Sunday 18 August 2019

MUSLIMS COJOINED WITH SINGALAS , EVICTED TAMILS






MUSLIMS COJOINED WITH SINHALAS , 
EVICTED TAMILS




கிழக்கில் சிந்திய இரத்தங்கள் – 03

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்டிருந்த தென்கிழக்கு பிரதேசங்களை பிரித்து பதுளை மொனராகல பகுதிகளில் உள்ள சில பகுதிகளையும் இணைத்து அம்பாறை மாவட்டம் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. கல்லோயா திட்டத்தின் மூலம் இம்மாவட்டத்தில் சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்களின் சனத்தொகை வீதமும் அதிகரிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்துடன் இருந்த கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளுடன் அம்பாறை தொகுதியையும் இணைந்து திகாமடுல்ல என்ற பெயரில் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட சேருவில தேர்தல் தொகுதி அமைக்கப்பட்டது போல அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட அம்பாறை தேர்தல் தொகுதியும் உருவாக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் ஒரு புறம் சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட்ட சமகாலத்தில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த கிராமங்களிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி விட்டு அக்கிராமங்களை முஸ்லீம்கள் ஆக்கிரமித்து கொண்டனர்.

காலத்திற்கு காலம் தமிழர்கள் மீது முஸ்லீம்கள் தாக்குதல்களை நடத்தியதால் தமிழ் மக்கள் தங்கள் பூர்வீக கிராமங்களிலிருந்து வெளியேற வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. யுத்தத்தை பயன்படுத்தி சிறிலங்கா படைகளின் துணையுடன் தமிழ் மக்களை வெளியேற்றுவதில் முஸ்லீம் அரசியல்வாதிகள் முனைப்புடன் செயற்பட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாக பாலமுனை, பாணமை, திராய்கேணி, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூர் அட்டப்பள்ளம், சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டாவெட்டுவான், செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் சவளக்கடை, சொறிக்கல்முனை, மீராச்சோலை என தமிழ் கிராமங்களின் பட்டியல் நீண்டு செல்கிறது.

தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் நூறு வீதம் தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமங்களில் ஒன்று மீனோடைக்கட்டு. இன்று அவர்கள் முற்றாக துரத்தியடிக்கப்பட்டு அக்கிராமம் இன்று நூறு வீதம் முஸ்லீம் கிராமமாக மாற்றப்பட்டிருக்கிறது.

இக்கிராமம் மட்டக்களப்பு பொத்துவில் வீதியில் திராய்கேணிக்கும் பாலமுனைக்கும் இடையில் அமைந்துள்ளது.

1982ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருக்கோவிலுக்கு செல்லும் வழியில் மீனோடைக்கட்டு கிராமத்தில் தரித்து சென்ற ஞாபகம். அப்போது அக்கிராமத்தில் முழுமையாக தமிழ் மக்களே வாழ்ந்து வந்தனர். மீனோடைக்கட்டு அரசினர் தமிழ் வித்தியாலயம் என்ற பாடசாலையும் சைவக்கோவிலும் இருந்தன.

மிகவும் அழகான வளம் நிறைந்த கிராமம். அம்பாறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தமிழ் கிராமங்களில் மீனோடைக்கட்டு கிராமமும் ஒன்றாகும்.
மீனோடைக்கட்டு கிராமத்தை ஆக்கிரமிக்க முற்பட்ட அயல்கிராமங்களில் வாழ்ந்த முஸ்லீம்கள் தமிழ் மக்கள் மீது நெருக்குதல்களையும் தாக்குதல்களையும் 1978ஆம் ஆண்டிலிருந்து மேற்கொண்டு வந்தனர்.

முஸ்லீம்களின் அச்சுறுத்தல் காரணமாக தமது உயிரை பாதுகாத்து கொள்வதற்காக தமிழ் மக்கள் இக்கிராமத்திலிருந்து இடம்பெயர தொடங்கினர் என்றும் இடம்பெயர்ந்தவர்களின் காணிகளை முஸ்லீம்கள் ஆக்கிரமித்து கொண்டனர் என்றும் சில காணிகளை முஸ்லீம்கள் பணம் கொடுத்து வாங்கினர் என்றும் அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள் என்ற நூலில் எஸ்.ஜெயானந்தமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தாம் அக்கிராமத்தில் வாழ முடியாது என்ற நிலை வந்த போது தமது வீடுவாசல்களை முஸ்லீம்களுக்கு விற்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை என அக்கிராமத்திலிருந்து வெளியேறிய தமிழ் மக்கள் கூறுகின்றனர்.

அச்சுறுத்தல் காரணமாக பலர் வெளியேறியதால் தமது பூர்வீககிராமத்திலேயே வாழ வேண்டும் என உறுதியுடன் இருந்தவர்களும் அச்சம் காரணமாக வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

1984ஆம் ஆண்டுக்கு பின் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் முஸ்லீம்கள் அக்கிராமத்தில் இருந்த தமிழ் மக்களுக்கு நெருக்குதல்களை கொடுத்தனர்.

இதனால் 1985ஆம் ஆண்டில் இக்கிராமத்திலிருந்து தமிழ் மக்கள் முற்றாக வெளியேறினர்.
300க்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்த இக்கிராமத்தில் இன்று ஒரு தமிழ் குடும்பங்கள் கூட இல்லை.
தமிழ் மக்களின் வெளியேற்றத்தை தொடர்ந்து அங்கு பாலமுனை ஒலுவில் உட்பட வேறு கிராமங்களை சேர்ந்த முஸ்லீம்கள் மீனோடைக்கட்டு கிராமத்தில் குடியேறினர்.

மீனோடைக்கட்டு தமிழ் கலவன் பாடசாலை மீனோடைக்கட்டு டாக்டர் ஜமால்டீன் முஸ்லீம் வித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 
அங்கிருந்த சைவக்கோவில்கள் இடிக்கப்பட்டு இருந்த அடையாளமே தெரியாமல் மாற்றப்பட்டிருக்கிறது. ஆலயங்கள் இருந்த இடங்களில் இப்போது முஸ்லீம்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் காணப்படுகின்றன.

மீனோடைக்கட்டிலிருந்து வெளியேறியவர்களில் கணிசமானவர்கள் அயல்கிராமமான திராய்க்கேணியில் குடியேறினர். ஏனையவர்கள் வேறு இடங்களில் குடியேறினர்.

திராய்க்கேணி படுகொலை.

மீனோடைக்கட்டை தொடர்ந்து திராய்க்கேணியில் வாழ்ந்த தமிழ் மக்களையும் வெளியேற்றும் சதி முயற்சிகளில் முஸ்லீம் அரசியல்வாதிகள் ஈடுபட்டனர். அதற்கு துணையாக முஸ்லீம் பொதுமக்களும் செயற்பட்டனர்.

தர்மரட்ணம் வன்னியனாரின் தென்னம் தோட்டம் இருந்த காணியில் 1954ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குடியேற்ற கிராமமே திராய்க்கேணி கிராமமாகும்.

மறைந்த ஊடகவியலாளர் டி.சிவராமின் பேரனான தர்மரட்ணம் வன்னியனாருக்கு ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி பகுதிகளில் பெருந்தொகையான காணிகள் இருந்தன. இந்த காணிகளில் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் குடியேற்றப்பட்டனர்.

ஒலுவில் துறைமுகம், மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு சுவீகரிக்கப்பட்ட காணிகளில் பெரும்பகுதி தர்மரட்ணம் வன்னியனாருக்கு சொந்தமானதாகும்.

திராய்க்கேணிக்கு கிழக்குப் பக்கத்தில் ஒலுவில் கிராமமும் தெற்குப் பக்கத்தில் பாலமுனையும் அமைந்துள்ளது. இக்கிராமம் பொத்துவில் தொகுதியில் உள்ள அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் திராய்க்கேணி கிராமத்தில் சுமார் 350 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர்.
முஸ்லீம் அரசியல்வாதிகளும் பாலமுனை ஒலுவில் கிராம முஸ்லீம்களும் திராய்க்கேணியில் வாழ்ந்த தமிழ் மக்களை வெளியேற்றும் நோக்குடன் 1985ஆம் ஆண்டில் கலவரங்களை உருவாக்கினர். விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் தமிழர்கள் மீது முஸ்லீம்கள் தாக்குதல்களை நடத்தினர்.

இரவோடு இரவாக தமிழர்களின் வீடுகளுக்கு முஸ்லீம்கள் தீவைத்தனர். தமிழர்கள் மீது முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தினர். விசேட அதிரடிப்படையினரின் துணையுடனேயே இத்தாக்குதல்களை முஸ்லீம்கள் நடத்தினர்.   இதனால் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

1985ஆம் ஆண்டிலிருந்து 1990ஆம் ஆண்டுவரை இக்கிராம மக்கள் இடம்பெயர்வதும் மீளக்குடியமர்வதுமாக அவல நிலையிலேயே வாழ்ந்து வந்தனர்.
1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 06ஆம் திகதி திராய்க்கேணி கிராமத்தில் நடந்த படுகொலையே இக்கிராமத்தை முற்றாக நிலைகுலைய வைத்தது.

1990.08.05 இல் திராய்க்கேணியை அண்டியுள்ள ஒலுவில் கிராமத்தை சேர்ந்த வசித்து வந்த முஸ்லீம்கள் 13பேர் தீகவாபி சிங்கள கிராமத்திற்கு தொழிலுக்கு சென்ற வேளை இனந்தெரியாதவர்களால் காட்டுப்பகுதியில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் மோதல்களை உருவாக்குவதற்காக விசேட அதிரடிப்படையினரே இதனை செய்ததாக சில மாதங்களின் பின்னர் தெரியவந்தது.

13 முஸ்லீம்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து மறுநாள் காலையில் 06.08.1990 அன்று ஒலுவில், பாலமுனை கிராமங்களை சேர்ந்த முஸ்லீம்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கத்திகள் வாள்கள் சகிதம் திராய்க்கேணி கிராமத்திற்குள் புகுந்தனர்.

இவர்களுக்கு உதவியாக விசேட அதிரடிப்படையினர் கவச வாகனங்களில் வந்து அக்கிராமத்தை சுற்றி வளைத்தனர்.

திராய்க்கேணி கிராமத்திற்குள் புகுந்த முஸ்லீம்கள் ஒவ்வொரு வீடாக சென்று தமிழர்களை தாக்கினர். வீடுகளையும் அவர்களின் உடமைகளையும் தீயிட்டு எரித்தார்கள். முஸ்லிம்களின் தாக்குதல் தீவிரமடைய கிராமமக்கள் அருகிலிருந்த பிள்ளையார் கோயிலில் அடைக்கலம் புகுந்தார்கள்.

பிள்ளையார் கோவிலுக்குள் நுழைந்த முஸ்லீம்கள் தமிழர்களை வெட்டிக்கொலை செய்தனர். இவர்களின் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என பலரும் கொல்லப்பட்டனர்.

பிள்ளையார் ஆலயத்திற்குள் இருந்தவர்களை முஸ்லீம்கள் வெட்டிக்கொலை செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த சில பொதுமக்கள் அதன் பின்புறமிருந்த நாகதம்பிரான் கோவிலுக்குள் சென்று தஞ்சமடைந்தனர்.

நாகதம்பிரான் ஆலயத்திற்குள்ளும் நுழைந்த முஸ்லீம்கள் அங்கிருந்தவர்களையும் வெட்டிப்படுகொலை செய்தனர். இதிலிருந்து சிலர் தப்பி காடுகளுக்குள் ஒழிந்து கொண்டனர்.

தப்பி சென்ற சிலரை பிடித்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை முஸ்லீம்களிடம் கொடுத்தனர். கொலை வெறியுடன் காணப்பட்ட முஸ்லீம்கள் தமிழ் மக்களை வீதியிலும் கோவிலிலும் வைத்து வெட்டிக்கொன்றனர்.

சுமார் 3மணி நேரம் கொலை வெறியாட்டம் நிகழ்ந்தது. ஆலயத்திற்குள் மாத்திரம் 36பேரின் சடலங்கள் காணப்பட்டன. வீதிகளில் 10 சடலங்கள் காணப்பட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 90க்கு மேல் என வடக்கு கிழக்கு மனித உரிமை ஆணைக்குழுவின் வெளியீடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் பின்னர் சம்பவத்தை கேள்விப்பட்ட காரைதீவு முகாமிலிருந்த விசேட அதிரடிப்படையினர் உயிர் தப்பியிருந்தவர்களை தமது வாகனங்களில் ஏற்றி வந்து காரைதீவு பாடசாலையில் தங்க வைக்கப்பட்டனர்.

திராய்க்கேணியில் இருந்த 360 குடும்பங்களின் வீடுகளும் முற்றாக தீயிட்டு கொழுத்தப்பட்டது.

1990ஆம் ஆண்டிலிருந்து 1994ஆம் ஆண்டுவரை இம்மக்கள் காரைதீவு அகதி முகாமிலேயே வசித்து வந்தனர்.

1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சந்திரிக்கா தலைமையிலான அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து காரைதீவு அகதி முகாமில் 4 வருடங்களாக தங்கியிருந்த மக்கள் மீண்டும் திராய்க்கேணிக்கு சென்று குடியேறிய போதிலும் அப்போது புனர்வாழ்வு புனரமைப்பு மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த அஷ்ரப் இக்கிராம மக்களுக்கு எந்த வித உதவியும் செய்யவில்லை.

அகதி முகாமில் இருந்தவர்களில் சொற்ப தொகையினரே திராய்க்கேணியில் குடியேறினர். ஏனையவர்கள் அச்சம் காரணமாக வேறு கிராமங்களில் குடியேறினர்.

மீண்டும் முஸ்லீம்கள் தங்களை தாக்குவார்கள் என அஞ்சி தங்களின் பூர்வீக இடங்களில் குடியேற தமிழர்கள் தயங்கியதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழர்களின் நிலங்களில் முஸ்லீம்களை குடியேற்றினர்.

தமிழர்களின் பூர்வீக கிராமமான திராய்க்கேணியில் இன்று முஸ்லீம்களே அதிகம் வாழ்கின்றனர்.

No comments:

Post a Comment