#பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா நினைவுநாள் இன்று..
'எம்.ஆர்.ராதா லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் சுட்டார்'
-என அரசுத் தரப்பு வக்கீல் நீதிமனாறத்தில் குற்றம் சாட்டிக் கொண்டே போக, ஒருகட்டத்தில் கடுப்பான ராதா,
"யுவர் ஆனர். வழக்கில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.
'லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் ராதா சுட்டார்' என அரசுத் தரப்பு வக்கீல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். துப்பாக்கியால் சுட்டதில் நானும் சாகவில்லை. ராமச்சந்திரனும் சாகவில்லை. யாரையும் கொல்லாத ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையா?" எனக் கேட்க, அதிர்ந்தது நீதிமன்றம்.
ஆம் இது எம்ஜியார் சுடப்பட்ட வழக்கில் எம்.ஆர்.ராதா நீதி மன்றத்தில் கூறிய வார்த்தைகள்...துப்பாக்கிச் சூடு வழக்கு மிக விரைவாக நடந்தது. நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித்தார். ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார். மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே தண்டனை காலம் ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவருடைய நன்னடத்தை காரணமாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.தண்டனைக் காலத்தில் அவரது சிறைக் கொட்டடியில் வெளிநாட்டு கைதி ஒருவரும் தங்கியிருந்தார். அந்தக் கைதிக்கு ராதா சமைத்துப் போட்ட கேசரியும், சாம்பாரும் ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. ஒருநாள் பேச்சுவாக்கில் ஒன்றைக் கேட்டார் ராதா.
"ஏன்யா வெள்ளைக்காரா...உங்கள் ஊரில் எப்படி... 30 வருஷம் வக்கீலாக இருக்கறவர்தான் ஜட்ஜா வருவாரா?" எனக் கேட்க, அந்த வெளிநாட்டுக் கைதியும்,
"ஆமாம். எங்கள் ஊரிலும் அதே வழக்கம்தான்" எனச் சொல்ல, பலமாக சிரித்த ராதா,
"அதெப்படிய்யா...முப்பது ஆண்டுகளும் பொய்யை மட்டுமே வழக்காகவும், வாழ்க்கையாக வச்சுட்டு வாதாடி சம்பாதிக்கற ஒருத்தர் ஜட்ஜா வந்து உட்கார்ந்ததும், 'மை லார்டுன்னு' சொல்றோமே. இந்த அநியாயம் வேறெங்காவது நடக்குமா?"
-எனக் கேட்க, வெளிநாட்டுக் கைதி யோசனையில் ஆழ்ந்தாராம். அதுதான் எம்.ஆர்.ராதா.துப்பாக்கிச் சூடு வழக்கில் இருந்து வெளியே வந்துவிட்டாலும், 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின்போது, மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார் ராதா.
'திராவிடர் கழகத்துடன் தொடர்பில்லை' என எழுதித் தந்தால் விடுதலை செய்வதாகக் கூறியும், நிபந்தனையை ஏற்க மறுத்து பதினொரு மாதங்கள் சிறையில் இருந்தார் எம்.ஆர்.ராதா.
கடைசிவரை, எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளாமல் இருந்த எம்.ஜி.ஆரும் ராதாவும் சந்தித்துக் கொண்டது பெரியாரின் இறப்பின்போதுதான். எம்.ஆர்.ராதா மலேசிய சுற்று பயணத்தை முடித்துவிட்டு தாயகம் திரும்பிய அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி அவர் இறந்தார்.
அவர் மறைந்த போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முன்வந்தாலும், ராதா குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அரசு மரியாதையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
No comments:
Post a Comment