Saturday 17 August 2019



“எங்கள் இதயத்தை மட்டுமல்ல எங்கள் உயிரையும் நமது நாட்டிற்காகத் தர முழுமனதுடன் நாங்கள் தயாராக இருந்தோம்”. யுத் சேவா விருது பெற்ற முதல் பெண்மணியான மிண்டி அகர்வாலின் வார்த்தைகள் இவை.


நமது நாட்டின் பெருமையாய், தமிழ் நாட்டின் வீர மனிதனாய் கொண்டாடப்படும் அபிநந்தன் இந்திய எல்லையைக் கடந்துசென்று பாகிஸ்தான் போர் விமானங்களை தாக்கிப் போராடும் போது அவருக்கு வழிகாட்டிய வீர மங்கை தான் இந்த ‘மிண்டி அகர்வால்’. இந்திய விமானப்படையின் அணித்தலைவராகப் (ஸ்குவாட்ரான் லீடர் ) பணியாற்றிவருகிறார். கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி பாலக்கோட் பகுதியில் பாகிஸ்தான் விமானப்படைகளுக்கு எதிரான தாக்குதலை வெற்றிகரமாக நிறைவேற்றக் காரணமாக இருந்தவர் இவர் தான்.


யுத் சேவா விருது பெற்றதன் மகிழ்ச்சியை தேசப்பற்றுணர்வு பொங்க விளக்கிக் கூறுகிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் “ பாலக்கோட் தாக்குதல் முடிவடைந்தவுடன் எதிரிகளிடமிருந்து ஒரு எதிர்தாக்குதலை நாங்கள் எதிர்பார்த்துத் தயாராக இருந்தோம். எங்கள் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அவர்களும் இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். ஆரம்பத்தில் மிகக் குறைவாக இருந்த அவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகமானது. திரை எங்கும் அந்த சிவப்புப் புள்ளிகள் மெல்ல மெல்ல அதிகரித்து வந்ததைக் கண்டேன். முற்றிலும் அழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் நமது எல்லைக்குள் நுழைந்ததை அவர்களின் அதிவேக தாக்குதல் தெளிவாக உணர்த்தியது. ஆனால் மிகச் சிறப்பாக செயலாற்றி அவர்களின் எண்ணத்தை நமது இந்திய வீரர்கள் முறியடித்து விட்டனர்” என்று பாகிஸ்தான் படைகளை எதிர்கொண்ட விதம் குறித்து விளக்குகிறார்.

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு எதிராக நடந்த தாக்குதலைக் குறித்து அவர் கூறும் போது “அபிநந்தன் தனது போர் விமானத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலுக்குத் தயாரானது முதல் அவருக்கான வழிகாட்டுதல் அறிவுரைகளை நான் வழங்கி வந்தேன். எதிரி நாட்டு விமானத்தின் வடிவமைப்பு மற்றும் அது பயணிக்கும் பாதை குறித்த விவரங்களையும் அவருக்கு வழங்கிக் கொண்டிருந்தேன். மிகச் சரியான நேரத்தில் பாகிஸ்தான் போர் விமானமான எஃப்-16 மீது அவர் தாக்குதல் நடத்தினார். அந்த நொடியில் எஃப்-16 போர் விமானம் எனது திரையில் இருந்து காணாமல் போய்விட்டது” என்றார்.

எல்லைகளைக் கடந்துவந்த பாகிஸ்தான் விமானத்தை முந்திசெல்ல முயன்றபோது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் இயக்கிய மிக்-21 போர் விமானம் பாகிஸ்தான் படையால் தாக்கப்பட்டு விபத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து போர்விமானம் காஷ்மீர் எல்லைப்பகுதியில் வீழ்ந்த போது அவரைக் கைது செய்துவிட்டனர்.


No comments:

Post a Comment