Friday 6 September 2019

VATAPI GANAPATHY






VATAPI GANAPATHY

வாதாபி கணபதி : சரித்திர விவரங்கள் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)
அப்புறம் அந்த ஊருக்கே வாதாபி கணபதி வந்து சேர்ந்தார். அநேக கணபதி பேதங்களில் வாதாபி கணபதி என்று ஒருத்தருண்டு. வாதாபி என்ற அஸுரனை ஜெரித்துக் கொள்வதற்காக அகஸ்த்யர் உபாஸித்த கணபதி அவர். திருச்செங்காட்டாங்குடிக்கு வந்து சேர்ந்தவர் இவரே. வாதாபி என்ற அஸுர வதத்துக்குக் காரணமான அவர் எந்த ஊரிலிருந்து வந்தாரோ அந்த ஊருக்குப் பேர் வாதாபிதான். அஸுர வாதாபி வாழ்ந்துவந்த ஊருக்குப் பிற்காலத்தில் அவன் பெயரே ஏற்பட்டுவிட்டது. அது சளுக்கிய ராஜ வம்சத்தவர்களின் தலைநகராக ஆயிற்று.

சளுக்கிய ராஜாக்களின் புலகேசி என்று பேருள்ளவர்கள் இரண்டு பேர் இருந்திருக்கிறார்கள். ‘புலிகேசி’ என்று தப்பாகச் சொல்கிறார்கள். புலியுமில்லை. எலியுமில்லை. சளுக்கிய சாஸனங்களில் செப்பேடுகள் ஸம்ஸ்க்ருதத்தில்தான் இருக்கும். கல்வெட்டுகள் கன்னடத்தில் இருக்கும். அப்படிக் கன்னடத்தில் ‘பொலெகேசி’ என்று சொல்லியிருக்கிறது. அதை பல பேர் பல தினுஸாக ரூபம் பண்ணி ஒவ்வொரு அர்த்தம் சொல்கிறார்கள். ‘பொலே’ என்பதற்குக் தமிழ் மூலம், தெலுங்கு மூலம், கன்னட மூலம் எல்லாம் சொல்கிறார்கள். ஆனால் அந்த வம்சத்தினர்களில் ராஜாவான பிறகு எல்லாருமே ஸம்ஸ்க்ருதப் பெயர்தான் வைத்துக்கொண்டு இருப்பதால் இந்தப் பெயரைப் ‘புலகேசின்’, ‘புலகேசி’ என்று ஸம்ஸ்க்ருதமாகவே சரித்ராசிரியர்கள் தீர்மானம் பண்ணி, இங்கிலீஷில் அப்படித்தான் எழுதுகிறார்கள்.

‘புலகேசி’ என்றால் புல[ள]காங்கிதம் அடைவதென்கிறோமே, அப்படி ஆனந்தத்தில் மயிர்க்கூச்சு எடுத்திருப்பவன் என்று அர்த்தம். ‘ரிஷிகேசன்’ என்று தப்பாகச் சொல்லும் ‘ஹ்ருஷீகேசன்’ என்ற பெயருக்கும் அப்படி ஒரு அர்த்தமுண்டு. ஹ்ருஷீகம் என்றால் இந்திரியங்கள். அவற்றை அடக்கியாளும் ஈசன் ஹ்ருஷீகேசன் என்று ஆசார்யாள் [விஷ்ணு] ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில் ஒரு அர்த்தம் சொன்னாலும், ஸுர்ய சந்திர ரூபங்களில் பகவான் உள்ளபோது அவற்றின் கேசம் போன்ற ரச்மி [கதிர்]களால் உலகத்தை மகிழ்விப்பதாலும், இப்படிப் பெயர் என்று இன்னொரு அர்த்தமும் கொடுத்திருக்கிறார். ‘ஹ்ருஷ்’ என்கிற தாது மயிர்க்கூச்செடுக்கும் அளவுக்கு மகிழ்ச்சி உண்டாக்குவதைக் குறிக்கும். வீர தீர ஸாஹஸங்களை ஒரு ராஜா தானும் மயிர்க்கூச்செறிந்து செய்வான்; அதைப் பார்க்கிற, கேட்கிறவர்களும் மயிர்க்கூச்செறியும்படிப் பண்ணுவான். அப்படிப் புளகமடையச் செய்கிறவனே புலகேசி. ‘புலம்’ என்றாலே புளகம்தான். புளகமுற்ற கேசம் உடையவன் புலகேசி. ‘புலக + ஈச’ : ‘புகளமடைந்தவனும், ராஜாவாக இருக்கிறவனும்’ என்று பிரித்துச் சொல்லலாம்.

எனக்கு ஒன்று தோன்றுகிறது. நாம் பார்க்கப்போகும் கதையிலே வரும் இரண்டாவது புலகேசிக்குப் போட்டியாயிருந்த இரண்டு பெரிய ராஜாக்களில் ஒருத்தன் மஹேந்த்ரவர்மப் பல்லவன். அவனைவிடப் பெரிய போட்டி வட தேசத்தில் ஸாம்ராஜ்யாதிபதியாயிருந்த ஹர்ஷவர்த்தனன். ‘ஹர்ஷ’ என்பதற்கும் ஆனந்தத்தில் மயிர் கூச்செடுத்திருப்பவன் என்பதுதான் அர்த்தம். அந்த ஹர்ஷனையே புறமுதுகு காட்டும்படி பண்ணினவன் புலகேசி. அதனாலேயே அந்த பெயரின் அர்த்தத்தைக் கொண்ட ‘புலகேசி’ப் பெயரைத் தானும் வைத்துக் கொண்டிருப்பான் போலிருக்கிறது! ராஜாவாவதற்கு முந்தி அவனுக்குப் பேர் எரெயம்மா என்பது. அது கன்னடப் பேர். ராஜாவான பிறகு ஸம்ஸ்கிருத பேர் வைத்துக் கொண்டபோது, தன் பாட்டனார் பேர் புலகேசி என்று இருப்பதையும் அது தன்னுடைய arch rival ஆன (முக்கியமான போட்டியாளனான) ஹர்ஷன் என்பதற்கே இன்னொரு வார்த்தையாகவும் இருப்பதைப் பார்த்து அந்தப் பேர் சூட்டிக் கொண்டிருப்பானோ என்று தோன்றுகிறது.

கேசத்திற்கு ‘அளகம்’ என்று ஒரு பேர். யக்ஷராஜனும், பணத்துக்குத் தேவதையுமான குபேரனுக்கு அளகேசன் என்று பேர். அவனுடைய ராஜதானி அளகாபுரி. ரோமாஞ்சம் உண்டாக்கும் சிறப்பை அளகேசன். ஹ்ருஷீகேசன், புலகேசி முதலிய பெயர்கள் காட்டுகின்றன.

இரண்டாவது புலகேசி ஸமாச்சாரத்திற்கு வருகிறேன். முதலில் சிற்றப்பாவால் வஞ்சிக்கப்பட்டு ராஜ்யாதிகார உரிமையை இழந்து கஷ்டப்பட்டான். அப்புறம் புஜ பல பராக்ரமத்தால் சிற்றப்பாவை வீழ்த்தி ஸிம்ஹாஸனம் ஏறினான். சளுக்ய ராஜாக்களுக்குள்ளேயே தலைசிறந்த இடம் பெற்றான். ‘ஸத்யத்திற்கு புகலிடமாயிருப்பவன்’ என்ற அர்த்தமுள்ள ‘ஸத்யாச்ரயன்’ என்ற பட்டத்தோடு ஆட்சி நடத்தினான். ராஜாதிராஜ ஹர்ஷவர்த்தனனும் தன்னை எதிர்த்துப் போராட முடியாதபடி கலங்க அடித்து, அவன் நர்மதைக்கு வடக்கோடு ராஜ்யத்திற்கு எல்லை கட்டிக் கொண்டு திரும்பும்படிப் பண்ணினான்.

அப்போது தமிழ் தேசத்தில் பெரிய ராஜ்யாதிபதியாக இருந்தவன் பல்லவ ராஜாவான மஹேந்த்ர வர்மா. ‘மஹேந்த்ர விக்ரம வர்மன்’என்பது அவனே. அவன் எழுதிய “மத்த விலாஸ ப்ரஹஸனம்” என்ற ஹாஸ்ய நாடகத்தில் சொல்லிக் கொள்ளும் பெயர். சில்பக் கலையும், ஸங்கீதக் கலையும் எந்நாளும் கொண்டாடத்தக்க பெரிய கலைஞனாகவும், ரஸிகனாகவும் இருந்தவன். அவன் மேல் புலகேசி படையெடுத்து, பல்லவ ஸைன்யம் காஞ்சீபுரம் கோட்டைக்குள்ளேயே முடங்கிப் போகும்படிச் செய்து ஜயித்துவிட்டான். இது தீர்மானமாக சாஸன ஆதாரங்களில் தெரிவதாகச் சரித்ராசிரியர்கள் சொல்கிறார்கள். மஹேந்த்ர வர்மாவுக்கு சில தலைமுறைகளுக்கு அப்புறம் ராஜ்யாதிகாரம் அந்த வம்சாவளியின் நேர் வழியில் போகாமல், தாயாதி வம்சாவளியில் வந்த நந்திவர்மா என்பவனுக்குப் போயிற்று. அவன் ஸோமயாகம் செய்த பாரத்வாஜ கோத்ர ப்ராம்மணன் ஒருவனுக்கு பூதானம் செய்யும்போது சாஸனம் பண்ணிய செப்பேட்டுக் கொத்தை ‘காசாக்குடி ப்ளேட்ஸ்’ என்று விசேஷித்துக் சொல்வார்கள். ஏனென்றால் அதில் தானம் தரும் ராஜாவான பல்லவனின் வம்ஸ பூர்விகர்கள் பற்றி அநேக விவரங்கள் இருக்கின்றன. அதில் மஹேந்த்ரவர்மா புள்ளலூரில் ஒரு பெரிய வெற்றி அடைந்ததாக இருக்கிறது. வெற்றி அடைந்தாக இருக்கிறதேயொழிய, யார்மேல் (வெற்றி) என்று அதில் இல்லை. பல்லவர்களின் ஜன்ம சத்ருவான சளுக்யர்களின் மேல்தான் இருக்க வேண்டுமென்று ஊஹம். ஊஹம்தானேயொழியத் தீர்மானமாக முடிவாகவில்லை. ஆனால் புலகேசியிடம் மஹேந்த்ர வர்மா அபஜயம் அடைந்தது தீர்மானமாகத் தெரிகிறது என்கிறார்கள். புள்ளலூரில் பல்லவ ஸைன்யம் சளுக்ய ஸைன்யத்தை ஜயித்திருந்தால்கூட, அது நம் எல்லைக்குள் வந்தவர்களை அவர்களுடைய ராஜ்யத்திற்குத் திரும்பிப் போகும்படிச் செய்வதோடு முடிந்து போயிருக்க வேண்டும். சளுக்யர்கள் பல்லவ எல்லைக்குள்ளேயே வந்து ஜயித்த மாதிரி அப்போது பல்லவர்கள் சளுக்கிய எல்லைக்குள்ளேயே தொடர்ந்து போய் அவர்களை ஜயிக்கவில்லை. அன்னிய ராஜா ஒருத்தனை அவன் ஊருக்குள்ளேயே போய் வெற்றி கொள்வதற்குத்தான் பெருமை அதிகம்.

ஆனபடியால், புலகேசியிடம் பட்ட பரிபவம் [தோல்வி] பல்லவ வம்சத்திற்கு ஆறாக புண்ணாகிவிட்டது. ராஜ ரத்தமா? பழிக்குப் பழி வாங்கணும் என்ற வர்மம் உண்டாயிற்று. ஆனாலும் அது நிறைவேறாமலே மஹேந்த்ர வர்மா கண்ணை மூடிவிட்டான். அவன் பிள்ளை நரஸிம்ஹ வர்மா. மாமல்லன் என்று பேர் வாங்கின அந்த வீராதி வீரன் காலத்தில்தான் பழிவாங்க முடிந்தது. அவன் வாதாபி மேலே படை எடுத்துப் போய் ஹதாஹதம் பண்ணி ஜயித்துவிட்டான். புலகேசி நேரே பல்லவ ராஜதானியான காஞ்சிக்கு உள்ளே போய் அதை ஜயிக்கவில்லை. மஹேந்திரனை காஞ்சிக்கோட்டையை மூடிக்கொண்டு உள்ளே இருக்கும்படிப் பண்ணி, வெளியில்தான் ஜயித்தான். மாமல்லனோ பதிலடி என்று அதைவிட உக்ரமாக சளுக்கிய ராஜதானியான வாதாபிக்கு உள்ளேயே போய் அதோடு நகரத்தையே நாசப்படுத்தி விட்டான்.

“க்ஷாத்ரம் க்ஷாத்ரம்” என்று ஒரு வார்த்தை சொல்கிறோம். “ஆத்திரம், க்ஷாத்திரம்” என்று சேரத்துச் சொல்கிறோம். ஒருத்தரிடம் தீராத பகையோடு, பழிக்குப் பழி வாங்கணும் என்று இருப்பதை “க்ஷாத்ரம்” என்கிறோம். அந்த வார்த்தைக்கு நேர் அர்த்தம் ‘க்ஷத்ரிய குணம்’ என்பதுதான். க்ஷத்ரியனின் தன்மை க்ஷாத்ரம். அந்த ஜாதிக்காரர்களிடம் எத்தனையோ உயர்ந்த தன்மைகளும் பண்புகளும் இருந்துங்கூட தீராத த்வேஷம்தான் க்ஷாத்ரம் என்றாகியிருப்பதிலிருந்து ஆட்சியதிகாரம் எப்படி ஒருத்தரைக் கெடுக்கிறது, கத்தி பிடித்துவிட்டால் எப்படித் தலையைச் சீவுவதில் புத்தி போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

க்ஷத்ரிய ஜாதிக்காரர்கள் போட்டுக் கொள்ளும் அடைமொழி ‘வர்மா’ என்பது. ‘வர்மம்’ என்றால் நேர் அர்த்தம் ‘கவசம்’ என்பது. க்ஷத்ரியர்கள் கவசதாரிகளாக இருப்பதால் வர்மா ஆகிறார்கள். அது மாத்திரமில்லை. கவசம் எந்த அடியையும் தான் வாங்கிக் கொண்டு ஒரு தேஹத்தை ரக்ஷிக்கிற மாதிரி ஒரு தேசத்தை ஆபத்துக்களிலிருந்து தங்கள் உயிரையும் பணயம் வைத்து ரக்ஷிப்பது க்ஷத்ரியர்களேயாகையாலும் அவர்கள் வர்மா ஆகிறார்கள். ஆனாலும் நாம் ‘வர்மம் பாராட்டுவது’ என்று சொல்லும்போது இந்த நல்ல விஷயங்களை நினைத்தா சொல்கிறோம்? பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று கறுவிக்கொண்டு இருப்பதைத்தானே வர்மம் என்கிறோம்? க்ஷாத்ரம், வர்மம் என்ற வார்த்தைகளின் நடைமுறை வழக்குகள் பதவியும் ஆயுதபலமும் மிதமிஞ்சினால் உண்டாகக்கூடிய க்ரூர குணத்தைக் காட்டுவதாக இருக்கின்றன.

ராஜாக்கள் ஒரே ஸத்வமாக, ஸாதுவாக இருக்க முடியாதுதான்; நம்முடைய ராஜ நீதி சாஸ்திரங்களின்படி அப்படி இருக்க கூடாதும்தான். தர்ம யுத்தம், தங்களை ஜயித்தவனைத் திரும்பப் தாக்கி ஜயிப்பது எல்லாம் அவர்களுக்கு வீரக் கடமையாகவே சொல்லியிருக்கிறது. ஆனாலும் அதில் கட்டுப்பாடு வேண்டும். சத்ரு ராஜாவின் மேல், ஸைன்யத்தின் மேல் ராக்ஷஸத்தனமான நடவடிக்கை எடுக்கக் கூடாது. யுத்தத்தில் சேராத ஊரார் மேல், ஊர் மேல், ராக்ஷஸத் தாக்குதல் பண்ணவே கூடாது. லங்காபுரி வாஸிகள் அஸல் ராக்ஷஸர்களேயானதால் அந்த ஊரை ஹநுமார் தஹனம் பண்ணியது. அது மற்ற ஊர்களுக்கும் ‘ஸிவிலியன் பாபுலேஷ’னுக்கும் [படையில் சேர்ந்திராத ஏனைய பிரஜைகளுக்கும்] பொருந்தாது.

வேத ப்ராம்மணர்களை நிரம்ப ஆதரித்தவனும், ஸம்ஸ்கிருத கடிகைகளை நிரம்பப் போஷித்தவனும், தெய்வ வழிபாட்டை நன்றாக வளர்த்தவனும், அதன் உபாங்கமாக லோகமெல்லாம் புகழும்படி சில்பக்கலைக்கு விசேஷ முன்னேற்றம் கொடுத்தவனுமான நரஸிம்ஹவர்மா மாதிரியான ராஜாவைக்கூட க்ஷாத்ரம், வர்மம் என்பது விட்டு வைக்கவில்லை. அதனால்தான் அவன் சளுக்கியர்களின் தலைநகரமான வாதாபியை த்வம்ஸம் பண்ணித் தரைமட்டமாக்கினான். ‘வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையன்’ என்று பட்டப் பேர் சூட்டிக் கொண்டான். வாதாபியிலேயே அவன் அந்த ஊரை ஜயித்ததைப் பெருமையாக ப்ரகடனம் பண்ணிக் கொண்ட ஒரு சிலா சாஸனம் இன்றைக்கும் இருக்கிறது.

சளுக்கியர்கள் மாத்திரம் சளைப்பார்களா, க்ஷாத்ரத்தில்? பல்லவர்கள் மண்ணைக் கவ்வும்படிப் பண்ணி, பதிலடியாக, அவர்களுடைய ராஜதானியான காஞ்சீபுரத்தை மண்ணோடு மண்ணாக்கணும் என்பதே அந்த ராஜ வம்ஸத்துக்கு ஸதா சிந்தனையாயிற்று. நரஸிம்ஹ வர்மாவுடைய வெற்றிக்கு சுமார் ஒரு நூற்றாண்டுக்கு அப்புறம் சளுக்கிய ராஜாவாக இருந்த [இரண்டாவது] விக்ரமாதித்தன் ஆசைப்பட்டபடியே பல்லவர்களை ஜயித்துவிட்டான். காஞ்சீபுரத்தையும் அவன் பிடித்து விட்டான். அப்போது மட்டும் விக்ரமாதித்யன் தன் க்ஷாத்ரத்தை நன்றாக தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று பிடிவாதமாயிருந்திருந்தால் காஞ்சியை தரைமட்டமாக, மண்ணோடு மண்ணாகவே பண்ணியிருக்க முடியும். அல்லது ‘எரியூட்டு விழா’ நடத்திச் சாம்பலே ஆக்கியிருக்க முடியும்.

அப்போது அங்கே சில்ப விசேஷத்துக்கு இதைவிட ஒரு கோவில் இருக்கமுடியாது என்று இன்றைக்கும் நாம் சொல்கிற கைலாஸநாதர் கோவிலும் முளைத்துவிட்டது. [இரண்டாவது] பரமேச்வரவர்மாவுக்கு predecessor- ஆக [முந்தைய அரசனாக] இருந்த ராஜஸிம்ஹன் காலத்திலேயே அந்த அற்புதமான கோவில் எழும்பிவிட்டது. விக்ரமாதித்தன் நினைத்திருந்தால் அதைத் தரைமட்டமாகப் பண்ணியிருக்கலாம்.

அப்படிக்கூட ஒரு ஹிந்து ராஜாவே ஒரு ஹிந்து கோவிலை இடிப்பானா? என்றால், க்ஷாத்ரம் என்று சொன்னேனே, அதில் கண்மூடிப் போய் இப்படியும் சில நடந்துதானிருக்கிறது. நம் [சங்கர] மடங்களில் ஒன்றிலேயே இந்த மாதிரி நடந்திருக்கிறது — நம்புவதற்குக்கூட முடியாமலிருக்கும். ஒரு துருக்க ராஜா அந்த மதத்திடம் ரொம்ப அபிமானம் – பக்தியே – வைத்திருந்தான். அவனுக்கு சத்ருவாக இருந்த ஹிந்து ராஜாவின் ஹிந்து கமான்டர் என்ன பண்ணினானென்றால், ‘இந்த மடாதிபதி நம் விரோதி ராஜாவின் பக்தி விச்வாஸத்தைப் பெற்றிருப்பவரல்லவா? அதனால் இந்த மடத்தையும் தாக்க வேண்டும்’ என்று முடிவு பண்ணி அப்படியே படைகளை ஏவி விட்டான்! அவர்களும் – எல்லோரும் ஹிந்துக்கள்தான் – ‘நம்முடைய மதத்திற்கே புத்துயிர் தந்த பகவத்பாதாள் பெயரிலுள்ள மடமாச்சே’ என்றுகூடப் பார்க்காமல் மடத்திலே புகுந்து சூறையாடினார்கள். ‘ஒரு புண்ய ஸ்தலத்திற்கு, குரு பீடத்திற்கு இப்பேர்ப்பட்ட அபச்சாரம் பண்ணினவர்கள் வாழமாட்டார்கள் அழிந்துதான் போவார்கள்!’ என்று அப்போது அந்த துருக்க ராஜா அந்த மடத்து ஸ்வாமிகளுக்கு எழுதிவிட்டு, தானே திரவ்யம் அனுப்பி மடத்தை ஜீரணோத்தாரணம் செய்வதற்கு உபகரித்திருக்கிறான். ஆத்திர க்ஷாத்திரங்கள் எதுவரைக்கும் கொண்டுவிடுகிறது என்பதற்காகச் சொல்ல வந்தேன்.

க்ஷாத்ரத்தை மனஸாரத் தீர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பாகக் காஞ்சிபுரம் சளுக்கிய விக்ரமாதித்தனிடம் பிடிபட்டு விட்டது. வாதாபியை தரை மட்டமாக்கினதற்கு அவன் பழி தீர்த்துக் கொள்ள நல்ல ஸந்தர்ப்பம். சத்ரு வம்சம் கட்டிய முதல் கட்டிடக் கோவிலான கைலாஸ நாதராலயம்* சில்ப ஸெளந்தர்யம் அத்தனையையும் சொரிந்து கொண்டு அவனுக்கு முன்னாடி நின்றது. அவன் ஒரு ‘ஹூம்’ போட்டிருந்தால் ஸேனா வீரர்கள் அதைத் தூள் பண்ணியிருப்பார்கள். அப்படிப்பட்ட அந்த ஸமயத்தில்தான் அவனுக்கு ஆச்சர்யமாக மனஸு மாறிற்று. திடீரென்று…, அவன் ஏற்கெனவே சிவ மந்த்ர தீக்ஷை பெற்றிருந்ததால் அதன் விளைவாக சிவ பக்திதான் பெருக்கெடுத்ததோ, அல்லது கலா ரஸிக உணர்ச்சிதான் பெருக்கெடுத்ததோ, அல்லது இரண்டும் சேர்ந்து வந்ததோ, “கோவிலைத் தொடப்படாது” என்று ஆக்ஞை பண்ணிவிட்டான். ஏதோ கல்லிலே செதுக்கி வைத்த சில்பங்களிடம் மட்டும்தான் அவனுக்கு இப்படி நல்ல எண்ணம் வந்ததென்று இல்லை. சத்ரு பட்டணத்தில் ஜனங்கள் இருந்தார்களே, அவர்களிடமே நல்ல மனுஷ்யாபிமானம் உண்டாகிவிட்டது. “நாம் இந்த ஊரை எப்போது ஜயித்தோமோ, அப்போது இந்த ஊர்வாசிகள் நம் பிரஜைகளாகி விட்டார்கள். நம்முடைய பிரஜைகளுக்கே நாம் ஹிம்ஸை கொடுப்பதா?” என்ற உசந்த நினைப்பு அவனுக்கு உண்டாயிற்று. அதனால், நெருப்பை வைத்துக் கொளுத்திக் கதறக் கதற அடிப்பதற்கு நேர் மாறாகக் காஞ்சீபுர வாஸிகளுக்கு யதேஷ்டமாக தான தர்மங்கள் செய்தான். கைலாஸநாதர் கோவிலுக்கும் நிறையச் செய்தான். புதுசாகப் புகுந்து கொள்ளையடிக்காமல் விட்டதோடு, ஏற்கெனவே கொள்ளையடித்திருந்ததையெல்லாம், கூட நிறையப் போட்டு, அந்தக் கோவிலுக்குத் திருப்பி விட்டான். கைலாஸநாதர் கோவிலுக்கு முன்னாலுள்ள மண்டபத்தின் தூண் ஒன்றிலேயே இந்த விபரங்களை அவன் கன்னடத்தில் பொறித்து வைத்திருக்கிறான்.

கலிங்க யுத்தத்திற்கு அப்புறம் அசோகர் மனஸ் மாறினது எல்லோருக்கும் தெரியும். அதோடு சேர்த்து நினைக்கிற விதத்தில் இப்படி ஒன்று எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்.

கைலாஸநாதர் கோவிலின் அழகில் சொக்கிய விக்ரமாதித்யன் அதை இருக்க விட்டது மட்டுமில்லை. அதற்கு ஜோடி சேர்க்கிற மாதிரி, ஏறக்குறைய அதன் அச்சாகவே தன் ஊருக்குத் திரும்பின பிறகு பட்டடக்கல்லில் விரூபாக்ஷர் கோவில் என்று கட்டினான். அதற்காகத் தமிழ்நாட்டுச் சில்பிகளை மரியாதை பண்ணி அழைத்துக் கொண்டு போனான்.

வாதாபி (இப்போது பாதாமி என்று சொல்லுகிறார்கள்) ஐஹொளெ, பட்டடக்கல் என்று மூன்று ஊர்கள் கிட்டக் கிட்டக்க கன்னட தேசத்தில் பீஜப்பூர் ஜில்லாவில் இருக்கின்றன. ஐஹொளெதான் சளுக்கியர்களின் முதல் தலைநகரம், அப்புறம் வாதாபி தலைநகரமாயிற்று என்றுகூடச் சொல்லுகிறார்கள். பக்கத்திலேயே இருந்த பட்டடக்கல்லையும் ‘ஸெகன்ட் காபிட’லைப் போல மதித்தார்கள். சில புது ராஜாக்கள் பட்டத்துக்கு வந்தபோது பட்டாபிஷேகங்களைப் பட்டடக்கல்லில் பண்ணியிருக்கிறார்கள். அந்த ஊர் பேரே அதனால்தான் அப்படி ஏற்பட்டதோ என்னவோ?

பிள்ளையாரைப் பற்றி ஆரம்பித்துவிட்டு வாதாபி, கீதாபி என்று எங்கேயோ சுற்றிக் கொண்டிருக்கிறேனே, என்ன ஸம்பந்தம் என்றால், ரொம்ப ஸம்பந்தம் இருக்கிறது.

விக்நேச்வரரோடு ரொம்பவும் ஸம்பந்தப்பட்டவர் அகஸ்திய மஹர்ஷி. இரண்டு பேரும் தொப்பை வயிற்றுக்காரர்கள். அகஸ்தியர் அங்குஷ்ட மாத்ரர் (கட்டை விரல் அளவேயானவர்), குறுமுனி என்று சொல்கிறது. பிள்ளையாரையும் “வாமன ரூப” என்று சொல்லியிருக்கிறது.

வாமந-ரூப மஹேச்வர – புத்ர
விக்ந – விநாயக பாத நமஸ்தே || *

‘வாமன ரூப’ என்றால் குள்ள உருவம் – வாமனாவதாரம் மாதிரி. “வக்ரதுண்ட, மஹாகாய” என்று ஒரு பக்கம் மஹா பெரிய சரீரமுடையவர் என்றும் சொல்லி இன்னொரு பக்கம் வாமன ரூபர் என்றும் வர்ணித்திருக்கிறது. பெரிசு சிறிசு எல்லாம் அவர்தான். அணுவும் அவர்தான். அகிலாண்டமும் அவர்தான் என்று தாத்பர்யம். ‘அணுவுக்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்’ என்று ஒளவை (அகவலில்) சொல்லியிருக்கிறாள்.

ஹம்பியில் பெரிசு பெரிசாக இரண்டு விக்நேச்வர மூர்த்திகள். ஒன்று பத்தடி உயரம், இன்னொன்று இருபதடி உயரம் இருக்கும். இப்படி மஹாகாயராக இருப்பவர்களுடைய பேர்களோ நேர்மாறாக வாமன ரூபத்தைக் காட்டுவதாக இருக்கின்றன! பத்தடிப் பிள்ளையாருக்கு ‘சசிவுகல்லு’ என்று பேர்; அப்படியென்றால் கடுகத்தனை அளவேயானவரென்று அர்த்தம்! இருபதடிப் பிள்ளையாருக்கு ‘கடலைக்கல்லு’ என்று பேர்; கடலைப் பருப்பு அளவானவர் என்று அர்த்தம்! ‘இவருக்கு இத்தனை பெரிய விக்ரஹங்கள் இருக்கிறதே என்று நினைக்கவேண்டாம். வாஸ்தவத்தில் விச்வரூபியாக உள்ள அவருக்கு life – size விக்ரஹம் பண்ணி எவராலும் ஆகாது. முடிந்த அளவுக்கு இங்கே பண்ணி வைத்திருக்கிறோம். அது அவருடைய நிஜமான ரூபத்தோடு ஒப்பிட்டால் கடுகத்தனை, கடலையத்தனையாகத்தான் தெரியும்’ என்று அடக்கத்தோடு இப்படிப் பேர் வைத்திருக்கிறார்கள்.

அகஸ்தியருக்கும் விக்நேச்வரருக்கும் ஸம்பந்தம் சொன்னேன். அகஸ்தியர் கமண்டலுவுக்குள் அடைத்து வைத்திருந்த காவேரியைக் காக்கா ரூபத்தில் வந்து கவிழ்த்து விட்டு நதியாக ஒடப் பண்ணினவர் விக்நேச்வரர்தான். அந்த ஸமயத்தில் அகஸ்தியருக்கு காக்காயிடம் கனகோபம் வந்தாலும் அப்புறம் அது விக்நேச்வரர் என்று தெரிந்ததும் ஒரே பக்தியாகிவிட்டார். அவர்தான் ‘காக்கா பிடித்தவர்’ போலிருக்கிறது – காக்காயை மனஸுக்கு ரொம்பவும் பிடித்தவர்! அப்புறம் ஒரேடியாகப் பிள்ளையார் பக்தியில் ஈடுபட்டுவிட்டார்.

வாதாபி விஷயத்துக்கு வருகிறேன். அதிலே அகஸ்தியர் முக்கியமான கதாபாத்திரம். வாதாபி இல்வலன் என்று அண்ணன்-தம்பியாக இரண்டு அஸுரர்கள்…. அநேகமாக எல்லாருக்கும் தெரிந்திருக்கக்கூடிய கதைதான். நேரடியாகத் தாக்கிக் கொல்கிற அஸுரர்களை விடவும் ஒருபடி மட்டமாக நயவஞ்சனையால் ரிஷிகளைக் கொன்று தின்னுவது இவர்களது வழக்கம். பொதுவாகவே நரமாம்ஸமென்றால் அஸுரர்களுக்கு ரொம்ப இஷ்டம். அதிலும் வேத மந்த்ரத்தில் ஊறிப்போய் பரம மதுரமாகிவிட்ட ரிஷி சரீரமென்றால் ஹல்வா மாதிரி! அந்த ஹல்வா கிடைப்பதற்காக இந்த இரண்டு பேரும் ஒரு நயவஞ்சனை செய்வார்கள். இரண்டு பேரில் மூத்தவனான இல்வலன் ஒரு ப்ராம்மண ரூபம் எடுத்துக்கொண்டு யாராவது ரிஷியிடம் போய் ரொம்பவும் நமஸ்காரம் பண்ணித் தன் வீட்டில் அவர் போஜனம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்திப்பான். ரிஷியும் ஒப்புக் கொண்டு போவார். அவன் என்ன பண்ணியிருப்பானென்றால் வாதாபியையே மாம்ஸமென்று தெரிந்து கொள்ள முடியாத விதத்தில் கறியாகச் சமைத்துப் பரிமாறுவான். ரிஷிகள் அவசியமான ஸமயத்தில்தான் ஞான த்ருஷ்டியை ப்ரயோகிப்பார்கள். மற்ற ஸமயங்களில் ஸாதாரண ஜனங்கள் மாதிரிதான் இருப்பார்கள். அஸுர சூழ்ச்சி தெரியாமல் அவர்கள் வாதாபிக் கறியைச் சாப்பிட்டு விடுவார்கள். போஜனம் முடிந்தபின் இல்வலன் அவர்களுக்கு தாம்பூலாதிகள் கொடுத்து சிரம பரிஹாரம் பண்ணிக் கொள்ளச் சொல்லி விட்டு, தம்பியை “வாடா!” என்று கூப்பிடுவான். உடனே ரிஷி வயிற்றில் போஜ்ய பதார்த்த ரூபத்தில் இருக்கும் வாதாபி ஆடு ரூபம் எடுத்துக்கொண்டு கொம்பால் அவர் வயிற்றை கிழித்துக் கொன்றபடி வெளியே வருவான். அப்புறம் இரண்டு பேரும் அந்த சரீரத்தை ஸந்தோஷமாக தின்று தீர்ப்பார்கள்.

அகஸ்த்யருக்கும் இதே மாதிரி போஜன உபசாரம் பண்ணிவிட்டு, “வாதாபி, வாடா வெளியிலே!” என்று இல்வலன் கூப்பிட்டான். அவர் விக்நேச்வர ஸ்மரணையிலேயே இருந்து கொண்டிருப்பவரல்லவா? அதனாலே அஸுரனுடைய கபடம் அவருக்குப் புரியும்படியாக விக்நேச்வரர் அநுக்ரஹம் செய்துவிட்டார். இதற்கு மாற்று பண்ணுவதற்கான உபாயமும் ஸ்புரிக்கும்படி அநுக்ரஹித்து விட்டார். உடனே அகஸ்த்யர் தொப்பையைத் தடவிக்கொண்டு, “வாதாபி! ஜீர்ணோ பவ!” என்றார். அஸுரன் வெளியிலே வரமுடியாமல் அவர் வயிற்றுக்குள்ளேயே வைச்வாநர அக்னியாயுள்ள பரமாத்மாவில் ஜீர்ணமாகி விட்டான்.

அதைப் பார்த்து இல்வலன் பயந்துபோய் அகஸ்த்யரிடம் ச்ரணாகதி பண்ணி, பொன்னும் பொருளும் காணிக்கை கொடுத்தான் என்று ஒரு கதை. இன்னொரு கதைப்படி, தம்பியை ஜீர்ணித்துக் கொண்டுவிட்டாரே என்ற கோபத்தில் அவன் அவர் மேல் பாய்ந்தான்; அவர் ஒரு தர்ப்பையை அபிமந்திரித்து அவன் மேலே போட்டார். அது அஸ்திரமாகி அவனை வதைத்துவிட்டது.

தான் வாதாபியை ஜீர்ணித்து அதன் வழியாக லோகத்துக்கு நல்லது செய்யும்படியாக அநுக்ரஹித்த பிள்ளையாருக்கு அகஸ்தியர் பூஜைகள் பண்ணினார். அப்போது விக்நேச்வரர் இருந்த அவஸரத்துக்கு [திருக்கோலத்திற்கு] “வாதாபி கணபதி” என்றே பேர் வந்துவிட்டது.

திருவாரூரில் அநேக கணபதி மூர்த்தங்கள் இருக்கின்றன. அங்கே வாதாபி கணபதியும் இருக்கிறார். தீக்ஷிதருடைய “வாதாபி கணபதி(ம் பஜே)” கீர்த்தனை இவர் பேரிலே தான். பல பேர் தப்பாகத் திருச்செங்காட்டாங்குடிப் பிள்ளையார் பேரில் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கீர்த்தனத்திலேயே “மூலாதார க்ஷேத்ர ஸ்திதம்” என்று வருகிறது. ப்ருத்வீ ஸ்தலமான திருவாரூர்தான் மூலாதார க்ஷேத்ரம். அகஸ்த்யர் க்ஷேத்ராடனம் பண்ணிக் கொண்டு திருவாரூர் வந்தபோது மூலாதார க்ஷேத்ரமான அங்கே வாதாபி கணபதியை பிரத்ஷ்டை பண்ணி விட்டார். அந்த ஸமாசாரம் இருக்கட்டும்

மேற்கு டெக்கானின் சளுக்கிய ஸாம்ராஜ்ய ராஜதானியாயிருந்த வாதாபிதான் இல்வல – வாதாபிகள் இருந்த ஊர். அங்கேயும் ஒரு கணபதி இருந்தார், விக்ரஹ ரூபத்தில். வாதாபியிலிருந்ததால் அவரும் ஒரு வாதாபி கணபதி. அந்த ஊரை நரஸிம்ஹ வர்மா ஜயித்து, ஜய சாஸனம் நாட்டிய போது கமான்டர் – இன் – சீஃபாகப் போனவர் பரஞ்ஜோதி என்கிறவர்.

‘கலிங்கத்துப்பரணி’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அது குலோத்துங்க சோழன் கலிங்க தேசத்தை ஜயித்ததைச் சொல்லும் நூல். குலோத்துங்கன் ஜயித்ததாகச் சொன்னாலும் வாஸ்தவத்தில் வெற்றிக்குக் காரண புருஷனாக இருந்தது அவனுடைய ஸேநாதிபதியாக இருந்த கருணாகரத் தொண்டைமான்தான். அந்த மாதிரி நரஸிம்ஹ வர்மாவின் வாதாபி வெற்றிக்கு அவனுடைய ஸேநாதிபதியான பரஞ்ஜோதியும் காரணமாயிருந்தார்.

அவர் கணபதீச்சரம் என்ற சிவாலயமுள்ள திருச்செங்காட்டங்குடியைச் சேர்ந்தவர். அதனால் பிறவியிலிருந்தே பிள்ளையாரிடம் அவருக்கு ஒரு பிடிமானம் இருந்திருக்க வேணும். இதுவும் ஒரு ஈச்வர லீலை — அவரே ஜயசாலியாக வாதாபியை ஜயித்து அங்கேயுள்ள பொன், மணி, யானை, குதிரை எல்லாவற்றையும் கவர்ந்துக்கொண்டு ஊர்வலம் வருகிறபோது அங்கே வாதாபி கணபதியைப் பார்த்தார். பார்த்தவுடன் பக்தி பொங்கிக்கொண்டு வந்தது. அந்த மூர்த்தத்தைத் தமக்கென்று எடுத்துக்கொண்டு விட்டார்.

அசோகருக்கு நடந்த மாதிரி, சித்தே முன்னே [சற்று முன்] சொன்னபடி சளுக்கிய விக்ரமாதித்தனுக்கு நடந்த மாதிரி, பரஞ்ஜோதி வாழ்க்கையிலேயும் இதைத் தொடர்ந்தாற்போல் அவர் பல்லவ ராஜ்யத்திற்குத் திரும்பிய பிறகு ஒரு பெரிய மாறுதல் நடந்துவிட்டது.

பரஞ்ஜோதி ப்ராம்மண ஜாதியிலேயே வைதிகத்தை விட்டுவிட்டு லௌகிகப் பிரவிருத்திகளில் (தொழில்களில்) போனதால் தனியாகப் பிரிக்கப்பட்ட ‘மஹாமாத்ரர்’ என்ற வகுப்பைச் சேர்ந்தவர். ‘மாமாத்திரர்’ என்று பெரிய புராணத்தில் சொல்லியிருக்கிறது. ‘மாமாத்திரர்’ மாதிரியே ‘அமாத்தியர்’ என்று ஒரு ஜாதி. ஸம்ஸ்க்ருதத்தில் ‘அமாத்யன்’ என்றால் மந்திரி. ‘அமாத்யன்’ தான் தமிழில் ‘அமைச்சன்’ ஆயிற்று. ‘மைதுனன்’ என்பது ‘மச்சான்’ ஆன மாதிரி. இப்போது மந்திரி என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தை கூடாது என்று, ‘அமைச்சர்’ தமிழ் வார்த்தை என்று நினைத்து அப்படிப் போட்டுக் கொள்கிறார்கள்! மாணிக்க வாசக ஸ்வாமிகள் அமாத்ய ப்ராமணர். பாண்டிய ராஜாவுக்கு அமாத்யராக (மந்திரியாக) இருந்து ‘தென்னவன் பிரமராயன்’ என்று பட்டம் வாங்கியவர். பிராம்மணர் என்பதால் ‘பிரம’. ராஜாவின் பிரதம அதிகாரி என்பதால் ‘ராயன்’, சோழ ராஜாக்களும் பிராமண மந்திரிகளை வைத்துக்கொண்டு அவர்களுக்குப் பிரமராயப் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். வைதிக தொழிலை விட்டுவிட்டு ராஜாங்கத்தில் ‘ஸிவில் அட்மினிஸ்ட்ரேஷன்’ செய்யும் ‘எக்ஸிக்யூடிவ் ஸைடு’க்குப் போன பிராமணர்களை அமாத்தியர் என்று பிர்த்து வைத்தது. பிராமணர்களிலேயே இன்னும் ஒரு படி தள்ளி மிலிடரி ஸர்வீஸுக்குப் போனவர்களை மாமாத்திரர் என்று பிரிவினை பண்ணிற்று. அந்த ஜாதிக்காரர்கள் வைத்தியத் தொழிலிலும் நிறையப் போயிருக்கிறார்கள். ஸேனையில் சேர்ந்து உயிரை எடுப்பது, வைத்தியராக உயிரைக் கொடுப்பது ஆகிய இரண்டு பணிகளும் விநோதமாக அந்த ஜாதியாருக்கு இருக்கிறது. அந்த ஜாதிதான் பரஞ்ஜோதி. அவரை இப்போது வேளாள ஜாதிக்காரராக ஆக்கிப் பிரசாரம் நடக்கிறது!

இந்தக் காலத்தில் தமிழ்ப் பண்பாடு வேறே, வைதிக நாகரிகம் வேறே என்று தப்பாக அபிப்பிராயப் பட்டுக்கொண்டு முடிந்த மட்டில் தமிழ் தேசத்தில், முன்காலத்தில் உசந்ததாக எந்த விஷயம் இருந்தாலும், அல்லது எந்த மநுஷ்யர்கள் இருந்தாலும், அந்த விஷயம் அல்லது மநுஷ்யர் வைதிக நாகரிகத்தில் வராமல், தமிழினம் என்று ஏதோ ஒன்றை இவர்கள் பிரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அதில் வந்ததாகவே ஜோடனை பண்ணிக் காட்டுவதாக ஏற்பட்டிருக்கிறது! நல்ல அறிவும் ஆராய்ச்சித் திறமையும் உள்ளவர்கள், நாவல் எழுதுகிறவர்கள் எல்லோருமே இப்படித்தான் தமிழ் நாகரிகமென்று ஏதோ ஒன்று தனியாக இந்த திராவிட தேசத்தில் வைதிகத்துக்கு வித்யாஸமாக, அதை அமுக்கிக் கொண்டு, பிரகாசமாக இருந்ததாக ஜோடித்து எழுதுகிறார்கள். ஆனால் அந்த அந்தக் காலத்துக் கல்வெட்டுகளைப் பார்த்தாலும் சரி, கவிகளும் புலவர்களும் பாடி வைத்துவிட்டுப் போயிருக்கும் தமிழ் நூல்களைப் பார்த்தாலும் சரி. இந்தப் புது அபிப்ராயத்துக்கு ஒரு ஆதாரமும் இல்லை. இதிலே ஒரு பக்கம் வேடிக்கையாகவும் இருக்கிறது. இன்னொரு பக்கம் கஷ்டமாகவும் இருக்கிறது. [வேடிக்கைக் கஷ்டம்] என்னவென்றால், வைதிகம் வேறே, த்ராவிடம் வேறே என்ற தப்பான அபிப்ராயம் பொது ஜனங்கள் மனஸில் அசைக்க முடியாமல் வேரோடி விட்டதாக நினைத்துக்கொண்டு, அவர்களுடைய ஆதரவைத் தாங்கள் ஸம்பாதிக்க வேண்டுமென்று பிராம்மணர்களிலேயே அறிவாளிகளாக இருக்கப்பட்ட சிலபேர் இந்த பேதத்துக்கு பலம் கொடுத்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்! தமிழ் தேசத்தில் பூர்வத்தில் ஆட்சி செலுத்தி வந்த மூவேந்தர்களும் ஸரி, பல்லவர்களும் ஸரி, வேத வித்யைகளுக்கும் வேத கர்மாக்களுக்கும் வேத ப்ராம்மணர்களுக்கும் பண்ணியிருக்கும் பெரிய தொண்டுகளை அடியோடு மறைத்துவிட்டு, அவர்கள் தமிழ் நாகரிகம் என்று ஏதோ தனியாக இருந்த ஒன்றைப் போஷித்த மாதிரியே எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். சரித்திரத்தை base பண்ணிக் கதை எழுதுகிறவர்கள் மாத்திரமில்லாமல் சரித்திர புஸ்தகமே எழுதுகிறவர்கள், தமிழிலக்கிய வரலாறு எழுதுகிறவர்கள், பண்டைத் தமிழ் நூல்களுக்கு இப்போது உரை எழுதுகிறவர்கள் ஆகியவர்களிலும் ரொம்பப் பேர் இந்த ரீதியில் எழுதுவதுதான் மிகவும் கவலையாயிருக்கிறது. இதனால் இவர்கள் இதுவரை ஜனங்களுக்கு இல்லாமலிருந்த பேத எண்ணங்களை உண்டாக்கி, வலிவு கொடுத்து வருகிறார்கள்.

பொதுவான பாரத கலாச்சாரத்துக்குள்ளேயே தான் அங்கங்கே வித்யாஸங்களிருப்பது. இது ‘ரீஜினல்’ (பிராந்திய) வித்யாஸம் தானே தவிர ‘ரேஷியல்’ (இன) வித்யாஸம் இல்லவேயில்லை. தமிழ் ஜனங்களுக்குள்ளேயே பழக்க வழக்கங்களிலும் பேச்சிலும் தென்பாண்டி நாடு, கொங்குதேசம், சோழ தேசம், வடார்க்காடு – தென்னார்க்காடு – செங்கல்பட்டு சேர்ந்த பழைய நடுநாட்டு – தொண்டை நாட்டுப் பகுதிகள் ஆகியவற்றுக்குள் எத்தனை வித்தியாஸங்களிருக்கின்றன? எதிலும் சேராமல், அத்தனையையும் அவியலாக்கி, இன்னும் சிலதையும் சேர்த்ததாகப் சென்னப் பட்டணத்தில் இருக்கிறது. ஸ்மார்த்தப் பொம்மனாட்டிகளின் (மடிசார்) கட்டிலேயே மூன்று நான்கு தினுஸு சொல்வார்கள்! அதனாலே வேறே வேறே ரேஸ் என்றாகிவிடுமா என்ன? அத்தனையையும் சேர்த்துக் கவிந்து கொண்டு ஒரே பாரத நாகரிகம்தான் இருக்கிறது. அதற்குள்ளேயே பாஷையிலே, ஸங்கீதத்திலே, சில்ப சித்ர பாணிகளிலே, பழக்க வழக்கங்களிலே வித்யாஸங்கள் இருக்கிறது. அதனால்தான் ‘போர்’ அடிக்காமல் வைசித்ரிய ருசி — வெரெய்டி அழகு — இருக்கிறது.

ஆனால் வெள்ளைக்காரர்கள் இரண்டு வெவ்வேறே ‘ரேஸ்’ என்று தங்களுடைய divide and rule policy [பிரித்து ஆளும் கொள்கை] யிலே அதி ஸாமர்த்தியமாகக் கட்டி விட்டதில் நம் ஜனங்களுக்கே வைதிக வடக்கு, அவைதிகத் தெற்கு என்ற அபிப்ராயங்கள் வேரூன்றி, நம் பக்கத்தில் சிலபேருக்கு வைதிகாசாரமே கரித்துப்போய், தமிழ் மக்களுக்கு அந்த வாடையே முடிந்த மட்டும் காட்டாமலிருக்க வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டிருக்கிறது.

இவர்களுக்கு வைதிகாச்சாரம் பிடிக்காமலே இருக்கட்டும். இவர்கள் வேதம் வேதியர்களுக்கு எதுவும் பண்ணால் போகட்டும். அது அவர்கள் இஷ்டம். ஆனால் இவற்றுக்காகவே அநேக மான்யங்கள் நிவந்தங்கள் விட்டும், இன்னும் வேறே தினுஸிலும் அந்தப் பூர்வ கால ராஜாக்கள் என்றைக்கோ பண்ணிவிட்டுப் போனதைக் கூடச் சொல்லாமல், மறைப்பதும், அது போதாதென்று அவர்கள் ஸ்வதந்த்ரமான ஒரு தமிழ்ப் பண்பாட்டுக்கே ஆதரவு கொடுத்து வளர்த்ததாகக் கல்பித்தும் சொல்வதும் கொஞ்சங்கூட நியாயமில்லை.

பழைய ராஜாக்களின் ‘இன்ஸ்க்ரிப்ஷன்’களில் — சிலா சாஸனங்களிலும், அதைவிட ஜாஸ்தியாக தாம்ர சாஸனங்களிலும் — பாதிக்கு மேல் ப்ராம்மணர்களுக்கும் [வேத] பாடசாலைகளுக்கும் ராஜமான்யங்கள் விட்டதைப் பற்றித்தானிருக்கும். அவர்களுடைய யுத்த வெற்றிகளைப் பற்றிக் கூட அவ்வளவு இல்லை. இந்த தான சாஸனங்களிலேயேதான் அந்த யுத்த வெற்றிகளையும் சொல்லியிருக்கும். தெய்வங்களுக்கு அல்லது பூதேவர்கள் என்னும் ப்ராம்மணர்களுக்குப் பண்ணிய தொண்டுகளைத்தான் கல்லிலும் செம்பிலும் அவர்கள் முக்கியமாக வெட்டி வைத்தார்கள்.

‘பிரமதேயம்’ என்று பிராமணர்களுக்கு தானமாகப் பழைய தமிழ் மன்னர்கள் நிறையக் கொடுத்திருக்கிறார்கள். ஆகாசத்தை ஆகாயம் என்றும், வசத்தை வயம் என்றும் சொல்வது மாதிரி ‘தேச’த்தைத் ‘தேயம்’ என்று சொல்வதுண்டு. இங்கே அப்படித்தான் சொல்லியிருக்கிறதென்று நினைத்து பிராமணருக்குக் கொடுத்த தேசப்பகுதி ‘பிரமதேயம்’ என்று சில பேர் தப்பாகச் சொல்கிறார்கள். இங்கே வரும் தேயத்துக்கும் தேசத்துக்கும் ஸம்பந்தமில்லை. ‘தேயம்’ என்ற [ஸம்ஸ்கிருத] வார்த்தைக்கு ‘தானமாகக் கொடுக்கப்படுவது’ என்று அர்த்தம். அத்யயனம் பண்ணினவர்களுக்கு ‘ச்ரோத்ரிய கிராமங்கள்’ என்று அநேக கிராமங்களைப் பண்டைத் தமிழ் மன்னர்கள் ஸர்வமான்யமாக விட்டிருக்கிறார்கள். ‘சதுர்வேதி மங்கலம்’ என்று முடிகிற பல ஊர்கள் இருக்கின்றன. இவையெல்லாம் தமிழ் ராஜாக்கள் ‘நான்மறையாளர்’ எனப்பட்டவர்களுக்கு தானம் பண்ணினவைதான். ‘அகரம்’ என்று அநேக ஊர்ப் பெயர்கள் முடிகிறதல்லவா? ‘அக்ரஹாரம்’ தான் சுருங்கி ‘அகர’மாயிற்று. இவையும் பிராமணர்களுக்குக் கொடுத்த ராஜமான்ய கிராமங்களே.

அந்தக்கால ராஜ சாஸனங்களில், கல்வெட்டுக்களாகவும், செப்பேடுகளாகவும் இருக்கிற சாஸனங்களில், எங்கேயாவது ஒரு இடத்திலாவது ஒரு ராஜா — அவன் சோழனோ, சேரனோ, பாண்டியனோ, வேறே சிற்றரசனோ, யாரானாலும் — தமிழினம், தமிழ் மரபு, தமிழி நாகரிகம், தமிழ்ப் பண்பாடு என்ற வார்த்தைகளைச் சொல்லி, தான் அதைப் போஷிப்பதாகச் சொல்லியிருக்கிறானா என்றால், அப்படி ஒன்றுகூட இல்லை. நான் ஒரளவுக்கு எனக்கு தெரிந்த மட்டில்1 துருவி துருவிப் பார்த்தும் அப்படி ஒன்றும் அகப்படவில்லை. “மனுநீதி விளங்க”, “மனுவாறு விளங்க” (ஆறு என்றால் மார்க்கம்) “அந்தணர் ஆகுதிக்கனல் ஓங்க”, “சாதி ஒழுக்கம் பிறழாது நிற்க”த் தாங்கள் ராஜ்யபாரம் செய்ததாகவே அந்த ராஜாக்கள் சாஸனங்களில் வெட்டி வைத்திருக்கிறார்கள்.

ஆரிய அரசர்களை எதிர்த்துச் செங்குட்டுவன் போராடி ஜயித்தான் என்பது போன்ற விஷயங்களைச் சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் சொல்லும்போதுகூட ‘ஆரிய’ என்பது ரேஸைக் குறிப்பதாக இல்லவே இல்லை. தமிழ் மூவேந்தர்களுக்குள்ளேயே ஒருத்தரோடொருத்தர் சண்டை போட்டுக் கொள்ளவில்லையா? அப்போது அவர்கள் ஆண்ட ப்ரதேசத்தை வைத்து ‘பாண்டிய நாட்டு ராஜாவை எதிர்த்தான்’, ‘சோழ நாட்டு ராஜாவை எதிர்த்தான்’ என்று சொல்கிறது போலவும், திராவிட தேசத்திலேயே அடங்கும் தெலுங்கு, கன்னட ராஜாக்களை எதிர்த்தான் என்பது போலவுந்தான் ஆர்யாவர்த்தம் என்ற பேரை வட இந்தியா முழுவதற்கும் விஸ்தரித்து அந்தப் பிரதேசத்தில் இருந்த ராஜாக்களை எதிர்த்ததை ‘ஆரிய அரசர்களை எதிர்த்தான்’ என்று சொல்லியிருக்கிறது. ரேஸை வைத்துச் சொல்லியிருந்தால், அந்த வட நாட்டிலே இருந்த ப்ராம்மணர்களும் நம்முடைய தெற்கத்தி ராஜாவுக்குச் சத்ருவாகத்தான் இருந்திருப்பார்கள். இப்போது தனித் தமிழ் நாகரிகத்தைச் சொல்கிறவர்களின் அபிப்பிராயப்படி ஆர்ய ராஜாக்களை விடவும் அந்த ப்ராம்மணர்கள்தான் தமிழரசர்களுக்குப் பரம சத்ருவாக இருந்திருக்க வேண்டும். ஆனால் சிலப்பதிகாரத்தைப் பார்த்தாலோ, சேர ராஜா செங்குட்டுவன் வடக்கத்தி ராஜாக்களோடுதான் யுத்தம் பண்ணினானே தவிர அங்கே இருந்த ப்ராம்மணர்களுக்கு ஒரு ஹானியும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டான் என்று ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. தேவ ரிஷிகள் — ‘விசும்பு முனிவர்’2 என்று இருக்கிறது — அவனுக்கு முன்னே வந்து, “ஹிமயமலை ராஜ்யங்களில் ‘அருமறை அந்தணர்கள்’ இருக்கிறார்கள். அவர்களைப் பேணல் உன் கடமை” என்று சொன்னதாக இருக்கிறது.3 அந்த ப்ராம்மணர்களுக்குச் சேர ராஜா செங்குட்டுவன் ஹானி பண்ணவில்லை என்பது மாத்திரமில்லை. தன் ஸைன்யத்திடம் அவன், “வட திசையில் வேள்வித் தீ அவியாமல் மறை காத்து வருகிறவர்கள் அருள் குணத்தினால் தண்ணென்று இருக்கும் பெருவாழ்க்கை வாழ்பவர்கள். அவர்களைப் போற்றி ரக்ஷிக்க வேண்டும்” என்று ஆக்ஞையிட்டதாகவும் இருக்கிறது.4

வடக்கத்தி ராஜாக்களை ஜயித்து, ஹிமயமலையிலிருந்து கண்ணகி சிலை பண்ணுவதற்காகக் கல்லெடுத்து, அதைத் தோற்றுப்போன ராஜாக்களுடைய தலையில் ஏற்றி, சேர நாட்டுக்குத் திரும்பி வந்தவுடன் செங்குட்டுவன் யாகமே பண்ணினதாகவும் வருகிறது. யாகம் செய்யவேண்டுமென்று அவனுக்குத் தமிழ்நாட்டு ப்ராம்மணன் ஒருத்தன் [மாடல மறையோன் என்பவன்] எடுத்துச் சொன்னதை அவன் மனஸாரக் கேட்டுக் கொண்டானென்பதை, “அந்த ப்ராம்மணன் ராஜாவின் காது என்கிற வயலில் உத்தமமான அர்த்தமுள்ள (“வான்பொருள்” என்று இருக்கிறது) தன் யோசனையாகிய விதைகளைத் தன்னுடைய வேதமயமான நாக்கு என்ற ஏறினால் உழுது விதைத்தான். அதிலிருந்து விளைகிற ஸ்வர்க்கவாஸம் அல்லது மோக்ஷம் என்ற பெரும் பதத்தை அறுவடை செய்து அநுபவிக்கணுமென்ற வேட்கை ராஜாவுக்கு ஏற்பட்டு, உடனே அவன் நான்மறை மரபாகிற வேத ஸம்ப்ரதாயத்தின் ஸூக்ஷ்மங்கள் தெரிந்த யஜ்ஞ ப்ராம்மணர்களைக் கொண்டு சாந்தி ப்ரதமான யாகம் ஆரம்பித்தான்” என்று சிலப்பதிகாரத்தில் விவரமாகச் சொல்லியிருக்கிறது.5

இதிலே ஆச்சர்யமென்னவென்றால், சிலப்பதிகாரம் எழுதினவர் “வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்”கிறவர்களென்று ஞானஸம்பந்தர் கண்டனம் பண்ணும் ஜைனர்களின் மதத்தைச் சேர்ந்த பிக்ஷு!

அப்புறம் அவர் கண்ணகி விக்ரஹம் ப்ரதிஷ்டையானதைச் சொல்கிறபோதும் —

இந்த நாளில், “வேதமந்திரம் சொல்லித்தான் ப்ரதிஷ்டை பண்ணணுமா? அன்போடு தமிழில் சொன்னால் தெய்வசக்தி விக்ரஹத்தில் ஏறாதா?” என்றெல்லாம் கேட்கிறார்கள். ஆனால் இவர்கள் தனித் தமிழ்த் தெய்வமாகச் சொல்லும் கண்ணகிக்கே செங்குட்டுவன் மூர்த்தி ப்ரதிஷ்டை செய்தபோது, ‘அறக்களத்து அந்தணரைக்’ கொண்டு பண்ணியதாகவே இளங்கோ – அவர்தான் சிலப்பதிகாரம் எழுதியவர் சொல்லியிருக்கிறார். ‘அறக்களத்து அந்தணர்’ என்பது ரொம்ப அழகான பதப் பிரயோகம். “யுத்தம் என்கிற மறக்களத்தில் சேர ராஜா வீர தீரம் பண்ணி, கண்ணகி சிலைக்கான கல்லெடுத்து அதை வடக்கத்தி ராஜாக்கள் தலையில் வைத்துக் கொண்டுவந்தாச்சு. இனிமேல் அந்தக் கல் தெய்வமாக வேண்டும். இதற்கு ராஜாவின் மறக்கள ஸாமர்த்தியங்கள் பிரயோஜனப்படாது. வேத தர்மமான அறக்களத்தைச் சேர்ந்த அந்தணர்களால்தான் அதைப் பண்ண முடியும்” என்ற இத்தனை அபிப்ராயத்தை ரத்னச் சுருக்கமாக அடக்கித்தான் ‘அறக்களத்தந்தணர்’ என்று போட்டிருக்கிறார். முதலில் அவர்களைச் சொல்லி, அப்படிப்பட்ட அந்தணர், தன்னுடைய குரு (அதாவது புரோஹிதர் : அவரும் ப்ராம்மணர்) ‘பெருங்கணி’ என்கிற ஜோஸ்யன், சில்பி ஆகியவர்களைக் கொண்டு மூர்த்திப் பிரதிஷ்டை பண்ணினான் என்று இருக்கிறது.6

இத்தனைக்கும் சிலப்பதிகாரம் எழுதியவர் வேத பாஹ்யமான [வேதத்திற்குப் புறம்பான] சமண மதத்தைச் சேர்ந்த துறவி! இப்போது என்னடாவென்றால் வைதிகாச்சாரத்தில் வந்த புலவர்கள், ஆராய்ச்சிக்காரர்கள், எழுத்தாளர்கள் முதலியவர்களே அந்தக் கால ராஜாக்களின் வைதிகப் பற்றை அடியோடு மறைத்துவிட்டு அது போதாதென்று அவர்கள் ஒரு நாளும் நினைத்துக் கூடப் பார்க்காத ஒரு தனித் தமிழ் கலாச்சாரத்தை அவர்கள் வளர்த்ததாக வேறு ஜோடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஸத்யத்தை மறைக்கிறதும் மாற்றுகிறதும் ரொம்பத் தப்பு. சரித்ரம் சொல்லும்போது அன்றைக்கு வாஸ்தவத்தில் இருந்ததை அடியோடு black-out [இருட்டடிப்பு] பண்ணி விட்டு, இன்றைக்குள்ள கொள்கைகளை அன்றைக்கிருந்தவர்கள் மீது ஆரோபித்து [ஏற்றி வைத்து] எழுதுவது நியாயமேயில்லை.

பிரதேச காலாசாரம் என்று அங்கங்கே கொஞ்சம் வித்யாஸமாகத்தான் இருக்கும். பேசுகிற பாஷையினாலும், வாழ்க்கைப் போக்குகளாலும், சீதோஷணாதிகளைப் பொறுத்தும் பொதுவான பாரத மரபு என்ற ஒரே அடிமரத்திலிருந்து வெவ்வேறு கிளை மரபுகள் தோன்றத்தான் செய்யும். வேரும் அடிமரமும் ஒன்றேத்தான். மேம்போக்கானதுதான் மற்ற பிராந்திய வித்தியாஸங்கள்.

ஆனால் இன்றைக்கு நம்முடைய பண்டைய கலாசாரப் பெருமைகளைப் பிரகாசப்படுத்துவதாகச் சொல்லி அநேக மஹாநாடுகள், ஸெமினார்களெல்லாம் நடத்துகிறார்களே, இதிலே அநேகமாக வேராகவும், அடிமரமாகவும் இருக்கும் பொதுவான வைதிக கலாசாரத்தை மறைத்தே விடுகிறார்கள். பிராந்திய கலாசாரங்களையே ஒரு தனியான முழு மரபு மாதிரி ஜோடித்து, ‘ஆர்யன்-ட்ராவிடியன்’ என்ற கல்பிதமான பரஸ்பர-குஸ்தி நாகரிகங்களில் ட்ராவிடியனைத்தான் தூக்கிக் காட்ட வேண்டும் என்ற அபிப்ராயத்தில் இல்லாததையெல்லாம் ஸ்ருஷ்டி பண்ணிச் சேர்த்துப் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள்.

பழைய சரித்திர புருஷர்களையும் ஸம்பவங்களையும் வைத்துக் கதை, கிதை அழகாகக் கட்டி ஜனங்களைக் கவரும்படியாக எழுதுகிறவர்களும் உண்மை நிலையை எழுதுவதில்லை. நிரம்ப ‘மாஸ்-அப்பீல்’ உள்ள துறையிலிருப்பவர்கள் இப்படி இருக்கிறார்களே என்று இருக்கிறது. இன்றைக்கு ஜனங்களில் பல பேர் புராணம், இதிஹாஸம், பழைய காலக் காவியங்கள் எல்லாம் பொய்க் கதை என்று தள்ளிவிட்டு, ‘ஆராய்ச்சி பண்ணி எழுதியது’ எனப்பட்ட இந்த நவீன காலக் கதைகளையே ‘அதாரிடி’யாக நினைப்பதால், நம்முடைய பூர்வகால சரித்திரத்தைப் பற்றி அவர்கள் தப்பாக — distorted ஆக — புரிந்து கொள்ளும்படி ஆகியிருக்கிறதே என்று கஷ்டமாயிருக்கிறது. ‘இன்றைக்கு நம் அபிப்ராயம் எப்படி வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் பூர்வ விஷயங்களைச் சொல்வதாக நாம் புறப்படும்போது அன்றைக்கு எப்படி இருக்கிறதோ அதைத்தான் உள்ளபடிச் சொல்லணும். நம்முடைய இக்கால அபிப்ராயங்களைப் பூர்வ காலத்தவர்கள் மேல் ஆரோபித்துச் சொல்லப்படாது’ என்ற அடிப்படை நியாயங்கூடத் தெரியாமலிருக்கிறார்களே என்று கஷ்டமாயிருக்கிறது.

ஒரு ராஜபாட்டை நீளநெடுகப் போகிறதுபோல வேத சாஸ்திர வழிதான் ஆதியிலிருந்தே இந்த பாரத தேசம் முழுதும் பரவலாக இருந்திருக்கிறது. அதிலிருந்தே கிளைச் சாலைகள் மாதிரிப் பிரதேச கலாசாரங்கள், ரொம்பவும் ஆதியிலேயே தமிழ்நாட்டினராக, தமிழ்மொழி பேசுபவர்களாக இருந்த தமிழர்களும் வைதிகாச்சாரத்தை ஏற்றவர்கள்தான். அதே சமயத்தில் இவர்கள்தான் கிளை மரபு என்றேனே, அப்படி தமிழ் நாட்டுக்கு மட்டும் உரிய சில பழக்க வழக்கங்கள், கலையம்சங்கள் முதலியவை ரூபமாவதற்கும் காரணமாக இருந்தவர்கள். இந்த ரீதியில் பார்க்கிற போது சங்ககாலம் முடிய இருந்த முற்கால சேர சோழ பாண்டிய மூவேந்தர்களை வேண்டுமானால் தமிழ்க்கிளை மரபைப் பேணியவர்கள் என்று சொல்ல நியாயமுண்டு. அதுவும் கிளை மரபாகத்தான் இவற்றைப் பேணினார்கள். மூல மரபான மரமாக அவர்களும் பாரத தேசத்திற்கே பொதுவான வைதிக கலாசாரத்தைத்தான் பேணினார்கள். மரத்திலிருந்து தனியாகத் துண்டித்து கிளை வரள முடியாது. இயற்கையாக கிளை வந்தது. அதையும் பேணினார்கள். தனித் தமிழ்ப் பண்பாடு என்று ஒன்றை அவர்கள் நினைக்கவேயில்லை.

ஆனால் இன்றைக்கு எழுதுகிறவர்கள், பேசுகிறவர்கள் அந்த மூவேந்தர்களுக்கும் அப்புறம் வந்த பல்லவர்களையும் தனித் தமிழ்ப்பண்பாட்டை வளர்த்தவர்களாகவே சித்தரிப்பதுதான் ரொம்ப ஆச்சர்யம்! மூவேந்தர்களும் தங்களை ஸூர்ய வம்சம், சந்த்ர வம்சம், சிபியின் பரம்பரை என்றெல்லாந்தான் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் அவர்களில் பலருடைய பெயராவது நெடுஞ்சேரலாதன், சேரமான் பெருமாள், கரிகால் வளவன், கிள்ளி வளவன், நெடுஞ்செழியன், நெடுமாறன் என்றெல்லாம் தமிழ்ப் பெயர்களாக இருக்கின்றன. ஆனால் பல்லவ ராஜாக்களுக்கோ ஸ்கந்தசிஷ்யன், குமார விஷ்ணு, ஸிம்ஹவர்மா, ஸிம்ஹ விஷ்ணு, மஹேந்திரன், நரஸிம்ஹன், பரமேச்வரன், நந்திவர்மா, தந்திவர்மா என்று எல்லாம் ஸம்ஸ்கிருதப் பெயர்களாகவே இருக்கின்றன. குடுமியாமலையில் ஸங்கீத விஷயமாக உள்ள மஹேந்திரவர்மாவின் கல்வெட்டும், இன்னும் அவர்களுடைய அநேக சாஸனங்களும் ஸம்ஸ்கிருதத்திலேயே இருக்கின்றன. அவர்கள் தங்களை ‘பரம ப்ரஹ்மண்யர்’ என்று இந்த சாஸனங்களில் பொறித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஸம்ஸ்கிருத கடிகைகளை நிறையப் போஷித்திருக்கிறார்கள். பிராம்மணனை ‘சர்மா’ என்கிற மாதிரி க்ஷத்ரியரை ‘வர்மா’ என்று சொல்ல வேண்டும். அந்தப்படி பல்லவர்கள் மஹேந்திர வர்மா, நரஸிம்ஹ வர்மா, பரமேச்வர வர்மா, நந்தி வர்மா என்று ‘வர்மா’ போட்டுக் கொண்டவர்கள். தங்களை பாரத்வாஜ கோத்ரத்தினர் என்று சொல்லிக் கொண்டவர்கள்.

அவர்கள் காலத்தில்தான் அப்பர், ஸம்பந்தர், திருமங்கையாழ்வார் முதலியவர்களுடைய தெய்விகமான தமிழ்ப் பாட்டுகளும் தோன்றிற்றென்பது வாஸ்தவந்தான். ஆனால் இந்தப் பாட்டுகளை அநுக்ரஹம் பண்ணிய பெரியவர்களும் வைதிக வழியை வளர்க்க வந்தவர்களே. ‘வேதநெறி தழைத்தோங்க’ வைத்தவர்களே. அவர்களையும் சரி, அந்தப் பல்லவ ராஜாக்களையும் சரி, இந்த நாளில் ‘ஆர்யன் வெர்ஸஸ் ட்ராவிடியன்’ என்கிற ‘வெர்ஸ’ஸில் கொண்டுவிட்டுத் தனித் தமிழ் நாகரிகத்தை வளர்த்தவர்கள் என்று சொல்வது கொஞ்சங்கூட ஸரியில்லை.

வேத ஸம்ப்ரதாயந்தான் உசத்தி என்று நிலை நாட்டுவதற்காக இதையெல்லாம் நான் சொல்ல வரவில்லை. வேதமோ, வேறே ஒன்றோ, எதுவானாலும் இந்த தேசம் பூராவுக்கும் ஒரே ஸம்பிரதாயந்தான் என்று எல்லாரும் புரிந்துகொண்டு பேதமில்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்ற ஆசையில்தான் சொல்கிறேன். வேதம் வேணும் என்பதைவிட, ‘நமக்குள் பேதம் வேண்டாம், வேண்டவே வேண்டாம். வெள்ளைக்காரர்கள் அவர்கள் கார்யம் நடப்பதற்காக கட்டி விட்ட ‘ரேஸ் தியரி’யை நாமும் அப்படியே நம்பிக் கட்சிகளாக உடைந்து நின்றுகொண்டு, த்வேஷமும் போட்டியுமாக இருக்க வேண்டாம். அல்லது இப்படி சண்டை வேண்டாமே என்பதற்காக ஸத்யத்தை விட்டுக் கொடுத்து இல்லாத ஒரு மரபை இருந்ததாகப் பெருமைப் படுத்திப் பிரகடனம் பண்ண வேண்டாம். தமிழ் மரபுக்காரர்கள் நடுவாந்தரத்தில் ஏதோ அசட்டுத்தனமாக ஏமாந்து போய் வேத மரபிலிருந்து அநேகம் எடுத்துக் கொண்டு விட்டதாகவும், இப்போது நாம் அதையெல்லாம் உரித்துப் போட்டுவிட்டுக் கலப்பில்லாத ஸ்வய மரபாகப் பண்ண வேண்டுமென்றும் முயற்சிகள் பண்ண வேண்டாம். கைலாஸத்திலிருந்து ராமேச்வரம் வரை உள்ள நாம் அத்தனை பேரும் அந்த இரண்டு இடத்திலேயும் ப்ரபுவாக உள்ள ஒரே பரமேச்வரனுடைய குழந்தைகளாக, ஸஹோதரர்களாக இருக்க வேண்டும்’ என்பதற்காகத்தான் சொல்கிறேன். இந்த உசந்த தமிழ் தேசத்தில் — உலகத்திலேயே அதிகமான கோவில்களையும், பக்தி நூல்களையும் கொண்ட தேசத்தில் எத்தனையோ ஆயிரம் வருஷமாக ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக இருந்தவர்களுக்கிடையில் பேத எண்ணம் வலுக்காமல் ஒன்று சேர்ந்து வாழணும்; அதே ஸமயம் ஸத்தியத்தை விட்டுக் கொடுக்காமல் யதார்த்தங்களை ஒப்புக் கொள்ளும் ஸத்யஸந்தர்களாக ஒன்று சேரணும் என்பதே என் ப்ரார்த்தனையாக இருக்கிறது. ‘லோகம் முழுக்க நன்றாக இருக்கணும்’ என்று வேண்டிக் கொள்ளும்போதே குறிப்பாக இந்த தமிழ் தேசத்திலே எல்லா ‘ஒழிக!’ சப்தமும் போய் ‘ஒன்றுக!’ சப்தமே, சப்தமாக மட்டுமில்லாமல் கார்யமாக நடக்க வேண்டுமென்றுதான் சந்த்ரமௌளீச்வரரிடம்7 ஒவ்வொரு வேளையும் முறையிடுகிறேன்.

இப்போது நான் அலசினதில் யாரையாவது கண்டித்து, கிண்டித்துச் சொல்லியிருந்தால்கூட அந்தக் கண்டனத்தையெல்லாம் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். கண்டிக்கிறதும் பிரிந்து நிற்காமல் ஒன்றாக சேர்க்கிற நோக்கத்தில்தான். இல்லாததைச் சொல்லித்தான் ஒன்று சேரணும் என்றில்லை; ஒரு பெரிய உண்மையை ஒளித்துத்தான் ஒன்று சேரணும் என்றில்லை; ஸத்தியம் வேண்டும், ஐக்கியமும் வேண்டும். ஸத்தியத்தோடேயே ஐக்கியம் ஏற்படட்டும் என்றுதான் சொல்வது. விபரீதமாகச் சிலது பண்ணுகிறபோது கண்டித்துச் சொன்னால்தான் எடுபடும் என்றே அப்படிச் சொல்வது. அடிப்படையில் ஆசை, நோக்கமெல்லாம் அத்தனை பேரும் அரன்குடி மக்களாக அன்போடு ஒன்று சேரணும் என்பதுதான்.

அரனுடைய மூத்த மகனைப் பற்றி சொல்ல ஆரம்பித்தது, நாம் எல்லோரும் அரன் குடி மக்களாக சேர அந்த மகனுடைய அருள் ரொம்ப முக்கியம். நமக்குத் தெரியாமலே அவர் இதைப் பண்ணிக் கொண்டுத்தானிருக்கிறார். எப்படியென்றால், அவருக்குத் ‘தமிழ் தெய்வம்’ என்று இதுவரை யாரும் முத்திரை குத்தவில்லை. ஆனாலும் தமிழ் நாட்டில் அவருக்கு இருக்கிற அளவுக்கு வேறே எந்த ஸ்வாமிக்கும் கோவிலில்லை. அவருக்கு தமிழ்நாட்டிலிருக்கும் அளவுக்கு வேறே எந்த மாகாணத்திலும் கோவிலில்லை. ‘ரேஸ்’ எண்ணங்கள் எழும்புவதற்கே இடம் கொடுக்காமல் நம் எல்லோரையும் அவர் பக்தியில் சேர்த்துப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார். அறிவுக்கும் தெய்வமாக இருக்கப்பட்ட அவரே ஸரியான ஸத்தியமான ஒற்றுமை வழியில் நம்முடைய ஆராய்ச்சிகள் போவதற்கும், விபரீதமான முடிவுகள் பண்ணாமலிருப்பதற்கும் வழிகாட்ட வேண்டும்.

1 ஸ்ரீசரணர்கள் தன்னடக்கத்துடன் இவ்விதம் கூறியுள்ளார்கள். “பெரியவர்கள் அறிந்த அளவுக்கு எபிக்ராபிகா இண்டிகாவில்கூட சாஸன விவரங்கள் இருக்குமா என்பது சந்தேகம்!” என்று தொல்பொருள் ஆய்வுத்துறை தலைமை இயக்குநராயிருந்த நிபுணர் டி.என். ராமசந்திரன் வியந்து கூறுவார்.

2 “விசும்பியங்கு முனிவர்” (சிலம்பு-வஞ்சி-கால்கோள் காதலி 92)

3 அருமறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர்
பெருநில மன்ன பேணல் நின்கடன்
(சிலம்பு-வஞ்சி-கால்கோள் காதலி 102-103)

4 வடதிசை மருங்கின் மறைகாத் தோம்புநர்
தடவுத்தீ அவியாத் தண்பெரு வாழ்க்கை
காற்றூ தாளரைப் போற்றிக் காமின்
(சிலம்பு-வஞ்சி-கால்கோள் காதலி 248-250)

5 மறையோன் மறைநா உழுது வான்பொருள்
இறையோன் செவிசெறு வாக வித்தலின்
வித்திய பெரும்பதம் விளைந்து பதமிகுத்துத்
துய்த்தல் வேட்கையிற் சூழ்கநல் வேந்தன்

நான்மறை மரபின் நயம்தெரி நாவின்
கேள்வி முடிந்த வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி

(சிலம்பு-நடுகற்காதை 187-194)



















எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)





வாதாபி கணபதியின் கதை :

பல்லவர்களுக்கும் (காஞ்சியை தலைமையிடமாக கொண்ட தமிழ் மன்னர்கள்) சாளுக்கிய மன்னனா புலிகேசிக்கும் (கர்நாடக மன்னர்கள்) கி.பி 642ல் சாளுக்கிய தலைநகரான வாதாபியில் போர் நடைபெற்றது.

வாதாபியில் போர்
மூலம் : Google தளம்  

பல்லவர்கள் படைக்கு பரஞ்ஜோதி என்ற சோழநாட்டு வீரர் தளபதியாக செயல்பட்டு போரை நடத்தினார். போரில் புலிகேசி கொல்லப்பட, பல்லவ படைகள் பெரு வெற்றியடைந்தன. போர் முடிவில் சாளுக்கிய தலைநகர் வாதாபி சூறையாடப்பட்டது.

பல்லவ தளபதி பரஞ்சோதி (பின்னர் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார்) போர் வெற்றியின் நினைவாக வாதாபியில் இருந்து விநாயகர் சிலை ஒன்றை கொணர்ந்து தனது ஊரான திருச்செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்ததாக கர்ணபரம்பரையாக சொல்லப்படுகிறது. (இந்த கதைக்கு வரலாற்று சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை)

இதே கதையை கொஞ்சம் மாற்றி பரஞ்சோதி தான் கொண்டுவந்த விநாயகர் சிலையை திருவாரூர் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படுகிறது.

இதில் எது உண்மை ? 


பல்லவ சாளுக்கிய போரை மையப்படுத்தி எழுதப்பட்ட சிவகாமியின் சபதம் நூலில் எழுத்தாளர் கல்கி வாதாபி கணபதி திருச்சங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவே குறிப்பிடுகிறார்.
ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கல்கியின் கூற்றை மறுக்கின்றனர்.

திருவாரூர் கோவிலை பற்றி மிக நுணுக்கமாக ஆராய்ச்சி செய்த பிரபல கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் திருவாரூர் கோவிலில்  முதல் பிரகாரத்தில் (தியாகராஜர் சிலைக்கு பின்புறம்) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகரே உண்மையான வாதாபி விநாயகர் என தனது திருவாரூர் திருக்கோவில் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.







No comments:

Post a Comment