Tuesday 24 March 2020

AUNG SAN SUU KYI BORN JUNE 19,1945



AUNG SAN SUU KYI  BORN JUNE 19,1945

இரும்பு பெண்மணி 'ஆங் சான் சூச்சி








மியான்மர் மக்களுக்காக 21 ஆண்டுகள் வீட்டுச்சிறையும் விடுதலையுமாக மாறிமாறி வாழ்ந்த உலகத்தரமான ஒரு பெண் அரசியல் தலைவர்தான் இந்த ஆங் சான் சூச்சி.

வெற்றிக்கு தோல்வி
மியான்மரில் மக்கள் புரிதல் இல்லாத அதிகாரத்தை எதிர்த்து, மக்கள் விருப்ப கொள்கை வகுத்து, அதை ஜனநாயக பாதையில் மக்களால் வென்றெடுத்தும், ராணுவம் மறுத்ததால் இவரது வெற்றிக்கே தோல்வி கிடைத்தது.

ஐ.நா. மற்றும் அயல்நாடுகளின் கண்டனத்தாலும் தேர்தலுக்கு முன்பே சூச்சி வீட்டுச்சிறையில் இருந்ததாலும் 80 சதவீத இடங்களை கைப்பற்றியும் அந்த பாராளுமன்ற தேர்தல் வெற்றி அவருக்கு பயன்படாமல் போனது.





பன்முகங்கள்
மியான்மர் சமூக பெண் ஜனநாயகவாதி, அரசியல்வாதி, ஆசிரியை, அயல்நாட்டு தூதர், முதல் மாநில ஆலோசகர், ஜனநாயக தேசிய லீக் கட்சியின் தலைவர்.

மியான்மரின் முதல் பெண் வெளியுறவுதுறை அமைச்சர், ஜனாதிபதி அமைச்சகத்தின் முதல் பெண் அமைச்சர் போன்ற பன்முகங்களை கொண்டவர் இப்போது 70 வயதை அடைந்திருக்கும் இந்த இரும்புப் பெண்மணி.



குடும்ப வாழ்க்கை


1947 ல் ஆங் சான் என்பவர், நவீன மியான்மர் ராணுவத்தை ஏற்படுத்தி பிரிட்டிஷ் பேரரசிடமிருந்து சுதந்திரத்தை பெற முயற்சித்தார். ஆனால் அதே ஆண்டில் துரதிர்ஷ்டவசமாக எதிரிகளால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அத்தகைய தியாகியும், மியான்மரின் தேசத் தந்தையுமாகிய ஆங் சானின் இளைய மகள் தான் இந்த ஆங் சான் சூச்சி.

இவர் பிரிட்டிஷ் பர்மாவில் ரங்கூனில் (தற்போது யங்கூன்)1945, ஜூன் 19 ல் பிறந்தார். இவரது தாயர் பெயர் கின் கீ. இவர்கள் தெராவடா புத்தமதத்தை சேர்ந்தவர்கள்.



இவருக்கு இளம் வயதில் இருந்தே மொழிகளை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தது. பர்மீஸ், இங்க்லீஷ், ஃபிரஞ்ச், ஜப்பானீஸ் ஆகிய நான்கு மொழிகளில் நன்கு புலமை உண்டு.

ஆங் சான் சூச்சியின் தாயார் கின் கீ, புதிதாக உருவான பர்மா அரசாங்கத்தில் ஒரு முக்கிய அரசியல் பிரமுகராக இருந்தார். பர்மாவின் தூதராக இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதனால், சூச்சியின் இளம்வயது படிப்பு டெல்லியில் தொடங்கியது. இவர் 1964 ம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியலில் தனது முதல் பட்டப்படிப்பை முடித்தார்.

பிறகு, தத்துவம், பொருளாதாரத்திலும் பட்டம் பெற்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 1968 ல் தனது முதுநிலை பட்டப்படிப்பையும் முடித்தார்.அதனைத்தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

மைக்கேல் ஏரிஸ் என்பவருடன் 1972 ல் இவருக்கு திருமணம் நடைபெற்றது. அலெக்ஸாண்டர் ஏரிஸ், கிம் ஏரிஸ் என்ற இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார்.







 சூச்சி வீட்டுச்சிறை இருந்த காலத்தில் கணவரை 5 முறை மட்டுமே சந்தித்தார். கணவரும் குழந்தைகளும் இங்கிலாந்தில் வசித்தனர்.

ஏரிஸ் அனுப்பிய அரசியல், தத்துவம், வரலாறு வகைகளான புத்தகங்களை படிப்பது, பியானோ வாசிப்பதுதான் சூச்சியின் சிறைவாச பொழுதுபோக்கு.


கடைசியாக, 1995 கிறிஸ்துமஸின் போது சந்தித்த ஏரிஸ், பிறகு சந்திக்காமலே, 1999 மார்ச் 27 அன்று அவரது 53 வது பிறந்தநாளிலேயே இறந்தார்.

மரணத்தில் கூட கலந்துகொள்ள முடியாமல் 1989 லிருந்தே சூச்சி வீட்டுச்சிறையில் இருந்துவந்தார். 2011க்கு பிறகே அவருடைய பிள்ளைகள் அவரை வந்து சந்தித்தனர்.

அரசியல் எழுச்சி
ஆங் சான் சூச்சியின் அரசியல் வாழ்க்கை அவருடைய அன்னையை பின்பற்றியே 1988 க்கு பிறகு தீவிரமெடுத்தது. மியான்மரில் நடந்த வெகுஜன விரோத ஆட்சிக்கு எதிராக, மக்களிடம் ஜனநாயக எழுச்சியை ஏற்படுத்தினார்.

ஜனநாயகத்துக்காக அமைக்கப்பட்ட புதிய தேசிய லீக் (NLD) கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். 1990 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் சார்ந்த என்.எல்.டி. கட்சிக்கு 81 சதவீத இடங்களில் மக்கள் வெற்றியை கொடுத்தனர்.

ஆனால், சர்வதேச கண்டனங்களின் விளைவாக, தேர்தலுக்கு முன்பே வீட்டுச்சிறையில் இருந்துவந்த அவரிடம் ராணுவம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்துவிட்டது. மேலும், அந்த தேர்தல் முடிவையும் செல்லாததாக்கியது.



2010 ல் நடந்த தேர்தலிலும் இவருடைய கட்சிக்கு தடைவிதிக்கப்பட்டதால் ராணுவ ஆதரவுடனனான ஒற்றுமை மற்றும் அபிவிருத்தி கட்சி வெற்றிபெற்றது.

2012 ல் நடந்த இடைத்தேர்தலில் 45 இடங்களுக்கு 43 இடங்களை பிடித்தார். 2015 தேர்தலில் அவருடைய கட்சி 86 சதவீத இடங்களை பிடித்து பெரும் வெற்றி பெற்றது.

ஆனாலும், சூச்சியின் இறந்த கணவன் மற்றும் பிள்ளைகள் வெளிநாட்டு பிரஜைகள் என்பதால் ஜனாதிபதி பதவி ஏற்க மறுக்கப்பட்டது.

பிறகு, பிரதமருக்கு நிகரான மாநில ஆலோசகர் பதவியை அவருக்காக உருவாக்கி அவரிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது.

1989 லிருந்து 2010 ம் ஆண்டு வரையிலான 21 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகள் வீட்டுச்சிறையில் இருந்தார். உலக அரசியல் கைதிகள் வரலாற்றில் தனித்தன்மையானது இவர் வாழ்க்கை.

இவர் மியான்மர் மக்களை விட்டு பிரிந்து வேறுநாட்டுக்கு செல்வதென்றால் அதற்கு சட்டம் சுதந்திரமளித்தது.



ஆனாலும், தன்னுடைய லட்சியத்தில் தர்மம் இருந்ததால், உலகம் என்றேனும் உண்மையை புரிந்துகொண்டு தனக்கும் தனது கொள்கைக்கும் சேர்த்தே விடுதலை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் மக்களுக்காக வீட்டுக்காவலிலே இருந்தார்.

அதுபோலவே, மனிதம் மற்றும் அமைதியே முதன்மை முன்னேற்றம் என நம்பும் அமெரிக்க அதிபர் ஒபாமா முயற்சியால் நவம்பர் 13, 2010 ல் விடுதலையானார்.

சூச்சியின் விடுதலைக்குப் பிறகு, சர்வதேச அளவில் பெருமதிப்பு ஏற்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு, ரஃப்டோ பரிசு, ஷகாரோவ் பரிசு, ஜவகர்லால் நேரு விருது, சர்வதேச சிமோன் போலிவர் பரிசு உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அனுபவ மொழிகள்
’குற்றம் செய்த கைதிகளே பயப்படுவர். பயத்திலிருந்து பெறும் சுதந்திரமே உண்மையான சுதந்திரம்’.

’ஜனநாயகமே வன்முறை இல்லாத அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை வழங்க வல்லது’.







.






.

No comments:

Post a Comment