SHENBAGARAMAN PILLAI OF TAMILNADU AND GERMANY
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர், செண்பகராமன் பிள்ளை. நாஞ்சில் நாட்டை சேர்ந்த இவர் மீது, 17 வயதிலேயே ராஜ துரோக குற்றம் தேடி வந்தது.
ஆங்கிலேயரிடம் சிக்கி, கொடுமைப்படுவதை விட, தலைமறைவாகி விடுவதே நல்லது என, மும்பைக்கு பயணமானார். அங்கிருந்து, ஒரு ஆங்கிலேயர் உதவியுடன், இத்தாலி சென்றார். இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தில் மேற்கல்வி படித்து, ஜெர்மனிக்கு சென்று, டாக்டர் பட்டமும் பெற்றார்.
இதனிடையே, சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரில் இருந்தபோது, 'அனைத்துலக இந்திய ஆதரவு குழு' ஒன்றை துவக்கினார். அது சார்பாக, 'இந்தியா ஆதரவு' என்ற பத்திரிகையையும் துவக்கி நடத்தினார்.
ஜெர்மன் மன்னருடன் நல்ல நட்பில் இருந்தார், செண்பகராமன்.
ஜெர்மனியில், ஆங்கிலேய எதிர்ப்பு பிரசாரம் செய்து, ஆதரவு பெற்றார். இந்தியாவில் ஆங்கிலேயரை விரட்ட முயன்றவர்களுக்கு, ஆயுதம் வினியோகம் செய்து, அவர்களை விரட்ட வேண்டும் என்பது, அவரது திட்டம்.
அப்போது, திலகரை தொடர்பு கொண்டார். திலகர் ஆதரவாளராக இருந்த, வ.உ.சிதம்பரனாருக்கும் இந்த விஷயம் தெரிய வந்தது.
ஜெர்மன் ஆதரவு இருந்ததால், ராணுவ பயிற்சியும் பெற்றார், செண்பகராமன். 'எம்டன்' நீர்மூழ்கி கப்பலில், அதிகாரியாக, இந்தியாவிற்கு வந்தார்.
கப்பலில் இருந்த மற்ற ஜெர்மானிய அதிகாரிகளுக்கு, தென் மாநில கடற்கரைகளை பற்றி தெளிவாக கூறினார். சென்னை உட்பட பல இடங்களில், பொதுமக்களை தாக்காமல், அதே சமயம், ராணுவ இலக்குகளை மட்டும் தாக்க ஏற்பாடு செய்தார்.
இந்திய கடல் பகுதியிலும், கடற்கரையிலும் குண்டுகளை வீசினார். சென்னை நகர கடற்கரையிலும் குண்டு விழுந்தது. 'எம்டன்' கப்பல், பசிபிக் கடல் வரை சென்றது. இருந்தும், அந்த கப்பலை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை. அதிலிருந்து, 'எம்டன்' கப்பல் மிக பிரபலமாயிற்று.
கேரள மாநிலத்தின் கொச்சியில் இறங்கி, பல தகவல்களை சேகரித்து, மீண்டும் தலைமறைவானார், செண்பகராமன்.
அந்த காலத்திலேயே, செண்பகராமனை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு என, ஆங்கிலேய அரசு அறிவித்தது. இருந்தும், கடைசி வரை, அவர் பிடிபடவே இல்லை. 25 ஆண்டுகள், ஜெர்மனியில் இருந்தார்.
கடந்த, 1931ல், ஜெர்மனியில், ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது.
'நாஜி' கொடுமைகளை எதிர்த்து பேச ஆரம்பித்ததால், ஹிட்லருக்கு எதிரான ஆளாக கருதப்பட்டார். மே, 1934ல், நாஜி ஏஜன்டுகளால், விஷம் வைத்து கொல்லப்பட்டார், செண்பகராமன். அப்போது, அவருக்கு வயது, 43. அவரின் உடல், இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அஸ்தி மற்றும் அவர் சார்ந்த பதிவேடுகளுடன், மும்பையில் குடியேறினார், அவர் மனைவி லட்சுமிபாய். 1947ல், இந்தியா சுதந்திரம் பெற்ற போதிலும், 1966ல் தான், அன்றைய காங்கிரஸ் அரசு, செண்பகராமனை கவுரவிக்க முன்வந்தது.
செண்பகராமன், கேரள மாநிலத்தை சேர்ந்தவரா, தமிழகத்தை சேர்ந்தவரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. இருந்தாலும், அவருடைய முயற்சி, உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை!
ஆக., 15, 1947 நள்ளிரவு, சுதந்திரம் கொடுக்க, முடிவு செய்தது, ஆங்கிலேய அரசு. அப்போதைய கவர்னர் ஜெனரலான மவுண்ட்பேட்டன், நேருவை அழைத்து, 'உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம். அதை எப்படி கொடுப்பது?' என்று கேட்டார்.
'எதை அடையாளமாக வைத்து பெறுவது...' என, நேருவுக்கும் குழப்பமாக இருந்தது.
உடனே, ராஜாஜியை அணுகி, 'நான், நாத்திகன். எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது. அதனால், தாங்கள் தான் தீர்வு கூற வேண்டும்...' என்றார்.
'கவலை வேண்டாம். எங்கள் தமிழகத்தில், மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலை, புதிய மன்னருக்கு கொடுப்பது வழக்கம். நாமும் அந்நியனின் கையால் சுதந்திரம் பெறுவதை விட, குருமகானின் கையால் செங்கோலை பெற்று, ஆட்சி மாற்றம் அடையலாம்...' என்றார், ராஜாஜி.
'நேரம் குறைவாக உள்ளது. உடனே ஏற்பாட்டை செய்யுங்கள்...' என்று உத்தரவிட்டார், நேரு.
திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார், ராஜாஜி.
முறையாக செங்கோல் தயாரித்து, தங்க முலாம் பூசி, இளைய ஆதீனம், தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்படைத்தார், தலைமை ஆதீனம். கூடவே, ஓதுவார் மூர்த்திகளையும், உடன் அனுப்பி வைத்தார். ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில், டில்லி போய் சேர்ந்தனர்.
அப்போது, 1,000 ஆண்டு அடிமைதனத்தில் இருந்து, இந்தியா விடுதலை பெறும் விழாவிற்காக, அனைவரும் காத்திருந்தனர். அந்த சுதந்திர வைபவ தினத்தில், மவுண்ட்பேட்டனிடம் இருந்து, குருமகா சன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம், தம்பிரான் பண்டார சுவாமிகள், செங்கோலை பெற்று, அதற்கு புனித நீர் தெளித்தார்.
ஓதுவார் மூர்த்திகள், 'வேயுறு தோளிபங்கன்...' என்று துவங்கும், கோளறு திருப்பதிகத்தை பாட, 11வது பாடலின் கடைசி வரியான, 'அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே...' என, முடிக்கும் போது தான், செங்கோலை, நேருவிடம் கொடுத்தார், சுவாமிகள்.
அந்த நிகழ்வை தான், நாம் சுதந்திர தினமாக கொண்டாடுகிறோம். இந்த நிகழ்வு, தமிழுக்கும், தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை.
திருவாவடுதுறை ஆதீன மடத்தில் செங்கோல் வைபவம், கருப்பு - வெள்ளை புகைப்படமாக உள்ளது.
No comments:
Post a Comment