Tuesday 10 September 2019

The Battle of Pollilur (Pullalur) இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் – 1780,september 10





புள்ளலூர்: 
இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் – 1780

புள்ளலூர் போர் (The Battle of Pollilur (Pullalur) புள்ளலூரில் 1780 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 தேதியன்று நடைபெற்றது. இஃது இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இந்தப் புள்ளலூர்ப் போரில் கர்னல் பெய்லியின் படைக்கு திப்பு சுல்தானின்  படையால் பெருத்த சேதம் ஏற்பட்டது. இப்போரில் ஏராளமான படைவீரர்கள் கொல்லப்பட்டனர். மேஜர் ஜெனரல் சர் ஹெக்டர் மன்றோவின் படையும் கர்னல் பெய்லியின் படையும் அருகருகே இருந்தாலும் இந்த இரண்டு படைகளும் இணைவதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து கர்னல்.பெய்லி,  மேஜர் ஜெனரல் மன்றோவிற்கு. அனுப்பிய குறிப்பில் தன் படை, தலைமைப் படையுடன் இணைவதற்காக, முன்னேறிச் செல்லவிடாமல்  எதிரிப்படை வழிமறிப்பதாக அறிவித்தார்.

ஆங்கிலப் படையின் மோசமான வியூகம் மற்றும் அணிவகுத்து நடத்துங்கலை (poor strategy and logistics) காரணமாக மூன்று நாட்கள் கழித்து மேஜர் ஜெனரல் மன்றோ, 73 ஆம் ஹைலாண்டர்கள் (73rd Highlanders) படை, கேப்டன் டேவிட் பேய்ர்ட் (Captain David Baird) மேன்மைதாங்கிய ஜான் லிண்ட்சே (Honorable John Lindsay) ஆகியோர்  தலைமையிலும்,   ஐரோப்பிய எறிகுண்டு வீரர்களின் இரண்டு கம்பெனிகள் (2 companies of European grenadiers), சிப்பாய்களின் 11 கம்பெனிகள் (11 companies of sepoys) ஆகிய படைகளை கர்னல்.ஃபிளெட்சர் (Col Fletcher) தலைமையில், அனுப்பிவைத்தார்.
மேஜர் ஜெனரல் மன்றோ அனுப்பிய இந்த வலுவூட்டும் படைபிரிவுகள் (reinforcement troops) கர்னல் பெய்லியின் படைப்பிரிவை பலப்படுத்துவதற்காகச்  சுற்றுப்பாதை வழியாகத் தாமதமாக வந்து சேர்ந்தன.  ஒன்றிணைந்த படை, மேஜர் ஜெனரல் மன்றோவின் படையுடன் இணைவதற்காக, 1780 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09 ஆம் தேதியன்று முன்னேறியது. ஒரு மைல் கூட முன்னேற முடியாத நிலையில் ஹைதர் அலியின் படை ஒன்று ஒருங்கிணைந்த படையை வழிமறித்தது.


திப்பு சுல்தான் PC: Wikipedia

rocket_warfare
The Battle of Pollilur, where the forces of Hyder Ali effectively used Mysorean rockets and rocket artillery against closely massed British forces. PC: Wikipedia

மைசூர் படையின் இராக்கெட் படைப்பிரிவு திப்புவின் “மைசூர் இராக்கெட்டை” ‘Mysore rockets’ (sword and blade thrust rockets) கர்னல். வில்லியம் பெய்லியின் (Colonel William Baillie) படைக்கும் வெடிமருந்து பண்டகசாலைகளுக்கும் (ammunition stores) எதிராகப் பயன்படுத்தியது. திப்புவின் இராக்கெட்டின் தாக்குதல்களால் வெடிமருந்து பண்டகசாலை வெடித்துச்  சிதறியது.


திப்புவின் இராக்கெட்

வாள் போன்ற துடுப்பு நிலைப்படுத்தியுடன்  (like fin stabilizer) இணைக்கப்பட்ட மைசூர் இராக்கெட்டுகள் சீர்வேகத்தில் பறத்தல் பாதை வழியாக பல மீட்டர்கள் (cruised several meters through the the flight path) எதிரியின் இலக்கைச் சென்று தாக்கியது.  இந்த மைசூர் இராக்கெட்டில், 8 அங்குலம் (20 செ.மீ.) நீளம் x 1.5 – 3 அங்குலம் (3.8 – 7.6 செ.மீ.) விட்டம் ஆகிய அளவுகளில் சுத்தியால் அடித்து சீராக்கப்பட்ட இரும்பு குழாய் (ஒரு பக்கம் மூடப்பட்டது), ஒன்று பயன்படுத்தப்பட்டது. இந்த இரும்புக் குழலுடன் நாலு அடி (ஒரு மீட்டர்) அளவுள்ள மூங்கில் குச்சி (அம்பு) ஒன்று இணைக்கப்பட்டது. இந்த இரும்புக் குழாயில் வெடிமருந்து (black powder) பயன்படுத்தப்பட்டது. இந்த வெடி மருந்து திட உந்துபொருளாக (solid propellant) பயன்பட்டு இராக்கெட்டுக்குத் தேவையான எரி சக்தியையும் (adequate combustion power) எறியியலையும்   (ballistics) அளிக்கிறது. இதன் மூலம் இராக்கெட் சீர்வேகத்தில் (cruise) சென்று இலக்காகிய இறுதி முனையைத்  (terminal end or target) தாக்க இயலும். இரும்புக் குழல் மற்றும் திட உந்துபொருள் ஆகிய இரண்டும் இராக்கெட்டுக்குத் தேவையான அதிக உந்து சக்தி (higher thrust) மற்றும் நீளமான வீச்சு எல்லை (long range) போன்றவற்றை அளிக்கின்றன. இந்த வீச்சு எல்லை இரண்டு கி.மீ. வரை கூட இருந்தது. இந்த மைசூர் இராக்கெட் இந்தியாவில் திப்பு சுல்தானின் சொந்த தொழில்நுட்பத்தில் உருவானதுதான் என்று டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் காலாம் தக்க சான்றுகளுடன் நிரூபித்தார். இந்த மைசூர் இராக்கெட்டே, பிரிட்டிஷ் இராக்கெட் வளர்ச்சித் திட்டத்தின் (British rocket development project) கான்கிரீவ் இராக்கெட்டிற்கு  (Congreve rocket), அடிப்படை மாதிரியாக (base model) அமைந்தது. இலண்டன் அருகில் ஊல்ரிச் எனும் ஊரில் உள்ள ரோதுண்டா அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய இராக்கெட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கர்னல். பெய்லி தொந்தரவு எதுவுமின்றி அதே இடத்தில் தங்கி முழு இரவையும் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார். மறுநாள் கர்னல்.பெய்லி மேலும் இரண்டு மைல் தூரம் முன்னேறி ஒரு காட்டிற்குள் புகுந்தார். ஹைதர் அலியின் மூன்று படைப் பிரிவுகள் (army of 3 batteries) திரண்டு அந்தக் காட்டிற்குள் கர்னல்.பெய்லிக்காகக் காத்திருந்தனர். ஒரு படை மையமாகவும் மற்ற இரண்டு படைகள் இரு பக்கங்களிலும் அணிவகுத்து நின்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் கள பீரங்கிப் படையின் (field artillery) 57 பீரங்கிகள் ஆங்கிலப் படைகளை நோக்கி குண்டு மழை (covering fire) பொழிந்தன. கர்னல்.பெய்லியின் ஆங்கிலப் படை சதுர வடிவில் அணிவகுத்து வந்தது. அணிவகுப்பின் நடுவே நோயுற்றோர், மூட்டை முடிச்சுகள் (kit baggages), போர்த்தளவாடங்கள் (ammunition) போன்றவை இடம்பெற்றன. இந்த மையப் பகுதி பீரங்கிப் படையால் குறிவைத்துத் தாக்கப்பட்டது. மூன்று மணிநேர கடும் சண்டைக்குப் பிறகு, வீரம் மிக்க ஆங்கிலப் படை  பின்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. ஹைதர் அலியின் படையும் பின்வாங்கியது.

மைசூர் படையின் உதவிக்காக வந்த ஃபிரெஞ்ச் படைக்குத் தலைமை தாங்கிய கர்னல். லாலி  (Col. Lally), அவருடைய படை வீரர்களை வெளியில் இழுத்து, குதிரைப்படையைக் கொண்டு, பின்வாங்கிக்கொண்டிருந்த ஆங்கிலப் படையை மறிக்குமாறு பணிக்கப்பட்டார். இதற்கிடையே இரண்டுமுறை பலத்த அதிர்வெடிச் சத்தம் கேட்டது. இந்த அதிர்வெடிகள் ஆங்கிலப் படையின் முன்னே வெடித்து அவர்களின் பீரங்கிகளைத் தகர்த்தன. இதன் காரணமாக ஆங்கிலப்படை மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாகியது.

இதனால் உற்சாகமடைந்த ஹைதர் அலி அவருடைய குதிரைப்படை, துப்பாக்கி ஏந்திய காலாட்படை ஆகிய எல்லாவற்றையும் தாக்குதலில் ஈடுபடுத்தினார். பெய்லியின் படையும் திரும்பித் தாக்கினர். பெய்லியின் படையின் வீரர்கள் 400 என்று எண்ணிக்கையில் சுருங்கினர். மீண்டும் மீண்டும் துப்பாக்கியால் பல சுற்றுகள் சுட்டதால் பெய்லியின் வீரர்கள் செயலிழந்தனர். ஆங்கிலேயர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் குறைந்தது.

இன்னும் சில ஆங்கில அதிகாரிகளும்  துப்பாக்கி ஏந்திய வீரர்களும் 13 சுற்றுகள் சுட்டனர். மின்னல் வேகத்தில் ஹைதர் அலியின் குதிரைப்படையும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது. எஞ்சியுள்ள சில வீரர்களையாவது காப்பற்றும் நோக்கில் கர்னல் பெய்லி சமரசக் கொடியை அசைத்தார். இவ்வாறு கர்னல் வில்லியம் பெய்லி மைசூர் சுல்தானகப் படையிடம் சரணடைய நேரிட்டது. இந்தச் செய்தி அறிந்த மேஜர் ஜெனரல் சர்  ஹெக்டர் மன்றோ தன் பீரங்கிகள் மற்றும் மூட்டை முடிச்சுகளை (Baggage) காஞ்சிபுரம் அருகேயுள்ள ஒரு குளத்தில் (Tank) போட்டுவிட்டு தன் படையுடன் மதராசை நோக்கிப் பின் வாங்கினார்.

கர்னல் பெய்லி மற்றும் சில தப்பிப் பிழைத்த ஆங்கிலேய அதிகாரிளையும் சிப்பாய்களையும் மைசூர் படை சிறைப்பிடித்துப் போர் அகதிகளாக ஸ்ரீரங்கப்பட்டணம் கொண்டு சென்றது. இந்தப் போர் அகதிகள் ஒரு நிலவறையில் (dungeon) அடைக்கப்பட்டுக் கொடுமைப் படுத்தப்பட்டனர். ஸ்ரீரங்கப்பட்டணம் நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில், அரங்கநாத சுவாமி கோவிலின் வடபுறம் லால் மகால் அரண்மனைக்கு அருகில்  அமைந்துள்ள இந்த நிலவறையை இன்றும் காணலாம். செங்கல் மற்றும் சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்ட இந்த நிலவறை 30.5 மீ. நீளம் x 12.2 மீ. அகலமும் கொண்டது. திப்பு சுல்தான் இந்த நிலவறையில் போர்க்கைதிகளைச் சிறைப்படுத்தினார். நிலவறையின் வடபுறத்தில் கிழக்கு மேற்காக அமைக்கப்பட்ட கல் பலகையில் போர்க் கைதிகள் சங்கிலியால் பூட்டப்பட்டிருந்தனர். இந்த நிலவறையின் பாதி உயரத்திற்குத் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது. இந்த நிலவறைக்கு கர்னல் பெய்லியின் டன்ஜன் (Colonel Baillie’s Dungeon) என்று பெயர். ஏனெனில் இந்த வீரமிக்க அதிகாரி இந்த நிலவறையிலேயே 1782 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி மரணமடைந்தார்.

No comments:

Post a Comment