CORONA VIRUS IN INDIA
தி.நகர் ரங்கநாதன் தெருவில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திறக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டாம் உலகப்போரின் போதுகூட மூடப்படாத ஊட்டி தாவரவியல் பூங்கா, 172 ஆண்டுக் காலத்தில் முதன் முறையாக பூட்டுப்போட்டு மூடப்பட்டிருக்கிறது. தஞ்சை பெரிய கோயிலின் பிரமாண்டமான கதவுகள் பூட்டப்பட்டிருக்கின்றன.
ஏறுவதற்கு ஆள் இன்றி சென்னை மெட்ரோ ரயில் காற்றாடுகிறது. ஆரோக்கியம் நாடி மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சிக்கு வரும் கூட்டமும் வெகுவாகக் கரைந்திருக்கிறது. எக்ஸ்பிரஸ் மால் இருள்சூழ்ந்து கிடக்கிறது. விமானப் போக்குவரத்து முடங்கிக் கிடக்கிறது. பல ரயில்கள் ரத்தாகிவிட்டன. உரசிக்கொண்டும் ஊடுருவிக் கொண்டும் ரயில்களைத் துரத்தும் காட்சியை, சென்னை சென்ட்ரலில் பார்க்க முடியவில்லை.
ஐ.டி நிறுவன ஊழியர்கள் மட்டுமல்ல, வீதிவீதியாக அலைந்து செய்தி எடுக்க வேண்டிய பத்திரிகையாளர்களில் பலரே வீட்டிலிருந்து பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். 144 ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பிக்காமலேயே ஊரே அடங்கிக் கிடக்கிறது. எங்கெங்கு காணினும் கொரோனா அச்சம் துரத்துகிறது.
கொரோனா தாக்கத்தின் இரண்டாவது வாரத்தில் இருக்கிறது இந்தியா. கொரோனா பாதிப்பு அதிகமான மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா என தமிழகத்தின் அண்டை மாநிலங்களும் சேர்ந்திருப்பது தமிழக மக்களிடம் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒப்பீட்டளவில் பார்த்தால், தமிழகத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வும் தற்காப்பு நடவடிக் கைகளும் அரசின் அக்கறையுள்ள முயற்சிகளும் பிற மாநிலங்களைவிட சிறப்பாகவே இருப்பதாகவே தோன்றுகிறது. ஆனால், இவை போதுமானதுதானா என்ற கேள்வியும் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ஏனெனில், மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரும் தகவல்கள் அச்சுறுத்துவதாகவே இருக்கின்றன.
வணிக வளாகங்கள், திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் அனைத்தையும் மார்ச் 31-ம் தேதி வரை மூடுமாறு அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், ஒருசில மார்க்கெட்கள் வழக்கம்போல் இயங்கிவருகின்றன. வழக்கத்தைவிட கொஞ்சம் குறைவான கூட்டத்தைப் பார்க்க முடிகிறது. ராஜீவ் காந்தி, இராசாசி, சி.எம்.சி உள்ளிட்ட பெரிய அரசு மருத்துவமனைகளில் எந்தவிதமான கண்காணிப்பும் கட்டுப்பாடு மின்றி பார்வையாளர்கள் என்ற பெயரில் வெளியாட்கள் உலவுவதைப் பார்க்க முடிகிறது.
கொரோனா அறிகுறிகளுடனும் அச்சத் துடனும் பரிசோதனைக்காக வருவோரைப் பரிசோதித்து முதலில் தனிமைப்படுத்த வேண்டிய சுகாதாரத் துறை ஊழியர்கள், வெறும் எச்சரிக்கையுடன் திருப்பி அனுப்புவ தாக புகார்கள் கிளம்பியுள்ளன. அப்படி திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கு ஒருவேளை கொரோனா தொற்று இருந்திருந்தால், எத்தனை பேருக்குப் பரப்பியிருப்பார்களோ என்ற அச்சமும் எழுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப் பட்டிருக்கிறது. தற்போது இவருக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த இளைஞர், டெல்லியிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்துள்ளார். சென்னையில் சில நாட்கள் முடிதிருத்தும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். இப்போது இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ள நிலையில், இவரால் எத்தனை பேருக்குப் பரவியிருக்கும் என்பதைக் கற்பனைசெய்வதே பீதியூட்டுவதாக இருக்கிறது.
அந்த இளைஞருடன் தங்கியிருந்தவர்கள் யார் யார், எங்கே வேலை பார்த்தார் என்பது போன்ற எந்த விவரமும் அரசால் வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் இதுவரை மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப் பட்டதாகவும், அவர்களில் காஞ்சிபுரம் பொறியாளர் குணமாகிவிட்டதாகவும் மார்ச் 19 அன்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.
‘இதுவரை ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 236 பயணிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 3,481 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 39 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனி வார்டுகளில் 1,120 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன. 320 பேருக்கு ரத்த மாதிரி எடுத்ததில் 232 பேருக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. 86 மாதிரிகள் பரிசீலனையில் உள்ளன’ என்றும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அவர் அவ்வப்போது வெளியிட்டுவரும் தகவல்களுக்கு முரணாக, ‘அங்கே ஒருவருக்கு, இங்கே ஒருவருக்கு’ என கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் றெக்கை கட்டிப் பறக்கின்றன.
திருப்பூரில் அஸ்ஸாம் இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி தெரிந்து, கோவை அரசு மருத்துவமனையில் தனியே கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்.
சென்னையின் சர்வதேசப் பள்ளி ஒன்றில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் மூலம் ரகசியமாக அவர்களின் குடும்பத்தினராகவே பொறுப்பேற்றுக் கொண்டு சிகிச்சை தருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதற்கு முன்பாகவே இவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இவர்களுடன் படித்த, உடன் தங்கியிருந்த மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள் யாருக்கும் எந்தப் பரிசோதனையும் நடத்தப்பட்டதாகவே தெரியவில்லை.
சர்வதேசப் பள்ளியின் நிர்வாகமும் அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுமே இப்படி சமூகப் பொறுப்பின்றி நடந்துகொள்ளும் நிலையில், படிக்காத, பாமர மக்களின் அறியாச் செயல்பாடுகளால் கொரோனா பாதிப்பு எந்தளவுக்கு வேகமாகப் பரவும் என யூகிக்கவே முடியவில்லை.
கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதை மறுக்க முடியாது. ஆனால், அவசியமின்றி பல்வேறு தகவல்களையும் மறைப்பதாக ஒரு சந்தேகம் எழுகிறது. உண்மையை ஒப்புக்கொள்வதே இந்தப் பிரச்னைக்கு முதல் தீர்வு. பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, அதற்கேற்ப செயல்பட்டால் மட்டுமே வேகமாகப் பரவும் கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகத்தால் தப்ப முடியும்.
பிற மாநிலங்கள்
எப்படி இருக்கின்றன?
`கோவிட்-19’ கொரோனா வைரஸின் தாக்கம், இந்தியா முழுவதும் தன் அதிர்வலைகளை மிகத் தீவிரமாகக் காட்டத் தொடங்கியிருக்கிறது. 19 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மூன்று பேர் உயிரிழந்துவிட்டனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது மகாராஷ்டிரா. அடுத்தடுத்த இடங்களில் கேரளா, ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகியவை உள்ளன.
இந்த வரிசையில் தமிழகம் இறுதி இடத்தில் இருப்பது இப்போதைக்கு ஆறுதலான விஷயம். ஆனால், இது தற்காலிகம் மட்டுமே. நிலைமை எப்போது, எப்படி மாறும் எனக் கணிக்க இயலாது. தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போதைக்கு கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் மூன்று பேர் மட்டுமே இருக்கிறார்கள். நோய் பரவுதலைத் தடுக்க தமிழக அரசு எடுத்துவரும் வேகமான நடவடிக்கைகளே இந்தளவுக்கு குறைவான தாக்கத்துக்குக் காரணம்.
பள்ளி, கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல்குளங்கள், சுற்றுலா இடங்கள், புகழ்பெற்ற வழிபாட்டு மையங்கள், பொதுக் கூட்டங்கள் உள்ளிட்ட மக்கள் திரள வாய்ப்புள்ள அனைத்தையும் தமிழக அரசு தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி சார்பில் ‘தனித்திரு, தவிர்த்திரு. சுத்தமான கரங்களே சுகாதாரத்தின் வரங்கள்!’ என்றெல்லாம் விழிப்புணர்வு வாசகங்கள் எழுப்பப்பட்டு மக்களிடம் பகிரப்பட்டுவருகின்றன.
இப்படி நாம் மட்டுமே விழிப்புணர்வுடன் இருந்து நம்மைக் காத்துக்கொண்டால் கொரோனாவிடமிருந்து தப்பிவிட முடியுமா? சாத்தியம் குறைவுதான். நம்மைச் சுற்றியுள்ள தென் மாநிலங்கள் மற்றும் தொலைவில் உள்ள வடக்கு மாநிலங்களும் பாதுகாப்பாக இருந்தால்தான் தமிழகத்தின் பாதுகாப்பும் முழுமையாக சாத்தியம் எனலாம். சரி, பிற மாநிலங்களில் நிலைமை எப்படி இருக்கிறது?
- மகாராஷ்டிராவில் நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 15 நோயாளிகள், மருத்துவமனையிலிருந்து தப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருசிலரை மட்டும் அரசு அதிகாரிகள் கண்டறிந்து கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். நோயாளிகள் வெளியேறுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா உறுதிசெய்யப்படும் நோயாளிகளின் கைகளில் ரப்பர் ஸ்டாம்ப் அடித்து அனுப்புகிறார்கள். தலைநகர் மும்பையில் டப்பாவாலாக்கள் இயங்குவது, மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.
- நோயாளிகள் தப்பிச் செல்வது உத்தரப்பிரதேசத்திலும் நிகழலாம் என்பதால், தற்போது உ.பி அரசும் நோயாளிகளின் கைகளில் ரப்பர் ஸ்டாம்ப் வைக்கும் பழக்கத்தைத் தொடங்கியுள்ளது.
- கேரளாவில் கொரோனா உறுதிசெய்யப்படும் நோயாளி யின் குடும்பத்தினரின் நடமாட்டம், கண்காணிப்பு வளையத் துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜி.பி.எஸ், சி.சி.டி.வி உதவியுடன் இவை மேற்கொள்ளப்படுகின்றன.
- மேகாலயாவில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மார்ச் 31 வரை மூடப்பட்டிருக்கின்றன. இது ஏப்ரல் 15 வரைகூட நீளலாம் என்று அந்த மாநில அரசு அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
- டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 31-க்குப் பிறகு தள்ளிவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்குப் பிறகு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே செய்யலாம் என்றும் டெல்லி அரசு கூறியுள்ளது. பொது இடங்கள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
- மதுபானக்கடைகள், இரவு நேர விடுதிகள், அழகுசாதன நிலையங்கள், முடிதிருத்தகங்கள் என மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான விழிப்புணர்வு வேலைகளை அஸ்ஸாம் அரசு செய்து வருகிறது.
- ஹரியானா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் சமீபத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்ததால், தன்னைத்தானே தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். பொதுமக்கள் கூடும் இடங்கள் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
- லக்னோவில் மதுபானக்கடைகளை மூடுமாறு அரசு அறிவுறுத்தியது. ஆனால், சில கடைகளே இந்த அறிவிப்பை மதித்தன. அங்கு செல்லும் இளைஞர் பட்டாளத்தின் எண்ணிக்கை குறையவேயில்லை என்பதும் வருத்தத்துக்குரியது.
தனியார் ஆய்வகங்களுக்கும் கோரிக்கை!
`இந்தியாவில் பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால்தான், நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது’ என்று தொடர்ச்சியாக விமர்சனங்கள் வைக்கப்பட்டுவரும் சூழலில், மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சிக் குழு (ஐ.சி.எம்.ஆர்) சார்பில் தனியார் ஆய்வகங்கள், கொரோனா வைரஸ் தாக்கத்தைப் பரிசோதிக்கும் முயற்சியில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஜப்பானிலிருந்து பரிசோதனை உபகரணங்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் என்றும் ஐ.சி.எம்.ஆர். சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவாலைச் சமாளித்த நாடுகள்!
உலகம் முழுவதற்குமான ஒரே சவால், covid-19 கொரோனா வைரஸ். ஆனால், ஒவ்வொரு நாடும் அதை வெவ்வேறுவிதமாக எதிர்கொள்கின்றன. இத்தாலி போன்ற மேற்கத்திய நாடு, சீனா போன்ற பலம் பொருந்திய நாடு, ஜப்பான் போன்ற சுகாதாரமிக்க நாடு, ஈரான் போன்ற வெப்பம் மிகுந்த நாடு என எல்லா நாடுகளும் இந்த கொரோனாவிடம் தோற்றுள்ளன.
பணமோ, பலமோ, சுகாதாரமோ சூழலோ இந்தத் தொற்றுநோயை குணப்படுத்த முடிவதில்லை.
நல்ல தலைமை, விழிப்புணர்வு, சமூகப் பொறுப்புணர்வு, துரிதமான சரியான நடவடிக்கைகள் இவையே வழி என்பதை சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா போன்ற நாடுகள் நமக்கு நிரூபித்திருக்கின்றன. இந்தியாவும் சில படிப்பினைகளைப் பெற வேண்டியது அவசியமாகிறது.
உலகத்தின் மீது கொரோனா வைரஸ் தொடுத்திருக்கும் போரை உலக நாடுகள் எப்படி எதிர்கொள்கின்றன. ஓர் அலசல்...
சிங்கப்பூர்: ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 8,000 பேர் வசிக்கும், மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நாடு சிங்கப்பூர். ஆனால், நோய் பரவாமல் கட்டுப்படுத்துவதில் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது. ‘contact tracing’ எனும் முறைப்படி நோய்த்தொற்று கொண்டவர் களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 6,000 பேரை, உடனடியாக அவர்களது வீடுகளில் சட்டப்படி தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைத்திருக்கிறது. இவர்கள் வீட்டைவிட்டு வெளியேறினால் சிறைத் தண்டனையும் அபராதமும் நிச்சயம்.
சரி, இந்த 6,000 பேரை சிங்கப்பூர் எப்படி அடையாளம் கண்டுகொண்டது என்பதுதான் சுவாரஸ்யமே. நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டது அந்நாட்டு காவல் துறையினரும் துப்பறியும் நிபுணர்களும்தான். ஜனவரி மாதம் சீன சுற்றுலாப் பயணிகள் சிலர் சிங்கப்பூர் சென்றிருக்கின்றனர். அங்கு இருக்கும் மருந்துக் கடையில் அவர்கள் மசாஜ் எண்ணெய் போன்ற பொருள்களை வாங்கியுள்ளனர். அந்தப் பொருள்களை விற்பனை செய்த பெண், அவரின் கணவர், அவர்களின் ஆறு மாதக் குழந்தை ஆகியோர்தான் சிங்கப்பூரில் கொரோனாவால் முதன்முதலில் பாதிக்கப்பட்டவர்கள். இந்த மூவர் சீனர்களைச் சந்தித்த பிறகு, யாரையெல்லாம் சந்தித்தார்கள், அவர்கள் யாரையெல்லாம் சந்தித்தார்கள் என்று தேடித் தேடி சி.சி.டி.வி காட்சிகள், தொலைபேசித் தொடர்புகள், ஓலா, ஊபர் என மக்கள் பயன்படுத்திய செயலிகளின் தரவுகள், போலீஸ் விசாரணை என ஒரு கொலைக்கான புலன்விசாரணையைச் செய்வதுபோல் நடவடிக்கைகள் எடுத்து, அத்தனை பேரையும் கண்டறிந்து, உடனடியாக அவர்கள் வீடுகளைவிட்டு வெளியேற தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது அந்நாட்டு அரசு. தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 245 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதனால், உயிரிழப்பு நேராமல் காப்பாற்றியிருக்கிறது சிங்கப்பூர். ஒருவேளை இந்தக் கட்டுப்பாடுகள் இல்லாவிடில் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து, நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூட முடியாமல் இத்தாலிபோல் தவித்திருக்கும் சிங்கப்பூர்.
தென் கொரியா: சீனாவுக்கு அடுத்து அதிகமாக பாதிக்கப் பட்ட நாடு தென் கொரியா தான். ஆனாலும், கொரோனா தாக்கத்திலிருந்து எளிதில் தப்பியிருக்கிறது. சிங்கப்பூரில் சாத்தியமான ‘contact tracing’ இங்கு சாத்தியமில்லை. ஏனெனில், தென் கொரியாவின் பரப்பளவும் மக்கள்தொகையும் அதிகம். ஆகவே, போலீஸை மட்டும் நம்பாமல் மக்களையும் தொழில்நுட்பத்தையும் தென் கொரியா நம்பியது. சீனாவில் செய்ததுபோல் முழு இயக்கத் தடை செய்யாமல் யாருக்கு நோய்த்தொற்று இருக்கிறது எனக் கண்டறிவதில் பெரும் புரட்சி செய்திருக்கிறது. நாடு முழுவதும் மக்கள் சுயபரிசோதனை செய்துகொள்வதற்கு வசதியாக டிரைவ்-இன் மருத்துவமனைகள், சேகரிக்கப் பட்ட ரத்த மாதிரிகளை உடனடியாகப் பரிசோதிக்க தயார்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட லேப்கள் என நோய் கண்டறிதலை முதன்மையாக்கியது. தொழில்நுட்பத்தின் துணையோடு, தொற்று இருப்பவர்களின் இருப்பிடம் ஜி.பி.எஸ் மூலம் ட்ராக் செய்யப்பட்டு அதை ஒரு செயலி மூலம் பொதுமக்களுக்குத் தெரிவித்தது. அங்கு செல்வதை மக்கள் தவிர்த்தனர். இப்படி புதிதாக நோய் பரவுவதைத் தடுத்துள்ளது தென் கொரியா. பாதிக்கப்பட்ட 8,565 பேரில், சுமார் 2,000 பேர் குணமடைந்துள்ளனர். 91 பேர் மட்டுமே மரணமடைந்தனர். உடனடி நடவடிக்கைகளால் உலகநாடுகளுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது தென் கொரியா.
ஹாங்காங்: சீனாவில், இரண்டாவதாக அதிக covid-19 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகொண்ட குவாங்டோங் மாகாணத்தின் மிக அருகில் இருந்தும், நோய்க் கட்டுப்பாட்டில் வெற்றியடைந் திருக்கிறது ஹாங்காங். இங்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சாலைகளில் நடமாடும் அனைவருமே தற்காப்பு முகமூடி அணிந்திருக்கின்றனர். சீனாவுடன் முற்றிலும் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து மற்ற எதற்காகவும் வீட்டைவிட்டு மக்கள் வெளியேறுவதில்லை. வீடுகளில் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமும் சிலர் கண்காணிக்கப்படுகின்றனர். இப்படி கண்காணிப்பில் இருக்கும் நபர்களின் பெயரும் முகவரியும் அரசால் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. ஆகவே, நோய் பரவலாவது வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் இதுவரை சுமார் 100 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
நல்லவற்றை நாமும் பின்பற்றுவோம்!
No comments:
Post a Comment