்தார். பீட்டரின் உறவினர் சிலரும், நண்பர்கள் சிலரும் இதில் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைகள் சிலவற்றைப் பீட்டரும் கண்டார்.
.


இக் கலகத்தின் விளைவாக 1682 ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் சோபியாவும் அவரது ஆதரவாளர்களும், பீட்டருடன், இவானையும் இணை அரசர்களாக ஏற்றுக் கொள்வதில் வெற்றி கண்டனர். சோபியா பராயம் அடையாத அரசர்களுக்காக ஆட்சிப் பொறுப்பைக் கவனிக்க நியமிக்கப்பட்டார். ஏழு ஆண்டுகள் சோபியா, அளவற்ற அதிகாரத்துடன் ஆட்சி நடத்தினார்.பல ஆண்டுகளாக பீட்டரின் சகோதரியான சோபியா அரசருக்குப் பதிலாக ஆண்டு வந்தாள். 1689 இல் அவளை நீக்கிய பிறகுதான் பீட்டரின் நிலை உறுதியானது.


1689இல் ரஷ்யா பின் தங்கிய பகுதியாக இருந்தது. எல்லா வகையிலும் அது மேற்கு ஐரோப்பிய நாடுகளை விடப் பல நூற்றாண்டுகள் பின் தங்கிய நிலையிலிருந்தது. மேல் நாடுகளை விடக் குறைந்த நகர்களே ரஷ்யாவில் இருந்தன. அங்கு பண்ணையாள் முறை செழித்தோங்கியது. பண்ணையாட்களின் தொகை பெருகி வந்தது. அவர்களுடைய சட்ட பூர்வமான உரிமைகள் குறைந்து வந்தன. ரஷ்யாவில் மறுமலர்ச்சியும் சமயப் புரட்சியும் ஏற்படவில்லை.

சமய குருக்கள் கல்வியறிவற்றவர்களாக இருந்தனர். இலக்கியம் இல்லையென்றே சொல்லலாம். கணிதமும், அறிவியலும் புறக்கணிக்கப்பட்டன. அப்போது மேற்கு ஐரோப்பாவில் நியூட்டனின் பிரின்சிப்பியா அண்மையில் வெளிவந்திருந்தது. இலக்கியமும், தத்துவமும் தழைத்தோங்கின. ஆனால் ரஷ்யா இடைக்கால நிலைமையிலேயே இருந்தது.

1697-98இல் பீட்டர் மேற்கு ஐரோப்பாவில் நீண்ட பயணம் செய்தார். அதுவே அவருடைய பிற்கால ஆட்சியின் சிறப்புக்கு வழி வகுத்தது. இப்பெரும் தூதாண்மைப் பயணத்தின்போது

சிறிது காலம் ஹாலந்தில் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தில் கப்பலில் தச்சராகப் பணிபுரிந்தார். இங்கிலாந்தில் அரச கப்பற்படையின் கப்பல் கட்டும் தளத்திலும் பணிபுரிந்தார்.

ரஷ்யாவில் பீரங்கி இயக்கும் கலையையும் கற்றார். ஆலைகள், பள்ளிகள், அருங்காட்சியகங்கள், படைக்கல ஆலைகள் போன்றனவற்றைப் பார்வையிட்டார்.

இங்கிலாந்தின் நாடாளுமன்றக் கூட்டத் தொடரையும் பார்வையிட்டார். சுருங்கச் சொல்ல வேண்டுமெனில், மேற்கு ஐரோப்பிய பண்பாடு, அறிவியல், தொழில், ஆட்சி துறை ஆகியவற்றைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொள்ள முடியுமோ அவ்வளையும் தெரிந்து கொண்டார்.

1698இல் பீட்டர் ரஷ்யாவுக்குத் திரும்பி வந்து ரஷிய நாட்டை தற்கால மயமாக்கவும், மேல் நாட்டு மயமாக்கவும் தேவையான பெரும் சீர்திருத்தங்களைச் செய்யத் தொடங்கினார். மேல் நாட்டுத் தொழில் நுட்ப வல்லுநர்களை ரஷ்யாவுக்கு வரவழைத்தனர்.

பல ரஷ்ய இளைஞர்களையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கல்வி கற்பதற்காக அனுப்பினார். பீட்டர் தம் வாழ்நாள் முழுவதும் தொழிலையும் வாணிகத்தையும் வளர்க்க முற்பட்டார். அவரது ஆட்சியில் நகர்கள் அளவில் பெருகின. செல்வர்களின் தொகை உயர்ந்தது. அவர்களின் செல்வாக்கு வளர்ந்தது.

பீட்டரின் ஆட்சியில் முதன்முதலில் ரஷ்யாவின் கப்பற்படை தக்க அளவில் பெருகியது. தரைப்படை மேல்நாட்டு முறையில் திருத்தியமைக்கப்பட்டது. போர் வீரருக்குப் படையுடையும் தற்காலத் துப்பாக்கிகளும் வழங்கப்பட்டன. மேல்நாட்டு முறைப்படிப படைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேலும், பீட்டர் ஆட்டத் துறையிலும் பல மாற்றங்களைப் புகுத்தினார்.

அரசாங்க அலுவலர்க்கு அவர்களின் மரபுவழித் தரத்திற்குத் தக்கபடியல்லாமல், பணித் திறத்திற்கேற்றபடி பணி உயர்வளித்தார்.
சமூக நிலையிலும் பீட்டர் மேல்நாட்டு மயமாவதை ஊக்குவித்தார். தாடிகளை வெட்டிவிடுமாறு அவர் ஆணையிட்டார். (ஆனால், பிறகு அவ்வாணையை மாற்றினார்). அரண்மனையிலிருப்போர் மேல்நாட்டு உடையணிமாறு பணித்தார். அவர்கள், புகை பிடித்தலையும் காப்பி அருந்துவதையும் ஊக்குவித்தார். அப்போது அவருடைய திட்டங்களுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்ட போதிலும் அவற்றில் நீண்ட கால விளைவாக ரஷ்ய உயர்குடியினர் மேல்நாட்டுப் பழக்கங்களையும் பண்பாட்டையும் நாளடைவில் பின்பற்றித் தொடங்கினார்.

பீட்டர் ரஷ்ய கீழ்த்திசை திருச்சபையைப் பின்தங்கிய, பிற்போக்கு நிறுவனமாகக் கருதியதில் வியப்பில்லை. அவர் அதை ஓரளவு மாற்றியமைத்து, தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். சமயச் சார்பற்ற பள்ளிகளை நிறுவி, அறிவியல் வளர்ச்சியை ஊக்குவித்தார்.

ஜூலியன் நாட்காட்டியைப் புகுத்தியதுடன் தஷ்ய எழுத்துகளையும் தற்கால முறைக்கேற்ப மாற்றினார். அவரது ஆட்சியில் ரஷ்யாவில் முதல் செய்தித்தாள் வெளிவந்தது.

உள்நாட்டுச் சீர்திருத்தங்கள் மட்டுமின்றி, பிற்காலத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்திய அயல்நாட்டுக் கொள்கைகளையும் வகுத்தார். அவரது ஆட்சிக் காலத்தில் ரஷ்ய தெற்கில் துருக்கியுடனும் வடக்கில் சுவீடனுடனும் போர்களில் ஈடுபட்டது. தொடக்கத்தில அவர் துருக்கிக்கெதிராகச் சில வெற்றிகள் பெற்றார்.

 1696 இல் அசோவ் துறைமுகத்தைக் கைப்பற்றினார். அதனால், தஷ்யா கருங்கடலுள் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆயினும், அவரது ஆட்சியின் பிற்பகுதியில் துருக்கி வெற்றி பெற்றது. 1711 இல் பீட்டர் அசோவ் துறைமுகத்தைத் துருக்கிக்கு திரும்பக் கொடுக்க வேண்டியதாயிற்று.

சுவீடனுக்கு எதிராக நடைபெற்ற போர் நிகழ்ச்சிகள் இதற்கு எதிர்மாறாக இருந்தன. தொடக்கத்தில் ரஷ்யர் தோல்வியுற்றனர். இறுதியில் வெற்றி பெற்றனர். 1700 இல் ரஷ்யா டென்மார்க்குடனும், சாக்சோனியுடனும் சேர்ந்து சுவீடன் போர் தொடுத்தது. அளப்போது ஒரு பெரும்படை வலிமை பெற்ற அரசராக இருந்தது. (போலந்தும் பிறகு சுவீடன் மீது போர் தொடங்கியது)
1700 இல் நார்வா போரில் ரஷ்யப் படைகள் பெருந்தோல்வியுற்றன. அப்போருக்குப் பின் சுவீடன் மன்னர் பிற எதிரிகள் மேல் கவனம் செலுத்தத் தொடங்கினார். இதற்கிடையில் பீட்டர் ரஷ்யப் படையைத் திரும்பவும் வலுப்படுத்தினார். பிறகு சுவீடனுக்கும் ரஷ்யாவுக்கும் ஏற்பட்ட போரில் போல்ட்டாவா என்னும் போர்க்களத்தில் 1709 ஆம் ஆண்டு சுவீடன் படை முற்றிலும் முறியடிக்கப்பட்டது.

இப்போரின் விளைவாக எஸ்டோனியா, லாட்வியா, பின்லாந்தினருகிலுள்ள பகுதி ஆகியவற்றை ரஷ்யா கைப்பற்றியது. கைப்பற்றிய பகுதி மிகப் பெரிய பகுதியாக இல்லையெனினும், அது முக்கியமான பகுதியாக இருந்தது. அது பால்டிக் கடலுக்குச் செல்வதற்கு ரஷ்யாகவுக்கு ஒரு வழியாக அமைந்தது.

ஆகவே, அது "ஐரோப்பாவைக் காட்டும் பலகணியாக" இருந்தது. சுவீடனிடமிருந்து கைப்பற்றிய ஒரு பகுதியில் நோவா ஆற்றங்கரையில பீட்டர் புனித பீட்டர்ஸ் பர்க் என்னும் ஒரு புதிய நகரை நிறுவினார். (இன்று அது லெனின்கிராடு எனப்படுகின்றது).

ரஷ்யசார் மன்னர் முதலாம் பீட்டர், புனித பீட்டர்ஸ்பெர்க் நகரை அமைத்தான்(1703) சென் பீட்டர்ஸ்பேர்க் (Saint Petersburg) ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது நீவா ஆற்றின் அருகே, பின்லாந்து வளைகுடாவின் கிழக்கே பால்டிக் கடலின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இதன் வேறு பெயர்கள்: பெட்ரோகிராட், லெனின்கிராட்.

இந்நகரம் சார் மன்னனான முதலாம் பீட்டரினால் மே 27, 1703 இல் அவனது ஐரோப்பாவுக்கான கண்ணாடியாக அமைக்கப்பட்டது. இந்நகரம் ரஷ்ய சாம்ராச்சியத்தின் தலைநகராக இருநூறு ஆண்டுகளுக்கு (1712-1728, 1732-1918) மேலாக இருந்து வந்துள்ளது. 1918 இல் ரஷ்யப் புரட்சி வரையில் இது தலைநகராக இருந்தது. மாஸ்கோ, லண்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இது ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய நகரமாகும்.

4.6 மில்லியன் மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இதன் மொத்தப் பரப்பளவு 1439 சதுர கிமீ ஆகும்.
1712இல் அவர் தம் தலைநகரை மாஸ்கோவிலிருந்து பீட்டர்ஸ்பர்க் நகருக்கு மாற்றினார். அது முதல் பீட்டர்ஸ்பர்க் ரஷ்யாவையும் மேற்கு ஐரோப்பாவையும் இணைக்கும் தொடர்பு மையமாக விளங்கியது.

பீட்டரின் பல்வேறு உள்நாட்டுத் திட்டங்களினாலும் அயல் நாட்டுப் போர்களினாலும் பெருஞ்செலவு ஏற்பட்டது. ஆகவே அவர் அதிக வரிகள் விதிக்க வேண்டியதாயிற்று. கூடுதல் வரிகளும் சீர்திருத்தங்களும் ரஷ்யர் பலருக்குச் சினமூட்டின. அதனால் பல கிளர்ச்சிகள் முளைத்தன. ஆனால், பீட்டர் அவற்றை இரக்கமின்றி அடக்கினார். அக்காலத்தில் அவருக்குப் பல எதிரிகள் இருந்த போதிலும், இன்று மேல்நாட்டு வரலாற்றிஞரும் பொதுவுடைமை வரலாற்றிஞரும் பீட்டரை ரஷ்ய மன்னர்களுள் சிறந்தவராக ஏற்றுக் கொள்கின்றனர்.

பீட்டர் கவர்ச்சிமிகு தோற்றமுள்ளவராக இருந்தார். உயரமாகவும், (6 அடி 6 அங்குலம்), வலிமையாகவும், நல்ல தோற்றத்துடனும், ஆற்றலுடனும் காணப்பட்டார். எப்போதும் எழுச்சியும் கிளர்ச்சிமுள்ளவராகவும் இருந்தார். நகைச்சுவை மிகுந்தவராகவுகம் இருந்தார். ஆனால், அவருடைய நகைச்சுவை பலமுறை நயமற்ற நகைச்சுவைகயாக இருந்தது. சிலவேளை அவர் மிகுதியாக மது அருந்துவார். அவரிடம் வன்முறை இயல்பும் கொஞ்சம் இருந்தது.
அவருக்கு அரசியல் படைத் துறைத் திறமைகள் இருந்ததுடன், தச்சு வேலை, அச்சடித்தல், கப்பலோட்டுதல், கப்பல் கட்டுதல், போன்ற பலதரப்பட்ட தொழில்களையும் அவர் அறிந்திருந்தார். அவர் ஓர அரிய அரசர்!.

பீட்டர் இருமுறை மணம் புரிந்தார். தமது 17 ஆம் வயதில் முதல் மனைவியான எதேச்சியானாவை மணம் புரிந்தார். அவர்கள் ஒரு வாரமே ஒன்றாக வாழ்ந்தார்கள். தமது 26 ஆம் வயதில் அவர் அவளைக் கன்னியர் மடத்திற்கு அனுப்பி விட்டார். 1712இல் அவளை மணவிலக்குச் செய்து மறுமணம் செய்து கொண்டார். அவருடைய இரண்டாவது மனைவியான காதரீன் எளிய குடும்பத்தைச் சேர்ந்த லித்துவேனியப் பெண்.

முதல் மனைவியின் வழியாக பீட்டருக்கு அலெக்ஸில் எனும் மகன் இருந்தான். ஆனால் அவர்களுக்கிடையே நல்லுறவு இருந்ததில்லை.
1718இல் பீட்டருக்கெதிராக சதி செய்ததாக அலெக்ஸில் கைது செய்யப்பட்டார். அவன் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு இறந்தான். 1728இல் பீட்டர் தமது 52 ஆம் வயதில் பீட்டர்ஸ்பர்க் நகரில் இறந்தார். அவருக்குப் பின் அவருடைய மனைவி காதரீன் அரியணை யேறினார்.

ரஷ்யாவை மேல்நாட்டு மயமாக்கி, தற்கால மயமாக்கியதால் மகா பீட்டர் இப்பட்டியலில் இடம் பெறுகிறார். ஆயினும், இதே கொள்கையைப் பிறநாட்டு மன்னர்களும் பின்பற்றியிருப்பதால், அவர்களுள் பெரும்பாலோர் இங்கு இடம் பெறாமல் பீட்டர் இடம் பெற்றிருப்பது ஏன் எனச் சிலர் கேட்கக்கூடும்.
இன்று 20 ஆம் நூற்றாண்டில் ஏறக்குறைய எல்லா நாடுகளின் தலைவர்களும் மேல்நாட்டு முறைகளை, குறிப்பாக அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை உணர்கின்றனர். ஆனால், 1700இல் மேல்நாட்டு முறைகளைப் பின்பற்றுவதன் தேவையை ஐரோப்பாவிற்கு வெளியே இருந்தவர்கள் உணரவில்லை.
தம் நாட்டை மேல் நாட்டு மயமாக்கி தற்கால மயமாக்குவதன் முக்கியத்துவத்தை உணர்வதில் பீட்டர் தம் காலத்திற்கு 200 ஆண்டுகள் முற்பட்டவராக இருந்தார். இதுவே அவரது சிறப்பு. பீட்டரின் முன்னோக்குப் போக்கினால், அவர் அரியணையேறியபோது மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த ரஷ்யா உலகின் பல நாடுகளைவிட முன்னணிக்கு வர முடிந்தது.
(ஆயினும், 18,19 ஆம் நூற்றாண்டு மேற்கு ஐரோப்பா மிக விரைவாக முன்னேறியதால், ரஷ்யா மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக பின்பற்ற முடியவில்லை. ஐரோப்பாவில் கிழக்கு எல்லை யிலிருந்த மற்றொரு முக்கிய நாடான துருக்கி ரஷ்யாவைப் போல் முன்னேறாதது இங்கு குறிப்பிடத்தக்கது. துருக்கியும், ரஷ்யாவும் அரை ஐரோப்பிய நாடுகளாகவே இருந்தன.

பீட்டரின் ஆட்சிக் காலத்திற்கு முன் 200 ஆண்டுகளாக துருக்கி ரஷ்யாவை விட படைத்துறையிலும், பொருளாதாரத்திலும் பண்பாட்டிலும் மிகவும் முன்னேறியிருந்தது. பெரும்பாலும் வரலாறு முழுவதும் துருக்கி ரஷ்யாவைவிட முன்னேறியிருந்தது எனலாம்.

ஆனால், 1700 இல் தம் நாட்டை மேல் நாட்டு மயமாக்குவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைச் செயல்படுத்தக் கூடிய சுல்தான் யாரும் துருக்கியில் இல்லை. ஆகவே பீட்டர் காலம் முதல் ரஷ்யா விரைவாக முன்னேறிய போது, துருக்கி மெதுவாகவே முன்னேறியது. 20 ஆம் நூற்றாண்டில்தான் கமால் அத்தாதுர்க் துருக்கியை விரைவாகத் தற்கால மயமாக்கினார்.
அதற்குள்ளாக ரஷ்யா மத்திய ஆசியாவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்தது. துருக்கியை விட ரஷ்யா தொழில், கல்வித் துறைகளில் மிகுதியாக முன்னேறியிருந்தது.

இன்று ரஷ்யா துருக்கியைவிட உயர்ந்து விளங்குவது நமக்கு நன்கு தெரியும். ஆயினும், ரஷ்யாவில் ஆண்ட மகா பீட்டருக்குப் பதிலாக அக்காலத்தில் சீர்திருத்தவாதியான ஒரு சுல்தான் துருக்கியில் இருந்திருப்பாரெனில் இன்று துருக்கி ஒரு பெரிய அரசாக இருப்பதுடன் இன்று சோவியத் மத்திய ஆசியா எனப்படும் பகுதி அதன் கட்டுப்பாட்டிற்குள் இருக்குமென்பதில் ஐயமில்லை.

இப்பகுதியிலுள்ள முஸ்லிம்கள், அவர்கள் ரஷ்யாவை விட துருக்கியுடன் அதிக தொடர்புள்ளவர்கள். மகா பீட்டர் காலத்திற்கு முன் சைபீரியாவின் பெரும்பகுதி ரஷ்யர்களிடமிருந்த போதிலும் பீட்டர் தமது சீர்திருத்தங்களினாலும், தற்கால மயமாக்கும் முயற்சிகதளினாலும் ரஷ்யாவை வலிமை யாக்கவில்லையெனில் அப்பரப்பின் ஒரு பகுதியை அல்லது முழுவதையுமே துருக்கி, சீனா அல்லது ஜப்பான் கைப்பற்றியிருக்கும்.

மகா பீட்டர் காலம்போகும் போக்கிலே செல்லும் மன்னர் அல்லர். அவர் தம் காலத்திற்கு முற்பட்டவர். அவருடைய முன்னோக்கு வரலாற்றை மாற்றி அது சென்றிராத திசையில் திருப்பிவிட்டது. இக்காரணத்திற்காக பீட்டர் இப்பட்டியலில் ஓரிடம் பெறத் தகுதி வாய்ந்தவர் என்பது கருத்து.
பீட்டருக்கு இங்கு எந்த இடம் கொடுப்பது என்பதைப் பொறுத்தவரையில் அவரையும் இங்கிலாந்தின் அரசியான முதலாம் எலிசபெத்தையும் ஒப்பிட விரும்புகிறேன். எலிசபெத் குறிப்பாக மேல்நாடுகளில் பீட்டரைவிட மிகுதியான புகழ்பெற்றவர்.

பீட்டரைவிட எலிசபெத் வரலாற்றில் மிகுதியான விளைவுகளை ஏற்படுத்தினாரெனக் கருதுமாறு சீர்நோக்குடைய ரஷ்யரைக்கூட நம்பவைக்க என்னால் முடியாதென நினைக்கிறேன். பீட்டர் புதுமுறை காணும் திறமையுடையவர். தனித்தன்மையுடையவர். ஆனால், எலிசபெத் தம் நாட்டினரின் விருப்பங்களையே ஒருங்கே எதிரொலித்தார்.
ரஷ்யர் அதுவரை செல்ல நினைக்காத திசையிலே பீட்டர் அவர்களை வழி நடத்தினார். இடைப்பட்ட காலத்தில் உலக அரங்கில் இங்கிலாந்து ரஷ்யாவை விட பெரும்பங்கு பெற்றிராவிட்டால், இவ்விருவரையும் வரிசைப்படுத்துவதிலுள்ள இடைவெளி இதைவிடப் பெரிதாக இருந்திருக்கும்

No comments:

Post a Comment