GEMINI GANESAN,A LEGEND
பேச்சில், சிரிப்பில், செயலில், வாழ்வில் மென்மையான போக்கை கடைப்பிடிப்பவர்களை அனைவருக்கும் பிடிக்கும். அப்படி அனைவராலும் கொண்டாடப்பட்ட கலைஞர் தான், ஜெமினி கணேசன்.
நவ., 17, 1920ல் பிறந்த, ஜெமினி கணேசன் என்ற, நுாற்றாண்டு நாயகனின் கதை இது.
திரையுலகில், 1960 - 70களில், ஆளுமை செய்த மூவேந்தர்கள், எம்.ஜி.ஆர்., - சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன்.
இந்த மூவரும், கதாநாயக அந்தஸ்து பெற்று பிரபலமான, சம காலத்தில், 1951ல், மந்திரி குமாரி படத்தில், எம்.ஜி.ஆரும்; 1952ல், பராசக்தி படத்தில், சிவாஜி கணேசனும்; 1953ல், மனம் போல் மாங்கல்யம் படத்தின் மூலம், ஜெமினி கணேசனும், ஜொலிக்க ஆரம்பித்தனர்.
சமூக படங்களின் வருகைக்கு மகத்தான வரவேற்பு பெற்ற காலத்தில், நாராயணன் அண்ட் கம்பெனியின், மனம் போல் மாங்கல்யம் படம், ஜெமினி கணேசனை அறிமுகப் படுத்தியது; அதுவும் இரட்டை வேடம்.
எம்.ஜி.ஆர்., - சிவாஜிக்கு முன், இரட்டை வேடம் ஏற்ற பெருமை, இவருக்கு உண்டு.
மனம் போல் மாங்கல்யம் படத்தில், அவரது நடிப்புத் திறன் பெரிதாக பேசப்பட்டது. 'இவர், பல ஆண்டுகள் நாடக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்...' என்று, சிலர் நம்பினர். ஆனால், இவருக்கு மேடை அனுபவம் பெறும் வாய்ப்பு அமைந்ததில்லை. சில படங்களில், சிறிய வேடங்களில் நடித்த அனுபவம் உண்டு. அதை, பின்னர் பார்க்கலாம்.
தன்னை கதாநாயகனாக இரட்டை வேடத்தில் நடிக்க வைத்த, நாராயணன், அடுத்து தயாரித்த கதையிலும் நடிக்க விரும்பினார். அதற்காக சந்தித்து, வாய்ப்பு கேட்டார், ஜெமினி. ஆனால், தயாரிப்பாளரோ, 'நீ அழகான இளைஞனாக தான் பொருந்துவாய். இந்த கதாபாத்திரத்திற்கெல்லாம் நீ சரிபட்டு வரமாட்டே...' என்று, திருப்பி அனுப்பி விட்டார்.
அதை கேட்டு மிகவும் கலங்கினார், ஜெமினி கணேசன். வருத்தமுடன், 'விடு போகட்டும்...' என்று இருந்து விடவில்லை. அவருக்கு, அந்த வேடத்தை விட மனமில்லை.
உணர்ச்சிவயப்பட்டவர்களுக்கு, வாழ்க்கை, ஒரு கரடு முரடான பாதை. ஆழமாக சிந்திக்கிறவர்களுக்கு, அது ஒரு இனிய பயணம் என்பதை உணர்ந்த, ஜெமினி, அந்த படத்தில் நடித்ததற்கான அனுபவத்தை அவரே சொல்கிறார்:
ஆரம்பத்தில், இந்த வேடத்தை எனக்கு கொடுக்க, கம்பெனி அதிபர், நாராயண அய்யங்கார் விரும்பவில்லை. என் மனதிலோ, இதை, நாம் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தது. நம் வாழ்நாளில், இந்த மாதிரி ஒரு வேடத்தில் நடித்து, வெற்றி பெற்று விட்டால், ரசிகர்கள் நினைவில் என்றும் இருக்க முடியும் என்ற ஆசையும் எழுந்தது.
பாலன் என்ற உதவி இயக்குனரிடம் மட்டும் சொல்லி, அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத வகையில், பழங்காலத்து ஆங்கில - இந்திய பிச்சைக்காரனை போல, தாடி, மீசையெல்லாம் ஒட்டி, நாராயண அய்யங்கார் வீட்டுக்கு போனேன்.
அப்போது தான் பூஜை முடித்து, கையில் வெள்ளி டம்ளருடன் வெளியே வந்தார்.
அவரை பார்த்ததும், நான், மெல்ல கூனி குறுகி நடந்து, குரலை மாற்றி, பரிதாபமாக பார்த்து, 'அய்யா... பிச்சை போடுங்கய்யா...' என்றேன்.
என் வேடத்தை கண்டவருக்கு அருவறுப்பு.
'போ... போ...' என்று விரட்டினார். நானோ, அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், அவரை நோக்கியே நடந்தேன்.
'யாரது, பிச்சைக்காரனை உள்ளே விட்டது?' என்று, அதட்டி கேட்டார்.
'போ... போ...' என்று, என்னை விரட்டிக் கொண்டே இருந்தார்.
நான், மெல்ல படிகளில் ஏற ஆரம்பித்தேன்.
காலடி சத்தம் கேட்டு, 'யார்றா, முரட்டு பிச்சைக்காரனா இருக்கான். விரட்டுனா கூட போக மாட்டேங்கறானே...' என, உதவியாளரான, பட்டண்ணாவிடம் கூறினார்.
வேகமாக திரும்பிய, பட்டண்ணா, என்னிடம் வந்தார்.
பட்டண்ணாவுக்கு கண்ணடித்து, ஜாடை காட்டி, என்னை யார் என்று புரிய வைத்து விட்டேன். அவர் சிரித்தபடியே, தடுக்காமல் விட்டு விட்டார். படிகளில் ஏறி, வீட்டுக்குள் நுழைந்தேன்.
'என்னடா... நீ கூட பார்த்துகிட்டே நிக்குறே...' என்று, பட்டண்ணாவை கடிந்து கொண்டார்.
சிரித்தபடியே, 'இது, யார் தெரியலையா உங்களுக்கு...' என்றார், பட்டண்ணா.
'தெரியலையே... யாரு?' என்றார்.
'நம்ம, கணேசன் தாங்க... நல்லா பாருங்க...' என்று, உண்மையை போட்டுடைத்தார், பட்டண்ணா.
அருகில் வந்து, என்னை பார்த்து, 'அட... நீயா... அடையாளமே தெரியலையே... உனக்கு, எதுக்கு இந்த பிச்சைக்கார வேஷம்...' என்றார்.
'வேஷம் தான். அந்த பிச்சை (கதாபாத்திரம்) தான் வேண்டும். கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தான்...' என்று சொல்லி, சிரித்தேன்.
'உனக்கு தான் அந்த வேஷம். உன் ஆர்வத்தை பாராட்டுகிறேன்...' என்றார்.
'பாத்திரத்தில் பிச்சை எடுக்காமல், ஆனால், பிச்சை எடுத்து பெற்ற பாத்திரம் அது. கணவனே கண் கண்ட தெய்வம் படத்தின் பாத்திரம்...' என்று கூறுவார், ஜெமினி கணேசன்.
அழகும், இளமையும் கொண்ட ஜெமினிகணேசன், ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும் வலிய ஏற்றுக்கொண்ட, கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில், விஜயன் பாத்திரமும், நடிப்பும், அவரை நட்சத்திர நடிகர் அந்தஸ்திற்கு உயர்த்தியது. அதுமட்டுமல்ல, அவரையே, ஹிந்தி பதிப்பில், தேவதா படத்திலும் நடிக்க செய்தனர்.
கணவனே கண் கண்ட தெய்வம் படத்தின் வெற்றி, அவரை, திரும்பிப் பார்க்க வைத்தன. பல படங்களுக்கு ஒப்பந்தமானார்.
வாழ்க்கை, பல போராட்டங்களை கொண்டது. ஜெமினிகணேசனின் ஆரம்ப கால திரை பிரவேசம், தடை கற்களை கொண்டிருந்தது.
No comments:
Post a Comment