C.L.ANANDAN , VILLAIN ACTOR DIED 1989,MARCH 25
சி. எல். ஆனந்தன் (இறப்பு: மார்ச் 25, 1989) தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் 1960 ஆம் ஆண்டில் விஜயபுரி வீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். சண்டைக் காட்சிகளில் இவர் சிறந்து விளங்கினார்.[
நடிப்புத் துறையில்
1960ல் சிட்டாடல் பிலிம்சின் விஜயபுரி வீரன் படத்தில் ஜோசப் தளியத் இயக்கத்தில் ஆனந்தன் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். ஹேமலதா இப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். குதிரைச் சவாரி, கத்திச் சண்டைகளில் இவர் நடித்தார். இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. காட்டு மல்லிகை என்ற படத்தில் புலியுடன் சண்டை போடும் காட்சியில் அவரே நடித்தார். 1962 ஆம் ஆண்டில் வீரத்திருமகன் படத்தில் குமாரி சச்சுவுடன் இணைந்து நடித்தார்.[1]
கொங்கு நாட்டு தங்கம், யானை வளர்த்த வானம்பாடி மகன், நீயா நானா, நானும் மனிதன் தான், காட்டு மல்லிகை, அடுத்த வாரிசு, அந்த ஒரு நிமிடம், செந்தூரப் பூவே ஆகியவை ஆனந்தனின் குறிப்பிடத்தக்க படங்கள்.
பிற்காலத்தில், எம். ஜி. ஆருடன் இணைந்து தனிப்பிறவி, நீரும் நெருப்பும் ஆகிய படங்களில் நடித்தார். அதன் பின்னர் ஆனந்தனின் பட வாய்ப்புகள் குறைந்தன.
தயாரிப்பாளராக
நண்பர்களுடன் சேர்ந்து ஆனந்தன் மூவிஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நானும் மனிதன் தான் என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படம் பெரு வெற்றி பெறவில்லை.[2]
மறைவு
ஆனந்தன் 1989 மார்ச் 25 இல் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு தனது 56வது அகவையில் காலமானார்.[3] ஆனந்தனின் மனைவி பெயர் லட்சுமி அம்மாள். 3 மகன்கள். 4 மகள்கள். பிற்காலத்தில் நடன நடிகையாக விளங்கிய டிஸ்கோ சாந்தி அவரது மகள்களில் ஒருவர். இன்னொரு மகள் லலிதா குமாரி பிரகாஷ் ராஜை திருமணம் செய்தார்.[3] லலிதாகுமாரியும் மகன் ஜெய்ராமும் திரைப்படங்களில் நடித்தனர்[1]
நடித்த திரைப்படங்கள்
விஜயபுரி வீரன்
வீரத்திருமகன்
கொங்கு நாட்டு தங்கம்
யானை வளர்த்த வானம்பாடி மகன்
காட்டு மைனா
காட்டு மல்லிகை
தனிப் பிறவி
நீரும் நெருப்பும்
நீயா நானா
நானும் மனிதன் தான்
க்ரூப் டான்ஸர் ஆக இருந்தவர் ஆனந்தன். தான் அவ்வளவு உயரம் இல்லை என்ற பிரக்ஞையும் அவரிடம் இருந்தது. எப்படியோ ஜோசப் தளியத் பார்வையில் பட்டு கதாநாயகனாக விஜயபுரி வீரன் படத்தில் அறிமுகமானார். கத்திச் சண்டை படம்.
அன்றிருந்த ரசிக மகாஜனங்கள் " எம்.ஜி.ஆருக்கும் ரஞ்சனுக்கும் கத்திச் சண்டை நடந்தால் யார் ஜெயிப்பார்? ரஞ்சனா? எம்.ஜி.ஆரா?" என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. ஆனந்தன் வந்தவுடன் " டேய் இவன் கத்திச் சண்டை நல்லா போடுறான் டா " என்று பேச ஆரம்பிக்க, சிவாஜி ரசிகர்கள் தங்கள் பங்குக்கு " எம்.ஜி.ஆரை விட நல்லா கத்திச் சண்டை போடுறான்டா டேய்!" என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தார்கள்.
அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் போஸ்டரைப் பார்த்தாலே சிவாஜி ரசிகர்கள் சாணியடிப்பார்கள். எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சிவாஜி போஸ்டரில் சாணி அடிக்க அலைவார்கள்.
பிரதாப் போத்தன் நடிக்க வந்த பின் குமுதம் கமல் ஹாசன் மனம் புண்பட
" பத்து கமல் ஹாசன் சேர்ந்தால் ஒரு பிரதாப் போத்தன்" என்று அரசு கேள்வி பதிலில் அள்ளி விட்டது. அது போலத்தான் ஆனந்தனைப் போய் எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டுப் பேசிய விஷயமும். எம்.ஜி.ஆரின் அழகுக்கும், தேஜசுக்கும், திறமைக்கும் கால் தூசு கூட ஆனந்தன் பெற மாட்டார்.
டான்ஸ், ஸ்டண்ட் இரண்டிலும் எம்.ஜி.ஆரிடம் இருந்த quickness வேறு எந்த நடிகரிடமும் அந்தக் காலத்தில் கிடையாது.
ஆனந்தன் படு செயற்கையான மூன்றாந்தர நடிகர்.
ஆனந்தன் படங்களில் தேறியவை " வீரத்திருமகன்" படமும் " நானும் மனிதன் தான்" என்ற சமூகப்படமும். "லாரி டிரைவர்" என்று ஒரு சமூகப்படம் கூட ஆனந்தன் நடிப்பில் வந்தது. அந்தக்காலங்களில் சமூகப்படம், சரித்திரப்படம் என்று தான் பிரித்துச்சொல்வார்கள்.
பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய அழகான பாடல்கள் ஆனந்தனின் வீரத்திருமகள் படத்தில் இடம் பெற்றது.
"ரோஜா மலரே ராஜகுமாரி, ஆசைக்கிளியே அழகிய ராணி"
"பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்"
ராம.அரங்கண்ணல் எழுதிய "என் நினைவுகள்" நூலில் ஒரு சுவாரசியமான விஷயம்.
எம்.ஜி.ஆர் நடித்த சமூகப்படம் அந்தமான் கைதி தோல்வியடைந்த நேரத்தில் தான்,பராசக்தி ரிலீசாவதற்கு சில நாட்கள் முன் சிவாஜிக்கு சுவாமி மலையில் கல்யாணம். திருமணத்திற்கு தாமதமாக, சாப்பிடுகிற நேரத்தில் தான் எம்.ஜி.ஆர் வந்திருக்கிறார். சாப்பிடும் நேரத்தில் எம்.ஜி.ஆரைப் பார்த்து யதார்த்தமாக கல்யாண மாப்பிள்ளை சிவாஜி சொன்னாராம் -" நீங்க எதுக்குண்ணே சூட்டு கோட்டு போட்டு நடிக்கப் போறீங்க.. நீங்க கத்தி சண்டை போட்டா மக்கள் கை கொட்டி ரசிக்கிறாங்க.."
எம்.ஜி.ஆர் முகத்தில் மாறுதல் தெரிந்திருக்கிறது.
விடை பெற்றுப் போகும்போது கல்யாணத்திற்கு வந்திருந்த ராம. அரங்கண்ணலைப் பார்த்து எம்.ஜி.ஆர் சொன்னார் " கணேசு என்ன சொல்லிச்சு பார்த்தீங்களா? ஊம்..... பார்க்கிறேன்..."
பின்னால் கோட்டு,சூட்டு போட்டு எம்.ஜி.ஆர் எத்தனை படங்களில்சிவாஜிக்கு சவாலாக கலக்கி தூள் கிளப்பினார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆனந்தன் சீக்கிரமாக மார்க்கெட்டை இழந்த பின் "யார் நீ?" ஜெய் சங்கர் படத்தில் தலை காட்டினார். ரவிச்சந்திரன் "நினைவில் நின்றவள்" படத்தில் சாதா வில்லன் ரோல்.
சரி. எம்.ஜி.ஆரிடம் போய் வில்லன் ரோல் கேட்டுப் பார்க்கலாம் என்று போனார்.
நீரும் நெருப்பும் படத்தில் துணை வில்லன் ரோல் கொடுத்தார். படத்தில் கத்தி சண்டை ஒன்றில் ஆனந்தனின் ஆடைகளை கத்தியாலேயே எம்.ஜி.ஆர் நீக்கி விடுவார். கிட்டத்தட்ட காமெடி வில்லன் வேடம்!
எம்.ஜி.ஆர் சொன்னார். " அசோகன், நம்பியார் போல உங்களுக்கு மெயின் வில்லன் ரோல் தரமுடியாது. ஏன்னா உங்க குதல் ( குரல் ) சரியாயில்ல."
ராதா சுட்டு விட்டு ஜெயிலுக்குப் போய் மூணு வருஷம் கழித்துத்தான் ராமச்சந்திரன் இப்படிச் சொன்னார். " உங்க வாய்ஸ் போல்தா ( போல்ட்) இல்ல."
ஆனந்தன் புலம்பி விட்டார். "இவருடைய குரலுக்கு கதாநாயகனாய் நடிக்கும்போது நான் வில்லனாய் நடிக்கக்கூடாதா? இவர் குரலுக்கு என் குரல் கேவலமாய்ப் போய் விட்டதா?"
பின்னால் நாடகங்கள் போட்டுக்கொண்டிருந்தார். கடுமையான பொருளாதார சிரமங்களை பார்க்க வேண்டியிருந்தது. நாடகங்களுக்கு புக் செய்ய வருபவர்களிடம் உடனே சில்லறை கேட்டு மகளைக் கூப்பிட்டு டீக்கடையில் போய் டீ வாங்கி வரச்சொல்வார்.
வாஹினி ஸ்டுடியோவில் நான் பார்த்த காட்சி - படு அசதியான ஆனந்தன் அங்கேயிருந்த பாரதி ராஜாவைப் பார்த்து ஒரு வணக்கம் போட்டார். பாரதி ராஜா கண்டுகொள்ளவில்லை.வலிய பேசினார். பாரதி ராஜா அசுவாரசியமாக பதில் சொன்னார். அப்போதைய படம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் சிகரெட் பிடித்துக்கொண்டு பாரதி ராஜா. டைரக்டர் பேண்ட்டில் சிகரெட் கங்கு சுட்ட துளைகள்!
பின்னால் டிஸ்கோ சாந்தி படங்களில் டான்ஸ் ஆடி நிறைய சம்பாதித்த பின் செழிப்பை பார்த்து விட்டு செத்துப் போனார்.
டிஸ்கோ சாந்தி தன் தோட்டத்தில் அப்பா ஆனந்தனுக்கு சமாதி கட்டினார். ஆனந்தன் நினைவு விழாவில் ஜெமினி கணேசன் கலந்து கொண்டு ஆனந்தனைப் பற்றி பேசி அஞ்சலி செலுத்தினார்.
பிரகாஷ் ராஜ் பின்னால் இவருடைய மற்றொரு மகள் லலித குமாரியை திருமணம் செய்து குழந்தைகள் பிறந்த பின் விவாகரத்து செய்து விட்டார்என்பது தெரிந்த விஷயம்.
R P ராஜநாயஹம்
No comments:
Post a Comment