Friday, 27 September 2019

ADULTRY IS NOT A CRIME - SUPREME COURT SEPTEMBER 27,2018








திருமணமான ஆண் - பெண் இடையே கள்ள உறவு கிரிமினல் குற்றம் இல்லை : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

* கள்ள உறவு விவாகரத்துக்கு வழிவகுக்கும். ஆனால், அது ஒரு குற்றமாகாது.

* கள்ள உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரை அது குற்றம் கிடையாது.

* பெண்களை சமமின்றி நடத்துவது அரசியலமைப்பு சட்டத்தின் கோபத்தை வரவேற்பது போன்றது.

* பெண்களுக்கு கணவர்கள் எஜமானர்கள் அல்ல.

 அரசியலமைப்பின் அழகு என்பதே நான், நீங்கள் என அனைவரையும் உள்ளடக்கியது தான்.

 மகிழ்ச்சியற்ற திருமணத்தின் விளைவாகதான் தகாத உறவு ஏற்படுகிறது.

ஒரே பெண் நீதிபதி:

கள்ள உறவு வழக்கில் நேற்று தீர்ப்பளித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்ற ஒரே பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா. இவர், ‘சட்டப்பிரிவு 497 அரசியலமைப்புக்கு விரோதமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிருந்தா காரத் வரவேற்பு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா கரத் கூறுகையில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்கள் ஆண்களின் சொத்தாக கருதும் சட்டத்தை உடைத்தது வரவேற்கத்தக்கது” என்றார்.



புதுடெல்லி,: ‘திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான கள்ள  உறவு கிரிமினல் குற்றமல்ல’ என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், கள்ள உறவை குற்றமாக கருதும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 497, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் அதிரடியாக ரத்து செய்துள்ளது.  திருமணமான ஆண், பெண் இடையேயான கள்ள உறவில், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497ன் கீழ் தவறு செய்யும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கப்படுகிறது. பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்படுவது இல்லை. இந்த முரண்பாட்டை எதிர்த்து,  ஜோசப் ஷைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘இந்திய  தண்டனை சட்டப்பிரிவு 497ல், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான கள்ள உறவு விரிவாக விவரிக்கப்படவில்லை. ஆண்களை மட்டும் தண்டிப்பதற்கான விளக்கங்கள் மட்டுமே இதில் இடம் பெற்றுள்ளன. பெண்களுக்கான தண்டனை விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. இது முரண்பாடாக உள்ளது. எனவே, இந்த சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

 இந்த வழக்கில், ‘497வது சட்டப்பிரிவில் திருத்தம் செய்தாலோ அல்லது அதை ரத்து செய்தாலோ கணவன் - மனைவி என்ற திருமண உறவையே அது சிதறடித்து விடும். இந்த சட்டமானது 157 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கிறது. அதனால், திருமண உறவு பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த சட்டப்பிரிவை பொருத்தவரை தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும்’ என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ‘திருமணமான ஆணோ, பெண்ணோ முறை தவறி கள்ள உறவு வைத்துக் கொள்வது,  இருவரின் அனுமதியோடு நடக்கிறது. இதை பாலியல் வன்கொடுமை என சட்டப்பிரிவு 497ல் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், திருமண உறவை காக்க வேண்டிய பொறுப்பு இருவருக்கும் உள்ளது. மேலும், வயது வந்த இருவர் உறவு கொள்ளும்போது அதை எப்படி தண்டனைக்குரிய குற்றமாக கருத முடியும்?’ என, வழக்கின்போது நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். கடந்த மாதம் 8ம் தேதி இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள்  ஒத்திவைத்தனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட் மற்றும் இந்து மல்கோத்ரா அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று ஒருமித்த தீர்ப்பு அளித்தது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது: இந்திய தண்டனைச் சட்டத்தின் 497வது பிரிவும், திருமண பந்தத்துக்கு எதிரான குற்றத்துக்கு தண்டனை அளிக்கும் சட்டப்பிரிவு 198ம், அரசியல் சாசனத்துக்கு எதிரானவை. எனவே, இந்த சட்டங்களை ரத்து செய்து உத்தரவிடுகிறோம். மேலும்,
சட்டப்பிரிவு 497வது பிரிவு தன்னிச்சையானது. குழப்பமானது மட்டுமின்றி, அரசியல் சட்டத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சம உரிமை மற்றும் சமவாய்ப்பு உரிமைகளை மீறியதாக உள்ளது. பெண்ணுக்கு அவருடைய கணவர் எஜமானர் அல்ல. பெண்களை இழிவுப்படுத்துவது, சம உரிமையின்றி நடத்துவது, பாகுபாட்டுடன் நடத்துவது போன்று பெண்களின் சம உரிமையை மீறும் எந்த நடைமுறையாக இருந்தாலும், அது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. கள்ள உறவு என்பது கிரிமினல் குற்றமல்ல. இருப்பினும் அப்படிப்பட்ட உறவு திருமண வாழ்க்கையை பாதிக்கிறது.. இதில், கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமானது அல்ல, இருவருக்கும் உரித்தானது. கள்ள உறவில் ஆண்கள் மட்டுமே தண்டனையை பெறுவது என்பதும் சம உரிமை அடிப்படையை பாதிக்கிறது.
 மேலும், பாலியல் உறவில் தனக்கு விருப்பமானவர்களை தேர்வு செய்வது என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. மேலும், ஆணாதிக்க மனநிலையாலும், ஆணுக்கு பெண் அடிமை என்ற நினைப்பினாலும் கூட கள்ள உறவு நிலை ஏற்படுகிறது.

இந்த சமூகம் விரும்பும்படி இருக்க வேண்டும் என்றோ அல்லது ஒர் ஆண் நினைப்பதுபோல் பெண்ணும் நினைக்க வேண்டும் என்றோ பெண்களை கட்டாயப்படுத்த முடியாது. இது, பெண்களின் அடையாளத்தை சிதைப்பதற்கு சமமானது. எனவே, பெண்ணுக்கு கணவன் எஜமானர் அல்ல என்பதை கூறுவதற்கான நேரம் வந்து விட்டது. ஆண்- பெண் இருவருக்கும் உள்ள ஒரே அளவுகோல் தான் உள்ளது. அது, ‘அனைவரும் சமம்’ என்பதுதான். பெண்ணின் மீது கணவன் தனது ஆதிக்கத்தை காட்ட முடியாது.கள்ள உறவு என்பது விவாகரத்துக்கான ஒரு அடிப்படையாக இருக்கலாம். ஆனால், இந்த உறவு குற்றமாகாது. அதே நேரம், கள்ள உறவால் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவர் மிகவும் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டால், அது தற்கொலைக்கு தூண்டி குற்றமாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கலாம். ேமலும், திருமண உறவை சீர்குலைக்கும் சிவில் தவறாகவும் கள்ள உறவை கருதலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் கூறியது என்ன?

கள்ள உறவு வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், அவர் உட்பட 5 நீதிபதிகள் இடம் பெற்றனர். தீர்ப்பில் அவர்கள் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: திருமண பந்தம் முறிவு உள்ளிட்ட சிவில் பிரச்னைகள் மற்றும் மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கைக்கு கள்ள உறவு காரணமாக அமைகிறது. அதேநேரம், மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கையே கள்ள உறவுக்கும் காரணமாகிறது. இருப்பினும், அந்த உறவை கிரிமினல் குற்றமாக கருத முடியாது.- தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

பெண்ணின் பாலியல் உறவு சுதந்திரத்தை சட்டப்பிரிவு 497 பறிக்கிறது. தனிப்பட்ட வழக்கையில் தனது விருப்பப்படி தேர்வு செய்வது என்பது முக்கியமானது. அதில் இருந்து, பாலியல் உறவு என்ற தேர்வை துண்டிக்க முடியாது. அப்படி செய்வது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. திருமணத்துக்குப் பிறகு தனது பாலியல் உறவு சுதந்திரத்தை கணவனிடம் மனைவி அடகு வைத்து விடுவதில்லை. திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்டு, தனது விருப்பப்படி யாருடனும் அவர் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் உரிமையை பறிக்கக் கூடாது.- நீதிபதி சந்திரசூட்

சட்டப் புத்தகத்தில் இனியும் சட்டப்பிரிவு 497 நீடிக்க வேண்டும் என்பதை நியாயப்படுத்துவதற்கு எந்த காரணங்–்களும் இல்லை.
- நீதிபதி இந்து மல்கோத்ரா.

சமூகத்தின் விருப்பப்படியோ அல்லது கணவனின் விருப்பப்படியோ நடந்து கொள்ளும்படி பெண்களை கட்டாயப்படுத்த முடியாது.
- தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர்

சட்டப்பிரிவு 497, பெண்களுக்கான சம உரிமை மற்றும் சமவாய்ப்பு உரிமையை மீறியதாக உள்ளது. இது மிகவும் குழப்பமான சட்டம்.  இது, அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் இந்திய அரசியல் சட்டப்பிரிவு 14 மற்றும் 21ஐ மீறுவதாக உள்ளது. - நீதிபதி ஆர்.எப்.நாரிமன்.

வக்கீல்கள் கருத்து:

தீர்ப்பு குறித்து வக்கீல்கள் கருத்து:

ஆதிலட்சுமி லோகமூர்த்தி: பாலின பாகுபாடு இல்லாமல், அனைத்து பாலினத்தவர்களுக்கும் ஒரேமாதிரியான சட்டம் எதிர்காலத்தில் வரும் என்பதற்கு இந்த தீர்ப்பு முன்மாதிரியாக உள்ளது. ஆண்களை மட்டுமே குற்றவாளியாக்கி தண்டனை வழங்கும், சட்ட பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பெண் தவறு செய்தாலும், ஆண் தவறு செய்தாலும் பொறுப்பு இருவருக்கும் தான் பெண்ணுக்கு பாலியல் உறவை தேர்வு செய்யக்கூடிய உரிமை உள்ளது என்பதை இந்த தீர்ப்பு சுட்டி காட்டியுள்ளது. அதே நேரத்தில், தகாத உறவு குடும்பநல நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகளை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுத்திவிடும். இதுவரை குற்றமாக இருந்த இந்த தகாத உறவு. இனிமேல் தவறு என்று கருதப்படும் என்பது இந்த தீர்ப்பின் சாரம் அம்சம்.

ஏபி.சூரியபிரகாசம்: திருமணம் ஆன, ஒரு பெண் காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் வேறு ஒரு நபருடன் உறவு வைத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டால், அந்த பெண்ணுடன், உறவு வைத்துக்கொள்ளும் ஆணுக்கு தான் தண்டனை கிடைக்கும். அந்த பெண் தனது வாழ்வாதாரத்திற்காக உறவு வைத்திருக்கும் நிலையில் அந்த ஆண் தண்டனை பெற்று சிறைக்கு சென்றுவிட்டால் அந்த பெண்ணின் நிலை என்னவாகும்.

இந்த விஷயத்தில் பெண்ணுக்கு சாதகமாகவே, இந்த தீர்ப்பு அமைத்துள்ளது. மேலை நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் தற்போது தான் பெண்களுக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தி வந்த இந்த சட்டம் தவறு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அப்துல் ரகுமான்: பாலின பேதம் உறவில் இல்லை, என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. கள்ளத்தனமான உறவில் பெண் குற்றவாளியில்லை. என்ற நிலை இருந்து வந்தது. ஆண்களை மட்டுமே தண்டனைக்கு உள்ளாக்கும் இந்த சட்டப்பிரிவு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது இருபாலினத்தவருக்கும் உறவை தேர்வு செய்ய சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு குடும்பங்கலில் பிரச்னை ஏற்படுத்திவிட கூடாது.



முத்தலாக்கை போன்று  சட்ட விரோதமானது:

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ரேணுகா சவுத்ரி கூறுகையில், “முத்தலாக்கை போலவே இதுவும் சட்ட விரோதமானது. நீதிமன்ற தீர்ப்பில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், இது எங்களுக்கு எப்படி உதவும் என்று விளக்கமளிக்க வேண்டும்” என்றார்.
எப்படி வழக்கு தொடர முடியும்?

சமு்க ஆர்வலர் பிருந்தா அடிகே கூறுகையில், “ஆண்கள் இரண்டு, மூன்று திருமணங்களை செய்து கொள்கிறார்கள். முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியை கைவிடும்போது பிரச்னைகள் அதிகம். கள்ள உறவு குற்றமில்லை என்றால் எவ்வாறு ஒரு பெண் கணவருக்கு எதிராக வழக்கு தொடர முடியும்? இது கவலை தருவதாக உள்ளது” என்றார்.

லைசன்ஸ்  வழங்குகிறீர்களா?
‘கள்ள உறவு குற்றமல்ல’ என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு பிரிவினர் வரவேற்ற போதும், சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் கூறுகையில், “  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது. இது முற்றிலும் பெண்களுக்கு விரோதமான தீர்ப்பு. கள்ள உறவை சட்ட விரோதமில்லை என்பது நாட்டில் உள்ள பெண்களுக்கு மேலும் வலியை சேர்க்கும். இந்த நாட்டில் திருமணம் செய்து கொள்வதற்கு வெளிப்படையாக பொது உரிமத்தை கொடுத்துள்ளீர்கள் அதே நேரத்தில் கள்ள உறவையும் வைத்திருக்கலாம் என்றால், திருமணத்தின் புனித தன்மைதான் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


எந்த நாடுகளில் கள்ள உறவு குற்றம்:

1. ஆப்கானிஸ்தான்
2. இந்ேதானேஷியா
3. வங்கதேசம்
4. ஈரான்
5. மாலத்தீவு
6. பாகிஸ்தான்
7. பிலிப்பைன்ஸ்
8. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
9. அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள்
10. அல்ஜீரியா
11. காங்கோ
12. எகிப்து
13. மொராக்கோ
14. நைஜீரியாவின் சில பகுதிகள்

எந்த நாடுகளில் கள்ள உறவு குற்றமல்ல:
1. சீனா
2. ஜப்பான்
3. பிரேசில்
4. நியூசிலாந்து
5. ஆஸ்திரேலியா
6. ஸ்காட்லாந்து
7. நெதர்லாந்து
8 டென்மார்க்
9. பிரான்ஸ்
10. ஜெர்மனி
11. ஆஸ்திரியா
12. அயர்லாந்து
13. பர்படாஸ்
14. பெர்முடா
15. ஜமைக்கா
16. டிரினிடாட் மற்றும் டொபாகோ
17. செய்செல்லஸ்
18. தென்கொரியா
19. கவுதமாலா

No comments:

Post a Comment