Thursday, 22 June 2017

J.VAIDYANATHAN மிருதங்க வித்வான் ஜெ. வைத்தியநாதன்!



மிருதங்க வித்வான் ஜெ. வைத்தியநாதன்!


Advertisement

பதிவு செய்த நாள்

10மே
2015 
00:00

பத்ம விபூஷன் விருது பெற்ற புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடகி டி.கே.பட்டம்மாளின் தம்பி டி.கே.ஜெயராமின் மகனான ஜெ.வைத்தியநாதன், கர்நாடக இசைத் துறையில் பிரபலமானவர். இவர், தினமலர் - வாரமலர் இதழுக்கு அளித்த பேட்டி:
என் அத்தை டி.கே.பட்டம்மாள் தான், என் அப்பா டி.கே.ஜெயராமனுக்கு குரு. காஞ்சிபுரம் நைனா பிள்ளை என்பவரிடம், அத்தை சங்கீதம் பயின்றார். கர்நாடக சங்கீதம் கற்று, மேடை கச்சேரி செய்த முதல் பிராமண பெண் என்ற பெருமை, என் அத்தையையே சேரும். 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே...' உட்பட பாரதியாரின் பல பாடல்களை, சினிமாவிலும், மேடைகளிலும் பாடி, புகழ் பெற்றவர் என் அத்தை பட்டம்மா.

அத்தை மற்றும் அப்பா இருவரும் பிரபல பாடகர்களாக இருந்தும், நீங்கள் பாடகராக இல்லாமல், மிருதங்கம் கற்றது எப்படி?
அப்பா, பிசியான பாடகராக இருந்த போதும், நிறைய பேருக்கு வாய்ப்பாட்டு சொல்லிக் கொடுத்தார். 


பிரபல டான்சர் குமாரி கமலா, அவரது சகோதரிகளான ராதா, வசந்தி மற்றும் நடிகை லட்சுமியின் தாயாரான, நடிகை ருக்மணி, தொழிலதிபர் சிவசைலம் மனைவி இந்திரா மற்றும் ரானே குரூப் தொழிலதிபர் நாராயணனின் மனைவி சரஸ்வதி போன்றோருக்கு பாட்டுச் சொல்லிக் கொடுத்தார். ஏழு வயது சிறுவனான நான், அதைக்கேட்டு பெஞ்சில் தாளம் போடுவேன். எனக்கு தாளத்தில் ஆர்வம் இருப்பதை கவனித்த என் தந்தை, பிரபல மிருதங்க வித்வான் பாலக்காடு மணி அய்யரிடம் மிருதங்கம் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். கடந்த, 1985லிருந்து சங்கீத கலாநிதி, மிருதங்க சக்ரவர்த்தி டாக்டர் டி.கே.மூர்த்தியிடம் பயிற்சி பெற ஆரம்பித்து, இன்றும், அவரிடம் தொடர்ந்து கற்று வருகிறேன்; அவருக்கு இப்போது வயது,92.

எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள் மற்றும் உங்கள் தந்தை டி.கே.ஜெயராமன் இவர்களுடன் கச்சேரிகளில் மிருதங்கம் வாசித்திருக்கிறீர்களா?


கடந்த, 1977ல் தான் என் முதல் கச்சேரி. அடையாறு பத்மநாபஸ்வாமி கோவிலில், அப்பாவின் கச்சேரியின் போது, இரண்டரை மணி நேரம் வாசித்தேன். அதன்பின், 1980ல் மியூசிக் அகாடமியில் என் அத்தையின் கச்சேரிக்கு முதன் முறை வாசித்தபோது, 'ரொம்ப நல்லா வாசிக்கறேடா; உனக்கு உலகப் புகழ் நிச்சயம் கிடைக்கும்...' என்று வாழ்த்தினார். அதே ஆண்டு மியூசிக் அகாடமியில் அப்பாவின் கச்சேரிக்கும் பக்கவாத்தியம் வாசித்தேன். தொழிலதிபரும், மியூசிக் அகாடமியின் அப்போதைய தலைவருமான டி.டி.வாசுவின் மகன் திருமணத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த புல்லாங்குழல் கலைஞரின் கச்சேரிக்கு, மிருதங்கம் வாசித்தேன்.
அங்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பாட இருப்பது எனக்கு தெரியாது. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வயலின் வாசிக்கும் ஆர்.கே. ஸ்ரீராம்குமார், 'அம்மாவிற்கு, நீ மிருதங்கம் வாசிக்கிறாயா...' என்று கேட்டார். கரும்பு தின்ன கூலியா? எம்.எஸ்., பாட, ஸ்ரீராம்குமார் வயலின், நான் மிருதங்கம். ஒரு மணி நேர கச்சேரி சிறப்பாக அமைந்தது.

உங்கள் உறவினரான பாடகி நித்யஸ்ரீ மகாதேவனுக்கு பக்கவாத்தியம் வாசித்திருக்கிறீர்களா?


நித்யஸ்ரீயின் முதல் கச்சேரி, மயிலாப்பூர் சாஸ்திரி ஹாலில் நடைபெற்றது. அப்போது, அவர் மாணவி. நான் தான் அந்த கச்சேரிக்கு பக்கவாத்தியம். நித்யஸ்ரீயுடன், 10 கச்சேரிகள் வாசித்திருக்கிறேன். அவரது சங்கீதம் எனக்கு பிடிக்கும்; என் வாசிப்பு அவருக்கு பிடிக்கும்.

மிருதங்கம் வாசிப்பதில், சிறந்த முன்னோடிகள் யார்?
பாலக்காடு மணி அய்யர், டி.கே.மூர்த்தி, உமையாள்புரம் சிவராமன், திருச்சி சங்கரன் மற்றும் காரைக்குடி மணி போன்றோரைக் குறிப்பிட வேண்டும். அப்பாவின் கச்சேரிக்கு, ஆரம்பத்தில் தம்புரா வாசித்தேன். மேலே கூறிய மேதைகள், அவருக்கு பக்கவாத்தியம் வாசிப்பர். அவர்கள் வாசிப்பதை கவனித்து, பயிற்சி செய்ய சொல்வார் அப்பா. விடியற்காலை, 4:00 மணிக்கு எழுந்து, அப்பா எனக்காக பாடுவார்; நான் மிருதங்கம் வாசிப்பேன். இப்படி அசுர சாதனை செய்ததால் தான் என்னுடைய வாசிப்பு மெருகேறி, திறமை வளர்ந்தது.

இசை கச்சேரியில் மிருதங்க வித்வானின் பங்கு என்ன?
'நல்ல மிருதங்க வாசிப்போடு பாடினால், ராம பிரானை மயக்கி விடுவதுடன், அவரையே அடையலாம்...' என்று தியாகராஜ சுவாமிகள் கூறியிருக்கிறார். வாய்ப்பாட்டு பாடுபவரை, மிருதங்கம் வாசிப்பவர் நிழல் போல பின் தொடர வேண்டும். சாம்பாருக்கு பருப்பு சுவை கூட்டுவது போல செயல்பட வேண்டும். அதுதான், மிருதங்க வித்வானின் நோக்கம் மற்றும் பணி.

தனி ஆவர்த்தனம் எப்படி...
இரண்டரை மணி மற்றும் மூன்று மணி நேர கச்சேரியில், கச்சேரி ஆரம்பித்து, இரண்டு மணி நேரம் கழித்தே பாடுபவர், மிருதங்ககாரருக்கு தனி ஆவர்த்தனம் செய்ய வாய்ப்பு கொடுப்பார். அப்போது, தன் கற்பனை சக்தியை முழுவதுமாக பயன்படுத்தி, மிருதங்க கலைஞர் தனி ஆவர்த்தனம் செய்வார். அந்த, 10 - 12 நிமிடங்கள் அனைவரின் கவனமும், மிருதங்ககாரர் மீது தான் இருக்கும். நான், பல கச்சேரிகளில், 20 நிமிடங்கள் வரை கூட தனி ஆவர்த்தனம் செய்திருக்கிறேன். மிருதங்க வித்வானின் திறமை, அப்போது நன்கு வெளிப்படும். சபையில் உள்ளவர்களும் மிருதங்க வாத்தியத்தின் முக்கியத்துவத்தை, இனிமையை உணர்ந்து ரசிக்கின்றனர்.

வெளிநாடுகளில் கச்சேரிகள் செய்யும் போது ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களை கூற முடியுமா?

அமெரிக்காவில் சான்டியாகோ நகரில், ஒரு கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். விஜய்சிவா பாட்டு; வயலின் ஆர்.கே.ஸ்ரீராம். குமாரும், நானும் பக்கவாத்தியங்கள். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோர், 'கிதார் மேதை பண்டிட் ரவி சங்கர் நிகழ்ச்சிக்கு வருவார்...' என்று கூறினர். கச்சேரி ஆரம்பிப்பதற்கு முன், க்ரீன் ரூமிற்கு வந்த ரவி சங்கர், எங்களுடன் டீ, பிஸ்கட் சாப்பிட்டார். 'கர்நாடக இசை மிகவும் பிடிக்கும்; ஆனாலும், உடல்நிலை சரியாக இல்லாததால், 15 நிமிடங்கள் மட்டுமே கச்சேரியை கேட்க முடியும்...' என்றார். 
ஆனால், கச்சேரி ஆரம்பித்ததும், கண்களை மூடி, மூன்று மணி நேரம் கச்சேரி முழுவதையும் ரசித்துக் கேட்டார். பின், மேடைக்கு வந்து எங்களை ஆசிர்வதித்து, 'டில்லியில் நடத்தும் இசைப்பள்ளிக்கு, நீங்கள் மூவரும் வந்து அங்குள்ள மாணவர்கள் முன்னிலையில் கச்சேரி செய்ய வேண்டும்...' என்றார். நாங்களும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டோம். ஆனால், சில மாதங்களில் அவர் இறந்து போனதால், அந்நிகழ்ச்சி நடக்கவில்லை.

பிரபலங்கள் முன் வாசித்த அனுபவத்தை பற்றி கூறுங்களேன்...

டில்லி ராஷ்டிரபதி பவனில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் முன்னிலையில், அருணா சாய்ராமின் ஒன்றரை மணி நேர கச்சேரி நடந்தது. தமிழ், வங்காளம் மற்றும் அபங் என, பல மொழிகளில் பல பாடல்களை பாடினார் அருணா சாய்ராம். அத்துடன், கோல்கட்டா காளிக்கு திருப்பள்ளி எழுச்சி போல, 'ஜாகோ துர்கா...' பாடலையும் பாடினார். எல்லா பாடல்களையும் ரசித்து கேட்ட பிரணாப் முகர்ஜி, 'என்ன தெய்வீகமான இசை; நீங்கள் எல்லாம் இந்நாட்டின் பொக்கிஷங்கள்...' என்று பாராட்டினார். அக்கச்சேரியில் நான் மிருதங்கம் வாசிக்க, பத்மாசங்கர் வயலின் வாசித்தார். ராஷ்டிரபதி பவன் விருந்தினர் மாளிகையில் எங்களை தங்க வைத்தது மறக்க முடியாத அனுபவம்.

ஒரு முறை மகா பெரியவர், என் தந்தையின் பாடலைக் கேட்க விரும்புவதாக, காஞ்சிபுரம் மடத்திலிருந்து அழைப்பு வந்தது. அப்பாவிற்கு நான் தான் பக்கவாத்தியம். மடத்திற்கு நாங்கள் சென்றிருந்த போது மகா பெரியவருக்கு, 102 டிகிரி ஜுரம். ஆனாலும், கச்சேரி ஆரம்பித்த போது, உடம்புக்கு முடியாத அந்நிலையிலும், இரண்டு கால்களிலும் குந்தியபடி உட்கார்ந்து, கச்சேரியை கேட்க ஆரம்பித்தார் பெரியவர். அம்பாள் மீதான சில பாடல்களை குறிப்பிட்டு, பாடச் சொன்னார். இரவு, 8:00 மணி முதல், 10:00 மணி வரை நடந்த கச்சேரியை ரசித்து கேட்டு, எங்களை ஆசீர்வாதம் செய்தது மறக்க முடியாத அனுபவம் என்று முடித்தார் ஜெ.வைத்தியநாதன்.

* தமிழக அரசின் முக்கிய விருதான கலைமாமணி விருது, 2006ல் ஜெ.வைத்தியநாதனுக்கு வழங்கப்பட்டது. இவ்விருது பெற்ற மிருதங்க கலைஞர்களில் வயது குறைந்தவர் இவர் தான்.
* கடந்த, 1986ல், தன் தந்தை டி.கே.ஜெயராமனுடன் இசைக் கச்சேரிகளுக்காக முதன் முறையாக அமெரிக்கா சென்ற வைத்தியநாதன், மூன்று மாதங்களில், 40 நகரங்களில், 40 கச்சேரிகளில் தன் திறமையை வெளிப்படுத்தினார்.
* தொடர்ந்து, மார்ச், 2015 வரை அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ, விஜய்சிவா, ஜி.ஜே.ஆர். கிருஷ்ணன் (வயலின்) உட்பட பல இசைக்கலைஞர்களுடன் இரண்டு மாதம், மூன்று மாதம் என அமெரிக்காவிற்கு, 38 முறை பயணம் செய்துள்ளார். பலமுறை ஐரோப்பிய நாடுகள் மற்றும் அரபு நாடுகளுக்கும், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று, கச்சேரிகளில் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார்.
* கர்நாடக இசை வட்டாரங்களில் இவரை ஜே.வி., என்றே அழைக்கின்றனர்.
* ஜெயா, 'டிவி' வழங்கும், 'மார்கழி உற்சவம்' நிகழ்ச்சியில், கடந்த, 16 ஆண்டுகளாக, அருணா சாய்ராம் கச்சேரிக்கு, தொடர்ந்து மிருதங்கம் வாசித்து வருகிறார்; இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
* நல்ல பலா மரத்தில் மிருதங்கம் செய்யப்படுகிறது. நீண்ட காலம் இருக்கும் மிருதங்கத்தின் இரு பக்கங்களிலும் உள்ள தோல், அதிக பட்சம் இரு ஆண்டுகள் உழைக்கும். தரமாக தயாரிக்கப்பட்ட ஒரு மிருதங்கத்தின் விலை, 15,000 ரூபாய்!

No comments:

Post a Comment