Schindler’s List - திரைவிமர்சனம்
Doha Talkies
இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களின் மீது ஹிட்லரின் தலைமையில் நாஜிப்படைகள் நிகழ்த்திய மிகப்பெரிய இனப்படுகொலையும், அதில் மனிதநேயமுள்ள ஜெர்மனியை சேர்ந்த ஒருவன் 1200 யூதர்களை எப்படி காப்பாற்றுகிறான் என்பதை பற்றி தான் இந்த படம் சொல்லுகிறது.
இது இரண்டாம் உலகப்போரின் போது 1200 யூத இன மக்களின் உயிரை காப்பாற்றிய ஆஸ்கர் ஷிண்ட்லெர் (Oskar Schindler) என்பவரை பற்றிய உண்மை சம்பவம்.
இந்தப்படம் மனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி மற்றும் ஒரே ஒரு தனி மனிதனால் கூட சமுகத்தில் அன்பையும் மாற்றத்தையும் கொண்டு வர முடியும் என்பதினை பற்றியும், குற்றம் நடக்கும் போது கண்மூடி மறுதலிக்கும் நம்மை போன்ற சக மனிதர்களை பற்றிய உண்மையை விவரிக்கிறது.
ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்வில் ஒரு ஹீரோ அல்லது ஒரு ரோல் மாடல் உண்டு. உதாரணமாக, அசாதாரணமான செயல்கள் செய்தவர்கள், விளையாட்டு வீரர்கள், பேச்சாளர்கள், போராளிகள் இது போல ஒருவரை நாம் ஹீரோவாக ஏற்றுகொள்கிறோம் அல்லவா? அது போல ஆஸ்கர் ஷிண்ட்லெர் என்ற சாதாரண மனிதர், உலகெங்கும் உள்ள யூதர்களுக்கும் மற்றும் மனிதநேயம் பரவ போராடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் ஹீரோ. அவர் 1200 யூதர்களை இரண்டாம் உலகப்போரின் போது எப்படி காப்பாற்றினார்? அதைப்பற்றி தான் இந்த திரைப்படம் கூறுகிறது
தாமஸ் கேநீல்லி(Thomas Keneally) என்பவர் எழுதிய “Schindler’s Ark” என்ற நாவலை மையமாக வைத்து தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
இப்படம் 12 ஆஸ்கார் அவார்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு 7 ஆஸ்கார்களை, சிறந்த இயக்குனர் - ஸ்டீபன் ஸ்பீல்பர்க்(Steven Spielberg), சிறந்த இசை –ஜான் வில்லியம்ஸ் (John Williams), சிறந்த ஒளிப்பதிவு – (Janusz Kaminski), சிறந்த படத்தொகுப்பு – (Michael Kahn), சிறந்த கதை – Steven Zaillian, சிறந்த கலை இயக்கம் – (Allan Starski, Ewa Braun) மற்றும் சிறந்த படத்திற்காக – (Steven Spielberg, Gerard R.Molen, Branco Lustig) அள்ளியது.
இந்தப்படத்தில் லியாம் நீசன்(Liam Neeson) ஆஸ்கர் ஷிண்ட்லெர் ஆகவும் , ரால்ப் பினெஸ்(Ralph Fiennes) அமோன் கோஎத் ஆகவும் , பென் கிங்க்ஸ்லி(Ben Kingsley) இட்ஷாக் ஸ்டேர்ன் ஆகவும், நடிக்கவில்லை வாழ்ந்தே இருக்கிறார்கள். ஸ்டீபன் ஸ்பீல்பர்க்(Steven Spielberg) இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் IMDB Top 250 -ல் 7-வது இடத்தை பிடித்துள்ளது.
இது இரண்டாம் உலகப்போரின் போது(1939-1945) கிரகோவ் போலந்தில்(Krakow – Poland) நடந்த ஒரு உண்மை சம்பவம். இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனிய நாஜிப்படைகள் போலந்தை வெற்றிக்கொண்டு, அங்கு வசிக்கும் யூதர்களை சிறைப்பிடித்து கிரகொவிற்கு ஒரு ரயிலில் அடைத்து அனுப்புகிறார்கள்.
ஆஸ்கர் ஷிண்ட்லெர் ஜெர்மனியை சேர்ந்த தொழிலதிபர், அடிமை தொழிலாளர்கள் மிகக்குறைந்த விலைக்கு போலந்தில் உள்ள கிரகொவில் கிடைப்பார்கள் என்று அங்கு வருகிறான். தனக்கு நாஜிப்படை தளபதிகளிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி யூத மக்களை தனது எனாமல் தொழிற்சாலைக்கு வேலையாட்களாக அழைத்துச்செல்கிறான்.
இதுப்போல் வேலையாட்களாக பயன்படுத்த முடியாத யூதர்களை நாஜிப்படைகள் சித்ரவதை கூடங்களில் வைத்து கொன்று விடும். போலந்து போர்க்கைதிகளை வேலைக்கு அமர்த்தினால் அதிக கூலி கொடுக்கவேண்டும், அதனால் யூதர்களை வேலையாட்களாக தேர்ந்தெடுக்கிறான் ஆஸ்கர் ஷிண்ட்லெர். அவர்களுக்கு மிகச்சொற்பமான கூலி கொடுத்தால் போதும், அதுவும் கூட SS எனடப்படுகிற நாஜிப்படையின் ஒரு முக்கியமான பிரிவில் உள்ள படைத்தளபதியிடம் கொடுத்தால் போதும்.
அப்படி தேர்ந்தெடுக்கப்படும் யூத தொழிலாளர்களுக்கு நீல நிற அட்டை வழங்கப்படும். அப்படி கொடுக்கப்பட்டால் நாஜிப்படையினருக்கு தேவையான மிக அத்தியாவிசியமான உற்பத்தி பொருட்கள் செய்பவர்கள் என்று அர்த்தம். அவர்களை நாஜிக்கள் கொல்லமாட்டார்கள்
நாஜித்தலைமை தங்கள் படை வீரர்களுக்கு தேவையான சமையல் பாத்திரங்கள் செய்து தரும்படி ஆஸ்கர் ஷிண்ட்லெர்க்கு உத்தரவு போடுகின்றது, ஆனால் ஆஸ்கர் ஷிண்ட்லெர் யூத தொழிலாளிகளை பெறுவதற்காக நாசி உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தன்னிடம் உள்ள பாதி பணத்தை இழந்துவிடுகிறான். பாத்திரங்கள் செய்யும் இயந்திரங்கள் வாங்க அவனிடம் போதுமான பணமில்லை. அதனால் அவனிடம் வேலை செய்யும் யூதர்களிடம் ஒரு ஒப்பந்தம் போடுகிறான், யூதர்கள் தன்னிடம் உள்ள பணத்தை தொழில்சாலைக்கு கொடுத்தால் அதில் வரும் லாபத்தில் ஒரு பங்கு தருவதாக சொல்கிறான்.
சிறிது காலத்தில் தொழிற்சாலை மிக லாபகரமாக இயங்குகிறது. அந்த தொழிற்சாலையில் உள்ள யூதர்களின் தலைவன் இட்ஷாக் ஸ்டேர்ன், ஆஸ்கர் ஷிண்ட்லெர் கொடுக்கும் லாபப்பணத்தை வைத்து மற்ற சித்ரவதை கூடங்களில் இருக்கும் சில யூதர்களை லஞ்சம் கொடுத்து மீட்டு தொழிற்சாலையில் சேர்த்து நீல அட்டை வாங்கிக்கொடுக்கிறான்.
அந்தச்சமயத்தில் நாஜிப்படையின் உயர் அதிகாரி அமோன் கோயேத் கிரக்கொவிற்கு ஒரு புதிய தொழிலாளர்களுக்காக கூடம் துவங்குவதற்கு வருகிறான். மிகக்கொடூரமான உள்ளம் படைத்த அவனுக்கு காலையில் எழுந்தவுடன், அவன் தங்கி இருக்கும் மாடியில் இருந்து துப்பாக்கியை எடுத்து கண்ணில் தெரியும் யூதர்களை சுடுவது தான் வழக்கம். இது தான் அவனது பொழுதுப்போக்கு. பின்பு ஒரு நாள் சித்ரவதை கூடத்தில் இருக்கும் யூதர்கள் அனைவரையும் சுட்டுக்கொல்ல உத்தரவு இடுகிறான். இதனால் ஆயிரக்கணக்கான யூதர்கள் பரிதாபமாக மாண்டுப்போகிறார்கள்.
இந்தக்கொடூரச்சம்பவத்தை பார்த்த ஆஸ்கர் ஷிண்ட்லரின் மனம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. பணம் மட்டும் தான் குறிக்கோளாக இருந்த ஆஸ்கர் ஷிண்ட்லெர் இதற்கு பிறகு தன்னால் முடிந்தவரை தனது தொழிற்சாலையில் யூதர்களை சேர்த்து அவர்களின் உயிரை காப்பாற்றவேண்டும் என்று நினைக்கிறான். அதனால் அமோன் கோயேத் உடன் நட்புக்கொள்கிறான், பின்பு அவன் அனுமதியுடன் கடுமையான வேலை செய்ய முடியாத பெண்கள், சிறு குழந்தைகளை தனது தொழிற்சாலையில் பணிக்கு சேர்க்கிறான். இப்பொழுது ஆஸ்கர் ஷிண்ட்லரின் குறிக்கோள் தன்னால் முடிந்த வரை சித்ரவதை கூடங்களில் இருக்கும் யூதர்களை காப்பாற்றி தொழிற்சாலையில் சேர்ப்பது தான்.
அமோன் கோயேத்திற்கு இந்த தருணத்தில் பெர்லினில் இருந்து ஒரு கட்டளை வருகிறது, அதில் அங்கு உள்ள யூதர்களை முற்றிலுமாக கொன்றுவிட்டு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பணியாட்களையும் கூட கொன்று விட்டு auzchwitz க்கு வரச்சொல்கிறது.
இதனை அறிந்த ஆஸ்கர் ஷிண்ட்லெர் மிகவும் கவலை கொள்கிறான். சட்ட விரோதமாக யூதர்களை பாதுகாத்து வைப்பது நாஜிக்களுக்கு தெரிந்தால் தனக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும், அவன் அமோன் கோயேத்திடம், அவனிடம் உள்ள யூத தொழிலாளர்களை தன்னுடைய பழைய ஊரான செக்கொச்லோவியாவுக்கு கூட்டிச்சென்று அங்கு உள்ள தனது தொழிற்சாலையில் பயன்படுதிகொள்வதாகக் கூறுகிறான். இதற்கு பல லட்சங்கள் பணமாக வேண்டும் என்று அமோன் கோயேத் சொல்கிறான், அதற்க்கு சம்மதிக்கும் ஆஸ்கர் ஷிண்ட்லெர் பணத்தை தருவதாக ஒத்துக்கொள்கிறான், ஆனால் தொழிலாளர்கள் அனைவரும் செக்கொச்லோவியா போகும் வரை நாஜிப்படைகள் பாதுகாப்பு தரவேண்டும் எனக்கூறுகிறான்.
தன்னிடம் உள்ள எல்லா பணத்தையும் கொடுத்து 1200 யூத தொழிலாளர்களை செக்கொச்லோவியா அழைத்து செல்ல அமோன் கோயேத்திடம் அனுமதி பெறுகிறான்.
1200 யூதர்களை ஆஸ்கர் ஷிண்ட்லெர் செக்கொச்லோவியா அழைத்து சென்றானா?
யூதர்களை பாதுகாத்த குற்றத்திற்காக அவனுக்கு தண்டனை கிடைத்ததா?
இரண்டாம் உலகப்போர் இந்த சூழ்நிலையில் முடிவுக்கு வந்ததா?
என்பதனை இந்த மிக அருமையான திரைப்படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
இந்தப்படம் பார்த்த பாதிப்பு என்னை விட்டு இன்றும் அகலவில்லை. நிறைய கேள்விகளை இப்படம் என்னுள் எழுப்பியது. எதற்காக ஆஸ்கர் ஷிண்ட்லெர் இப்படி செய்தான் ? நாஜிக்களுக்கு யூதர்களை காப்பாற்றியது தெரிந்தால் தனக்கு மரண தண்டனை கிடைக்கும் அல்லது போர் முடிவுக்கு வந்தால் நேசநாடுகள் ஜெர்மனியை சேர்ந்த குற்றத்திற்காக மரண தண்டனை வழங்கும். தனக்கு சம்பந்தம் மற்றும் பிரயோஜனமில்லாத மக்களுக்காக தனது உயிரையும் உடமையும் கொடுத்த ஆஸ்கர் ஷிண்ட்லெர் போல் மன உறுதியும், தைரியமும், மனிதாபிமானமும் எனக்கு உண்டா?
சமீபத்தில் ஒரு கேள்வி பதில் பக்கத்தில் இதைப்படித்தேன்.
கேள்வி : கருணைக்கும் பரிதாபத்திற்கும் என்ன வித்தியாசம்?
பதில் : சாலை ஓரத்தில் ஒரு சக மனிதன் விபத்தில் அடிப்பட்டு வீழ்ந்து கிடக்கும் போது "ஐயோ பாவம்? என்று சொல்லிவிட்டு தமது வேலையை பார்க்க செல்வது - "பரிதாபப்படுவது"
அந்த மனிதனை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்ப்பது - "கருணை".
நம்மில் எத்தனை பேர் கருணை உள்ளவர்களாக இருக்கிறோம்?
இந்தப்படத்தில் இட்ஷாக் ஸ்டேர்ன் ஆகநடித்த பென் கிங்சிலீ ஒரு வசனம் கூறுவார். "ஆஸ்கர் ஷிண்ட்லெர் எங்களுடைய உயிரை மட்டும் காப்பற்றவில்லை, மனிதநேயத்தின் மேல் உள்ள எங்கள் நம்பிக்கையையும் கைப்பற்றினார்".
எவனொருவன் ஒரு மனித உயிரைக் காப்பற்றுகிறானோ அவன் மனித இனத்தையே காப்பாற்றுகிறான் என்ற ஒரு சொல் உண்டு.
ஒரு தனி மனிதனால் கூட சமூகத்தில் அன்பையும் , மாற்றத்தையும் மற்றும் மனிதநேயத்தை தழைக்கச்செய்ய முடியும் என்று காட்டிய ஆஸ்கர் ஷிண்ட்லெர் ஒரு மிகப்பெரிய ஹீரோ தான்.
போர், யுத்தம் போன்ற வார்த்தைகள் அகராதியில் இருந்து எப்போது நீங்கும்? உலகெங்கும் சமாதனம், என்று வரும் அந்த நாள்?
நம் அனைவரின் மனதில் மனிதநேயம் மற்றும் அன்பு தழைத்தோங்க வேண்டும். ஆஸ்கர் ஷிண்ட்லெர் போல் நம் அனைவரிடம் மனிதநேயம் தழைத்தோங்கினால் நிச்சயமாக அந்த நாள் வந்தே தீரும்.
நிஜ ஆஸ்கர் ஷிண்ட்லெர்க்கு இன்றும் கூட அவரால் உயிர்ப்பிழைத்த யூதர்கள் அவரின் நினைவு நாளுக்கு கல்லறைக்கு சென்று மலரஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்தப்படம் பார்த்தே தீர வேண்டியப்படம்.
உலகின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றான 'ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட்' பற்றி எழுத வேண்டும் என எத்தனை முறை அமர்ந்தாலும் தோல்வியே கண்டிருக்கிறேன். அதை அந்த பரவசத்தை சாதாராணமாக அணுகி விடக்கூடாது என்ற தயக்கமே காரணம். ஆஸ்கார் ஷிண்ட்லரை மனிதருள் மாணிக்கம் , மறக்கடிக்கப்பட்ட மகாத்மா என எத்தனை அழைத்தாலும் தகும். இப்படம் யூ1982ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நாவலாசிரியர் தாமஸ் கென்னலி எழுதிய ஷிண்ட்லர்ஸ் ஆர்க்[ Schindler's Ark ] என்னும் புதினத்தை தழுவி,ஸ்டீவன் ஸைலியனின் [steven Zaillian]திரைக்கதையில்,ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கி 1993ஆம் ஆண்டு வெளிவந்த சுயசரிதை-நாடக வகை திரைப்படம் இது. இப்படத்துக்கு ஏழு ஆஸ்கர் விருதுகள் தரப்பட்டன. இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கு உலகாரங்கில் எத்தனையோ பாராட்டுக்களை பெற்றுத்தந்த படம், யூதஇனத்தவரான இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் தன் நெஞ்சில் தைத்திருந்த இனப்படுகொலை என்னும் முள்ளை இப்படம் இயக்கியதன் மூலம் அகற்றியிருக்கிறார். உலகின் அதிகம் சம்பளம் பெறும் சினிமா இயக்குனரான இவர் இந்த படத்துக்கு சம்பளமே பெற்றுக்கொள்ளவில்லை. ஷிண்ட்லராக வந்த லியாம்நீசன் உலகின் மிகச்சிறந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ப்ரிட்டிஷ் நடிகர் ஆவார். இதன் மூலம் உலகின் எல்லாதரப்பு சினிமா ரசிகர்களின் நெஞ்சிலும் இவர் பெற்றிருக்கும் இடம் அளவிட முடியாதது.
படத்தின் கதை:-[முக்கிய சம்பவங்களை மட்டும் கொண்டது]
படம் ஒரு யூதக்குடும்பத்தில் சனிக்கிழமை செய்யும் சப்பாத் வாரவழிபாட்டின் போது துவங்குகிறது. அங்கே அறையில் ஒரு மெழுகுவர்த்தி உருகி, அணைந்த பின்னர் வரும் புகை அப்படியே மேலே எழும்ப ,அது வெளியேறி ரயிலில் வெளிப்படும் புகையாக முடிகின்றது. வண்ணத்தில் இருந்த காட்சிகள் கருப்பு, வெள்ளைக்கு மாறும் காட்சியும் கவிதையாக இங்கே செதுக்கப்பட்டுள்ளது. இனி படம் முழுக்க கருப்பு வெள்ளை கவிதை தான்.
1939 ஆண்டு,போலந்து நாட்டின் க்ரேட்டர் க்ரகோவ் ரயில் நிலையம் :- ஆப்பரேஷன் ரெய்ன்ஹார்ட் [Operation Reinhard in Kraków] என்னும் வரலாற்றுச்சம்பவத்தை நாம் ரத்தமும் சதையுமாக கண்ணுறுகிறோம். ஐரோப்பா ஜெர்மானியர்களுக்கே!!! என்ற இனவெறி தெரிக்க , போலந்து நாட்டில் தலைமுறை தலைமுறையாக குடியேறி வாழ்ந்து வந்த யூத மக்கள் அவர்கள் வாழ்ந்த வீடுகளில் இருந்து ஜெர்மானிய நாஜிப்படையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் படுகின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் பெயர்களைச் சொல்லி அந்த ரயில் நிலைய நடைமேடையில் தட்டச்சு எந்திரத்தின் முன் அமர்ந்திருந்த நாஜி கணக்காளர்களிடம் பதிந்துகொண்டதும் , அவர்களின் உடைமை பெட்டிகளின் மீது பெயர் எழுதச் சொல்லப்படுகிறது, கையில் ஒரு பெட்டி மட்டுமே அனுமதி. அதில் வேண்டிய உடைமைகளை மட்டும் எடுத்துக்கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றனர். அவர்கள் ரயிலில் சென்று இறங்கியதும் அவர்களுக்கு வசதியான குடியிருப்பு உள்ளதாகவும், அங்கே சென்றதும் இங்கே விட்டுச்சென்ற உடமைகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். சுற்று வட்டாரத்தில் உள்ள 27 யூத கிராமங்கள் அதுபோலவே காலிசெய்ய வைக்கப்பட்டு போட்கோர்ஸ் [Podgórze district of Kraków.] என்னுமிடத்தில் புதிதாய் அமைக்கப்பட்ட கெட்டோவுக்குள் ஒரு யூத நபருக்கு 4 கன அடி என்னும் விகிதத்தில் அறை ஒதுக்கப்பட்டு. அங்கே அந்த அப்பாவி யூதர்கள் குடியேற்றப்படுகின்றனர். அவர்கள் அருகே புதிதாக உருவாகிக்கொண்டிருக்கும் முகாம் கட்டுமான வேலைக்கும், ஜெர்மானியர்கள் நடத்திவந்த தொழிற்சாலைக்கும் கூலி இல்லாமல் வேலைக்கு போய் வந்தும் அவர்களின் உயிரைக்காத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். மீறுபவர்கள் எதிர்ப்பவர்கள் துப்பாக்கி குண்டுக்கு இரையாக்கப்பட்டனர். யூதர்களுக்கு சமாதிகள் வேறு ஒரு கேடா?என்று அதில் இருந்த சலவைக்கற்கள் கூட யூதர்களைக் கொண்டே பெயர்க்கப்பட்டு புதிய முகாமுக்கு சாலையாக போடப்பட்டன,
கூலி இல்லாமல் வேலைக்கு வர யூதர்கள் ஒத்துக்கொண்டாலும்,அவர்கள் எல்லோருக்கும் முகாமில் வேலையும், உயிர் பிச்சையும் கிடைத்து விடவில்லை. குடும்பம் குடும்பமாக சென்றவர்கள் ரயிலில் இருந்து இறங்கியதும் இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் , குழந்தைகள் என பிரிக்கப்பட்டு முழுநேரம் இயங்கிவரும் இனவதை முகாம்களுக்கு வேறொரு ரயிலில் திணிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கே போனால் என்ன நடக்கும்? என்றே தெரியாத ஒரு நிலை. எங்கு பார்த்தாலும் ஒரே சோகம், அழுகை, கூக்குரல். எஞ்சியவர்கள் இனி அயராது உழைத்து தான் உயிர் காத்துக்கொள்ள வேண்டும் என்னும் நிலை. யாருக்கும் நேரக்கூடாது அந்நிலை.
கட்டாய வேலை பிடுங்கும் முகாம்களில் யூதமக்கள், அவர்கள் செய்த தொழில் வாரியாக வரையறுக்கப்பட்டு பிரிக்கப்பட்டனர். இசைக் கலைஞர்கள் , அயராது பியானோ,வயலின் செல்லோ,புல்லாங்குழல்,மேளம் போன்றவற்றை வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும். வாட்டும் குளிரில்.அந்த இசையை கேட்டபடியே சாகும் வரை ஏனைய தொழிலாளிகள் வேலை செய்யவேண்டும். யூத ஓவியர்கள் அரசாங்க ஆவணங்கள் தயாரிக்கவும், நாஜிக்களின் கொள்கை பரப்பு ஓவியங்கள் வரையவும், முடி திருத்துபவர்கள், ரயிலில் வந்து இறங்கும் யூதர்களுக்கு ஒழுங்கில்லாமல் முடியை நறுக்க்கிவெட்டி விடவும், தையல் கலைஞர்கள் சீருடைகள் தைக்கவும், ஈடுபடுத்தப்பட்டனர். யூதர்களிடமிருந்த தங்க நகைகள், வெள்ளிப்பாத்திரங்கள், பூஜை சாமான்கள். மூக்கு கண்ணாடிகள், கைக்கடிகாரங்கள், தலைவாரும் சீப்புகள், சூட்கேஸுகள். கோட்டு சூட்டுகள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள்,காலணிகள். குடும்ப புகைப்படங்கள் என சகலமும் ரயில் நிலையத்திலேயே கையகப்படுத்தப்பட்டு அங்கே கிடங்குகளில் மலைமலையாக குவித்து வைக்கப்படுகின்றன. அவர்களிடமிருந்து வெட்டிப்பெறப்பட்ட தலைமயிர் கூட பெரிய பெரிய சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டு எதிர்கால கண்காட்சியகத்துக்காக ஆவணகாப்பு செய்யப்பட்டன.
அவ்வளவு ஏன்?!!! யூதர்கள் பலர் கட்டிக்கொண்ட தங்கப்பற்கள் கூட கொரடு கொண்டு வெட்டி உடைத்து பிடுங்கப்படுகின்றன.அவற்றை யூதர்களே பல் வேறாய் தங்கம் வேறாய் உருக்கிப்ப் பிரிக்கும் அவலமும் நடந்தேறின. அங்கே கட்டாய வேலை பிடுங்கி முகாமில் வலிமையுள்ளதே எஞ்சும், எந்நேரமும் துப்பாக்கி சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். யூதமக்கள் ஒவ்வொரு நொடியும் செத்து செத்து பிழைத்தனர் . உயிர் பயத்தை காட்டிக்காட்டியே அவர்களிடம் வேலை வாங்கினர் கொடிய நாஜிக்கள்.தன் உயிரை தற்காத்துக்கொள்ள ஒரு யூதன் விளையாடிய ஆறு வருட பந்தயம் தான் கட்டாய வேலை பிடுங்கி முகாம்[Forced Labour Camp], இதை ஒரு பதிவில் எழுதிவிட முடியாது, எதையோ எழுதப்போய் எங்கேயோ சென்றுவிடும்.
ஒரு யூதனால் இனி பயனில்லை, வேலை செய்யமுடியாது என தெரிய வருகையில் அவர்களை கேஸ் சேம்பருக்கு அனுப்பி கொல்லப்பட்டனர், ரயிலில் வந்து இறங்கிய அன்றே ஒரு சில முதியவர்களுக்கு, அவர்களின் தள்ளாமைக்கேற்ப, முதல் நாளே கேஸ் சேம்பருக்கு அனுப்பி மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏனைய குழந்தைகள் குறிப்பாக இரட்டைக் குழந்தைகள் சோதனைச்சாலை எலிகளுக்கு பதிலாய் அரக்க மனம் படைத்த மருத்துவர்களைக் கொண்டு இன ஆராய்ச்சிக்கு கூட உட்படுத்தப்பட்டனர்.
இப்படிப்பட்ட ஒரு கொடிய இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் 'ஆஸ்கார் ஷிண்ட்லெர்' [லியாம் நீசன்] என்ற ஜெர்மன் நாஜி கட்சியை சேர்ந்தவர் செக்ஸ்லோவாக்கியாவின் ப்ரின்லிட்ஸில் [brinnlitz] என்னும் ஊரிலிருந்து போலந்துக்குள் வருகிறார் . போலந்து நாட்டில் இருக்கும் ஜெர்மன் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு நிறைய தொகை லஞ்சம் , பரிசுப்பொருட்கள் மதுபானங்கள், சிகார்கள் , உயர்தர சாக்லேட்டுகளை கள்ளச்சந்தையில் தருவித்துக் கொடுத்து அவரது நட்புகளை துரிதகதியில் வெல்கிறார், போலந்து- க்ரகோவ்வில் யூதர்கள் நடத்தி வந்த சமையல் பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ஏலமும் எடுக்கிறார்.
காட்சி மாறி:- ஒரு யூதன் தன் வீட்டு நிலைக்கதவின் பக்கவாட்டில் பதிக்கப்பட்டிருக்கும் மெஸுஸா [Mezuzah] என்னும் Torah (Deuteronomy 6:4-9) ஸ்லோகம் பொரிக்கப்பட்ட எந்திரத்தை கொரடைக் கொண்டு பிடுங்கியவன்,அதை முத்தமிட்டபின் தன் பைக்குள் பத்திரமாக வைத்துக்கொள்கிறான், அவனின் செல்வந்த மனைவி அழுது கூப்பாடு போட,நாஜி வீரர்கள் கழுத்தபிடித்து தள்ளாத குறையாக அவர்களை வெளியேற்றுவதைப் பார்க்கிறோம், அவளின் கணவன் அழுபவளை தேற்றுகிறான். அந்த யூத செல்வந்தன் காலிசெய்யப்பட்டதுமே அதே வீட்டில் ஆஸ்கார் ஷிண்ட்லர் விரைந்து குடியேறுகிறார். யூதர்களிடம் நிறைய பணம் இருந்தாலும் அதை அவர்களால் சொந்தம் கொண்டாடவோ, செலவு செய்யவோ, வங்கியிலேயே வைத்திருக்கவோ முடியாது, அப்படிப்பட்ட செல்வந்த யூதன் எங்கே கிடைப்பான்? என ஆய்வு செய்கிறார். அப்படி கள ஆய்வு செய்கையில் இவருக்கு மிகவும் கைதேர்ந்த யூதக்கணக்காளரான இஷ்தக் ஸ்டெர்ன் என்பவர் பழகக் கிடைக்க, அவருடன் நட்பாகிறார் ஷிண்ட்லெர். இஷ்தக் ஸ்டெர்ன் அவரிடம் கேட்கும் ஒரு கேள்வி மிகவும் பிரசித்தி பெற்றது, அதற்கு ஷிண்ட்லெர் தரும் பதில் அதைவிட அழகானது. இதோ அந்த வசனம் .
Itzhak Stern: Let me understand. They put up all the money. I do all the work. What, if you don't mind my asking, would you do?
Oskar Schindler: I'd make sure it's known the company's in business. I'd see that it had a certain panache. That's what I'm good at. Not the work, not the work... the presentation.
ஆக ஒருவழியாக பணம் முதலீடு செய்ய யூதரும் கிடைத்தாகிவிட்டது, அந்த யூதருக்கு மாதாமாதம் பண்ட பாத்திரங்களாக அவர் கள்ளச்சந்தையில் விற்றுக்கொள்ள ஷிண்ட்லர் தருவதாய் முடிவானது, தன் தொழிற்சாலைக்கு தலைமைக்கணக்காளனாக இஷ்தக் ஸ்டெர்னையே [பென் கிங்ஸ்லி] நாஜிக்களிடம் கேட்டுப் பெறுகிறார். எவ்வளவு முக்கியமான பாத்திரம் இவருடையது?!!!, ஸ்திரி லோலன் , சுயநலமி, நாஜி அனுதாபியான ஷிண்ட்லாரையே தன்னைத் தானே சோதித்து அறியச் செய்து யூதர்களுக்காக மனம் இறங்க வைத்த ஓர் பாத்திரம். தொழிற்சாலை வேலைக்கு ஆளெடுக்கையில் இஷ்தக் ஸ்டெர்ன் போலீஷ் இன வதை முகாமில் இருக்கும் கத்தோலிக்க தொழிலாலர்கள் வேண்டுமென்றால் தலைக்கு இவ்வளவு என்று தரவேண்டும். அவர்கள் கூலி சற்று விலை அதிகம், ஆனால் யூதர்களுக்கு நாம் கூலியே தரத் தேவையில்லை, நாஜிப்படைக்கு கையூட்டு கொடுத்தால் போதும் என்கிறார். ஷிண்ட்லர் எனக்கு போலீஷ் ஆட்கள் தேவையேயில்லை, யூதர்களையே வரவழைத்துவிடலாம் என்று சொன்னது தான் தாமதம், தன்னால் முடிந்தவரை யூத தொழிலாளர்கள் சுமார் 400 பேரை முதற்கட்டமாக நாஜி முகாம்களில் இருந்து அழைத்து வருகிறார் இஷ்தக் ஸ்டெர்ன்.
நாஜிக்கள் உடனே போ என்று விட்டு விடுவார்களா என்ன?!!!. ஆகவே, அவர் அழைத்து வரும் யூத மக்களுக்கு இந்தத் தொழிலில் ஏற்கனவே அனுபவம் உள்ளது போன்று, பொய்யான சான்றுகளைக் காண்பித்து,நிறைய லஞ்சப்பணமும், பரிசுப்பொருட்களும் கொடுத்து அழைத்து வருகிறார் இஷ்தக் ஸ்டென். அதில் முடிந்த மட்டும் கணவன் மனைவி, குழந்தைகளாகவே கூட்டி வருகிறார். அப்போது தானே கொடிய நாஜிக்களால் அல்லலுறும் யூதமக்கள் சிலரின் குடும்பங்களேனும் இனவதையிலிருந்து தப்பும் என்ற இஷ்டக் ஸ்டெர்னின் நல்லெண்ணமே அதற்கு காரணம். அதில் ஒற்றைக்கையை இழந்த முதிய யூதரும் அடக்கம். இது ஷிண்ட்லெருக்கு தெரியாது. தொழிற்சாலை விரைவில் பெயர்மாற்றம் செய்யப்பட்டு துரித கதியில் இயங்கி, ஷிண்ட்லெருக்கு பெரும் பொருளீட்டிக்கொடுக்கிறது.
ஷிண்ட்லெர் அப்படி வந்த பணத்தில் பெரும்பகுதியை குடித்தும், தினம் ஒரு விலை மாது என செலவிட்டார். அவருக்கு போலீஷ் கத்தோலிக்க இன பெண் காரிய தரிசிகளே சுமார் 10 பேர். ஷிண்ட்லரை இப்படியே விட்டால் அவர் பணம் முழுவதையும் ஊதாரித்தனமாக செலவழித்துவிடுவார் என எண்ணிய ஷிண்ட்லரின் மனைவி எமிலி, அவரின் வீட்டுக்கு அதிகாலை வந்து மணியடிக்க, ஒரு நிர்வாணமான பெண், உடலை மூடிக்கொண்டு வந்து கதவை திறந்துவிட்டு ஓடுகிறாள். ஷிண்ட்லர் மனைவியிடம் எதையுமே மறைப்பவரில்லை, தன் நிறை குறைகளை மனைவியிடம் காட்டி எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருக்கிறார். மனைவி ஒரு கட்டத்தில் பொறுமை எல்லை மீற அவரிடம் விடைபெற்றுச் சென்றுவிடுகிறாள்.
1941 ஆம் வருடம்:- இப்போது தான் க்ரகோவ் கெட்டோவுக்கு தலைமை ராணுவ அதிகாரியாக அமான் கோத் [ரால்ப் ஃபியன்ஸ்] என்னும் கொடுங்கோலன் வருகிறான். வந்தவுடனேயே தனக்கு தரப்பட்ட முக்கிய வேலையான நாளுக்கு 10,000 யூதர்கள் களையெடுப்பு என்னும் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு தன் களப் பணியை துவக்குகிறான். புதிய ப்ளாஸ்ஸோவ் இனவதை முகாமின் [Płaszów concentration camp.] பேரக்ஸ் கட்டுமானத்தை பார்வையிட்டுக்கொண்டே வந்தவன் ஒரு பெண் யூத பொறியாளர் தனக்கு முன் சத்தமாக முகாமின் பார்ரக்ஸ் கட்டுமானத்தின் அடித்தளம் வலுவாகயில்லை என்பது பற்றிய உண்மையை சத்தமாகச் சொல்லிவிட்டாள் என்று அவளை மண்டியிட வைத்து சுடுகிறான், பின்னர் அவள் சொன்ன படியே மாற்றியும் கட்டச் சொல்கிறான்.
ஒருநாள் தொழிற்சாலைக்கு கிளம்பும் யூதர்கள் வழிமறிக்கப்பட்டு ,சாலையை மூடிய பனியை வாரிக்கொட்டும் அவசரவேலைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அங்கே ஒற்றைக்கை யூதர் பனியை அள்ளிக்கொட்ட,அவரை அருகே அழைத்த அமான் கோத் அவரை சுட்டுக்கொன்றுவிடுகின்றான்.தன் தொழிலாளி ஒருவன் சுடப்பட்ட விவகாரத்தை தன் ராணுவ மேலதிகாரிகள் வசம் கொண்டு சென்ற ஷிண்ட்லர்.இதனால் விளையும் நஷ்டங்களுக்கு தன்னால் பொறுப்பேற்கமுடியாது,என்கிறார்,அவரை ராணுவ உயரதிகாரி,அந்த ஒற்றைக்கை முதியவர் உன் தொழிற்சாலையில் என்ன செய்துவிடவேண்டும் என வினா எழுப்ப? சடுதியில் ஷிண்ட்லர் அவர் ஒரு பாலீஷர் என்கிறார். அவரால் எளிதாக குழாய்க்குள்ளே கையை நுழைத்து பாலீஷ் போட முடியும் என்று சமாளிக்கிறார். இஷ்தக் ஸ்டென்னை கூப்பிட்டு எச்சரிக்கிறார் ஷிண்ட்லர். இது சந்தை மடமல்ல, நான் ஒரு போர் சந்தர்ப்பவாத முதலாளி [war profiteer] இங்கே நான் வந்தது பணம் சம்பாதிக்கத்தான். என்னை இனி தலை குனிய வைக்காதே என எச்சரிக்கிறார்.இருந்தும் இஷ்தக் ஸ்டென்னின் குறும்புத்தனங்கள் நிற்கவேயில்லை, தனக்கு தெரிய வந்த ஏனைய யூத மக்களையும் ஷிண்ட்லர் நல்ல மனநிலையில் இருக்கையில் அவரின் அனுமதி பெற்று தொழிற்சாலை வேலைக்கு கொண்டு வந்து சேர்க்கிறார்.
இந்தப் புள்ளியிலிருந்து இவன் பின்னால் கதை நகருகிறது. இந்த இனவதை முகாமுக்குள்ளே எந்நேரமும் வேலை நடந்து கொண்டே இருக்கிறது, அவனுக்கு யூத உயிர் ஒரு கிள்ளுக்கீரை, எத்தனை சீக்கிரம் யூதர்களை கருவருக்கிறோமோ?!!! அத்தனை சீக்கிரம் நாஜிக்கள் ஐரோப்பாவை தன் கட்டுக்குள் கொண்டுவரும் என நம்புகிறான். கண்முன் தூங்கியவர்களை நிரந்தரமாக தூங்கவைக்கிறான், உடல் நலம் குன்றியவர்களை தூரத்தில் தன் வீட்டின் பால்கனியில் இருந்து தொலைநோக்கியால் பார்த்து குழல் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுகிறான். ஒரு நாள் முழுக்க ஒரு தொழிலாளி எத்தனை கதவுக்கு பொருத்தும் கீல்கள் எந்நேரமும் குடித்துவிட்டு கேளிக்கை கொண்டாட்டங்களை ராணுவத்தினருடன் அனுபவிக்கிறான் அமான கோத்.
அமோன் கோத் பொறுப்பேற்றதும் ஷிண்ட்லரின் தொழிற்சாலைக்கு ஆட்கள் வேலைக்கு வருவது நின்றுவிடுகிறது. புதியதாக கணக்கு வழக்குகள் துவங்கவேண்டும் என்று ஷிண்ட்லரின் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு ஆணையிடுகிறான். ஷிண்ட்லெர் அமான் கோத்தை சந்தித்து அவன் கேட்டதற்கெல்லாம் சம்மதிக்கிறார். அவனுக்கு வரும் லாபத்தில் பெருந் தொகையை தந்து திரும்பவும் தொழிலாளர்களை வேலைக்கு அழைக்கிறார்.
ஆனால் இஷ்தக் ஸ்டெர்ன் மட்டும் அமான் கோத்திடமே சிறைபட்டிருக்கிறார். அமான் கோத்தால் அவர் வசம் கணக்கு புத்தகங்கள் கொடுக்கப்பட்டு, அமான் கோத்துக்கு வரவேண்டிய வருமானம் சரியாக கணக்கிடப்பட்டு வாங்கப்படுகிறது. அப்படி கணக்குவழக்கு முன் பின் இருந்தால் கொன்றுவிடுவேன் என மிரட்டப்படுகிறார் இஷ்தக் ஸ்டெர்ன்.
அமான் கோத்துக்கு பணிப்பெண் தேவைப்பட வதை முகாமிலிருந்து அழகிய யூதப்பெண்ணை கூட்டிவந்தவன். தனக்கான எல்லா பணிவிடைகளையும் ஒரு மன்னனைப்போல கேட்டுப் பெற்றவன், அவளின் சேவைக்கு மெச்சி திடீரென பாசம் பொத்துக்கொண்டு அவளை தழுவுவான்,முத்தமிடுவான், அவளுக்கு சதா மரணபயம் காட்டி சித்திரவதை செய்கிறான். தடாலென அவள் மீது கைக்கு அகப்பட்டதை எரிந்தும்,பெல்டால் விளாசியும் கொடுமைப்படுத்துவான்.இதை கண்டு ஷிண்ட்லர் அவளுக்கு தனிமையில்சந்தித்து ஆறுதல் அளிக்கிறார்.ஒருநாள் உன்னை காப்பேன் என நம்பிக்கை அளிக்கிறார்.அவள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஷிண்ட்லெர்' போலந்துக்கு வந்து ஒரு தெரியாத தொழிலை எதறகாக ஆரம்பிக்க வேண்டும் ?காரணம் சுயநலமே!!!, அனுதினமும் இனவதை முகாமில் செத்து மடிந்து கொண்டிருந்த யூத மக்களை, முன் அனுபவமில்லாதவர்களை ஏன் வேலையாட்களாக தேர்வு செய்ய வேண்டும் காரணம் சுயநலமே, ஒரு நாஜி அனுதாபியாக இருந்து கொண்டு யூத மக்களை ஏன் காப்பாற்ற வேண்டும்? காரணம் சுயநலமே, ஆனால் அன்றைய தினம் யூதர்களின் குடியிருப்புகள் அதிகாலையிலேயே ராணுவ கொடுங்கோலன் அமான் கோத் படுகொலைகளால் காலி செய்யப்பட்டு புதிதாக கட்டப்பட்ட புதிய ப்ளாஸ்ஸோவ் இனவதை முகாமுக்குள் [Płaszów concentration camp.] ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பிரிக்கப்பட்டு அடைக்கப்பட்டனர் , அன்றைய தினம் மட்டும் ஆயிரக்கணக்கான யூதர்கள் ஒரு தெருநாயை, சாக்கடைப் பன்றியை சுடுவது போல சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அமான கோத்தின் தடையை மீறி யூதர்கள் ஷிண்ட்லரின் தொழிற்சாலைக்கு வேலைக்கு வர இயலவில்லை,மிகவும் மனம் உடைகிறார் ஷிண்ட்லர்,வழக்கம் போல இந்த தொழிலிலும் தான் தோற்றுவிடுவோமோ? என்று அஞ்சுகிறார். அவருக்கு ஆறுதலாக மனைவி எமிலியும் வந்து விடுகிறார். அன்று ஓர் உந்துதலில் தன் ஷிண்ட்லர் தன் மனைவியுடன் ஏன் தன் யூத வேலைக்காரர்கள் ஒரு வாரமாக பணிக்கு வரவில்லை என வருத்தம் எழ, தன் இருவரின் குதிரைகளையும் எடுத்துக் கொண்டு யூதர்களின் குடியிருப்புக்கு செல்கிறார்கள்.
அங்கே நடந்த படுகொலைகளை மலை உச்சியிலிருந்து கண்ணாறக் கண்டனர். அப்போது தான் நாஜிக்கள் நடத்திக்கொண்டிருக்கும் இனப்படுகொலையின் தீவிரத்தை உணர்ந்தார் அவர். இத்தனை நாள் அப்பாவி யூத மக்களின் அயராத உடல் உழைப்பில் பெருஞ்செல்வம் சேர்த்ததை எண்ணி வெட்கம் கொண்டார். இனியாவது தன் செல்வம் மொத்தத்தையும் கொட்டிக் கொடுத்தேனும் தன் யூத தொழிலாலர்களைக் காப்பேன் என மனமார சபதம் பூண்டார். ஒரே நாளில் அவருடைய கல்மனம் கரைந்தது. நீருக்குள் பூத்த நெருப்பாக அவருக்குள் யூத அனுதாபம் குடிகொண்டது.
ஒரு நல்லகாரியம் செய்ய எத்தனை லஞ்சம் கொடுத்தாலும் தவறில்லை என்று அமான் கொத்துக்கும் அவனது உயரதிகாரிகளுக்கும் ஏராளமாக லஞ்சப்பணம் கொடுத்து தன் தொழிற்சாலையில் பணிபுரியும் யூதர்களை சுமார் இரண்டு வருடங்கள் சப் கேம்ப் என்னும் துணை முகாம் ஏற்படுத்தி பொத்திபொத்தி பாதுக்காக்கிறார்.எத்தனை லஞ்சம் கொடுத்தாரோ? அத்தனை சலுகைகளை அவர் யூதர்களுக்காக பெற்றார்.அங்கே இப்போது போர்ப்படை தளவாடங்கள்,தயாரிக்கப்படுகின்றன,அதில் ஒன்று எங்கேனும் போரில் வெடிக்கப்பட்டால் கூட தான் சொல்லொனாத் துயரம் அடைவேன் என்று இஷ்தக் ஸ்டெர்னிடம் சொல்கிறார்.
ஒரு நாள் ஷிண்ட்லர் அமான் கோத்தை சந்திக்க ரயிலடிக்கு செல்கிறார். அங்கே ஒரு அங்குலம் கூட இடைவெளியின்றி வயதில் முதிய யூதர்கள் ரயில் பெட்டியில் அடைத்து வைத்து அவர்களை ஆஷ்விட்ஸ் என்னும் இனவதை முகாமுக்கு அழைத்துபோக ஆயத்தம் ஆவதை பார்த்தவர், அவர்கள் தாகம்,தாகம் என மன்றாடுவதை கேட்கிறார். சுடும் வெயிலில் அவர்களின் தாகத்தை தணிக்க தன்வீட்டிலிருந்து தண்ணீர் குழாயை தருவித்து அதை அவர்கள் பெட்டியில் பாய்ச்சும் பொழுது அமான் கோத் உட்பட அனைவரும் கொல்லென்று சிரிக்கின்றனர். அவைகளுக்காக ஏன் இப்படி உருகுகிறாய்?, அவைகளுக்கு எதிர்காலம் கிடையாது என்று ஷிண்ட்லர் லஞ்சமாக அளித்த ஓட்காவை பருகியபடியே எள்ளிநகையாடுகின்றனர். இந்த சம்பவத்தினால் மிகவும் மனமுடைந்த ஷிண்ட்லர்,இன்னும் அதிக நாள் தன்னால் தொழிற்சாலையில் பணிபுரியும் யூதர்களை காப்பாற்ற முடியாது என உள்ளம் மருகுகிறார்.
ஷிண்ட்லர் விரைந்து அமான் கோத்தை அணுகியவர். தன் சொந்த ஊரிலேயே இந்த தொழிற்சாலையை மாற்ற விருப்பதாகவும் அங்கு ஒரு துணை முகாம் [சப் கேம்ப்] அமைக்க அனுமதியும் வேலைக்கு இப்போது உள்ள யூதஆட்களை அப்படியே அங்கே மாற்றித்தர உதவியும் செய்யக் கேட்கிறார். அதற்கு அமான் கோத் எள்ளி நகையாடுகிறான். நீ அவர்களை என்னிடமிருந்து காப்பாற்றமுடியாது, இன்னுமெ ஒரு வருடத்துக்குள் அவர்கள் மொத்த பேரையும் கொன்றுவிட எனக்கு கட்டளை வந்திருக்கிறது, இது இயலாத காரியம் என கைவிரிக்கிறான் அமான் கோத் , ஷிண்ட்லர் தருவதாகச் சொன்ன பெருஞ்செல்வம், மற்றும் பரிசுப்பொருட்களுக்காக மெல்ல மனம் இறங்குகிறான், சம்மதிக்கிறான்
இப்போது தான் நாம் ஒன்றை கவனிக்கவேண்டும், தொடக்கத்தில் வெறும் 400 யூதர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஷிண்ட்லரின் நிறுவனத்தில் இப்போது மட்டும் 800 பேர்கள் உண்டு. ஷிண்ட்லருக்கு முடிந்த வரை யூதர்களை செம்படையினர் வரும்வரையில் கொலையாகாமல் காப்பாற்றப்படவேண்டும் என்பதே எண்ணம், ஆகவே தன்னைப்போலவே யூத தொழிலாளிகளை வைத்து நிறுவனம் நடத்தும் முதலாளிகளை சென்று பார்த்த ஷிண்ட்லர் யூதர்களை தன்னைப்போல துணை முகாம் ஏற்படுத்தி காப்பாற்ற கோருகிறார். ஆனால் யாரும் இசையவில்லை. மனம் தளராத ஷிண்ட்லர் ஒரு நாள் இரவு நேரத்தில் இஷ்தக் ஸ்டெர்னை அழைத்து தட்டச்சு எந்திரத்தின் முன்னால் அமரச்செய்கிறார். அன்று இரவு ஆரம்பிக்கப்பட்ட பட்டியலே ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் எனப்படும். அது மணிக்கணக்கில் நீளுகிறது, ஷிண்டலர் புகைபிடித்துக்கொண்டே பெயர்களை நினைவடுக்குகளில் இருந்து சொல்லிக்கொண்டே வர , அதை இஷ்தக் ஸ்டெர்ன் தட்டச்சுகிறார். திருத்துகிறார். கடைசி பக்கத்திற்கு கீழே கொஞ்சம் காலி இடம் விட பணிக்கிறார் ஷிண்ட்லெர்.
அந்த காலி இடத்தில் சில பெயர்களை பிற்ப்பாடு சேர்க்கப்போகிறேன் என்கிறார். தன்னிடம் உள்ள கையிருப்பு கரைவதைப்பற்றி அவர் கவலைப்படவேயில்லை.இப்போது சுமார் 1100 பேர் பட்டியலுக்குள் வந்துவிட்டனர். அதைக்கொண்டு போய் அமான் காத் முன் அமர்ந்து பேரத்தை ஆரம்பிக்கிறார் ஷிண்ட்லர். அவர் கடைசி பக்கத்தின் கீழே விட்ட காலியிடத்தில் அமான் கோத்தின் வேலைக்கார யூதப்பெண்ணின் பெயரை எழுதுகிறார் ஷிண்ட்லர். அமான் கோத்துக்கு அவளைத் தரவே மனமில்லை. அவளை மிகவும் விரும்புகிறான். ஆனால் அதை அவள் அதைப் பயன்படுத்தி காரியம் சாதித்துவிடுவாளோ? என அஞ்சுகிறான். அவளை எக்காரணம் கொண்டும் தரமாட்டேன் என்றவன்.அவளை மீட்க ஒரு சிட்டாட்டம் ஆடுவோம் வா என்று ஷிண்ட்லர் அழைக்க,விடாப்பிடியாக அவளுக்கு போய் சீட்டாட்டமா?என எள்ளி நகையாடியவன். அவள் தலைக்கு அமான் கோத் ஒரு பெரும் தொகையை கேட்க அதை ஷிண்ட்லர் மறுக்காது தருவதாய் சொன்னதும் ஆடிப்போகிறான். வேறு வழியின்றி அவளையும் அனுப்ப சம்மதிக்கிறான்.
அந்த நாளும் வந்தேவிட்டது. தங்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டதாகவே எண்ணுகின்றனர் . ஆண்கள்,ஒரு ரயிலில்,பெண்கள் குழந்தைகள் ஒரு ரயிலில் என்று ஏற்றப்படுகின்றனர்.பெண்கள் மற்றும் குழ்ந்தைகள் ஏற்றப்பட்ட ரயில் மட்டும் ஆவணப்பிழை காரணமாக ஆஷ்விட்ஸ் இனவதை முகாம் நோக்கி திருப்பிவிடப்படுகிறது,பலநாட்கள் ரயில் பயணத்தில் குடி தண்ணீருக்காக ரயில் பெட்டியில் மேலே உறைந்திருக்கும் பனியை பிடுங்கி உடைத்து ஒரு குடுவையில் போட்டுக் கரைத்து அதை குடித்து அவர்கள் தாகம் தணிகையில் நாம் தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்? எனத் தோன்றும்.
அப்படி பயணம் செய்து ஆஷ்விட்ஸ் இனவதை முகாமுக்குள் அந்த பெண்களின் ரயில் நுழைகிறது. அங்கே ஓயாமல் புகைந்து கொண்டிருக்கும் புகைப்போக்கியிலிருந்து வெளிப்பட்ட சாம்பல் இரவில் பொழியும் பனியுடன் கலந்து இறங்கியவர்கள் மீது மழையாய் விழுகிறது. இவர்கள் , நாஜிப்படையினரால் நேராகக் கொண்டு போய் ஆடைகளை களைய வைக்கப்பட்டு, தலைமயிரை வலுக்கட்டாயமாக கத்தரிக்க வைக்கப்படுகின்றனர், பின்னர் ஒரு சுரங்கப்பாதைக்குள் அழைத்துச் செல்லப்பட்ட அத்தனை பெண்மணிகளும் குழந்தைகளும் விளக்குகள் அணைக்கப்பட, பயந்து நடுங்குகின்றனர், அங்கே மேலே உள்ள ஷவர் குழாய்களில் இருந்து நச்சுவாயு வெளிப்படுமா?!!! அல்லது தண்ணீர் வெளிப்படுமா? என்று அஞ்சி செத்து செத்து பிழைக்கின்றனர்,
திடீரென ஷவர் குழாய்களில் குளிர்ந்த நீர் திறந்து விடப்பட்டு நிர்வானமாக இருக்கும் அனைவரும் நனைந்து குளிரில் நடுங்குகின்றனர், ஒரு பெண்மணிக்கு துக்கம் தொண்டையை அடைத்துவிட அதிர்ச்சியாக தண்ணீரில் நனைந்தமையால் சித்தப்பிரமை பிடித்தது போல சிரிக்கிறாள். மிகவும் மனதை பிசையும் காட்சியது, மறுநாள் காலையில் அவர்களுக்கு ராணுவ அதிகாரிகள் வேலைக்கு பிரித்து அனுப்ப ஆயத்தமாகின்றனர்,
அதில் வயது முதிர்ந்தவர்களையும், குழந்தைகளையும் கேஸ் சேம்பருக்கு கொண்டு செல்ல கணக்கெடுக்கும் வேளையில், ஒரு ராணுவ உயர் அதிகாரிக்கு விலையுயர்ந்த வைரக்கற்களை லஞ்சமாக கொடுத்துவிட்டு, மீட்பு ஆவணங்களில் கையொப்பம் வாங்கிக்கொண்டு அங்கே துரித கதியில் வந்துவிடுகிறார் ஷிண்ட்லர். எல்லோரையும் மீட்டு இன்னொரு ரயிலில் ஏற்றுகிறார், அங்கே குழந்தைகளை மட்டும் அனுப்ப மாட்டோம் என ராணுவ வீரர்கள் முரண்டுபிடிக்க, அதில் ஒரு குழந்தையின் கையை அந்த வீரனின் முகத்துக்கு நேரே தூக்கி காட்டி ஒரு ஷெல்லுக்குள் நுழைந்து பாலீஷ் போட இக்குழ்ந்தையின் கையால் தான் முடியும், இக்குழந்தையை நீ அனுப்பாவிட்டால் நான் அந்த கைக்கு எங்கே போவேன்?மேலதிகாரிக்கு இதை சொல்வதைத்தவிர வேறு வழியில்லை என ஆவேசமாய் கேட்டவர், பின்னர் எதிர்ப்பின்றி குழந்தைகளையும் ரயிலில் ஏற்றுகிறார்.
ஷிண்ட்லரின் தொழிற்சாலையில் 1100 யூத தொழிலாலர்களும் மிக நல்லமுறையில் நடத்தப்பட்டனர்.அங்கே கண்காணிப்புக்கு வந்த நாஜிப்படை வீரர்களுக்கு இது பிடிக்கவில்லை,அவர்கள் மூலம் யூதர்களுக்கு ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டதென்றால் ,தான் அந்த நஷ்டத்தை நாஜிப்படை உயர் அதிகாரிகளிடம் தான் கேட்டுப்பெறுவேன், உங்கள் வேலைகளை காத்துக்கொள்ளுங்கள், யூதர்கள் மீது கைவைக்காதீர்கள்!!!! என கோபமாக அறிவுறுத்துகிறார் ஷிண்ட்லர்.
1945 ஆம் வருடம், ஷிண்ட்லரின் தொழிற்சாலையில் பெயருக்கு தான் வேலை நடந்ததே தவிர எந்த போர் உபகரணமும் முழுமையாக தயாரிக்கப்படவோ, ஏற்றுமதியோ செய்யப்படவேயில்லை,போர் முடிவதற்காக காத்திருக்கிறார் ஷிண்ட்லர்.அவரின் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பணம் இன்றி கடனில் மூழ்கிவிடுகின்றது.
அதற்கெல்லாம் ஷிண்ட்லர் துளியும் வருந்தவேயில்லை. அவர் எதிர்பார்த்திருந்தபடி கிழக்கு முகமாக முன்னேறிய செம்படை ஒவ்வொரு இனவதை முகாமாக விடுதலை செய்து கொண்டே வரும் செய்தியை அச்சத்துடன் தெரிவிக்கிறது நாஜி வானொலி.நாஜி ராணுவ தலைமை, ஷிண்ட்லரின் ஊரான ப்ரின்லிட்ஸில் [brinnlitz] எஞ்சி இருக்கும் எல்லா யூதர்களையும் கொன்றுவிட்டு நாஜிப் படையையும் அவரவர் ஊர்களுக்கு கலைந்து போகும்படி ஆணையிடுகிறது.
ஷிண்ட்லர் நாஜிப்படையினரை நோக்கி எல்லாமே முடிவுக்கு வந்து விட்டது!!!, இனியாவது நீங்கள் அவரவர் வீட்டுக்கு மனிதர்களாக திரும்பப் போகிறீர்களா? அல்லது கொலைகாரர்களாக திரும்பப் போகிறீர்களா?!!! என்று பொட்டில் அடித்தாற்போல கேட்கிறார்.அக்காட்சி அற்புதமான ஒன்று. பின்னர் நாஜிப்படையினர் அமைதியாக தங்கள் ஊர்களுக்கு திரும்புகின்றனர். வானொலியில் நாஜிக்களின் ஆட்சி முடிவுக்கு வந்ததை செம்படையினர் அறிவிக்கின்றனர். அதே தினத்தில் ஷிண்ட்லர் தன் தொழிலாளிகள் முன் பிரிவு உறை ஆற்றுகிறார்.
தான் ஒரு போர் குற்றவாளி!!!, எந்நேரமும் முப்படையினரால் வேட்டையாடப்படலாம். இன்று இரவு கிளம்புகிறேன் என்றவர் எல்லோருக்கும் குடிக்க ஒரு புட்டி ஓட்காவும், எல்லோருக்கும் போர்த்திக்கொள்ள புதிய கம்பளி ஜமுக்காளம் 2 மீட்டரும் இஷ்தக் ஸ்டெர்னிடம் சொல்லி கொடுக்கச் சொல்கிறார். இரவு, ஷிண்ட்லெர் ஜெர்மனிக்கு புறப்படும் பொழுது, அவர் காப்பாற்றி வைத்திருந்த யூத மக்கள், தங்கள் நினைவுப்பரிசாக ஒரு பெரியவரின் பற்களில் இருந்து தங்கப்பற்களை கொரடு கொண்டு பிடுங்கி , அதை உருக்கி ஒரு அச்சுக்குள் ஊற்றி, ஒரு யூத பொற் கொல்லர் அதை எடுத்து திறமையாக வடித்து தட்டி ஷிண்ட்லெரின் விரல் அளவுள்ள ஒரு மோதிரம் செய்து அதை எல்லா யூதர்களும் சேர்ந்து ஆனந்தமாக ஷிண்ட்லருக்கு பரிசளிக்கிறனர்.
அதில் ஓர் ”உயிரைக்காப்பாற்றியவன் மொத்த உலகையே ரட்சித்தவனாகிறான்” "Whoever saves one life saves the world entire." என்னும் talmud என்னும் யூத வேத புத்தக வாசகம் பொரிக்கப்பட்டுள்ளது. அம்மோதிரத்தை வாங்கிய ஷிண்ட்லெர் கேவி கேவி அழுகிறார்.இதோ இந்தக் கார்!!!! இந்தக் காரை அமான் கோத்துக்கு அளித்திருந்தால் அவன் இன்னும் பத்து யூத மக்களை எனக்கு கொடுத்திருப்பான். ஏன் இந்த காரை நான் வைத்திருந்தேன்?!!!இது பத்து உயிர்களுக்குச் சமம். இந்த நாஜி தங்க பதக்கம், இதை வைத்து இரண்டு பேரைக் காப்பாற்ற முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் ஒரு உயிரையாவது நான் காப்பாற்றி இருப்பேனே?!!!. நான் இன்னும் நிறைய பேரை காப்பாற்றி இருக்க வேண்டும் , நான் செய்யவில்லை, சுயநலமாக இருந்துவிட்டேன். என அழுது உருகும் காட்சியில், அந்த மனிதருள் மாணிக்கத்தின் கருணை உள்ளம் நமக்கு புலப்படுகிறது. எல்லா தொழிலாளிகளும் சேர்ந்து அவருக்கு தங்கள் உயிரைக்காத்த உத்தமர் என்று தங்கள் கைப்பட ஒரு சிபாரிசு கடிதத்தை எழுதித்தருகின்றனர். இதன் மூலம் ஷிண்ட்லரை போர் குற்றத்துக்காக செம்படையினரோ, நேச நாடுகளின் படையினரோ பிடித்தாலும், அவரால் தண்டனையின்றி தப்ப முடியும். யூத தொழிலாளர்களை பிரியப்பிடிக்காமல் அரை மனதுடன் ஊரைவிட்டு வெளியேறும் காட்சி நம் மனதை பாரமாக்கி, கண்களை குளமாக்கிவிடும்,
இப்போது காட்சி மாறி:- அமான் கோத் காட்டப்படுகிறான். கடைசியில் இவரை தூக்கு கயிற்றில் ஏற்றிய பிறகு செம்படையினர் அந்த மர முக்காலியை உதைக்கிறார்கள் பாருங்கள் , ஆனால் அது கீழே விழவில்லை, மண்ணில் புதைந்திருந்தது, செம்படையினர் அதை உடைத்து தூக்கில்போடுகின்றனர். கடவுளுக்கு கூட இவர் எளிதாக சாக கூடாது என்பது போல ஸ்பீல்பெர்க் காட்சி யமைத்தது போலிருந்தது.'ஷிண்ட்லெர்' காப்பாற்றிய மக்கள் 'Schindler's Jews' என அழைக்கப்பட்டார்கள்.
ஷிண்ட்லெர் காப்பாற்றிய மக்களின் எண்ணிக்கை சுமார் ஆயிரத்து நூறு. படத்தின் இறுதியில், சமகாலத்தில் 'Oskar Schindler' என எழுதப்பட்ட ஒரு கல்லறையை நாம் வண்ணத்திரையில் கண்ணுறுகிறோம்,வரிசையில் வந்து ஷிண்ட்லரின் கல்லறையின் மீது கற்களை வைத்து அஞ்சலி செய்யும் அவர்கள் அனைவருமே தற்போது உயிருடன் ஷிண்ட்லெர் காப்பாற்றிய யூதர்கள். கடைசியாக அங்கே ஷிண்ட்லெரின் விவாகரத்தான மனைவி எமிலி .ஷிண்ட்லர் அவர்களும் சக்கர நாற்காலியில் வருகிறார்.இறுதியாக ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் கைகள் மட்டும் காட்டப்பட்டு சமாதியின் மீது ஒரு கல்லை வைத்து அஞ்சலி செய்து திரைப்படத்தை முடித்து வைக்கிறது. யூதர்கள் தங்களுக்கென்று உருவாக்கிக்கொண்ட நாடான இஸ்ரேலின் உள்ளே வரவேற்கப்பட்டு யூதர்களுக்கான் நினைவு சதுக்கம் ஒன்றில் மரம் நட்ட ஒரே ஜெர்மானியர் என்றால் அது ஷிண்ட்லர் தான் என்னும் வாசகமும் திரையில் காண்பிக்கப்படுகிறது.
இப்படத்தின் சிறப்பம்சங்களை சொல்லிக்கொண்டே போகலாம்,லியாம் நீசன்,பென் கிங்ஸ்லி,ரால் ஃபியன்ஸ் என ஒவ்வொருவருமே மிகச்சிறந்த நிருபனமான நடிகர்கள்,அவர்கள் தத்தம் கதாபாத்திரங்களுக்குள் காணாமலே போய்விட்டனர். அதை எழுதுவதற்கு ஒரு பதிவு போதாது.ஸ்டீவன் ஸ்பீல் பெர்கின் அற்பணிக்கப்பட்ட இயக்கமும்,ஸ்டீவன் ஸைலியனின் நேர்த்தியான திரைக்கதையும்,ஜான் வில்லியம்ஸின் ஒப்பற்ற இசையும், ஜனுஸ் கமினிஸ்கியின் அபாரமான ஒளிப்பதிவும், மைக்கேல் கானின் தொய்வில்லாத எடிட்டிங்கும். உங்களை காலாகாலத்துக்கும் வசப்படுத்தி கட்டிப்போட்டுவிடும். எத்தனையோ யூத இனப்படுகொலை,இனவதை முகாம் பற்றிய திரைப்படங்களைப் நாம் பார்த்தாலும் இப்படத்துக்கு எதனுடனும் ஒப்பிடமுடியாத ஒரு தனித்துவம் உண்டு
http://geethappriyan.blogspot.com
No comments:
Post a Comment