கய்யாமின் தோளில் ஏறிய கண்ணதாசன்!
முப்பது வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகப் பணியாற்றிய கண்ணதாசன், ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதினார். அவற்றில் பல அவருடைய தனி முத்திரையைப் பெற்று விளங்கின. ஆனால், ஒரே ஒரு பாடல் அவருடைய கையெழுத்துப் பாடலைப்போல் விளங்குகிறது. அவர் தன்னுடைய ஆளுமையை, தானே விளக்குவதைப்போல் உள்ள, ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’ பாடல் அது. கண்ணதாசன் தயாரித்த ‘ரத்த திலகம்’ படத்தில் இடம்பெற்ற பாடல். கண்ணதாசனே திரையில் தோன்றிப் பாடுவதாக இந்த பாடல் காட்சி அமைந்திருக்கிறது.
ஐம்பத்தி ஐந்து வயது கூட ஆகாத நிலையில், அக்டோபர் 1981ல் அமெரிக்காவில் கண்ணதாசன் இறந்துபோனார். முதலமைச்சராக அப்போது இருந்த எம்.ஜி.ஆர். அவருடைய உடலை விமானம் மூலம் இந்தியாவுக்கு எடுத்துவர ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர்தான் ‘கண்ணதாசனுக்கு அரசவைக் கவிஞர்’ என்ற அந்தஸ்தையும் கொடுத்திருந்தார். ‘சுனாமி’ போன்ற வாழ்க்கையும் ‘சங்கீத தென்றல்’ போன்ற வார்த்தையும் கொண்ட வித்தியாசமான இந்த ஆளுமையை, தகுந்த மரியாதையுடன் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.
பாகவதர் காலத்தில் பாபநாசம் சிவன் கோலோச்சினார். அடுத்ததாக உடுமலை நாராயணக்கவி உச்சத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து மருதகாசி முதல் நிலைக்கு வந்தார். அறுபதுகளில் கண்ணதாசன் காலம் தொடங்கியது. தனிப்பெரும் கவிஞராக கண்ணதாசன் உருவெடுத்தாலும் அவரை பிடிக்காத ஏராளமான அதிகாரப் பீடங்கள் தமிழ் சினிமாவில் இருந்தன. கண்ணதாசன் பாடலா, வாலி பாடலா என்று வித்தியாசம் தெரிய முடியாத அளவுக்கு கண்ணதாசனை பின்தொடர்ந்த வாலியை இத்தகைய வட்டாரங்கள் வலிமையாகப் பயன்படுத்திக் கொண்டன. அதிர்ஷ்டத்தில் மட்டும் வந்தவராக இருந்திருந்தால், கண்ணதாசன் அன்றே அஸ்தமித்திருப்பார்.
ஆனால், இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் கூட அவருடைய புதுப் பாட்டிலும் கண்ணதாசன் இருந்தார். எப்படியும் விரைவிலேயே கவிஞர் இறந்தார். மறைந்தது சூரியன், இனி எங்கள் ராஜ்ஜியம்தான் என்று கிளம்பியவர்கள் பலர். தன்னுடைய தனி வழியைத் திரை இசையில் நிறுவத்துடித்த இளையராஜாவுக்கு வைரமுத்து, ஓரளவுக்குப் பயன்பட்டார். ஆனால், இளையராஜாவின் இசை அரசாங்கத்திலும் வாலி
வலம் வந்தார். புலமைப்பித்தன் புகழ் கொடி நாட்டினார்.
காலம் ஓடிக்கொண்டிருந்தது. அது யாருக்காக எப்போது நின்றது? நேற்று இருந்தவன் இன்று இல்லை என்று காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு, நாளையும் தன்னுடைய நாச நர்த்தனங்களைக் காட்டும் எண்ணத்துடன், முச்சந்தியிலும் நாற்கோணங்களிலும் அது
ரிக்கார்ட் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தது!
இந்த புழுதியில் யாருக்கும் கண்மண் தெரியாது என்கிற அளவில்தான் இரண்டாயிரமாம் ஆண்டு வந்து இருபது ஆண்டுகள் ஆகிக்கொண்டிருக்கிற இந்த 2020 உள்ளது. ஆனால் என்ன ஆச்சரியம்! கண்ணதாசன் மறைந்து நாற்பது வருடங்கள் ஆகியும், கண்ணதாசன் மறையவே இல்லையோ என்ற மயக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது அவர் நினைவு.
‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை’ என்று ‘ஒரு கோப்பையிலே’ பாடலில் கவிஞர் கூறியது விளையாட்டில்லையோ, வாஸ்தவம்தானோ என்று தோன்றுகிறது.
‘‘பாரதிக்கு ஒரே கவிதைத் தொகுதிதான் உள்ளது. ஆனால் அவன் வானளாவ நிற்கின்றான். என்னுடைய மரபுக்கவிதைகள் பல தொகுதிகள் வந்து
விட்டன. எனக்கு ஒரு சின்ன இடமாவது இலக்கிய
உலகில் கிடைக்குமா,’’ என்று கண்ணதாசன் ஏக்கம் கொண்ட நாட்கள் உண்டு.
இந்த வகையில் தன்னுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தும் போது, இலக்கிய அன்பர் கூறுவார், ‘உங்கள் திரை இசைப் பாடல்கள் காலகாலத்திற்கு நிற்கும்’, என்று. இதைத்தான் கண்ணதாசனே கூட, ‘இசைப் பாடலிலே என் உயிர்த்துடிப்பு’
என்றாரோ?
இந்த வகையில் கண்ணதாசனின் அடையாளத்திற்குத் திசைக்காட்டியாக உள்ளது, ‘ஒரு கோப்பையிலே’ பாடல்!
‘கோப்பையிலே குடியிருந்தவன் கோகுலத்தில் குடியேறியதை’, ‘மதுசாலை’ என்ற கவிதைத் தொகுப்பில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
‘‘கோப்பையிலே ஒருவீடமைத்து
கொஞ்சும் குமரிகள் உடன் மகிழ
வேட்கைக்கொண்ட பெருங்கவிஞன்
வேண்டியதென்ன கடைசியிலே
பூக்கைப் புல்லாங்குழல் கொண்ட
புண்ணிய மூர்த்தியின் பாதங்களில்
வாழ்க்கைப் பயனை அவன் கண்டான்
வேண்டினான் அங்கே மதுசாலை!’’
‘ரத்தத் திலகம்’ பாடலின் சரணங்கள் ஒரு மிதப்போடு அமைந்திருக்கின்றன.
‘‘காவியத்தாயின் இளைய மகன், நான்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன், நான்
படைப்பதனால் என் பெயர் இறைவன்!’’ என்று, ‘கொடியில் தலை சீவி வரும் இளம் தென்றலை’ப்போல் ஒயிலாக இசைப்பாடல்களை அள்ளித்தரும் ஒரு கந்தர்வனின் புறப்பாடு வர்ணிக்கப்பட்டிருக்கிறது!
மலரம்புகள் வீசி உயிர்களை எல்லாம் காதல் மயக்கம் கொள்ளச் செய்யும் மன்மதனைப் போல், கவி அம்புகள் எறிந்து மானுடரின் மனங்களைக் கொள்ளைக் கொள்ளும் கவிபிரும்மாவின் வல்லமையை இரண்டாம் சரணம் எடுத்துரைக்கிறது.
‘‘மானிட இனத்தை ஆட்டி வைப்பேன், அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன், நான் நிரந்தரமானவன், அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை!’’. இந்த அளவுக்கு உற்சாகம், இந்த அளவுக்குத் தன்னுடைய கவிதாவிலாசத்தின் மீதான நம்பிக்கை, தானே மேடையில் தோன்றி இந்த அளவுக்கு அறைகூவல் விடும் தைரியம் கண்ணதாசனுக்கு எப்படி வந்தது?
‘பா’ வரிசைப் படங்களில் பாடல் வரிகளுக்கு இசையைப் பல்லக்குத்தூக்க வைத்ததில் வந்த தன்னம்பிக்கைதான் காரணம்.
இதையும் மீறி, ‘அரியணையில்தான் அமர்வேன்’ என்று இசை முரண்டு பிடித்தாலும், இசையும் மனம் மகிழும் வண்ணம் இலக்கிய சாமரம் வீசுவதிலும் தனக்கு வந்துசேர்ந்திருந்த வல்லமை இன்னொரு காரணம்.
இவ்வளவு இருந்தும், ‘ஒரு கோப்பையிலே’ பாடலில் தன்னை முன் நிறுத்தித் தானே பாடுவதுபோல் காட்சி அமைத்தாலும், கண்ணதாசனுக்கு உமர் கய்யாம் என்ற ஊன்றுகோல் தேவைப்பட்டது!
கல்லூரி விழாவில், பழைய மாணவர் முத்தையாவாக வரும் கண்ணதாசன் (முத்தையா என்பதுதான் அவருடைய இயற்பெயரும் கூட), ‘ஒரு உமர் கய்யாம் பாடல் பாடுவார்’ என்ற அறிவிப்புடன், ‘ஒரு கோப்பையிலே’ பாடல் வழங்கப்படுகிறது. கோட்டு சூட்டணிந்த கண்ணதாசன், ஒலிபெருக்கியின் முன் பாடலுக்கு வாயசைத்து, வரிகளுக்கு ஏற்ப செய்கைகள் காட்டும் போது, மேடையில் உமர் கய்யாமை நினைவூட்டும் பாரசீகப் பாணியிலான ஓவியங்கள் காணப்படுகின்றன.
வாழ்க்கை நிலையில்லாதது. ஆகவே, இருக்கும் பொழுதை வீணடிக்காமல் இன்பமாகக் கழிக்கவேண்டும் என்ற செய்தியை, குடித்து விட்டுக் கும்மாளம் போட்டுக் கூத்தடிக்கவேண்டும் என்கிற லோகாயதப் பிரசாரம் போல் செய்யாமல், ஒருவித நளினத்தோடும் வாழ்க்கையின் உள்ளர்த்தம் குறித்த கவலையோடும் கூறின, உமர் கய்யாமின் பாடல்கள். பதினோராம் நூற்றாண்டில், பாரசீகத்தில் வாழ்ந்த கணித நிபுணரும், வானியலாளரும், தத்துவவாதியும், கவிஞருமான கய்யாம், நிச்சயமாக வெறும் குத்துப்பாட்டுக் கவிஞர் அல்ல, சில்மிஷமான சிலுக்குப் பாட்டு எழுத!
கய்யாம் எழுதி, எட்வர்ட் பிட்ஸ்ஜெரால்ட் மொழிபெயர்த்த ஆங்கில கவிதைகளால் ஈர்க்கப்பட்டு, உலகமே கய்யாமை அடையாளம் கண்டு அவர் கடைவாசலில் நின்றது. மொழிபெயர்த்தார் என்று கூறுவதைவிட, புது மலர்களைத் தொடுத்தார் என்கிற அளவில் இருந்தன, பிட்ஸ்ஜெரால்ட் ஆங்கிலத்தில் தந்த கய்யாமின் கவிதை வரிகள். இவற்றைப் படித்துவிட்டு மிகப்பெரிய ஆங்கில கலை விமர்சகரான ஜான் ரஸ்கின் மயங்கிப்போனார். அப்போது ஊர்பேர் தெரியாதவராக இருந்த பிட்ஸ்ஜெரால்டுக்கு ரஸ்கின் எழுதிய கடிதத்தில், ‘‘இதுவரை என்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு அற்புதமான கவிதை வரிகளை நான் படித்ததில்லை’’ என்று புகழ்ந்தார்.
பாரசீக மொழியின் பாரம் நமக்குத் தெரியாமல் ஆங்கில அசைகளில் தந்த பிட்ஸ்ஜெரால்டைப்போல், ஆங்கிலத்தின் நெடி நம்மை மருட்டாத வகையில், பனிமுத்துக்கள் படர்ந்து தமிழ் ரோஜா இதழ்களாக அவற்றை நமக்குத் தந்தார், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை (தேவி).
‘‘வெயிலுக்கேற்ற நிழல் உண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பம் கவியுண்டு
கலசம் நிறைய அமுதுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு’’ என்று வருகிற தேவியின் வாய்மணக்கும் தமிழ், கல்கியின் ‘கள்வனின் காதலி’ திரைப்படத்தில் பானுமதியும், சிவாஜியும் பாடுவதுபோல் படமாக்கப்பட்டது.
‘‘எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்
தொழுது போற்றி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
அழுது கண்ணீர் விட்டாலும்
அபயம் அபயம் என்றாலும்
வழுவிப்பின்னால் ஏகியொரு
வார்த்தை மாற்றம் செய்திடுமோ’’ என்று விதியின் வலிமையைக் கூறிய தேவியின் மொழிபெயர்ப்பு, இன்னும் எளிமைப் படுத்தப்பட்டு, விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில், ‘போர்ட்டர் கந்தன்’ பாடலில் ஒட்டிக்கொண்டது. ‘கிண்ணத்தில் தேன் வடித்து’ என்று ஒரு கிளுகிளு காதல் பாடல், இளையராஜா இசையில் கய்யாமை மீண்டும் நினைவுபடுத்தியது (‘இளமை ஊஞ்சாலாடுகிறது’).
‘ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்’ என்றும், ‘ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்’ என்றும், ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’ என்றும் உமர் கய்யாமுடனான ஒட்டுதலைக் கண்ணதாசனே சில பாடல்களில் அவ்வப்போது காட்டியிருக்கிறார்.
‘ரத்தத்திலக’த்தில் மட்டும்தான், உமர் கய்யாம் நேரடியாக குறிப்பிடப்பட்டு , ‘ஒரு கோப்பையிலே’ பாடலை முன்வைத்தார் கண்ணதாசன். ஆனால் அந்தப் பாடலில் கய்யாமை விட கண்ணதாசன் தான் அதிகம்! பின் இதோ ஒரு உமர் கய்யாம் பாடல் என்று ஏன் கூறப்பட்டது? கண்ணதாசனுக்கு தலை கனத்துவிட்டது. அதனால்தான் தன்னையேதான் புகழ்ந்துகொள்கிறார் என்ற கண்டனத்திலிருந்து தப்புவதற்காக, கய்யாம் பாடல் என்ற முன்மொழிதல் நடந்திருக்கிறது!
உமர் கய்யாமுக்கும் கண்ணதாசனுக்கும் மது,
மங்கையர் இன்பம் ஆகியவற்றில் ஒத்த கருத்து இருந்ததைப் போல் வேறொரு விஷயத்தில் மிகப்பெரிய வேற்றுமை இருந்தது.
கய்யாமுக்குக் கடவுள் விஷயத்தில் மிகப்பெரிய நம்பிக்கை வறட்சி
இருந்தது. கண்ணதாசனுக்கோ கடவுள் நம்பிக்கை அஸ்திவாரமாக இருந்தது. கடவுளை நம்பினால்
கவிஞர் ஆகலாம் என்று ஒரு சூத்திரத்தையே அவர் வகுத்திருந்தார்!
No comments:
Post a Comment