EGG CONTAINS LOT OF PROTEINS
முட்டை சகல வல்லமை படைத்த ஓர் உணவு
`முட்டை சைவமா, அசைவமா?’ இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லிச் சொல்லி, இன்னும் நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அது போகட்டும்! உண்மையில், முட்டை சகல வல்லமை படைத்த ஓர் உணவு என்பது மட்டும் மருத்துவரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும் உண்மை. முட்டை மட்டும் இல்லை என்றால், உலகில் எத்தனையோ லட்சம் அடித்தட்டு மக்களுக்கு உணவில் ஊட்டச்சத்து என்ற ஒன்றே இல்லாமல் போயிருக்கும். மிகக் குறைந்த விலையில் அதிகப் புரதச் சத்து கொண்ட உணவு, முட்டை! பல நூற்றாண்டுகளாக, உலகம் முழுக்க இருக்கும் மக்கள் முட்டையை உணவாகப் பயன்படுத்தி வருகிறார்கள். உலக அளவில் ‘சூப்பர் உணவு’ என வகைப்படுத்தப்பட்ட உணவுகளில் முட்டையும் ஒன்று. மூளை மற்றும் தசை வளர்ச்சிக்கு, ஞாபகசக்தி மேம்பட, நோய் எதிர்ப்புச் சக்திக்கு, பார்வைத்திறனுக்கு... என பலவிதங்களில் முட்டை உதவுகிறது எனப் பட்டியலிடுகிறார்கள் மருத்துவர்கள்.
முட்டையின் நன்மைகளைப் பரவலாகத் தெரியப்படுத்துவதற்காகவும், மனிதர்களின் வாழ்க்கையில் முட்டையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இது கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், உலகில் உள்ள பல நாடுகளில் விதவிதமான முட்டை உணவு வகைகளை ரசித்துச் செய்து, ருசித்துக் கொண்டாடுகிறார்கள்.
மனிதர்கள் வேட்டைச் சமூகமாக இருந்த காலத்தில் இருந்து, இன்றைய நவீன காலம் வரை, பறவைகளின் முட்டையை உணவாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அவற்றில் குறிப்பிடப்பட வேண்டியது கோழி. காட்டில் வாழ்ந்த கோழியைக் கண்டெடுத்த மனிதன், வீட்டுக்குக் கொண்டுவந்தான்; வளர்த்தான். கி.மு.8-ம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் முட்டைப் பயன்பாடு புழக்கத்தில் இருந்ததாகச் சொல்கிறது வரலாறு. பண்டைய எகிப்திய நகரங்களில் ஒன்று தேப்ஸ் (Thebes). அங்கிருக்கும் கல்லறை ஒன்று கி.மு.1420-ல் கட்டப்பட்டதாகும். அதில் வரையப்பட்டிருக்கும் ஓவியத்தில், மனிதன் ஒருவன் ஒரு கிண்ணம் நிறைய நெருப்புக்கோழி முட்டைகளைக் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்துவது போன்ற காட்சி இருக்கிறது. பண்டைய ரோமில், முட்டைகளைப் பாதுகாப்பதற்காகவே விதவிதமான வழிமுறைகளைக் கையாண்டார்கள். பண்டைய ரோமானியர்கள் பில்லி, சூனியம், பேய் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள். பேய் எதுவும் வீட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தங்களுடைய தட்டில், முட்டை ஓடுகளை நொறுக்கி வைப்பார்களாம். இடைக்காலத்தில் முட்டையை ஐரோப்பாவில் தடை செய்ததாகச் சொல்கிறது வரலாறு. இப்படித் தோண்டத் தோண்ட முட்டை குறித்த சுவாரஸ்யங்கள் உருண்டு உருண்டு வருகின்றன.
உலக அளவில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவது கோழி மற்றும் வாத்து முட்டைகளே! ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் சிறிய அளவில் இருக்கும் கௌதாரி முட்டைகளைப் (Quail Eggs) பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. ஜப்பான் சமையல் முறையில், கௌதாரி முட்டையைப் பச்சையாகவே பயன்படுத்துவதும் உண்டாம். பிரான்ஸ், இத்தாலி, தாய்லாந்து, ஜப்பான், சீனா, இந்தியா... என எந்தச் சமையல் முறையாக இருந்தாலும் முட்டைக்கு முக்கிய இடம் உண்டு.
முட்டை... சில தகவல்கள்!
* புரதச்சத்து நிறைந்த, எல்லோராலும் வாங்கி உண்ணக்கூடிய ஒரு பொருள்.
* இயற்கையாகவே நமக்கு வைட்டமின் டி-யைத் தரும் உணவுகளில் இதன் மஞ்சள் கருவும் ஒன்று.
* கோழி எந்தவிதமான டயட்டில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் மஞ்சள் கருவின் அடர்த்தியும் நிறமும் அமையும்.
* ஒரு பெரிய முட்டையில் 70 கலோரிகளும் 5 கிராம் கொழுப்பும் உள்ளன.
* கோழி ஒன்று வருடத்துக்கு 300-ல் இருந்து 325 முட்டைகளை இடும்.
* உடலில் உள்ள திசுக்களின் கட்டமைப்புக்குத் தேவையான அமினோ அமிலங்கள் முட்டையின் புரதத்தில் சரியான கலவையில் அமைந்திருக்கின்றன.
* மனிதர்களின் ஊட்டச்சத்து தேவைக்கு தாய்ப்பாலுக்கு அடுத்த இடத்தில் இருப்பது முட்டை மட்டுமே!
* முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்... கோலின், ஃபோலிக் அமிலம், அயோடின், இரும்புச்சத்து, லூட்டின் மற்றும் ஜீக்ஸாந்தின் (Zeaxanthin), புரதம், செலினியம், வைட்டமின் ஏ, வைட்டமின் 12, வைட்டமின் பி 2 (ரிபோஃப்ளோவின்), வைட்டமின் பி 5, வைட்டமின் டி, வைட்டமின் இ. அம்மாடி இவ்வலவு சத்துக்களா!
* முட்டையைப் பச்சையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதில், சில கிருமித் தொற்றுகள் இருக்கலாம். எனவே, வெந்நீரில் சில நிமிடங்கள் முட்டையை வேக வைத்து கொடுக்கலாம். அதனுடன் சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் கொடுப்பது மிகவும் நல்லது.
* சர்க்கரை நோயாளிகள் மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளைப் பகுதியை மட்டும் ஒரு நாளுக்கு ஒன்று என எடுத்துக்கொள்ளலாம்.
*சிறுநீரகப் பிரச்னை உடையவர்கள் முட்டைப் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது. அவர்களுக்குப் புரதத்தின் அளவு அதிகமாகி பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பாகிவிடும்!
உலகிலேயே மிக வேகமாக ஆம்லெட் சுட்டு, ‘ஆம்லெட் கிங்’ எனப் பட்டம் பெற்றவர், அமெரிக்காவைச் சேர்ந்த ஹோவர்டு ஹெல்மர். இவர் ஒரே அடுப்பில் 30 நிமிடங்களில் சுட்டெடுத்த டபுள் ஆம்லெட் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 427. இதுவரை மூன்று கின்னஸ் சாதனைகளைப் படைத்திருக்கிறார் ஹெல்மர். அப்படிப் போடு ஆம்லெட்டை!
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமை ‘உலக முட்டை தின’மாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஹேப்பி ஆம்லெட் டே
This year World Egg Day is Friday 13th October 2017
No comments:
Post a Comment