Sunday 18 June 2017

MAXIM GORKY தோழர் மாக்சிம் கார்க்சியின் நினைவு தினம் 18 ஜூன் 1936




MAXIM GORKY தோழர் மாக்சிம் கார்க்சியின் 
நினைவு தினம் 18 ஜூன் 1936




மனிதன் இறந்துவிடுகிறான். ஆனால், அவனது படைப்புகளோ பல நூற்றாண்டுகள் கடந்து நிலைத்து வாழ்கின்றன”.

மாக்சிம் கார்க்கி

நீங்கள் எவ்வாறு எழுதக் கற்றுக் கொண்டீர்கள்? கதைகள் எப்படி எழுவது என்பதைப் பற்றி ஒரு நூல் தயாரிக்குமாறு,”புரட்சி செய்யப் பிறந்ததே இலக்கியம்” என்ற கூற்றிற்கு ஏற்ப உலகப் புகழ்பெற்ற காவியமான “தாய்” நாவலை எழுதியவரும், உலக இலக்கியங்க ளுக்கும் படைப்புகளுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி யவருமான தோழர் மாக்சிம் கார்க்கி அவர்களிடம் பலரும் கேட்டு வந்தனர். 

இறுதியில் அவர், இலக்கியம் எவ்வாறு படைப்பது, கதை எவ்வாறு எழுதுவது என்பதைப் பற்றி பாடப் புத்தகமெல்லாம் எழுத முடியாது என்றும், அதற்கான சாத்தியமும் இல்லை என்று கூறிவிட்டார். இருப்பினும் எழுதத் தொடங்கு பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய, கவனிக்க வேண்டிய பல அம்சங்களைப் பற்றி விளக்கியுள்ளார். தான் எப்படி எழுதக் கற்றுக் கொண்டேன் என்கிற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு நூலை எழுதியிருக்கிறார் அவற்றில் சில…
வாழ்க்கையின் போக்கைப் பற்றிய எனது “கருத்துக்கள்” மெல்ல மெல்லத்தான், கஷ்டத்தோடுதான் உருவாகின. காரணம், எனது நாடோடி வாழ்க்கை, நான் முறையான கல்வியறவு பெறாத குறை. சுய முயற்சியாகக் கற்றுக் கொள்ள நேரமில்லாது போன குறை – ஆகியவற்றின் குறை.

மக்களுக்குச் சொல்ல முடிகிற அளவுக்கு, சொல்ல வேண்டிய அளவிற்கு நான் கண்டும், கேட்டும், அனுபவித்தும் இருக்கிறேன் என்பதை உணர்ந்தும், மற்றவர்கள் சில விசயங்களை அறிந்தும் உணர்ந்தும் வைத்திருந்ததற்கும் மாறாக நான் அறிந்தும் உணர்ந்தும் வைத்திருக்கிறேன் என்று தோன்றியது. சொற்களைக் கொண்டு மக்களைச் சித்தரிப்பதில் இருக்கும் கலையிலும், அவர்களுடைய பேச்சுக்களை உயிர் ததும்புவனவாயும், நேரடியாகக் காதில் கேட்கிற மாதிரியும் செய்கிறதிலிருக்கிற கலையிலும் நிறைய எழுத்தளார்கள் வெளிப்படுத்திய திறன், வசனங்களை உருவாக்குவதில் அவர்களுக்கிருந்த உன்னதமான திறன், எப்பொழுதுமே என்னை ஆட்கொண்ட வாறிருந்தன. இதன் பின்தான் எழுத ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

ஒரு எழுத்தாளனுக்கு எல்லா நாட்டு இலக்கியத்திலும் ஞானம் கட்டாயம் இருக்க வேண்டும். ஏனென்றால் சாராம்சத்தில் பார்த்தால், எல்லா நாடுகளிலும் எல்லா மக்கள் சமூகங்களிடையிலும், இலக்கிய படைப்புத் தன்மை என்பது ஒன்றாகத்தான் இருக்கிறது.

மனித நினைவுக்கெட்டாத நாளிலிருந்து மனிதனின் ஆன்மாவைச் சிக்கவைத்துப் பிடிக்க எங்குப் பார்த்தா லும் ஒரு வலை பின்னப்பட்டு வந்திருக்கிறது, இன்னொரு புறத்தில் மனிதர்களிடயேயிருந்து மூட நம்பிக்கைகளையும், விருப்பு வெறுப்புகளையும் சார்புக் கருத்துக்களையும் நீக்குவதையே தமது பணியுன் குறிக்கோளாகக் கொண்ட மனிதர்கள் எங்கும் எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள். எனவே, மனிதர்களுக்குப் பிடித்தமான அற்ப விஷயங்களில் ஈடுபடுத்துவதற்கு உற்சாகப்படுத்துபவர்கள் என்றை க்கும் இருந்துவருவது போலவே, தம்மைச் சூழ்ந்துள்ள வாழ்வின் மோசமான அம்சங்களை, இழிந்த அம்சங்களை, எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த கலகக்கா ரர்களும் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது எழுத்தாளனின் முக்கியக் கடமையாகும்.

மனிதனுக்கு முன்னேற்றப் பாதையைச் சுட்டிக் காட்டி அந்தப் பாதையலேயே செல்லும்படி உற்சாகப்படுத்திய கலகக்காரர்களின் கைதான் மேலோங்குகிறது. பேராசை, பொறாமை, சோம்பல், உழைப்பில் வெறுப்பு ஆகிய அருவருக்கத்தக்க கெட்ட குணங்களை உழைப்பாளி மக்களுக்குத் தொற்றிக் கொள்ளச் செய்திருக்கிற முதலாளித்துவ சமுதாயத்தால் உண்டாக்கப்பட்டுள்ள மோசமான நிலைமைகளைத் தட்டிக் கொடுத்துத் திருப்திப்படுத்தும்படியோ அவற்றுடன் சமரசம் செய்து கொள்ளும்படியோ பேசுகிற பிரச்சாரகர்களின் கை விழத்தான் செய்கிறது என்பதை உணர வேண்டியது முக்கியமாகும்.

“மனிதனைப் பற்றிய வரலாற்றை விட மனித உழைப்பின் படைப்புத் தன்மையின் வரலாறு எவ்வளவோ சுவையுள்ளதாகும். பொருள் நிறைந்ததாகும். நூறு வயது எட்டுமுன் மனிதன் இறந்துவிடுகிறான். ஆனால், அவனது படைப்புகளோ பல நூற்றாண்டுகள் கடந்து நிலைத்து வாழ்கின்றன”.

எழுத்தாளனின் வேலை விஞ்ஞானியின் வேலையைப் போன்றதே.
ஒரு விஞ்ஞானிதான் தனித்திறன் ஆய்ந்த துறையின் வளர்ச்சி வரலாற்றை அறிந்திருந்ததால்தான் அவனால் கற்பனைக் கதைபோல் தோன்றுகிற விஞ்ஞானத்தின் சாதனைகளையும் அதன் வளர்ச்சியையும் விளக்க முடியும். விஞ்ஞானத்துக்கும் இலக்கியத்துக்கும் பொதுவானவை நிறைய உண்டு;

கவனித்தறிதல், ஒப்புநோக்குதல், பயில்வது ஆகியன இவைகள் இரண்டிலும் தலைமைப் பாத்திரம் வகிக்கின்றன. எழுத்தாளனுக்கும் சரி, விஞ்ஞானிக்கும் சரி கற்பனையும் உள்ளுணர்வும் இருந்தே தீர வேண்டும்.
விபரங்களின் சங்கிலியிலே விடுபட்டுப்போன கண்ணிகளை கற்பனையும், உள்ளுணர்வும் தந்து பூர்த்தி செய்ய உதவுகின்றன. இதனால் விஞ்ஞானிக்கு உத்தேசக் கருத்துக்களையும் தத்துவங்களையும் உருவாக்க முடியாது, இவை மனித சிந்தனை இயற்கையின் சக்திகளைப் பற்றியும் தோற்றங்களைப் பற்றியும் நடத்துகிற விசாரணைகளுக்கு ஏறத்தாழ பயனுள்ள வகையில் வழிகாட்டுகின்றன.

இந்த இயற்கையின் சக்திகளையும் தோற்றங்களையும் படிப்படியாகக் கீழ்ப்படியச் செய்வதன் வழியாக மனித னின் சிந்தனையும் சித்தமும் மனிதப் பண்பாட்டைப் படைக்கின்றன. இந்தப் பண்பாடுதான் மொத்தத்தில் நமது “இரண்டாவது இயல்பாக” இருப்பது. இரண்டு உண்மைகள் இக்கூற்றை மெய்ப்பிக்கின்றன.

ஒன்று, டிமிட்ரி மெண்டலிவ் என்ற புகழ்பெற்ற வேதியியல் விஞ்ஞானி தம் காலத்தில் தெரிந்திருந்த இரும்பு, ஈயம்,கந்தகம், பாதரசம் முதலானவற்றைப் பயின்றதன் அடிப்படையில் தமது தனிம வரிசை அட்டவணையை உருவாக்க முடிந்தது. இயற்கை யிலேயே இருக்கிற கண்டுபிடிக்கப்படாமல் இருந்த சில தனிமங்களையும் கண்டறிந்தார். ஒவ்வொன்றின் பண்புகளையும் குறித்தார். அது மட்டுமின்றி மெண்லி வின் முறை பிற்காலத்தில் இதர பல தனிமங்களையும் கண்டுபிடிக்க உதவியது.

இரண்டு, ஹொனர் டி பால்ஸாக் ஒரு பிரெஞ்சு நாவலாசிரியர். தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் நூல்களில் ஒன்றில் விஞ்ஞானத்திற்குத் தெரியாத சில சக்தி மிகுந்த திரவக் கசிவுகள் மனித உடம்பில் வேலை செய்கின்றன என்றும், அவை அந்த உடம்பின் மனக்கூறு-உடற்கூறு வகைப்பட்ட பல்வேறு குணாம்சங்களை விளக்குமென்றும் தாம் நினைப்ப தாகத் தெரிவித்தார்.

பல பத்தாண்டுகள் கழித்த பிறகு அதுவரை அறிந்திராத பல சுரப்பிகள் மனித உடம்பில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சுரப்பிகளே ஹார்மோன்களை உற்பத்தி செய்கி ன்றன;இந்தக் கண்டுபிடிப்பு என்ஜைம் சுரப்பிகள் பற்றிய மிக முக்கியமான விஞ்ஞானத்தைப் படைப்பதில் போய் கொண்டுபோய்விட்டது. இவ்வாறு விஞ்ஞானிகளின், முன்னணி எழுத்தாளர்களின், படைப்புத் திறனுள்ள நடவடிக்கைகள் இணைந்து செல்வது அப்படியொன்றும் அரிய விசயமல்ல. ஒரே சமயத்தில் கவிஞர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் பலர் இருந்ததாக கார்க்கி கூறுகிறார்.

“இலக்கியத்தின் படைப்புத் தன்மை என்பது குணச்சித்திரங்களையும் “மாதிரிகளையும்” (Types) உருவாக்கும் விசயம் சம்பந்தப்பட்டதாகும். அதற்குக் கற்பனையும் புனைத்திறனும் தேவைப்படுகின்றன. ஒரு எழுத்தாளன் தனக்குத் தெரிந்த ஒரு கடைக்கா ரனையோ அரசு ஊழியரையோ தொழிலாளியையோ பாத்திரமாக வடிக்கும்போது, அவன் ஒரு குறிப்பிட்ட தனி நபரை ஏறத்தாழ அப்படியே படம் பிடித்த மாதிரி படைத்தால் அது வெறும் புகைப்படமாகுமே தவிர அதற்கு மேல் ஒன்றுமில்லை.

அதற்கு ஒரு சமுதாய முக்கியத்துவமோ அறிவூட்டவல்ல பொருட் குறிப்போ கொஞ்சம் கூட கிடையாது. இவ்வாறு படைக்கும் படைப்பு மனிதனைப் பற்றியோ, வாழ்கையைப் பற்றியோ நாம் பெற்றிருக்கும் அறிவை விரிவாக்க அறவே உதவாது.

ஆனால், ஓர் இருபது, ஐம்பது அல்லது ஒரு நூறு கடைக்காரர்களுக்கோ, அரசு ஊழியர்களு க்கோ, தொழிலாளிகளுக்கோ அலாதியாயமைந்த மிகவும் குறிப்பான வர்க்க குணாம்சங்களையும், பழக்க வழக்கங்க ளையும்,பேச்சுத் தோரணையையும் பொதுவாக்கி சுருக்கித்தர ஓர் எழுத்தாளனாலோ கலைஞனாலோ முடியுமானால்,அவற்றையெல்லாம் தனி ஒரு கடைக்காரனாக, ஒரு அரசு ஊழியராக, ஒரு தொழிலாளியாக சுருக்கிதர முடியுமானால், அதன் வழியாக அந்த எழுத்தாளன் ஒரு மாதிரியை படைக்க முடியும்.

அதுவே கலையாகும். கலைஞனிடமுள்ள விரிவும், வாழ்கையைப் பற்றிய வளமான அனுபவமும் அவனுக்கு ஒரு சக்தியைத் தருகின்றன. விசயங்களைப் பற்றி அவன் கொண்டிருக்கிற கண்ணோட்டத்தைத் தவிர, அதாவது அவனுடைய அகநிலைத் தன்மை யைவிட அந்தச் சக்தி மேலானது. அகநிலைப் போக்கி லே பார்க்கும்போது முதலாளித்துவ அமைப்பை யோ அல்லது வேறு சில கருத்துக்களை ஆதரித்து நிற்பவராக ஆகிவிடுவர்.”

“எழுதத் தொடங்குபவர்களுக்கு இலக்கியத்தின் வரலாற்றில் ஞானம் இருந்தாக வேண்டும்”.

தனது வர்க்கத்தையும் தனது நாட்டையும் பாதிக்கிற சகலத்தையும் நுண்மையாக வாங்கிக் கொள்பவனே கலைஞன். தனது வர்க்கத்தின், தனது நாட்டின், காது, கண், இதயம் எல்லாமே அவன். அவனது குரல் அவன் காலத்திய குரலாகும். முடிந்தவரைக்கும் சகலத்தை யும் அவன் அறிந்திருக்க வேண்டியது ஒரு எழுத்தாள னின் கடமை. மேலும் அவன் வரலாற்றைப் பற்றி தெரிந்து கொண்டிருக்க வேண்டிதும் அத்தியாவசியம். அதேபோல் மக்களின் சமுதாய, அரசியல் சிந்தனை களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.

“எழுத வேண்டும் என்கிற வேட்கை ஏன் எழுகிறது? – அழுத்திக் கொள்கிற மாதிரியிருக்கிற உப்புசப்பற்ற வாழ்க்கைதான்”. இடிந்து ஒடுங்கிப்  போனவர்களைப் பற்றி ஏன் எழுதுகிறேன் என்று பலரும் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். காரணம் சாதாரணமானதுதான். “அற்பப் புத்தி படைத்த, பிறருடைய ரத்தத்தை உறிஞ்சி அந்த ரத்தத்தை பணமாக மாற்ற முயற்சிப்பதிலே வெறி கொண்டு திரிந்த மனிதர்கள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்”.

கலையை மனித மனம் புனைந்த மாதிரிதான் கடவுளையும் மனித மனம் புனைந்தது.
எழுத்தின் வேலைப்பாடுகள் குறித்து சில…

மனிதனைப் போலத்தான் புத்தகமும் ஒரு வாழ்வின் தோற்றமாகும். அதற்கும் உயிருண்டு; அதுவும் பேசும்; “எழுத்தாளனுக்கு அலாதியான நுண்ணிய பார்வை வேண்டும். மற்றவர்களால் பார்க்க முடியாதவற்றை உன்னிப் பார்த்துக் குறித்துக் கொள்ளும் திறன் வேண்டும். கச்சிதமான வளமான நடை வேண்டும். கூர்மையாகக் கவனிக்கும் கண்களும், ஒருமைப்பா டுகளையும் ஆழ்ந்து கவனித்தறியும் ஆற்றலும், இடையறாத முடிவில்லாத பயிற்சியும் இருந்தால்தான் மாதிரிப் படைப்புகளாக உள்ள மனிதர்களைப் பற்றி பளிச்சென சித்தரித்துத் தர முடியும்.”


இலக்கியத்தில் கற்பனாவாதம், யதார்த்தவாதம் என்ற இரண்டு போக்குகள் அல்லது பிரிவுகள் இருக்கின்றன. யதார்த்தவாதம் என்பது, மக்களையும் அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளையும் உண்மையாக, மேல்பூச்செதுவும் பூசாமல் சித்தரித்துக் காட்டுவதாகும். கற்பனாவாதத்துக்கு பல வரையறைகள் கூறப்படுகி ன்றன. ஆனால், எல்லா வரலாற்றாசிரியர்களுக்கும் திருப்தியளிக்கிற மாதிரி இதுவரை கறாரான, முழுமையான வரையறை எதுவும் வகுக்கப் பெறவில்லை.
கற்பனாவாதத்தில் வினைச் சிறப்புடையது, வினைச்சிறப்பற்றது என்ற முற்றிலும் மாறுபட்ட இரண்டு போக்குகள் உண்டு. 

பூச்சு இட்டு அழகுபடுத்தி அத்துடன் மனிதனைச் சமரசப்பட்டுப் போகும்படி செய்ய முயற்சிக்கிறது அல்லது மனிதனை “வாழ்வின் தீராப் பிரச்சனைகளில் – விஞ்ஞானத்தாலன்றி மற்றபடி தன் சிந்தனையினால் சரி செய்ய முடியாத பிரச்சனைகளில் மலட்டுத்தனமான உள்நோக்கு விசாரணை நடத்தும்படி செய்வதன் வழியாகத் தன்னை சூழ்ந்திருக்கும் விசயங்களிலிருந்து மனிதனின் கவனத்தை திருப்பிவிடவும் முயற்சிக்கிறது.
வினைச் சிறப்புள்ள கற்பனாவாதம், வாழ வேண்டும் என்கிற மனிதனின் சிந்தனையை வலுப்படுத்த முயற்சிக்கிறது. தன்னைச் சூழ்ந்துள்ள வாழ்க்கை நிலைமைகளையும் மீறி, அது சுமத்தப் பார்க்கும் எந்தவிதமான நுகத்தையும் தள்ளிவிட்டு, நிமிர்ந்து மேலேறிவரச் செய்வதற்கு முயற்சிக்கிறது”.

“கலகம் செய்ய நிமிர்ந்துவிட்டவனுக்கு உதவி செய்வதே இலக்கியத்தின் பணி”.
“உலகின் பகைச் சக்திகளை தொழிலாளி வர்க்கம் ஒன்றுதான் அடக்க முடியும். மேலும், வெற்றி பெற்ற பிறகு தேவையான எல்லா நிலைமைகளையும் தொழிலாளி வர்க்கம் ஒன்றுதான் உருவாக்க முடியும்”.
தோழர் மாக்சிம் கார்க்சியின் நினைவு தினம் 18 ஜூன் 1936

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எனது பெரும்பாலான கவிதைகள் இறந்தே பிறந்தன 
மாக்சிம் கார்க்கி -


மாக்சிம் கார்க்கி - உலகம் முழுவதும் அறியப்பட்ட பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகன். மனிதகுலத்தின் மாண்புகளையும் பெருமைகளையும் உலகறியச் செய்தவர். அன்று முதல் இன்று வரை கார்க்கியின் “தாய்” புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்திற்கு வீரியமூட்டி வருகிறாள். இளமையில் கார்க்கியைப் போன்று துன்ப துயரங்களை அனுபவித்தவர் யாரும் இருக்க முடியாது. அவரது தந்தை மாக்சிம் கார்க்கியின் குடும்பத்தில் அவர் சேற்றில் மலர்ந்த செந்தாமரை போன்று முளைத்தார்.

 “ஒரு தோட்டத்தில் செடி கொடிகளும் மரங்களும் பூத்துக் குலுங்கின. ஆனால் அவைகள் எல்லாம் ஒருநாள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன” என்று தனது தந்தை இறந்ததும் கார்க்கி கூறினார்.

தனது இறுதிக் காலம் வரை இரண்டு விஷயங்களை அவர் வெறுப்புணர்ச்சியோடு கண்டனம் முழங்குவார். ஒன்று அக்கிரம ஆட்சி நடத்திய ஜார் மன்னனும் முதலாளித்துவ சமூகமும் ஆகும். மற்றொன்று அவரது தந்தையைக் கொடுமைப்படுத்தி அடித்துக் கொன்ற அவரது பாட்டனார் வாசிலிகாசிரின் ஆவார்.

இளமைக்காலம்

கார்க்கியின் இளவயது வாழ்வு துயரமும் கண்ணீரும் இருளும் நிறைந்தது. அந்த இருளில் அவருக்கு ஒளிவிளக்காய்த் திகழ்ந்தது. அவரது பாட்டி அக்குலினா. இந்தப் பாட்டி மட்டும் இல்லையென்றால் பேரன் கார்க்கி எட்டு வயதிலேயே மடிந்திருப்பார். தனது பாட்டியைப் பற்றி அவர் குறிப்பிடும்போது -“என் பாட்டிதான் மனித வாழ்வை எனக்கு முதன்முதலில் போதனை செய்தார். அவளது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து படைத்து எனக்குச் சொன்ன ராஜா ராணிக் கதைகள்தான், எனக்கு அறிவுப் பாடம் நடத்தின. அந்தப் பாட்டியின் கதைகளைத் தனது இறுதிக்காலம் வரை கேட்கக் கிடைக்காத புதையல் என்று மதித்துப் பேணிப் பாதுகாத்தார். 

கார்க்கியின் வாழ்வுக்கு இன்பமூட்டி, அறிவொளி பாயச் செய்த பாட்டி அக்குலினாவை “எனது குழந்தைப் பருவம்” என்ற நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார். தனது பத்தாவது வயதிலேயே வாழ்க்கை நடத்த வீட்டை விட்டு வெளியேறினார். தந்தை இறந்ததால் ஏற்பட்ட துயரமும் வறுமையும் அவரை விரட்டின. குழந்தைத்தொழிலாளியாக மாறி அவர் பல இடங்களில் வேலை செய்தார். பத்து வயது முதல் கார்க்கி தனக்கென ஒரு குறிப்பேடு வைத்துக் கொண்டார். பத்து வயதிலேயே அக்காலத்தில் இப்படி ஒரு பழக்கம் எப்படி அவருக்கு வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்தக் குறிப்பேட்டில்தான் பாட்டி அக்குலினா கூறிய கதைகளை எழுதி வைத்திருந்தார். ஆனால் அந்தக் குறிப்பேட்டை அவர் யாரிடமும் காட்டாமல் தனக்கு மட்டுமே பாதுகாப்பாக வைத்திருந்தார். அந்த  இளவயதில் பல நாட்கள் பட்டினி கிடந்து வீதிகளில் அலைந்தார். வேலை கிடைக்காமல் வறுமையில் வாழ்க்கையில் வெறுப்புற்றார். தன்னைத்தானே அவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார். அந்தத் துயரச் சம்பவம் 1887-ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் இரவு எட்டு மணிக்கு நடந்தது. தன்னைச் சுட்டுக் கொள்வதற்கு முன்பு அவர் ஒரு குறிப்பு எழுதி வைத்திருந்தார். 

அதை அவர் தனது மனைவியிடமும் நண்பர்களிடம் மட்டும் பிற்காலத்தில் சொல்லிச் சிரிப்பார். அந்தக் குறிப்பில் தனது தற்கொலைக்கு ஜெர்மானியக் கவிஞர் ஹைனே தான் காரணம் என்று எழுதியிருந்தார். மனிதனுக்கு உண்டாகும் இதய வலிபற்றித் தனக்கு முதன்முதலாக உணர்த்திய கவிஞன் ஹைனேவைப் பாராட்டியும் எழுதியிருந்தார்.

துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஆறி மருத்துவமனையை விட்டு சுகமாய் திரும்பினார். ஆனால் அந்தச் சூட்டினால் ஏற்பட்ட தசைவலிகள் அவர் சாகும் வரை துன்புறுத்தின. எனது இளமைப் பருவத்தை தேவன் பறித்து விட்டான் என்று அவர் வேடிக்கையாய்க் குறிப்பிடுவது உண்டு. அதற்காக அவர் வேதனைப்பட்டதில்லை. தனது 24 வயதில் இடுகாட்டில் பிணங்களின் தலைமாட்டில் நின்று கூலிக்குப் பிரார்த்தனை செய்யும் வேலை செய்தார்.

இது ஆறு மாத காலம் மட்டுமே நீடித்தது. அது அவரது வாழ்க்கையில் நெஞ்சுறுதியும் தெம்பும் பெற உரமூட்டியது. பிணங்களின் வாடையை ஆறு மாதம் பக்கத்திலிருந்து கார்க்கி நுகர வேண்டியிருந்தது. வெளியில் மக்கள் இந்தப் பிணவாடையை விட மோசமான வாழ்வை அனுபவி த்தனர். வறுமையால் அவர்கள் அனுபவிக்கும் பிணவாடையில் இருந்து அவர்களை விடுவிக்கும் லட்சியத்தில் உறுதிகொண்டார்.

முதல் கவிதை

ஒருமுறை கார்க்கி நேங்குரோத் நகரில் வாழ்ந்தபோது அவரது அறைக்குள் ஒரு திருடன் புகுந்துவிட்டான். அவன் நெடுநேரம் அந்த அறைக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தான். அப்போது பசியோடு கார்க்கி விழித்துக் கொண்டிருந்தார். முதலில் திருடனின் தேடலை ரசித்த போதிலும் பின்பு அது அவன் மீதான பரிதாபமாக மாறியது. அவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு திருடனைப் பார்த்து “நண்பனே, உனது முயற்சி வீணானது. கடந்த மூன்று மணிநேரமாக என் அறையில் நீ தேடிக் கொண்டிருக்கும் பொருளை நான் கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாய்த் தேடி வருகிறேன்.

விளக்கு ஏற்ற எண்ணெய் வாங்கக்கூடப் பணமில்லாமல் இருளில் தவிக்கிறேன். போயும் போயும் திருடுவதற்கு என் வீட்டுக்கு வந்தாயே. திருட்டுத் தொழிலுக்கு நீ புதியவரோ? சரி, எதற்கும் நாளைக்கு நீ பகலில் வா. இரண்டு பேரும் சேர்ந்து தேடுவோம்” என்று கூறினார். அதற்குப் பிறகு திருடன் அந்தப் பக்கம் தலைகாட்டவேயில்லை.

கார்க்கி முதன்முதலாகக் கவிதை எழுதியது வேடிக்கையான சம்பவமாகும். அது அவர் காசான் ரயில் நிலையத்தில் காவல்காரராக வேலை செய்தபோது நடந்தது. அங்கு அவரது அறைக்குப் பக்கத்தில் ரயில்வே தொழிலாளர்களுக்கான சமையலறை இருந்தது. அங்கு ஒரு தடித்த சமையல் காரி பணியாற்றினார். வாலிபமிடுக்கும் உடற்கட்டும் மிக்க கார்க்கியை அந்தப் பெண் இரவு நேரங்களில் தொந்தரவு செய்து வந்தாள். அவளது தொல்லை குறித்து தொழிலாளர்களிடமும், ரயில் நிலைய அதிகாரி வரை கார்க்கி புகார் கூறினார். ஆனால் எவரும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

சமையல்காரப் பெண்ணின் நச்சரிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கார்க்கி அது பற்றி ஒரு கவிதை எழுதினார். அதில் சமையல்காரியைப் பற்றி முதலில் வர்ணித்துவிட்டு, அவளிடம் சிக்கி ஒவ்வொரு இரவும் தான்படுகிற நரக வேதனையை நகைச்சுவை ததும்ப எழுதினார். அதில் ரயில்வே அதிகாரிகளின் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் அது இருந்தது.

கவிதையை எழுதி அதிகாரியிடம் கொடுத்தார். இருபது தினங்கள் கழித்து கார்க்கிக்கு ஊர் மாற்ற உத்தரவு கிடைத்தது. அக்காலத்தில் ஊர்மாற்றம் பெறுவது எளிதல்ல. அது சொர்க்கத்திற்கே சென்று திரும்புவது போன்றது. அதிகாரிகளுக்குக் கார்க்கியின் கவிதை புரியாத புதிராகவே இருந்தது. எனினும் ஊர் மாற்றம் செய்தனர்.

அவரது முதல் கவிதை இவ்வாறு முக்கியத்துவம் பெற்றது. தொழிலாளர்களும் அந்தக் கவிதையைப் படித்து கிண்டலும் கேலியும் சிரிப்புமாக இருந்தனர். ஊர் மாற்றத்திற்குப் பின்பு கார்க்கி தனது இரண்டாவது கவிதையை எழுதினார். “பழங்கமுகு மரத்தின் கீதம்” என்ற அந்தக் கவிதை எங்கும் பிரசுரமாகவில்லை. தொடர்ந்து நிறைய கவிதைகள் எழுதினார்.

எனது பெரும்பாலான கவிதைகள் இறந்தே பிறந்தன என்று அவர் கூறினார். எனது கவிதைகளில் மனிதனின் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் துடிப்பு ஏனோ மந்தமாக உள்ளது என்று தனது நண்பர்களிடம் சுயவிமர்சனம் செய்துகொண்டார். இதனால் அவர் உயிரோடு வாழ்ந்த வரை அவரது கவிதைகளைத் தொகுப்பாக வெளியிட அவர் சம்மதிக்கவே யில்லை. அவர் இறந்த பின்புதான் அந்தக் கவிதைத் தொகுப்பு வெளியானது.

கார்க்கி முக்கியமான நூல்களைத் தவிர மற்றவைகளை ஒருமுறைக்கு மேல் வாசிப்பதில்லை. படித்த நூல்களின் உள்ளடக்கத்தைப் பல ஆண்டுக ளுக்குப் பின்னர்கூடச் சொல்லுவார். படிக்கும் விசயங்கள் அவரது சிந்தனையில் ஆழமாய்ப் பதிந்திருந்தன. அவரது நினைவாற்றல் அபூர்வமானது. தனது பத்து வயதில் அவர் முதலில் வாசித்த ஹான்ஸ் ஆண்டர்சனின் சிறுவர் கதைத் தொகுதியிலுள்ள பல கதைகளை அவர் கடைசி வரை மறக்கவில்லை.

மகனின் மரணம்

கார்க்கிக்கு ரஷ்ய மொழி தவிர பிரெஞ்சு, இத்தாலிய மொழிகளும் நன்கு தெரியும். ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளும் தெரியும். கார்க்கியின் மகனுக்கும் ஐந்து மொழிகள் தெரியும். மகன் உதவியைக் கொண்டு கார்க்கி உலக இலக்கியங்கள் பற்றிய பல விமர்ச னங்களையும், ஒரு விமர்சன நூலையும் வெளியி ட்டார். பல நாடுகளிலிருந்து வரும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள கதைகள், நாவல்கள், கட்டுரைகளைப் படித்து கார்க்கியின் மகன் தனது தந்தைக்கு எடுத்துரை ப்பார். அதே போல் கார்க்கியின் கதைகளை ரஷ்ய மொழியிலிருந்து பிறமொழிகளில் மொழிபெயர்த்து அனுப்புவதிலும் உதவினார். உலக நாடுகளிலிருந்து நண்பர்கள் எழுதும் கடிதங்களுக்கு மகனின் உதவி யுடன் பதில் எழுதினார்.

பிரெஞ்சு எழுத்தாளர் ரோமெய்ன் ரோலந்து, அமெரிக்க எழுத்தாளர் தியோடர் ட்ரீசர், ஜாக்லண்டன், அப்டன் சின்கிளேர், ஆங்கில நாவலாசிரியர்கள் ஜான் கால்ஸ்வொர்த்தி, ஜேன் ஆன்டர்சன்,
சீன எழுத்தாளர் லூசுன் ஆகியோருடன் கார்க்கிக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. கார்க்கி வெளிநாடுகளுக்குச் சென்றபோதெல்லாம் தனது மகனையும் அழைத்துச் சென்றார். வெளிநாடுகளில் சாதாரண மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி அவர்களைப் பற்றியும், வாழ்வு மற்றும் பழக்கவழக்கங்களையும் அறிந்துகொள்வதில் அவரது மகனின் மொழிபெயர்ப்பு பெரிதும் உதவியது.
ANTON SEKAV

ஐரோப்பா, அமெரிக்க நாடுகள்பற்றி கார்க்கி கட்டுரைகள் எழுத இவை உதவியாக இருந்தன. ஆனால் கார்க்கியின் துரதிருஷ்டம் அவருக்குப் பேருதவிபுரிந்த மகன் 1934ஆம் ஆண்டு திடீர் மரணம் அடைந்தார். மகனின் மரணம் அவரை அடியோடு உலுக்கிவிட்டது. அந்தப் பாதிப்பு கார்க்கிக்கு இறுதிவரை தொடர்ந்தது.

உலகத் தொடர்புகள்

கார்க்கி ஒவ்வொரு நாட்டு இலக்கியங்களைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருந்தார். பிறநாட்டு இலக்கிய ங்களைப்பற்றி அந்தந்த நாட்டு எழுத்தாளர்களிடமே விமர்சனம் செய்வார். பாராட்டிப் புகழவும் செய்வார். ஒருமுறை இத்தாலி நாட்டு எழுத்தாளர்கள் கார்க்கி யின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் உலக இலக்கியம் பற்றியும், ரஷ்ய இலக்கியம் பற்றியும் கார்க்கியுடன் நீண்ட நேரம் விவாதித்தனர். பின்பு கார்க்கி அவர்க ளிடம் இத்தாலிய இலக்கியத்தின் ஜனநாயகம் பாரம்பரியம் பற்றியும், அதன் பரம்பரையாக வரும் இலக்கிய மாண்பு பற்றியும் நீண்ட சொற்பொழி வாற்றினார். இலக்கியம் பற்றிய அந்த இத்தாலிய எழுத்தாளர்களின் தவறான பார்வையைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இறுதியில் அவர்களிடம் “உங்கள் தாய்மொழியான இத்தாலியில் தொன்றுதொட்டு வந்துள்ள இலக்கியச் செல்வங்களை இன்னும் அதிகமாக நீங்கள் படித்தால் அனைவருக்கும் நல்ல பயன்கிடைக்கும்” என்று கார்க்கி கூறி அனுப்பினார்.

குடும்ப வாழ்க்கை


கார்க்கி தனது சொந்த வாழ்க்கையில் சிறந்த கணவராகவும் மதிப்பிற்குரிய தந்தையாகவும் வாழ்ந்தார். அவர் பெரும்பாலும் கோபமேபடமாட்டார். கோபம் வந்தால் அதைக் கட்டுப்படுத்தவே முடியாது. தன் மனதில் பட்டதை நேருக்கு நேர் நின்று தைரியமாகச் சொல்வார். மகத்தான தலைவர் லெனினுக்கு முன்னால்கூட அவர் தனது கருத்தை அழுத்தமாய்க் கூறுவார்
.
சமயங்களில் லெனினுடைய முடிவுகளுக்கு முரண்பட்ட கருத்துக்களைக் கூட அவரிடம் அழுத்தமாய்க் கூறுவதற்குத் தயங்கியதேயில்லை.
ஒருமுறை, ரஷ்யாவின் இருபதாம் நூற்றாண்டின் மகாகவி என்று புரட்சிக்கு முன்பு முதலாளித்துவ விமர்சகர்களால் பாராட்டப் பெற்ற சாலியாபினுக்கு சிறப்பு விழா மாஸ்கோவில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்குக் கார்க்கியும் அழைக்கப்பட்டிருந்தார். அந்த விழாவில் முழுக்கப் பெரும் வணிகர்களும், பிரபுக்களும், அவரின் வாரிசுகளும் கலந்துகொண்டனர். கவிஞர் சாலியாபினைப் பற்றி அனைவரும் வானளாவப் புகழ்ந்தனர். இறுதியாக கார்க்கி பேசினார்.

மேடையில் கம்பீரமாக அமர்ந்திருந்த சாலியாவினைப் பார்த்து கார்க்கி “சாலியாபின், நீர் ஒரு சிறந்த அறிவாளி! ஆனால் உமது அறிவுத் திறனெல்லாம், கவிதை ஆற்றல் எல்லாம் சொகுசு வர்க்கத்தினரான பெரும் வணிகர்களின் அருமை மனைவிகளின் பட்டாடை யிலும் பகட்டுத் தோற்றத்திலும் ஆழ்ந்து அமிழ்ந்து பாலைவனத்தில் இறைத்த நீராகி விடுகிறது.


அன்பனே! இனிமேலாவது உன் கண்களைத் திறந்துபார். அனாதரமான, அடிமைப்பட்டுத் தவிக்கும் ஆத்மாக்க ளுக்கு ஜீவத்துடிப்பளிக்க உனது சொற்களைச் சீராக்கு. அன்றுதான் நீ உண்மையிலேயே மாபெரும் கவிஞனாவாய்” என்று கூறினார்.


கார்க்கியின் பேச்சுக்கெதிராக வணிகர்களும் பிரபுக்களும் ஆவேசமாகவும் கடுங்கோபத்தோடும் கூக்குரல் கிளப்பினார். ஆனால் கார்க்கியின் ஓங்காரக் குரலின் முன்னால் அவை ஒடுங்கிப் போய்விட்டன.


கார்க்கியிடம் சில அபூர்வப் பழக்கவழக்கங்கள் இருந்தன. உதாரணமாக அவர் பேனாவால் எழுதுவதை வெறுத்தார். அவர் தனது படைப்புகளைப் பென்சிலால்தான் எழுதினார். அதற்காக அவர் விதவிதமான பென்சில்களை உபயோகப்படுத்தினார்.


தனது பென்சில்களை அவர் எப்போதும் கூர்மையாகச் சீவி வைத்திருப்பார். அவர் மேஜை முழுவதும் பென்சில்களைப் பரப்பி வைத்திருப்பார். ஒவ்வொரு வார்த்தையின் தகுதிக்கும், அவசியத்துக்கும், முக்கியத்துவத்திற்கேற்ப பென்சில்களை மாற்றி எழுதுவார். ஆனால் அவர் தட்டெழுத்து (டைப்ரைட்டர்) எந்திரத்தை மிகவும் விரும்பினார்.

அவர் படிப்பது பெரும்பாலும் படுக்கையில்தான். அவர் பத்திரிகை படிப்பது மட்டும் நாற்காலியில் அமர்ந்து படிப்பார். கார்க்கிக்கு எப்போதும் மிகச் சிறிய பொருள்களின் மீது தான் அதிக ஆசை இருந்தது. சிறிய சிற்பங்கள் மீது அவருக்கு மிகவும் பிரியம். அவர் பல நாடுகளுக்கும் பெரும் தொகை அனுப்பிச் சிறிய சிற்பங்களை வாங்கித் தனது படுக்கை அறையில் வைத்திருந்தார்.

சீனாவிலிருந்து நான்கு மாத உழைப்பில் உருவான ஒரு தந்தச் சிற்பத்தைப் பெருந்தொகை கொடுத்து வாங்கி னார். அதை அவர் கையிலெடுத்துப் பார்த்து ரசிப்பார். அந்தச் சீனச் சிற்பியின் உழைப்பையும் திறமையையும் பாராட்டினார். அந்தச் சிற்பத்தைத் தனது கலைக் கண்ணால் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போவார். உலகின் ஓட்டத்திற்கு உழைப்புத்தான் ஜீவசக்தி என்ற கருத்தில் கார்க்கி உறுதியாக இருந்தார்.
உழைப்புத்தான் உலகின் ஜீவசக்தி என்ற கருத்தைச் சில எழுத்தாள ர்களிடம் பேசும்போது கூறினார். கலாசாரப் பண்பாட்டுக்கும் உழைப்புக்குமிடையே நிலவும் பிரிக்க முடியாத உறவைப் பற்றியும் அவர்களிடம் அழுத்த மாக எடுத்துரைத்தார். 

“கலாசாரம் என்பது மனிதனின் சிருஷ்டி உழைப்புத்தான்; உழைப்புத்தான் இன்றும் நாளையும் அதன் அடிப்படை. மனிதகுலம் இவ்வுலகில் எப்படியெல்லாம் உழைத்தது, உலகின் வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்தியது என்பதைக் கூறுகிற கதைதான் உலகின் பேரதிசயமான கதையாகும்” என்று உழைப்பின் பெருமையை எழுத்தாளர்களிடம் வலியுறுத்திக் கூறினார் கார்க்கி.

கலாசாரத்தைப் படைப்பவர்களும், உலகின் அனைத்து வகையான செல்வங்களையும் உருவாக்குவோர் மக்கள்தான். இந்த உண்மையை கார்க்கி தொடர்ந்து கூறிவந்தார். உழைப்பாளி மக்களின் வாழ்க்கையி லிருந்தும் அவர்களின் போராட்டங்களிலிருந்தும்தான் உணர்வு பெற்றதாய்க் கூறினார். கணக்கற்ற நூற்றாண்டுகளில் மக்கள் தங்கள் உழைப்பின் மூலம் படைத்து உருவாக்கிய போற்றுதலுக்குரிய பல்வேறு சிறப்பு அம்சங்களிலிருந்துதான் நான் உணர்வு பெற்றேன் என்றார். 

அதிலிருந்துதான் உற்சாகத்தையும் தனது மொழியையும், உருவகங்களையும் கற்பிதங்களையும் பெற்றுத்தான் கார்க்கி தனது அமர இலக்கியங்களைப் படைத்தார்.

எழுதக் கற்பித்த ஆசிரியர்

இளம் எழுத்தாளர்கள் மீது கார்க்கி மிகுந்த அக்கறை காட்டினார். அவர்களது வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். அவர்கள் எழுதிய படைப்புகளைப் பொறுமையாய்ப் படித்து தனது கருத்துக்களைக் கூறித்திருத்துவார். கடிதங்கள் மூலமாகவும் எழுத்தாளர்களின் படைப்புகளை விருப்பு வெறுப்பின்றிப் படித்துக் கருத்துக்களை அனுப்புவார். அவர்களைத் தனது வீட்டுக்கு வரவழைத்து விவாதங்கள் நடத்தி அவர்கள் எழுதுவதற்கு ஊக்குவிப்பார். அவர்கள் எழுதிய கைப்பிரதிகளைத் திருத்திக் கொடுப்பார்.

கார்க்கி தனக்கிருக்கும் அதிகமான இலக்கியப் பணிகளுக்கிடையே புதிய எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படித்து, விமர்சனம் செய்து அவர்களிடம் நட்பு ரீதியாக எடுத்துக் கூறி வந்தார். அவர்களின் பிரியத்துக்குரிய வழிகாட்டியாகவும் தோழராகவும் கார்க்கி திகழ்ந்தார். மேலும் அவர்களது படைப்புகளைப் பல்வேறு பத்திரிகைகளுக்குச் சிபாரிசு செய்து பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் தன்னம்பிக்கை ஏற்படுத்தினார்.
புதிய எழுத்தாளர்களுக்கு கார்க்கி எழுதும் கடிதங்கள் நீளமாகவும், தெளிவாகவும், உணர்வூட்டுவதாகவும் இருக்கும். இதோ உதாரணத்திற்கு கார்க்கியின் ஒரு கடிதம்:

அன்புள்ள நண்பரே,

உங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இவ்வளவு காரசாரமாகவும், உயிர்த் துடிப்போடும், சீரிய கவிதை மொழியில் இதை நீங்கள் எழுதியிருப்பதை க்கண்டு மகிழ்கிறேன். உங்கள் ஆற்றலும், கவிதைத் துறையில் உங்களுக்குள்ள நம்பிக்கையும் மேலும் பெருகவேண்டும். மனப்பூர்வமாய் இதயத்தின் அடியாழத்திலிருந்து உங்களை வாழ்த்துகிறேன்.

உங்களுடன் ஒப்பிடும்போது வயது முதிர்ந்தவன் என்ற முறையில் நான் நல்லதொரு ஆலோசனையை வழங்கத் துணிகிறேன். எந்த நேரமும் அயராது உழையுங்கள். உங்கள் ஆயுதத்தைக் கூர்மையாகத் தீட்டி வைத்துக் கொள்ளுங்கள். வற்றாத ஊற்றுப் போன்ற மக்களது செழுமிய, எழில் மிகுந்த இன்சுவை மொழியைத் தொடர்ந்து பயிலுங்கள்.
இம்மொழியிலிருந்து நீங்கள் மேதைமையோடும் ஆற்றலோடும் வெளிப்பட முடியும். நல்ல கருத்துகளையும் உணர்ச்சிகளையும் எடுத்துரைக்கும் வல்லமையைப் பெறமுடியும். 

எந்தச் சிறிய விஷயத்தையும் கவனியாது விட்டுவிடாதீர்கள். எதைப் பற்றியும் அஞ்சாதீர்கள். அனைத்தையும் துருவி ஆராயுங்கள். அரிய வகையான விசயங்களை அனைவருக்கும் பயன்தரக் கூடியவற்றை உங்களால் திறம்படக் கண்டறிய முடியுமென்று உறுதியாய்க் கூறுகிறேன்” என்று கடிதத்தை கார்க்கி முடித்துள்ளார்.

கார்க்கி தனக்குப் பின்னால் ஒரு எழுத்தாளர் பரம்பரையை உருவாக்க இப்படிப்பட்ட நட்புரீதியான விமர்சனங்களும் கடிதங்களும் விவாத ங்களும் உதவிபுரிந்தன. தன்னை நேரில் வந்து சந்திக்கும் இளம் எழுத்தாளர்களுக்கு கார்க்கி ஒரு பொன்மொழியைக் கூறுவது வழக்கம். “அன்பர்களே, கவிஞர்களாகவும், நாவலாசிரியர்களாகவும் எழுத்தாளர் களாகவும் சிறந்து விளங்க வேண்டுமா? அந்த ஆர்வம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் கனல்பறக்கும் இதயத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறுவார்.

இந்தக் கனல் பறக்கும் இதயம் கார்க்கிக்கு அமைந்திருந்தது. மாமேதை லெனின் இதற்குக் காரணமாக இருந்தார். லெனின் கார்க்கியின் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இருவரும் தனிமையில் பல மணி நேரம் பேசுவார்கள். சில நேரம் சண்டையிடுவது போல் பேச்சு உக்கிரமாக இருக்கும். கார்க்கி கதை சொன்னால் லெனின் அதைப் பிரியமாய்க் கேட்பார். ஒருநாள் கார்க்கி லெனினுக்கு ஒரு கதை சொன்னார்.

கதை இதுதான். புரட்சி வென்ற பிறகு பணக்காரச் சீமாட்டிகளுக் கெல்லாம் தலைவலி அதிகரித்தது. அப்போது ஜார் மன்னனின் நேரடி வாரிசு என்று கூறிக்கொண்ட ஒரு சீமாட்டி தனது சொகுசு வாழ்க்கைக்குத் தேவையான வசதி இல்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்துகொள்ள ஆற்றுக்குப் போனாள். தமது எஜமானி ஆற்றில் பாயப் போவதை அறிந்த நான்கு நாய்கள் அவளைக் கவ்விப் பிடித்துத் தடுத்தன. அதனால் சீமாட்டி தனது தற்கொலை எண்ணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று.

கார்க்கி இந்தக் கதையைக் கூறிவிட்டு லெனினுடைய கருத்து என்ன என்று கேட்டார். லெனினின் முகம் மாறிக் கண்கள் மேலும் கீழுமாய் கார்க்கியைப் பார்த்தன. சில வினாடிகள் கண்களை மூடித் திறந்துவிட்டு லெனின் அமைதியாகக் கூறினார். “இது கற்பனைக் கதையாக இருந்தால்கூட இதில் அடங்கியுள்ள கருத்து ஒன்றும் மோசமானதல்ல”, என்று கூறிவிட்டு “இது புரட்சி தந்த அருமையான கேலிக்கதை” என்று சிரித்தார். பின்பு கார்க்கியும் லெனினும் சேர்ந்து சிரித்தனர்.

கார்க்கி, லெனின் இருவரிடமும் ஒரு பொதுப் பார்வை இருந்தது. அவர்கள் இருவரும் தங்களை நன்கு அறிந்திருந்தனர். தாங்கள் பின்பற்றும் பாதை குறித்துத் தெளிவோடும் தேர்ச்சியோடும் இருந்தனர். லெனினைப் பற்றி கார்க்கிக்கு மிக உயர்ந்த மதிப்பு இருந்தது. கார்க்கி தனது மரணப்ப டுக்கையில்கூட லெனின் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தார். அதே போல் லெனினும் கார்க்கியை தனது உயிராக நேசித்தார்.

வெளிநாடுகளுக்குச் சென்றால்கூட லெனின் கட்சி உறுப்பினர்கள் மூலம் கார்க்கிக்குக் கடிதங்கள் எழுதிவந்தார். கார்க்கியும் லெனினும் சதுரங்கம் விளையாடுவர். அப்போது சிரிப்பும் கும்மாளமுமாய் இருவரும் ஆடுவர்.
இலக்கிய மேதை ரஷ்ய இலக்கியத்தில் பிற எழுத்தாளர்களோடு ஒப்பிடும்போது கார்க்கியே எல்லா வழிகளிலும் சிறந்து விளங்கினார். புஷ்கின், கோகோல், துர்கனேவ், டால்ஸ்டாய், லெர்மன்தோவ், கிராஸ்கோவ், ரேபின், லெஸ்கோ, ஆஸ்ட்ராவ்ஸ்கி ஆகிய ரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகளை முழுமையாகப் படித்து கார்க்கி மனப்பாடம் செய்திருந்தார்.

அவர் டால்ஸ்டாயை ரஷ்ய மக்களின் உண்மையான தவப்புதல்வன் என்று கூறினார். புஷ்கின் பற்றி கார்க்கி “புஷ்கின் ரஷ்ய நாட்டின் மகத்தான கவிஞர். அவரது இலக்கியத் தொண்டு ரஷ்யாவுக்குப் பெருமை சேர்த்தது. புஷ்கின் அனைத்து ஆரம்பங்களின் ஆரம்பம்” என்று கூறினார்.
கார்க்கி அன்டன் செகாவ், மாயகோவ்ஸ்கி போன்ற தனது சமகால எழுத்தாளர்களிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்தார். மாயகோவ்ஸ்கி தற்கொலை செய்துகொண்டார். அந்த மாபெரும் கவிஞர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கார்க்கிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த நேரம் கார்க்கி வெளியூரிலிருந்தார். பின்பு அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு மிகவும் வேதனைப்பட்டார்.

சில தினங்களுக்கு முன்பாகவே அந்தக் கடிதம் கிடைத்திருந்தால் மாயகோவ்ஸ்கியின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும் என்று மிகுந்த துயரமடைந்தார். மாயகோவ்ஸ்கியின் வளர்ச்சிக்கு கார்க்கி அரும்பாடு பட்டவர். அதனால் அவரது மரணம் கார்க்கியை உலுக்கிவிட்டது.

கார்க்கி கணித நூல்களைத் தவிர மற்ற எல்லா நூல்களையும் படிப்பார். தத்துவம், ஆன்மிகம், உளநூல் ஆகிய நூல்களையும் பொறுமையாக வாசிப்பார். ஒருமுறை சில அமெரிக்க விஞ்ஞானிகள் அவரைக் காண வந்திருந்தனர். அவர்களுடைய ஒரு கேள்வி கணிதம் பற்றியதாக இருந்தது. அதற்கு கார்க்கி “கணிதம் பற்றிய விசயத்தில் நான் ஒரு அப்பாவி. என்னை அதிலிருந்து விலக்கிவிடுங்கள். நான் கணிதத்தை விரும்பவில்லை. காரணம் அவை வெறும் எண்களாகவே எனக்குத் தோன்றுகின்றன. அவைகளில் கற்பனையும் அழகும் சேருவதில்லை” என்று கூறினார்.

கார்க்கி குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டுவார். அவருக்குச் சிறுவயது முதலே அனாதைக் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துவந்து பசியாற்றி அனுப்பும் பழக்கம் அவருக்கிருந்தது.

1898இல் அவரது கதைகள் அனைத்தும் தொகுப்பாக வெளிவந்தன. அப்போது அவருக்குக் கிடைத்த பெருந்தொகையைக் குழந்தைகளுக்காகவே செலவிட்டார். கிறிஸ்துமஸ் தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பணம் கிடைத்தது. ஏராளமான குழந்தைகளைத் தனது வீட்டில் திரட்டி அவர்களுக்குப் புதுஉடைகள் விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுத்து, விருந்து வைத்து ஒரு திருவிழாப் போன்று கொண்டாடினார்.

குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லி மகிழ்வித்தார். கார்க்கி வெளியில் செல்லும்போது பையில் இனிப்புகளைக்கொண்டுபோவார். வீதியில் நடமாடும் ஏழைகளுக்கு அவற்றைக் கொடுத்துவிட்டுத் திரும்புவார்.
கார்க்கியின் தனிப்பெரும் பண்பு தொழிலாளி, விவசாயி, ஏழை மக்கள் மீது அவருக்கிருந்த கரிசனம் தான். அவர்களுடைய வளர்ச்சி, முன்னேற்றம் குறித்து அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். 

இந்த நம்பிக்கை அவரிடம் ஆழமாக அவரது பேச்சிலும் எழுத்திலும் இந்த நம்பிக்கை ஒளிவு மறைவின்றி வெளிப்பட்டது. கார்க்கி வாலிபராக இருந்தபோது நீட்சேயின் கவிதைகளை ஆழ்ந்து படித்தார். அவைகளில் அவர் தனது தத்துவத்தை வெளிப்படுத்திஇருந்தார். “வீழ்ந்து கிடக்கும் மனிதனை மேலும் வீழ்த்தாட்டு” என்பது அவரது தத்துவமாக இருந்தது என்று கார்க்கி கூறினார். மேலும் அவர் தாஸ்தவெஸ்கி தனது இலக்கியத்தில் புகுத்தி இருந்த தத்துவம் “கர்வமுள்ள மனிதனே, சரணடைந்துவிடு” என்பதுதான். என்னுடைய தத்துவம் “வீழ்ந்து எழுந்திருக்கும் மனிதனைக் கைகொடுத்துக் தூக்கிவிடு” என்பதுதான் என்று கார்க்கி கூறினார்.

கார்க்கியின் துணைவியார் திருமதி பெஷ்கோவா அவரது கணவரின் மறைவுக்குப் பிறகு ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார். “ஒரு முறை கார்க்கியுடன் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். கிராமத்தில் அப்போது விவசாயிகள் நாற்று நடுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். கார்க்கி அவர்கள் வேலை செய்வதைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நான் அவரைப் பரிவுடன் பார்த்தேன்.

அவர் “இருபதாண்டுகளுக்கு முன்பு நான் இந்த கிராமத்திற்கு வந்திருக்கிறேன். இதே விவசாயிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய மெலிந்த உடலையும், உக்கி உருகிப்போன கண்களையும், வறுமையில் வாடிய அவர்கள் நிலையையும் கண்டு அன்று நான் கண்ணீர் வடித்தேன். மனம் தாங்காமல் அன்று நான் கண்ணீர் விட நேர்ந்தது. ஆனால் இன்று நான் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன்.

இன்று சோசலிச ஆட்சியில் எனது தாய் நாட்டின் உழைப்பாளி மக்களிடம் உருவாகியுள்ள ஆவேசமும் உற்சாகமும், உத்வேகமும், தாயகத்தை வளர்ப்பதில் அவர்கள் காட்டும் கூட்டு முயற்சியும் அற்புதமானவை. அவர்களின் சிரித்த முகங்களும், இன்பமாய் ஒலிக்கும் கிராமிய கீதங்களும் என்னிடம் இன்பத்தை வாரியிறைப்பதைக் காண்கிறேன்” என்று கூறினார். அன்று விவசாயிகளோடு கார்க்கியும் பயிர் நட்டு அவர்களுக்கு உதவினார்.

ரஷ்யாவில் கார்க்கி கைதூக்கிவிட்ட மனிதன் அசுர சக்தி பெற்றவனாகி உலகிற்கே வழிகாட்டியானான். கார்க்கி தனது தத்துவத்தைத் தனது காலத்திலேயே கையாண்டு வெற்றி கண்டவர். உலக முற்போக்கு இலக்கியத்தின் முதல்வராகவும், சோசலிச யதார்த்தவாதத்தின் பிதாமகனாகவும் திகழ்ந்தார்.

கார்க்கி உலக இலக்கியத்தின் மணி மகுடம், உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஈடு இணையற்ற பெரும் பொக்கிஷம். உலகின் எட்டுத் திசையிலும் வாழும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் அழியாத சொத்து. உலகில் உழைத்து வாழும் மக்கள் உள்ளவரை, மனிதகுலம் இந்தப் பூமியில் நீடித்திருக்கும் வரை அவர் புகழ் அழியாது நிலைத்திருக்கும்.




No comments:

Post a Comment