Thursday 19 March 2020

MANORAMA, CHILD LIFE BIOGRAPHY



MANORAMA, CHILD LIFE  BIOGRAPHY




தஞ்சை மாவட்டம், ராஜமன்னார்குடி எனும் சிற்றுாரில், காசி கிளாக் உடையார் - ராமாமிர்தம் தம்பதியருக்கு, மே 26, 1937ல் பிறந்தார், மனோரமா. தற்போது, இவ்வூர், திருவாரூர் மாவட்டத்தில் இணைந்துள்ளது. மன்னார்குடியில் இருந்து, 1 கி.மீ., தொலைவில் உள்ளது, ராஜமன்னார்குடி.
சாலை ஒப்பந்ததாரராக பணியாற்றியதால், நிலபுலன்கள் என்று செல்வச் செழிப்புடன் இருந்தார், மனோரமாவின் தந்தை, காசி கிளாக்.
காசி கிளாக் - ராமாமிர்தம் தம்பதியின் இல்வாழ்க்கை சந்தோஷமாகத்தான் சென்று கொண்டிருந்தது. அந்த மகிழ்ச்சியின் பரிசாக, பெண் குழந்தை பிறந்தது. தன் மகளுக்கு கோபிசாந்தா என பெயர் சூட்டி, கொஞ்சி மகிழ்ந்தார், காசி கிளாக்.
இந்நிலையில், ராமாமிர்தத்தின் தங்கை மீது, காசி கிளாக்கிற்கு காதல் வர, மனைவியை வெறுக்கத் துவங்கினார். அவரோடு பேசுவதை கூட, கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க ஆரம்பித்தார்.
முதலில் இது புரியாத ராமாமிர்தம், பணி நிமித்தம் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்; அதனால் தான் தன் கணவர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என, நினைத்தார். ஆனால், இந்த அலட்சியப் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்ததால், அவருக்கு, தன் கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.
அவரது நடவடிக்கையை ரகசியமாக கண்காணிக்க துவங்கிய போது தான், கணவர், தன் தங்கையின் மீது காதல் கொண்டு, எப்போதும், அவருடனேயே பொழுதை கழிப்பதை அறிந்தார்.
இது, ராமாமிர்தத்திற்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கவே, தங்கையை அழைத்து கண்டித்தார்; அவர் கேட்கவில்லை.
கணவரோடு சண்டையிட்டார்... ஆனால், அவரோ, ராமாமிர்தத்தின் தங்கையை திருமணம் செய்யப் போவதாக கூறி, ஒருநாள், அப்பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணமும் செய்து, வீட்டிற்கும் அழைத்து வந்து விட்டார்.

அதன்பின், கணவனால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார், ராமாமிர்தம். அவ்வீட்டில் வேலைக்காரி போல இருக்க வேண்டிய நிலை ஏற்படவே, 'இனி, இந்த வீட்டில் இருக்கக் கூடாது...' என முடிவெடுத்தார். அதேநேரம், குழந்தை கோபிசாந்தாவை வைத்துக் கொண்டு எங்கே செல்வது, எப்படி வாழ்வது என, குழம்பினார்.
ஆனாலும், ஒருநாள் துணிச்சலுடன், தன் குழந்தையுடன் வீட்டை விட்டு ராமாமிர்தம். கால் போன போக்கில் நடந்தும், கிடைத்த வாகனங்களில் ஏறியும் இலக்கில்லாமல் சென்று கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் களைத்துப் போகவே, போய் சேர்ந்த இடத்தையே, தன் வசிப்பிடமாக மாற்றிக் கொள்ளவும் தீர்மானித்தார்.
அந்த ஊர் பள்ளத்துார்; காரைக்குடி அருகே இருக்கிறது, இக்கிராமம்.
துணிச்சலை வரவழைத்து, வாழ்வதற்கு பிள்ளையார் சுழியை போட்டார், ராமாமிர்தம்.

விவரம் அறியாத வயதில், அந்த பிஞ்சுக் குழந்தையும் தாயோடு சேர்ந்து வாழ்க்கைப் போராட்டத்தில் விழுந்தது. எங்காவது வீட்டு வேலை செய்து, வயிற்றை கழுவுவது என்று முடிவு செய்தார், ராமாமிர்தம்.
அந்த ஊரில் இருந்த நல்லவர்கள், இவர்கள் மீது இரக்கம் கொண்டனர். பத்துப் பாத்திரம் தேய்த்து, தன் வயிற்றையும், குழந்தையையும் வளர்த்தார்.
கடின உழைப்பு; ஆனால், குறைந்த வருவாய். அரை குறை சாப்பாடு; பாதி வயிறு கூட நிரம்பாத நிலையில், தண்ணீர் மட்டுமே அவர்கள் பசியை தீர்க்கும் ஒரே வழியாக இருந்தது.
குழந்தையை வளர்க்க, எல்லா கஷ்டங்களையும் துச்சமாக நினைத்து, கடுமையாக உழைத்தார், ராமாமிர்தம். அந்நிலையிலும், மகள் கோபிசாந்தாவை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்.
அப்போதே, அச்சிறுமிக்கு பாடுவதில் அதீத விருப்பம்; எப்போதும் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்தவாறு இருப்பாள்.
தினமும் பள்ளி விட்டு வந்ததும், வீட்டில் பலகாரம் சுடும் அம்மாவிற்கு உதவி செய்வாள். பின், அக்கிராமத்தில் உள்ள டென்ட் கொட்டகைக்கு, பலகாரம் விற்கச் செல்வாள்.

நன்றாக பாடுவாள் என்பதால், பலகாரம் விற்பனை செய்வதோடு, திரைப்படம் பார்ப்பதற்கும், கோபிசாந்தாவிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
'இந்த வயசிலேயே, இந்தப் பொண்ணு இவ்வளவு அழகா பாடுதே... அடிக்கடி சினிமா பார்த்தா இன்னும் நல்லா பாட ஆரம்பிச்சிடுவா...' என்று வெளிப்படையாகவே சொன்னார், தியேட்டர் நிர்வாகி.
இந்த வாய்ப்பை, அச்சிறுமியும் சரியாக பயன்படுத்திக் கொண்டாள். பாடல் காட்சிகளின்போது உள்ளே செல்வாள். பாடல் முடிந்ததும் வெளியே வந்து அப்பாடலை பாடிப்பாடி பயிற்சி மேற்கொள்வாள்.
கூடவே, அக்கம் பக்கத்தினர், திரைப்படம் பார்க்க சென்றால், இவளையும் அழைத்துச் செல்வர். அத்துடன், அந்த காலத்தில், கிராமபோன் தான் உண்டு. அதுவும், ஊரில், ஒன்றிரண்டு பேர் வீட்டில் மட்டுமே இருக்கும். அதில் ஒலிக்கும் பாடல்களை கேட்டு, தன் இசைஞானத்தை வளர்த்துக் கொண்டாள்.
இப்படி சென்று கொண்டிருந்த கோபிசாந்தாவின் வாழ்வில், விதி, மீண்டும் விளையாடியது. திடீரென்று, ராமாமிர்தத்திற்கு உடம்புக்கு முடியாமல், ரத்தப்போக்கு ஏற்பட்டது.
வறுமை, கவலை, கடின உழைப்பு ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து, இந்நோயை அவருக்கு வழங்கி விட்டது. ஒன்பது வயதான கோபிசாந்தாவிற்கு, தன் தாயை மருத்துவமனைக்கு எப்படி கொண்டு செல்வது என்பதுகூட தெரியவில்லை. அம்மா வேதனையில் துடிப்பதை பார்த்து, செய்வதறியாமல், அவளருகே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள், கோபிசாந்தா.
இந்நிலையில் தான், கருணை உள்ளம் கொண்ட ஒருவர், ராமாமிர்தத்தை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அம்மாவிற்கு துணையாக, மருத்துவமனையில் இருந்தாள், கோபிசாந்தா. அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனையில் சாப்பாடு தருவர்; அது, ஒருவருக்கே போதாது; அதில் தான் தாயும், மகளும் சாப்பிட வேண்டும். அரை வயிற்று சாப்பாடு; வராண்டாவில் உறக்கம். தெரிந்தவர்கள் யாராவது பார்த்தால், ஏதாவது கொடுத்து உதவுவர்.
இப்படி, ஓராண்டு மருத்துவமனையிலேயே கழிந்தது. அதன்பின், ரத்தப் போக்கு சற்று குணமாகியது. அந்த ஓர் ஆண்டும் தாயுடனேயே இருந்ததால், கோபிசாந்தாவின் படிப்பு தடைபட்டு போனது.
கோபிசாந்தா நன்றாக படிப்பவள் என்பதால், அவளை எப்படியாவது பள்ளிக்கு வருமாறு வற்புறுத்தவே செய்தனர், ஆசிரியர்கள். இன்னும் சில ஆசிரியர்களோ, அவளது படிப்பு செலவை ஏற்றுக்கொள்ளவும் முன் வந்தனர்.
ஆனாலும், தன் தாயை கவனிக்க வேண்டும் என்பதால் மறுத்து விட்டாள், கோபிசாந்தா.
அந்த ஓர் ஆண்டும் அவள் அடைந்த இன்னலும், துயரமும் கொஞ்ச நஞ்சமில்லை. ஒன்பது வயதில், எந்த குழந்தையுமே அனுபவிக்காத கஷ்டங்களையும், வேதனைகளையும் அனுபவித்தாள்.
சிகிச்சைக்கு பின், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார், ராமாமிர்தம். ஆனால், முன்பு போல் அவரால் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியவில்லை; மிகவும் பலவீனமாக இருந்தார். இதனால், வருமானத்திற்கு வழியில்லாமல் போயிற்று!
சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற கேள்வி, அவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. பசிக் கொடுமையில், படிப்பை விடவும் சோறு தான் பெரிதாக தெரிந்தது, அச்சிறுமிக்கு!
பள்ளத்துாரில் செல்வச் செழிப்பு நிறைந்த செட்டியார் குடும்பங்கள் நிறைய உண்டு. அவர்களிடம், மாதச் சம்பளத்திற்கு, பண்ணை வேலை, வீடு மற்றும் வெளிவேலைகளை செய்து, வாழ்ந்து வந்தனர், ஏழை எளியோர்.
வறுமையின் கொடூர பிடிக்குள் சிக்கித் தவித்த ராமாமிர்தத்திடம், 'ஏதாவது செட்டியார் வீட்டிற்கு, குழந்தையை பார்த்துக் கொள்ளும் வேலைக்கு உன் மகளை அனுப்பி வைத்தால், மாதச் சம்பளம் கிடைக்கும்; அதை வைத்து குடும்பத்தை நடத்தலாம். உன் குழந்தைக்கும் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும்...' என, அக்கம் பக்கத்தினர் ஆலோசனை கூறினர்.
இந்த யோசனை சரியானதாக தெரியவே, தங்களுக்கு தெரிந்த ஒரு பெண்மணி மூலம் செட்டியார் வீட்டிற்கு, கோபிசாந்தாவை வேலைக்கு அனுப்பி வைத்தார், ராமாமிர்தம்.
மகிழ்ச்சியோடு வேலையில் சேர்ந்தாள், கோபிசாந்தா. குழந்தையை பார்த்துக் கொள்வது என்பது அத்தனை எளிதான வேலையா... தரையில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை, ஆசையோடு எடுத்து கொஞ்சிய கோபிசாந்தா, செல்லமாக தட்டிக் கொடுத்தபடியே, தன் தோளில் சாய்த்தாள்.
அவ்வளவு தான்... சற்றும் எதிர்பாராத சம்பவம் ஒன்று அப்போது நிகழ்ந்தது....

No comments:

Post a Comment