First Anglo-Sikh War) 1845க்கும் 1846
முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் (First Anglo-Sikh War) 1845க்கும் 1846க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆங்கிலேயர்களுக்கும் சீக்கியப் பேரரசுக்கும் இடையே நடந்தது; இப்போரின் முடிவில் சீக்கியப் பேரரசு சற்றே அடிபணிந்தது.
பின்னணியும் காரணங்களும்
சீக்கிய நினைவுத் துப்பாக்கிகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பஞ்சாபின் சீக்கியப் பேரரசை மகாராசா ரஞ்சித் சிங் விரிவாக்கி வந்தார். அதே நேரத்தில் பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளும் வெற்றியாலோ இணைப்பாலோ விரிவடைந்து வந்தன. ரஞ்சித் சிங் பிரித்தானியருடன் சண்டையிட்டவாறே நட்பைப் பேணி வந்தார். சத்துலெச்சு ஆற்றிற்கு தெற்கிலிருந்த சில பகுதிகளை விட்டும் கொடுத்தார்.[4] அதேவேளையில் பிரித்தானியரின் தாக்குதலை எதிர்கொள்ளவும் ஆப்கானித்தானுடன் போர் தொடுக்கவும் தமது படைகளையும் வலுவாக்கி வந்தார். தனது படைகளுக்கு பயிற்சி கொடுக்க அமெரிக்க, ஐரோப்பிய கூலிப்படை துருப்புக்களை ஈடுபடுத்தினார்; தவிரவும் தனது படையில் இந்து, [இசுலாம்|இந்திய இசுலாமியர்களின்]] படையணிகளை உருவாக்கினார்.
ஆப்கானித்தானியர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையால் சீக்கியர்கள் பெசாவர், முல்தான் நகரங்களையும் மாகாணங்களையும் கைப்பற்றியதுடன் சம்மு (நகர்) மற்றும் காசுமீரையும் தங்கள் பேரரசில் இணைத்துக் கொண்டனர். ஆப்கானித்தானில் ஒழுங்கு ஏற்பட்டபோது, ஆப்கானிய அரசர் எமீர் தோசுத்து மொகமது கான் உருசியப் பேரரசுடன் இணைந்து தங்களுக்கு எதிராக சதியிலீடுபடுவதாக பிரித்தானியர்கள் கருதினர். இதனால் முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர் மூண்டது; பிரித்தானியர்கள் தங்களுக்கு ஆதரவளிக்கும் சுஜா ஷா துர்ராணியை பதவியிலமர்த்த திட்டமிட்டனர். இதற்கு சீக்கியர்களின் ஆதரவை நாடினர். சீக்கியர்கள் பெசாவரை முறையாகத் தங்களுக்கு அளித்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சுஜா ஷாவிற்கு ஆதவளித்தனர். துவக்கத்தில் வெற்றி பெற்றாலும், எல்பின்சுடோன் படைகளின் படுகொலையை அடுத்து பின்னடைவை எதிர்கொண்டது; இந்நிகழ்வு பிரித்தானியர்களின் பெருமையைக் குலைப்பதாகவும் குறிப்பாக பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காளப் படைக்கு மானக்கேடாகவும் அமைந்தது. பிரித்தானியர்கள் இறுதியில் ஆப்கானித்தானிலிருந்து பின்னேறினர். 1842இல் பெசாவரிலிருந்தும் பின்வாங்கினர்.
பஞ்சாபு நிகழ்வுகள்
மகாராசா ரஞ்சித் சிங்கின் ஓவியம் - 1832
துலீப் சிங், ஓவியம் சேம்சு டி. ஆர்டிங், 1840
இலாகூரின் அமைச்சர் சவகர் சிங்கின் மரணம் - இல்லஸ்ட்ரேடட் லண்டன் நியூசு, 29 நவம்பர் 1845
இரஞ்சித் சிங் 1839இல் இறந்தார். உடனேயே அவரது பேரரசில் குழப்பம் விளைந்தது. இரஞ்சித்திற்கு முறையாகப் பிறந்த மகன், கரக் சிங், சில மாதங்களிலேயே சிறை வைக்கப்பட்டு அங்கு மர்மமான முறையில் இறந்தார்; அவருக்கு நஞ்சு அளிக்கப்பபட்டதாக பரவலாக நம்பப்பட்டது.[5] அடுத்ததாக கரக்சிங்கின் திறமையான, ஆனால் மாற்றுக்கருத்துக் கொண்டிருந்த மகன் கன்வர் நாவ் நிகல் சிங் பதவியேறினார். அவரும் சில நாட்களிலேயே ஐயத்திற்கிடமளிக்கும் வகையில் இறந்தார். தனது தந்தையின் ஈமச்சடங்கிற்குச் சென்று திரும்புகையில் இலாகூர் கோட்டையின் வளைவிதானவழி விழுந்து மரணமடைந்தார்.[6]
பஞ்சாபில் அப்போது இரு முதன்மையான அதிகாரக்குழுக்கள் இருந்தன: சீக்கிய சிந்தன்வாலியாக்கள், இந்து டோக்ராக்கள். டோக்ராக்கள்இரஞ்சித் சிங்கின் முறையிலா மணப்பிறப்பு மகன் சேர் சிங்கை பதவியேற்ற உதவி புரிந்தனர். சேர் சிங் சனவரி 1841இல் அரியணை ஏறினார். மிகவும் முதன்மையான சிந்தன்வாலியாக்கள் பிரித்தானிய பகுதியில் சென்று அடைக்கலம் புகுந்தனர். ஆனால் பலர் சீக்கியப் படைகளிலேயே தங்கிவிட்டனர்.
இரஞ்சித் சிங்கின் மரணத்திற்குப் பிறகு படைத்துறை விரைவாக விரிவடைந்து வந்தது; 1839இல் 29,000 (192 துப்பாக்கிகளுடன்) பேருடன் இருந்த இராணுவம் 1945இல் 80,000க்கும் கூடுதலாக வளர்ந்தது;[7] நிலப்பிரபுக்களும் அவர்களது பணியாளர்களும் படைகளில் சேர்ந்தனர். இராணுவம் தானே சீக்கிய நாடாக அறிவித்தது. அதன் நீதிமன்றங்கள் மன்னராட்சிக்கு மாற்று அதிகார மையமாக விளங்கின. குரு கோவிந்த் சிங்கின் கொள்கையான சீக்கிய பொதுநலவாயம் மீட்கப்பட்டதாக அனைத்து படைகள், செயலாக்கத்துறைகள், குடியியல் அதிகாரங்களை தாங்களே மேற்கொண்டனர்.[8] இதனை பிரித்தானியர்கள் "ஆபத்தான இராணுவ மக்களாட்சி" எனக் குறிப்பிட்டனர்.
மகாராசா சேர் சிங்கால் படைகளின் ஊதியக் கோரிக்கைகளை நிறைவேற்ற இயலவில்லை. செப்டம்பர் 1843இல் தன்னுடைய ஒன்றுவிட்ட உடன்பிறப்பு, படையதிகாரி, அசித்சிங் சிந்தன்வாலியாவால் கொல்லப்பட்டார். இதற்கு காரணமானவர்கள் மீது டோக்ராக்கள் பழி தீர்த்தனர்; இரஞ்சித் சிங்கின் மிகவும் இளைய மனைவி ஜிந்த் கவுர், தனது குழந்தை மகன் துலீப் சிங்கிற்கு பகர ஆளுநராகப் பொறுப்பேற்றார். நாட்டு கருவூலத்திலிருந்து பணத்தை திருடிச் சென்ற அமைச்சர் ஈரா சிங் படைகளால் கொல்லப்பட்டார்.[8] ஜிந்த் கவுரின் உடன்பிறப்பு ஜவகர் சிங் முதலமைச்சராகப் திசம்பர் 1844இல் பொறுப்பேற்றார். 1845இல் துலீப் சிங்கிற்கு அச்சுறுத்தலாக இருந்த பேஷாரா சிங்கை கொலைசெய்ய ஏற்பாடு செய்தார். இதற்காக படைதுறை அவரை விசாரித்தது. செப்டம்பர் 1845இல் ஜிந்த் கவுர், துலீப் சிங் முன்னிலையில் அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.[9]
ஜிந்த் கவுர் தனது சகோதரரின் கொலைக்கு பழி வாங்கப்போவதாக சூளுரைத்தார். பகர ஆளுநராக அவர் நீடித்தார். லால்சிங் முதலமைச்சராகவும் தேஜ் சிங் படைத்தளபதியாகவும் பதவியேற்றனர். இருவரையும் டோக்ரா குழுவில் முதன்மையானவர்களாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். பஞ்சாபிற்கு வெளியில் உயர்சாதி இந்துக்களாகப் பிறந்து 1818இல் சீக்கியத்திற்கு மாறியவர்கள்.
பிரித்தானியச் செயல்பாடுகள்
இரஞ்சித் சிங்கின் மறைவிற்குப் பிறகு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி தனது இராணுவ வலிமையைக் கூட்டத் தொடங்கியது. பஞ்சாபை அடுத்த பகுதிகளில் தனது படை முகாம்களை அமைத்தது. சத்துலெச்சு ஆற்றுக்கு சற்றே தொலைவிலுள்ள பிரோசுப்பூரில் பாசறை அமைத்தது. 1843இல் பஞ்சிபிற்குத் தெற்கிலிருந்த சிந்து மாகாணத்தை கைப்பற்றியது.[10] இது பஞ்சாபில் பிரித்தானியரின் நோக்கங்கள் குறித்த ஐயங்களை எழுப்பியது.
தன் எல்லைகளில் வெளிப்படையான, தாக்குவதற்கு தயார்நிலையிலான பிரித்தானியப் படைத்துறை வலிவாக்கம் பஞ்சாபு, சீக்கிய படைகளில் அச்சத்தையும் குழுப்பத்தையும் உண்டுபண்ணியது.
போரின் துவக்கமும் போக்கும்
சீக்கியப் படைகளை முன்னின்று நடத்திய முதலமைச்சர் லால் சிங், 1846
திசம்பர் 11, 1845 அன்று அம்பாலாவிலிருந்து தாங்கள் ஏற்கெனவே அமைத்திருந்த பிரோசுப்பூர் பாசறை நோக்கி கிழக்கிந்திய கம்பனிப் படைகள் சென்று கொண்டிருந்தன. இந்தப் படைகளுக்கு வங்காளப் படைப்பிரிவின் தளபதி சேர் இயூ கஃப் தலைமையேற்றார். உடன் தலைமை ஆளுநர் என்றி எர்டிங்கும் சென்ற போதிலும் இயூ கஃப்பையே படைகளுக்கு தலைமையேற்கச் செய்தார். சீக்கியத் தளபதிகள் லால்சிங்கும் தேஜ்சிங்கும் பிரோசுப்பூருக்கு 16 கிமீ தொலைவிலுள்ள பிரோஷா என்றவிடத்தில் முகாமிட்டனர். சத்துலெச்சிற்கு தென்புறம் 12 கிமீ அத்துமீறியதால் 1809ஆம் ஆண்டு அம்ருதசரசு உடன்பாட்டை மீறியதாக எர்டிங் குற்றம் சாட்டினார். சீக்கியர்கள் தங்களுக்கு உரிமையுள்ள பகுதிகளுக்கே சென்றதாக பதிலிறுத்தனர்.
முட்கி சண்டை
தேஜ்சிங் தலைமையில் ஓர் பிரிவு பிரோசுப்பூர் நோக்கி முன்னேறியது; லால்சிங் தலைமையில் மற்றொரு பிரிவு திசம்பர் 18, 1845 அன்று பிரோசுப்பூரிலிருந்து 18 மைல்கள் (29 கிமீ) உள்ள முட்கி என்றவிடத்தில் கஃப்பின் படைகளுடன் மோதினர். நள்ளிரவில் நடைபெற்ற இந்தச் சண்டையில் இருதரப்பினரும் உயிரிழப்புகளை எதிர்கொண்டாலும் சீக்கியப் படைகள் பின்வாங்கியது. ஆளுநர் எர்டிங் தளபதி கஃப் தலைமையில் பல குறைகளை சுட்டினார். லால்சிங் துவக்கத்திலேயே சண்டைக்களத்தை விட்டு நீங்கியதால் சீக்கிய வீரர்களுக்கு தகுந்த தலைமை கிட்டவில்லை.
பிரோசா சண்டை
பிரோஷா சண்டை
அடுத்தநாள் தேஜ்சிங் தலைமையிலானப் படைகளை பிரோசா அருகே கண்ட தளபதி கஃப் உடனே அவர்களுடன் போரிட முயன்றார். இருப்பினும் எர்டிங் அவரைத் தடுத்து பிராசுப்பூரிலிருந்து கூடுதல் படைகள் வரும்வரை காத்திருக்கச் சொன்னார். திசம்பர் 21 மாலையில் அவர்கள் வந்தடைந்தடைந்தவுடன் சண்டைத் துவங்கியது. தயார்நிலையிலிருந்த சீக்கியப் படைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இருப்பினும் தங்கள் குதிரைப்படை வீரர்களை லால்சிங் களத்திற்கு அனுப்பாததால் வெற்றி பெற இயலவில்லை.[11] தேஜ்சிங் புரிபடாத காரணங்களுக்காக, வெற்றி பெறும் நிலையிலிருந்த தனது படைகளை பின்வாங்கினார்.
பிரித்தானிய துருப்புக்கள் சத்லெட்ஜ் ஆற்றை படகுகளில் கடந்தனர். 10 பெப்ரவரி 1846
கஃப்பின் படைகள் மிகந்த சேதத்தை சந்தித்ததால் சிறிதுகாலம் தற்காலிகமாக போர் நிறுத்தபட்டது. சீக்கியர்கள் தங்கள் தோல்விகளையும் தங்களது தளபதிகளின் செயல்களையும் கண்டு குழப்பமுற்றனர். மகாராணி ஜிந்த் கவுர் 500 தேர்வுசெய்யப்பட்ட படைத்தலைவர்களை அனுப்பி உற்சாகமூட்டினார்.
ரோடாவாலா புறக்காவல்
சண்டைகளின் போது லால்சிங் சீக்கியர்களைக் காட்டிக் கொடுத்ததாக கருதப்படுகின்றது.[12]தங்களைக் குறித்த தகவல்களை பிரித்தானியருக்கு அவ்வப்போது வழங்கி வந்ததாக நம்பப்படுகின்றது.[13][14]
சீக்கியர்கள் சட்லெட்ஜின் வடகரையில் சோப்ரோன் என்னுமிடத்தில் பாசறையெடுத்து தங்கியிருந்தனர்; ரஞ்சோத் சிங் மஜிதா தலைமையிலான ஒரு பிரிவு 7000 துருப்புக்களுடன் வடக்கில் சென்று சட்லெட்ஜைக் கடந்து பிரித்தானியர்களின் லூதியானா கோட்டையைக் கைப்பற்ற முனைந்தனர். இதனை எதிர்க்க பிரித்தானியத் தளபதிகள் சேர் ஏரி இசுமித் (சர் ஹார்ரி ஸ்மித்) தலைமையில் ஓர் படைப்பிரிவை அனுப்பினர்.
அலிவால் சண்டை
அலிவால் சண்டை
இசுமித் படைகளின் பின்னால் வந்த சரக்கு குதிரைகளை சீக்கிய குதிரைப்படையினர் தொடர்ந்து தாக்கினர். ஆனால் இசுமித்திற்கு தகுந்த நேரத்தில் கூடுதல் படைகள் வந்தடைந்தன. சனவரி 28, 1848இல் இசுமித் சீக்கியர்களைத் தாக்கி சீக்கியப் பாலத்தைத் தகர்த்தார்.
சோப்ரான் சண்டை
இதேவேளையில் கஃப்பின் படைகளும் கூடுதல் துருப்புக்களைப் பெற்றதால் வலுவடைந்து இசுமித்தின் பிரிவுடன் இணைந்தது. இருவருமாக பெப்ரவரி 10 அன்று சோப்ரானில் சீக்கியர்கள் தங்கியிருந்த முகாமைத் தாக்கினர்.இந்தச் சண்டையின்போது தேஜ்சிங் ஓடிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் சீக்கிய வீரர்கள் உறுதியுடன் போராடினர். இருப்பினும் இறுதியில் கஃப்பின் படைகள் வென்றன. சீக்கியர்களுக்குப் பின்னாலிருந்த பாலம் பீரங்கிகளால் தகர்க்கப்பட்டது. சீக்கியப் படையினர் இதனால் பின்வாங்க முடியாது போயிற்று. இருப்பினும் ஒருவர் கூட சரணடையாது தங்கள் இறுதி மூச்சு வரை போரிட்டனர். பிரித்தானியர்களும் எவ்விதக் கருணையும் காட்டாது அனைவரையும் கொன்றொழித்தனர். இந்தத் தோல்வி சீக்கியப் படையை முற்றிலுமாக உடைத்து விட்டது.
பின்விளைவு
முதலாம் ஆங்கில-சீக்கியப் போரை அடுத்து பிரித்தானிய துருப்புக்கள் புடைசூழ மகாராசா துலீப் சிங் லாகூர் அரண்மனையில் நுழைதல்
மார்ச் 9, 1846இல் ஏற்பட்ட லாகூர் உடன்பாட்டின்படி சீக்கியர்கள் பியாசு ஆற்றிற்கும் சத்துலெச்சு ஆற்றிற்கும் இடைப்பட்ட செழுமையான நிலப்பகுதியை ( ஜலந்தர் தோவாபை) வழங்க வேண்டியிருந்தது. இலாகூர் அரசு நட்டயீடாக 15 மில்லியன் ரூபாய்களையும் தரவேண்டி வந்தது. இந்தப் பணத்தை உடனே எழுப்ப முடியாததால் அதற்கு மாற்றாக காஷ்மீர், கசாரா மக்கள் மற்றும் அனைத்துக் கோட்டைகள், பகுதிகளையும் பியாசு ஆற்றிற்கும் சிந்து ஆற்றுக்கும் இடையிலிருந்த மலைநாடுகளின் வளத்தையும் கிழக்கிந்தியக் கம்பனிக்கு இழந்தது.[15] பிந்தைய நாளில் ஏற்பட்ட தனியொரு உடன்பாட்டின் மூலம் (அமிர்தசரசு உடன்பாடு, 1846) சம்முவின் அரசர் குலாபு சிங் கிழக்கிந்தியக் கம்பனிக்கு 7.5 மில்லியன் ரூபாய்கள் செலுத்தி காசுமீரை எடுத்துக் கொண்டார்; தன்னை சம்மு, காசுமீர் மகாராசா என அறிவித்துக் கொண்டார்.[16]
கொல்கத்தாவில் கொண்டாட்டம் - கைப்பற்றப்பட்ட சீக்கியத் துப்பாக்கிகளின் வருகை
பஞ்சாபின் அரசராக மகாராசா துலீப் சிங் தொடர்ந்தார். மகாராசாவிற்கு 16 அகவைகள் நிறைவுறும் வரை பிரித்தானியர்கள் தர்பாரில் இருக்க வேண்டுகோள் விடப்பட்டது. இதன்படி திசம்பர் 16, 1846 அன்று பைரோவல் உடன்பாடு கண்டு, மகாராசாவிற்கு 150,000 ரூபாய்கள் ஓய்வூதியம் தரவும் பிரித்தானிய பிரதிநிதி ஆளவும் வகை செய்யப்பட்டது. இது அரசுக் கட்டுப்பாட்டை கிழக்கிந்தியக் கம்பனிக்கு செயலாக்கத்தில் மாற்றியது.
சீக்கிய வரலாற்றாளர்கள் லால்சிங்கும் தேஜ் சிங்கும் அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்திருக்க சீக்கியப் படையின் தாக்கத்தை உடைக்க சதி செய்ததாகக் கருதுகின்றனர். குறிப்பாக, லால்சிங் பிரித்தானிய அரசியல் அதிகாரியுடன் தொடர்பில் இருந்ததாகவும் போர்க்காலத்தில் நாட்டு, படைத்துறை இரகசியங்களை காட்டிக் கொடுத்து வந்ததாகவும் கருதுகின்றனர்.[14][17] லால்சிங், தேஜ் சிங் தங்கள் படைகளை கைவிட்டதற்கும் வாய்ப்பிருந்தபோது தாக்க முற்படாததற்கும் வேறு காரணமேதும் இல்லை.
மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வளர்ச்சியடைந்த காலத்தில் எஞ்சியிருந்த மிகச்சில பேரரசுகளில் சீக்கியப் பேரரசும் ஒன்றாக இருந்தது. சீக்கிய படை வலிவிழந்திருந்த போதும் அரசு விவகாரங்களில் பிரித்தானியரின் குறுக்கீடு மூன்றாண்டுகளிலேயே இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் மூளக் காரணமாயிற்று.
இதனையும் காண்க
ஆங்கிலேய-சீக்கியப் போர்கள்
No comments:
Post a Comment