Saturday 21 September 2019

RAJINI DHIRANAKAMA , FEMALE ACTIVIST 1954 FEBRUARY 23 TO 1989 SEPTEMBER 21







RAJINI DHIRANAKAMA , FEMALE ACTIVIST 
1954 FEBRUARY 23 TO 1989 SEPTEMBER 21

ராஜினி திராணகம அல்லது ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) இலங்கையில் இருந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். 

வரலாறு

ராஜினி, வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணத்தின் தமிழ் கிறிஸ்தவக் குடும்பத்தில் பெப்ரவரி 23, 1954 இல் பிறந்தார். நிர்மலா, சுமதி, வாசுகி ஆகியோர் இவரின் சகோதரிகள் ஆவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்துக் கொண்ட ராஜினி, 1973 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் புலத்தில் இணைந்தார். அக்காலப்பகுதியில் மாணவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார். இதன் போது அரசியல் ஈடுபாட்டைக் கொண்ட மாணவர் தலைவரான தயாபால திராணகமவை சந்தித்தார். தயாபால திராணகம பின்னாளில் களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.

1977 இல் திராணகமவை ராஜினி மணந்து கொண்டார். அவர்களுக்கு நர்மதா (1978) ஷரிகா (1980) என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். 1986 முதல் தயாபால திராணகம தலைமறைவாக இருக்கிறார். பட்டப்படிப்பின் பின்னர், 1978இல் பயிற்சி மருத்துவராக யாழ்ப்பாண மருத்துவமனையில் இணைந்தார். பயிற்சியின் பின்னர், 1979இல் இலங்கையின் மத்திய மலை நாட்டின் அப்புதளைக்கு அருகில் உள்ள அல்துமுல்லை என்ற இடத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். 1980 இல் ராஜினி போர் நிறைந்த நிலமான யாழ்ப்பாணம் திரும்பி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவப் புலத்தில் உடற் கூறியல் விரிவுரையாளராக இணைந்தார். 1983 இல் பொதுநலவாய புலமைப் பரிசில் பெற்று உடற் கூறியலில் துறையில் பட்டப்பின் படிப்பை மேற்கொள்ள இங்கிலாந்து சென்றார். அங்கு சென்ற ராஜினி, 1982 இல் பயங்கரவாத தவிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான தனது சகோதரி நிர்மலாவின் விடுதலைக்காக குரல் கொடுத்தார். 1982 இல் விடுதலைப் புலிகளின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிய நிர்மலா இங்க்கிலாந்து வந்தார். இதன் பிறகு ராஜினி விடுதலைப் புலிகளோடு தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ராஜினி விடுதலைப் புலிகளின் இங்கிலாந்து கிளையில் இணைந்து மனித உரிமை அமைப்புகளுக்கு இலங்கையின் நடப்புகளை வெளிப்படுத்தி வந்தார்.[1]

1986 இல் பட்டப்பின் படிப்பை முடித்து தனது இரண்டு குழந்தைகளுடன் இலங்கை திரும்பிய ராஜினி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற் கூறியல் பிரிவுத் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் கணித விரிவுரையாளராக பணியாற்றிய ராஜன் ஹூலுடனும், சிறிதரன், தயா சோமசுந்தரம் என்பவர்களுடன் இணைந்து 1990 இல் வெளியிடப்பட்ட முறிந்த பனை (The Broken Palmyra) என்ற ஆங்கில நூலை எழுதினார்.[2] இவர்கள் நால்வரும் இணைந்து 1988 இல் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை தொடங்கினர்.[3]

கொலை
செப்டம்பர் 21, 1989 அன்று பணியில் இருந்து வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். முறிந்த பனை நூலின் ஏனைய ஆசிரியர்களும் ராஜினியின் சகோதரி நிர்மலாவும் இக்கொலையை விடுதலைப் புலிகளே செய்ததாக குற்றம் சாட்டியிருந்தனர்.[4][5][6]

.


இலங்கையில் உள்நாட்டுப் போர் சூடுபிடித்தபோது நடைபெற்ற அனைத்து தரப்பினரின் அட்டூழியங்களையும் மனித உரிமை ஆர்வலர்களும் கல்வியாளர்களுமான 4 பேர் ஆவணப்படுத்திக் கொண்டிருந்தனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டதால் மற்ற 3 பேர் நாட்டை விட்டு வெளியேறினர். போருக்குப் பிறகு நாடு திரும்பிய அந்த 3 பேரையும் யாழ்ப்பாணத்தில் ‘தி இந்து’ சார்பில் மீரா ஸ்ரீநிவாசன் சந்தித்துப் பேசி உள்ளார். அந்த உரையாடலில் இருந்து.

இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கி சுமார் 5 ஆண்டுகள் கழித்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்வியாளர்கள் பலர் இணைந்து 1988-ல் மனித உரிமை அமைப்பை (THE UNIVERSITY TEACHERS FOR HUMAN RIGHTS, JAFFNA) தொடங்கினர். குறிப்பாக பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பிரிவு தலைவராக பணியாற்றிய ராஜினி திரணகம, ராஜன் கூல், கோபாலசிங்கம் ஸ்ரீதரன் மற்றும் தயா சோமசுந்தரம் ஆகிய 4 பேரும் இந்த அமைப்பின் முகமாக விளங்கினர்.

வெளிநாட்டில் தத்துவப் படிப்பை (doctorate) முடித்த இந்த இளம் கல்வியாளர்கள், எந்த நாட்டு பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும் பேராசிரியர்களாக பணியாற்றி இருக்கலாம். ஆனால், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதற்காக 1980-களில் மீண்டும் இலங்கைக்கே திரும்பி உள்ளனர்.

கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிராக 1983-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த கலவரத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். சுமார் 1 லட்சம் பேர் புலம் பெயர்ந்தனர். இதையடுத்து, தமிழர்களுக்கு ஆதரவாக பல கிளர்ச்சி குழுக்கள் வளரத் தொடங்கின. ஆயுதம் ஏந்திய இக்குழுக்கள் தங்கள் இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்ததுடன் பயிற்சியும் வழங்கத் தொடங்கின.

ஒருபுறம் ராணுவத்துக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் சண்டை நடந்த நிலையில், தலைமை தாங்குவது தொடர்பாக கிளர்ச்சிக் குழுக்களுக்குள்ளேயே மோதல் வெடித்தது. இதனால் தமிழ் சமுதாயமே மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மனித உரிமை மீறல் சம்பவங்களை ஆவணப்படுத்துவது என இந்த 4 பேரும் முடிவு செய்தனர்.

ராணுவமோ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தமிழ் கிளர்ச்சி குழுக்களோ யாராக இருந்தாலும் அவர்கள் நிகழ்த்திய மனித உரிமை மீறல் சம்பவங்களை இவர்கள் ஆவணப்படுத்தினர். முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தகவல்களை திரட்டி, அதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்தினர்.

இவர்கள் யாருமே விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக செயல்படவில்லை. மாறாக, காயமடைந்த புலிகளுக்கு ராஜினி திரணகம மருத்துவ உதவி செய்தார். இலங்கை அரசு இரக்கமற்றதாக மாறியதால், இவர்களைப் போன்ற தமிழ் அறிவாளிகள் அவ்வாறு மாறவில்லை. தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஒரு அரசு போலவே நடத்தினர்.

கணிதவியலாளரான கோபாலசிங்கம் ஸ்ரீதரன், மாணவ பருவத்திலேயே இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தவர். அவர் கிளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தபோதும் ஆயுதம் ஏந்திய போராட்டத்திலிருந்து விலகி நின்றார். அவர் கூறும்போது, “என்ன நடக்கும் என்று நினைத்தேனோ அது நடக்கவில்லை. இது பொதுமக்களின் போராட்டம் என அனைவரும் கூறினர். ஆனால், உண்மையில் துப்பாக்கி ஏந்தியவர்கள் மட்டுமே போராட்டத்தை முடிவு செய்தனர். அவர்கள் (விடுதலைப்புலிகள்) பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்பதை விரும்பவில்லை” என்றார்.

மனநல நிபுணரான தயா சோமசுந்தரம் கூறும்போது, “உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டி இருந்தது. தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பொதுமக்கள் இங்கும் அங்கும் ஓடினர். போதிய உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை. சாலைகளில் மக்கள் செத்து மடிந்தார்கள். பலர் காயமடைந்தனர். இந்த நிலையில்தான் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது” என்றார்.

தவறான கணிப்பு

இலங்கை உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 1987-ல் அங்கு சென்ற இந்திய அமைதிப்படை, விடுதலைப்புலிகள் அமைப்பை தவறாக கணித்துவிட்டதாக இவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஸ்ரீதரன் கூறும்போது, “எதற்காக இங்கு வந்தீர்கள் என இந்திய அமைதிப்படையினரிடம் கேட்டேன். அப்போது அவர்கள் அளித்த பதிலில் தமிழர்களின் நலன் என்பது கடைசியாகத்தான் இருந்தது. அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் இங்கு வந்தார்கள் என்பதுதான் உண்மை. 24 மணி நேரத்தில் விடுதலைப்புலிகளை சரணடைய வைத்து விடலாம் என எண்ணினார்கள். அது நடக்கவில்லை. விடுதலைப்புலிகளைப் பற்றி அவர்கள் தவறாக கணித்துவிட்டார்கள். இந்திய ராணுவம் மட்டுமல்ல, ஏராளமான அறிவுஜீவிகளும் இந்த விவகாரத்தில் தோற்றுப் போனார்கள்” என்றார்.

பின்னடைவு

இதனிடையே, 1989-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி மாலை பல்கலைக்கழகத்திலிருந்து வீடு திரும்பியபோது, ராஜினி திரணகம தனது வீட்டுக்கு வெளியே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து கொலை மிரட்டல் காரணமாக, மற்ற 3 பேரும் நாட்டை விட்டு வெளியேறினர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்தபடி, இலங்கைப் போர் பற்றி தொடர்ந்து பல அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர்.

இதனிடையே ராஜினி திரணகம படுகொலை மனித உரிமை அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ராஜினி திரணகம படுகொலை குறித்து உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்றாலும், இதற்குக் காரணம் விடுதலைப்புலிகள்தான் என அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் சந்தேகித்தனர்.

இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலையில் கணிதம் படித்தவரான ராஜன் கூல் கூறும்போது, “ராஜினி திரணகம படுகொலைக்குப் பிறகு எங்கள் அமைப்புக்கு உதவியவர்களை விடுதலைப்புலிகள் அமைப்பினர் துன்புறுத்தினர். குறிப்பாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களான மனோகரன் மற்றும் செல்வி ஆகியோர் 1991-ல் கொல்லப்பட்டனர். எங்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு வைத்திருந்த மேலும் பலர் கொல்லப்பட்டனர். இதனால், விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்து சொன்னால் நமக்கும் இந்த நிலைதான் ஏற்படும் என்று தமிழர்கள் அச்சமடைந்தனர்” என்றார்.

இறுதியில் இந்த மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்பார்த்தது போலவே, 2009-ல் போர் முடிவுக்கு வந்தது. இதில் விடுதலைப்புலிகள் ராணுவத்தால் வீழ்த்தப்பட்டனர். இறுதிக்கட்ட போரில் சுமார் 1 லட்சம் தமிழர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். அவர்களைப் பற்றிய தகவலை அரசிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் உறவினர்கள்.

இதுகுறித்து ஸ்ரீதரன் கூறும்போது, “1980கள் மற்றும் 1990களில் நாங்கள் வெளியிட்ட பகுப்பாய்வுகள் இறுதியில் நிஜமானதை கண்கூடாக பார்க்க முடிந்தது. ஆனால், பேரழிவையும் மனித உயிரிழப்பையும் எங்களால் தடுக்க முடியாமல் போய்விட்டது. எங்களைப் போன்ற ஒரு சில நபர்களால் இதற்கு மேல் என்ன செய்திருக்க முடியும். எனினும் குற்றம் செய்ததாகவே நான் உணர்கிறேன். அந்தக் காலத்தில் நாடு திரும்பி என்னால் முடிந்ததைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமாகவில்லை. இதில் நான் தோற்றுவிட்டேன்” என்றார்.

நிலைமை மாறவில்லை

கொலை மிரட்டல் காரணமாக சிறிது காலம் இந்தியாவில் வசித்த ராஜன் கூலும் ஆஸ்திரேலியாவில் வசித்த சோமசுந்தரமும் போர் முடிந்த பிறகு நாடு திரும்பி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றனர். ஸ்ரீதரனும் நாடு திரும்பி உள்ளார். இலங்கையில் போர் முடிந்த பிறகும் நிலைமை மாறவில்லை என இவர்கள் தெரிவித்துள்ளனர்.

-‘தி இந்து’ (08.10.2017)

இலங்கையில் இருந்து வெளிவந்த அமுது சஞ்சிகையில் வெளியாகிய கட்டுரை கீழே)
என் சத்தியப்பதிவு 21 - 09 - 2005

எங்கள் மெடம் ராஜனி ஒரு கலங்கரை விளக்கு!

1989 ம் ஆண்டு செப்டெம்பர் 21ம் திகதி, எங்கள் அன்புக்குரிய மெடம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் தன் கடமையை முடித்து விட்டு வீட்டிற்கு போகும்போது வீதியில் வைத்து கோழைத்தனமாகசுட்டுக் கொல்லப்பட்டார். அவரையும் அவரது நேர்மையையும் நேருக்கு நேராக முகம் கொடுக்க முடியாத 'தமிழீழ விடுதலைக் கோழைகள் முதுகுப் புறமாக வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். இந்தக்கோழைத்தனமான கொலையைக் கண்டித்து மருத்துவபீட மாணவர்களும் ஏனைய பல மாணவர்களும் எமது கைகளால் சுவரொட்டிகளை எழுதி யாழ்ப்பணம் எங்கும் ஒட்டினோம்.


அப்போது எமது விடுதலைப்போராட்டத்தைப் பற்றி எனக்குள் எழுந்த உணர்வை நான் பின்வருமாறு ஆங்கிலத்தல் எழுதினேன். இதுவும் ஒரு சுவரொட்டியாக அப்போது ஒட்டப்பட்டது
Free Doom
& Free Dump
ist our Freedom...?

இன்றோடு எங்கள் மெடம் கொல்லப்பட்டு 16 வருடங்கள் ஓடிவிட்டன. அவர் கொல்லப்பட்டு 15 வருடங்களின் பின்னராவது அவரைப்பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப் பட்டிருப்பது மிகவும் நன்றிக்குரிய விடயம்தான். ஆனால் இன்னும் அவரைக் கொன்றவர்களைப் பற்றிய பல உண்மைகள் சரியாக வெளிவரவில்லை என்பதுதான் மிகக் கவலையான விடயமாகும். இதற்கு முக்கிய காரணம் எம்மிடமிருந்த தத்தமது உயிர் பற்றிய பயம் பிரதானமானதாகும். அதேவேளை நாம் உண்மைகளைச் சொன்னால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் எமது சமூகம் இருக்கிறதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. இன்றல்ல 1989இல் மெடம் கொல்லப்பட்ட போதும்கூட அவரை யார் கொன்றார்கள் என்ற உண்மையை எமது சமூகம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை என்பதை நான் கண்டேன்.

அப்போதும்கூட பலருக்கு அந்த உண்மை தெரிந்திருந்தும் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளுவதற்கு துணிச்சல் இருக்கவில்லை. ஆனால் அந்த உண்மையை தமக்குள் மனதளவில் ஏற்றுக் கொண்டவர்களும் பலர் இருந்தார்கள் என்பதும் மறுபக்க உண்மைதான். அவ்வாறு உண்மை தெரிந்து உள்ளுக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். அன்று ஏனைய பலரைப் போன்று எனது உயிர், எனது எதிர்காலம் என்று நானும் இந்த உண்மைகளை எனக்குள் போட்டு அமுக்கிக் கொண்டேன். தற்போது நான் என் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடொன்றில் ஒரு வைத்தியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் நாட்டில் பல ஒடுக்கு முறைகளுக்கு மத்தியில் வாழும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களோடு ஒப்பிடுகையில் எனது எதிர்காலத்திற்கும் உயிருக்கும் இவ்வெளிநாட்டில் அதிக உத்தரவாதம் இருக்கிறது. அந்த வகையில் மெடத்தின் கொலை தொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை இன்றாவது வெளியிடடுவது எனது கடமை என்று நினைக்கிறேன்.
எமது அன்புக்குரிய மெடம் கலாநிதி ராஜினி திரணகம அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது நான் அங்கு மருத்துவபீட மாணவனாக இருந்தேன். அவர் எங்களுக்கு வெறும் உடற்கூற்றியல் விரிவுரையாளராக மட்டும் இருக்கவில்லை. அவரின் வகுப்புகள் எப்போதும் மிக உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். தனது அன்றாட விரிவுரைகளுக்கு அப்பால் எமது சமூகப் பிரைச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் திசையிலும் எம்மை மிகத்திறமையாக அவர் எடுத்து செல்வார். அப்போது அவரின் பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாம் கண்டோம். எமக்கு அவற்றை புரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்கள், நாவல்கள் அவர் படித்து ரசித்த கவிதைகள் பலரின் உலக அனுபவங்கள் என சகலவற்றையும் எந்தவித தடங்கலும் இன்றி மள மளவென எம்முன் எடுத்துச் சொல்வார். அன்றைய கால கட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நடந்தவைகள் இப்போதும் ஓர் திரைப்படத்தைப்போல் என் மனதிற்குள் ஓடுகின்றன.

இந்திய இராணுவத்தினரதும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்களினதும் கெடுபிடிகள் மிக அதிகமாக இருந்ததால் விடுதலைப் புலிகள் இயக்கம் யாழ்ப்பாண பல்கலைகழகத்தையும் தமது மறைவிடங்களில் ஒன்றாக பாவித்தார்கள். புலிகள் இயக்கத்தின் நபர்கள் மட்டுமன்றி அவர்களின் ஆயுதங்கள் கூட பல்கலைக்கழகத்திற்குள் சில ஊழியர்களினதும் மாணவர்களினதும் உதவியோடு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த உண்மை பல்கலைக்கழகத்தில் உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை பலருக்கும் தெரிந்திருந்தது. இதற்கு எமது மருத்துவ பீடமும் விதிவிலக்காக இருக்கவில்லை. இதனால் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்களிடையேயும் விரிவுரையாளர்களிடையேயும் புலிகளைப்பற்றி பேசுவது மிக மிக அச்சம் நிறைந்ததாக காணப்பட்டது. இந்த அச்சத்தின் காரணமாக அன்று புலிகள் இயக்கம்தான் சில மருத்துவபீட மாணவர்களின் உதவியுடன் மெடம் ராஜினி அவர்களை சுட்டுக் கொன்றது என்ற உண்மையைப்பற்றி எவரும் வெளிப்படையாக பேசத் துணியவில்லை. அதுமட்டுமன்றி அக்கொலையைச் செய்தது இந்திய இராணுவம் அல்லது அவர்களோடு நிற்கும் ஏனைய ஆயுதக் குழுக்களில் ஒன்று என்ற பொய்யான கருத்தையே பலரும் பரப்ப முயற்சித்தனர்.

மெடம் அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மருத்துவ பீட மாணவர்களின் உதவியுடன் எமது வளாகத்திற்குள் நுழைந்து அவரை வேவு பார்த்தார்கள். மெடத்தோடு நெருங்கிப் பழகிய மாணவர்கள் பலருக்கு இவ்விடயம் தெரிந்திருந்தும் அதை எவ்வாறு வெளியிடுவது என்ற அச்சம் அவர்களிடம் காணப்பட்டது. அதே நேரம் இக்கொலையாளிகளை உள்ளே கூட்டிவந்த சில மாணவர்களும் கூட மெடத்தோடு மிக நெருக்கமாக பழகிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முக்கியமான இருவரை நான் இங்கு பெயர் குறிப்பிட விரும்புகிறேன்.
அவர்களில் ஒருவர் வடமராட்சியை சேர்ந்த சூரி எனப்படும் சூரியகுமாரன் மற்றவர் முல்லைத்தீவைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர்களாவர். புலிகள் இயக்கத்தின் உளவாளிகளும் கொலைகாரர்களும் சூரியோடும் தர்மேந்திராவோடும் மருத்துவபீட வளாகத்திற்குள் நின்று கதைத்து பேசுவதும் வளாக சிற்றுண்டிச் சாலையில் தேனீர் அருந்துவதும் அப்போது மிக வெளிப்படையான நிகழ்ச்சிகளாக இருந்தன. புலிகளின் சாவகச்சேரி பொறுப்பாளர் கேடில்சின் சகோதரரான காண்டீபன் என்னும் பிரபல கொலையாளியும்கூட தர்மேந்திராவோடு தேனீர் அருந்துவதை நான் பலமுறை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

1989 செப்டெம்பர் 21ம் திகதியன்று, 2வது எம்.பீ.பீ.எஸ் பரீட்சையின் இறுதி அங்கம் முடிவடைந்து மெடம் வெளியே வரும்வரை காத்திருந்த புலிகளின் உளவாளிகளில் ஒருவன் வீதியிலே தயாராக நின்றிருந்த கொலையாளிக்கு இரகசியமாக சிக்னல் கொடுத்தான். அதைச் செய்தவன் வேறு யாருமல்ல. அங்கு பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வக்குமார் என்பவனே. மெடம் தனது சைக்கிளில் வளாக பிரதான வாசலால் வீதிக்கு இறங்கியதும் அவரை சைக்கிளில் பின் தொடர்ந்த கொலையாளி அவரது தலையின் வலப்பக்கத்தில் முதல் வேட்டைத் தீர்த்தான். பின்னர் அவர் கீழே விழுந்ததும் இன்னும் இரண்டு தடைவைகள் அவர் தலையில் சுட்டுவிட்டுச் சென்றான்.

இந்த கொலையாளி யார் என்பதையும் நான் இங்கு சொல்லவேண்டும். புலிகளின் உளவுப்பிரிவில் பணியாற்றியவரும் கொலையாளியுமான பொஸ்கோ என்பவனே அவன். பொஸ்கோவை சாதாரண மக்களில் பலருக்கு தெரியாது. ஆனால் மெடம் கொல்லப்படுவதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பொஸ்கோவினதும் இன்னும் பல சந்தேகமான நபர்களினதும் நடமாட்டம் மருத்துவ பீடத்திற்குள் அதிகரித்திருந்தது. பொஸ்கோவிற்கு வயது 30 - 35 இடையில் இருக்கும். எப்போதும் மற்றவர்களை சந்தேகத்தோடு குரோதத்தோடும் பார்க்கும் அவனது விறைப்பான முகமே அவனைக் காட்டிக் கொடுத்து விடும். இந்த பொஸ்கோ சூரியோடும், தர்மேந்திராவோடும் அமர்ந்து வளாக சிற்றுண்டி சாலையில் தேனீர் அருந்துவதை நானும் பல மாணவர்களும் கண்டிருந்தோம். முதலில் எனக்கும் இவன் யார் என்று தெரியாது. எம்மோடு படித்த ஒரு மாணவனே எங்களுக்கு பொஸ்கோ யார் என்ற உண்மையைச் சொன்னான்.

மருத்துவ பீடத்திற்குள் இவனின் நடமாட்டம் பல தடவைகள் இருந்ததை நானும் சக மாணவர்களும் கண்டிருந்தோம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இக்கொலை நடக்கும்போது அச்சம்பவத்தை நேரில் பாக்த்த ஓர் மாணவன் இன்னும் உயிருடன் இருக்கிறான். அந்த மாணவனும் நானும் ஒன்றாக திரியும்போதும்கூட பல தடவை பொஸ்கோவை நாம் கண்டிருக்கிறோம். அன்று அந்த மாணவனும் நாங்களும் இணைந்து, 'புலிகள் இயக்கமும், அதன் கொலையாளி பொஸ்கோவும், அவனுக்காக உளவு வேலை செய்த சூரிய குமாரனும் தர்மேந்திராவும்தான் மெடத்தின் கொலைக்கு பொறுப்பு' என்று கூறியிருந்தால் நாங்கள் ஒருவரும் இன்று உயிருடன் இருக்கமாட்டோம். எனவே என் சக மாணவன் கண்ணால் கண்ட அந்தக் கொலையை யாரிடமும் வெளியே சொல்லாதே என எச்சரித்தவர்களில் நானும் ஒருவன். மெடம் கொல்லப்பட்ட மறுதினம் அவரின் உடல் மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்டபொழுது யாழ். பல்கலைக்கழகத்தின் பல மூத்த விரிவுரையாளர்கள் அங்கு சமூகமளிக்கவில்லை. ஏன்..? காரணம் அவர்களுக்கும் இக்கொலையை செய்தவர்கள் யார் என்று நன்றாக தெரியும்.

சூரி, தர்மேந்திரா ஆகிய இருவரோடும் நெருங்கி பழகியவர்களும், புலிகளின் கொலைகார அரசியலுக்கு ஆதரவாக இருந்த பல மருத்துவபீட மாணவர்களுக்கும் இந்த உண்மை நன்கு தெரியும். மெடம் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி மருத்துவ பீடத்திற்குள் பரவியதுமே சூரி, தர்மேந்திரா உட்பட அவர்களின் நண்பர்களின் முகங்களை நான் பார்த்தேன். அவர்களின் முகங்களே உண்மையை தெளிவாக வெளிப்படுத்தின. அவர்களைக் காட்டிக் கொடுத்தன. எனது கண்களைக்கூட அவர்களால் நேரடியாக பார்க்க முடியவில்லை. தங்களுக்கு கல்வியை போதித்து வழிகாட்டி, எதிர்கால மாணவ சமூகத்திற்கு கலங்கரை விளக்காக நின்ற அந்த ஒப்பற்ற மேதையை சுட்டுக் கொன்றுவிட்டு அவர்கள் இன்று வெளிநாடுகளில் சுகம் அனுபவிக்கிறார்கள். சூரியகுமாரன் இன்று இங்கிலாந்தில் வைத்தியசாலை ஒன்றில் வேலை செய்கிறான். அன்று அந்த தாயின் இரு குழந்தைகளை அநாதையாக்கிய இக்கொலைத்திட்டத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவனாகிய இவன், இன்று தான் உயிர்களைக் காப்பாற்றும் வைத்தியனாக வேஷம் போடுகிறான். இவர்கள் நாளைய சமூகத்தில் பெரிய மனிதர்களாக உலவ நாம் அனுமதிக்கலாமா? இந்த நாகரீக உலகத்தின் முன்னால் இவர்களை நிறுத்தி அம்பலப்படுத்த வேண்டாமா. நிட்சயம் அதை நாம் செய்ய வேண்டும்.

எனது அன்புக்குரிய சக மாணவர்களே நாம் நீண்டகாலம் மௌனமாக இருந்துவிட்டோம் எமது கண் முன்னால் நடத்தி முடிக்கப்பட்ட இந்த அநியாயத்தை மூடி மறைக்க புலிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் இன்னமும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நடந்த உண்மை வரலாற்றில் புதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நான் இங்கு இதைப் பதிவு செய்கிறேன் இது தொடர்பாக நீங்களும் உங்களின் மனட்சாட்சியின் அடிப்படையில் உண்மையை சமூகத்தின் முன் வைக்க கோரிக்கை விடுக்கிறேன்.

1989ம் ஆண்டில் யாழ். மருத்துவபீட மாணவன்



No comments:

Post a Comment