APOORVA RAGANGAL -RAJINI




அபூர்வராகங்கள்-ரஜினி



பெங்களூரில் உள்ள தன் நண்பர்களுக்கு ஏற்கனவே ரஜினி கடிதம் எழுதியிருந்தார்.

அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயனாக நடித்து வருகிறேன். திரைப்படக் கல்லூரியில் 36 பேர் படித்த போதிலும், டைரக்டர் பாலசந்தரின் பார்வை என் மீது மட்டுமே பட்டது. எனவே, எனக்குக் கதாநாயகன் வாய்ப்பைத் தந்திருக்கிறார் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இது பற்றி ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் கூறியதாவது,
அபூர்வராகங்களில் சின்ன வேஷத்தில்தான் நான் நடித்தேன். அதைச் சொன்னால், இதற்காகவா 2 வருஷம் படித்துக் கிழித்தாய்! என்று நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என்று நினைத்தேன். அதனால் நான் தான் கதாநாயகன் என்று சும்மா ரீல் விட்டேன்.
1 வருடம், 1 1/2 வருடம் கழித்துதான் அபூர்வராகங்கள் பெங்களூருக்கு வரும் என்று நினைத்து தைரியமாக அப்படிச் சொன்னேன்.
ன்னுடைய துரதிர்ஷ்டம், படம் 2 மாதத்திலேயே பெங்களூருக்கு வந்துவிட்டது. அப்போது நான பெங்களூரில் இருந்தேன். என் நண்பர்களுக்கு ஒரே குஷி எனக்கோ தர்மசங்கடம். என்ன செய்வது என்று தெரியவில்லை.

அபூர்வராகங்கள் படம் ரிலீஸ் ஆன அன்று, முதல் காட்சிக்கே என் நண்பர்கள் எல்லோரும் போனார்கள். இந்தப் படத்தின் ஹீரோ, எங்கள் பிரண்ட்தான்! என்று கூறி, எல்லோருக்கும் சுவீட் கொடுத்தார்கள்.
அவர்கள் பலூன்களை ஊதி, கையில் வைத்திருந்தார்கள். நான் திரையில் தோன்றியதும், பலூன்களை படார், படார் என்று உடைத்து என்னை வரவேற்கத்தான்! படம் ஆரம்பம் ஆச்சு. டைட்டிலில் சிவாஜிராவ் என்ற பேரைத் தேடுறாங்க. அந்தப் பெயர் வரவில்லை. ரஜினிகாந்த் என்ற பெயர் வருது. அது நான்தான் என்று அவர்களுக்குத தெரியவில்லை.
படம் ஓடிக்கிட்டே இருக்கு. திரையில் என்னைக் காணோம். இடைவேளையும் வந்துவிட்டது.
நான் அவர்கள் கண்ணில் படாமல் மெல்ல நழுவிவிட்டேன். படத்தில் நான் இல்லை என்ற முடிவுக்கு நண்பர்கள் வந்துவிட்டார்கள். இருந்தாலும் ‘படம் நல்லா இருக்கு. முழுவதையும் பார்த்துவிட்டு போகலாம்’ என்று உட்கார்ந்திருந்தார்கள். பலூனில் காற்றை இறக்கி விட்டு பக்கெட்டில் போட்டுக்கொண்டார்கள்.
இடைவேளை முடிந்து படம் ஆரம்பம் ஆச்சு.

இரண்டு கதவையும் தள்ளிவிட்டு ஒருவன் உள்ளே நுழைகிறான். தாடி, மீது பழைய கோர்ட்டு, ‘எங்கேயோ பார்த்த முகம் மாதிரி இருக்கே’ என்று நண்பர்கள் நிமிர்ந்து உட்காருகிறார்கள்.
கொஞ்ச நேரம் போனதும், அது நான்தான் என்பது தெரிகிறது. நண்பர்களுக்கு உற்சாகம் தாங்கவில்லை. பலூனை எடுத்து ஊதி, ‘டப் டப்’ என்று உடைச்சாங்க.
அதேநேரத்தில் கமலஹாசனோட முகமும் திரையில் தெரியும். தியேட்டருக்கு வந்திருந்தவர்கள், ‘கமலஹாசன் ரசிகர்கள்தான் பலூனை வெடிக்கிறார்கள்’ என்று நினைத்துக்கொணடார்கள். பெங்களூரில்கூட கமலஹாசனுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களே’ என்று ஆச்சரியப்பட்டாங்க.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
‘அபூர்வராகங்கள்’ சிக்கலான கதை. விக்கிரமாதித்தன் கதையில், வேதாளம் போடும் விடுகதையை அடிப்படையாக வைத்து, புதுபாணியில் இதை பாலசந்தர் எழுதியிருந்தார்.

படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் அப்பா, கமலஹாசன் மகன். 
கமலஹாசன் ஸ்ரீவித்யாவை காதலிக்க, ஸ்ரீவித்யாவின் மகளான ஜெயசுதாவை மணக்க மேஜர் சுந்தர்ராஜன் முடிவு செய்வார்.
படம் கிளைமாக்கை நெருங்கும்போது, ‘நான் தான் பைரவியின் (ஸ்ரீவித்யா) புருஷன்’ என்று சொல்லிக்கொண்டு ரஜினிகாந்த் திடீர் பிரவேசமாக நுழையும்போது, கதையில் பெரும் திருப்பம் ஏற்படும்.
இந்தக் கதையை மக்கள் ஏற்பார்களா? படம் ஓடுமா? என்று டைரக்டர் பாலசந்தர் உட்பட பலருக்கும் சந்தேகம் இருந்தது.
எனினும் படம் மிகச் சிறப்பாக அமைந்திருந்ததால், நூறு நாட்களைக் கடந்து ஓடியது.
படத்தின் நூறாவது நாள் விழாவில் அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு, படத்தில் பங்குகொண்ட கலைஞர்களுக்கு கேடயங்கள் வழங்கினார். 
அவர் வேறொரு முக்கிய நிகழ்ச்சிக்குப் போகவேண்டி இருந்ததால், டைரக்டர் பாலசந்தர், கதாநாயகன் கமலஹாசன், கதாநாயகி ஸ்ரீவித்யா உட்பட சிலருக்கு மட்டும் கேடயங்களை வழங்கி விட்டு, அடுத்த நிகழ்ச்சிக்குப் போய்விட்டார்.

ரஜினிகாந்துக்கும் மற்றவர்களுக்கும் ஏவி.எம். அதிபர் மெய்யப்ப செட்டியார் தான் கேடயங்களை வழங்கினார்.
முதல்வரிடம் கேடயம் வாங்க முடியவில்லையே என்ற மனக்குறை ரஜினிக்கு நீண்டகாலம் இருந்தது. ‘முத்து’’ படத்தில் சிறப்பாக நடித்ததற்கான தமிழக அரசின் பரிசை கலைஞரிடம் பெற்றபோது அந்த மனக்குறை தீர்ந்தது.

அபூர்வராகங்கள் படத்தில் நடித்து முடிக்கும்வரை சிவாஜிராவ் ஆக இருந்தவர். பிறகு ரஜினிகாந்த் ஆக மாறினார். புதிய பெயரை சூட்டியவர் டைரக்டர் கே. பாலசந்தர். இதுபற்றி ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:-

அபூர்வராகங்கள் படத்திற்காக, நான் இன்னொரு காட்சியில் நடித்தேன். நானும், ஸ்ரீவித்யாவும் பங்குகொள்ளும் லவ் சீன் இரண்டு பேரும் ஒருத்தர் கையை ஒருத்தர் பிடித்துக்கொண்டு, சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் வரவேண்டும். அக்காட்சியில் வசனம் கிடையாது. வெறும் உதட்டசைவு மட்டும்தான்.
இதனால், உங்கள் இஷ்டப்படி ஏதாவது பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் நடந்து வாருங்கள் என்று சொன்னார்கள். நான் கன்னடத்தில் பேச ஸ்ரீவித்யா மலையாலத்தில் பேசினார். இந்தக் காட்சி முடிந்தது. ‘நீங்க வீட்டுக்குப் போகலாம்’ என்றார்கள். நான் மேக்கப்பைக் கலைத்துவிட்டு வெளியே வந்தேன். அபூர்வராகங்கள் படப்பிடிப்பு அத்துடன் முடிவடைந்தது.

என் காட்சிகளுக்கு வசனம் பேச (டப்பிங்) ஜெமினி ஸ்டூடியோவுக்குப் போனேன். அப்போது கமல்ஹாசனும், ஸ்ரீவித்யாவும் ‘டப்பிங்கில்’ வசனம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
என்னுடைய காட்சி எப்போது வரும் என்று காத்திருந்தேன். திடீரென்று திரையில் ஒரு காட்சி கோட்டு போட்ட ஒரு தாடி ஆசாமி கதவைத் திறந்து கொண்டு வருகிறான். ஏதோ பேசுகிறான். என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது அது நான்தான் என்று.
என்னை மறந்து அந்தக் காட்சியைப் பார்க்கிறேன். அதே காட்சி சுற்றிச்சுற்றி வருகிறது. வசனம் பேசுவதை மறந்து அதையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். என் உருவத்தைத் திரையில் பார்த்த போது உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சி இதற்காகத்தானே இவ்வளவு நாள் காத்துக்கிட்டிருந்தேன்.
இதை கவனித்துக் கொண்டிருந்த டைரக்டர் பாலசந்தர் சேர் ‘என்ன! வசனத்தைப் பேசலாமா?’ என்று கூறியதும், நான் இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தேன்.

இந்த சமயத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். எனக்கு தமிழ் சரிவரத் தெரியாததால் வேறு யாரையாவது எனக்குக் குரல் கொடுக்கச் சொல்லலாம் என்று சிலர் கூறினார்கள். பாலசந்தர் சேர் அதை ஏற்கவில்லை. கூடவே கூடாது ஒரிஜினல் வொய்ஸ்தான் வேண்டும்’ என்று கூறிவிட்டார். அபூர்வராகங்களில் எனக்கு வசனம் கொஞ்சம்தான். அதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று பாலசந்தர் சேர் சொல்லிக் கொடுத்தார். அதை அப்படியே பேசினேன். அதை டைரக்டர் ‘ஓகே’ செய்தார். டப்பிங் வேலை முடிந்தது. இவ்வாறு குறிப்பிட்ட ரஜினிகாந்த், தனக்கு அந்தப் பெயர் வந்தது பற்றி சொன்னதாவது:-
1975 ஆகஸ்ட் 15ம் திகதி அபூர்வராகங்கள் படம் வெளிவரும் என்று திகதி குறிப்பிடப்பட்டது.
பாலசந்தர் சேர் என்னை அழைத்தார். ‘டைட்டிலில் பெயர் போட வேண்டும். சிவாஜிராவ் என்ற பெயர் வேண்டாம். ஏனென்றால் ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருப்பதால், சிவாஜி என்ற பெயர் வேண்டாம். ‘ராவ்( என்கிற பெயரும் தமிழ்நாட்டுக்குப் பெருந்தாது என்றார். “நீங்கள் ஏதாவது பெயர் சொல்லுங்க சேர்” என்று கூறிவிட்டுத் திரும்பினேன். என் நண்பர்களிடம் கலந்து ஆலோசித்தேன். ‘சரத்’ ‘ஆர். எஸ். கெய்க்வாட்’ என்று இரண்டு பெயர்கள் என் மனதில் இருந்தன. அதைச் சொன்னேன். நண்பர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக ‘நன்றாக இல்லை’ என்று கூறினார்கள்.
மறுபடியும் பாலசந்தர் சேர் கிட்டப் போய் நீங்களே ஆசிர்வாதம் செய்து ஒரு பெயர் வையுங்க! என்றேன். அந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். பெளர்ணமி தினம்.
பாலசந்தர் சேர் சொன்னார். என்னுடைய மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில் சந்திரகாந்துக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் ஸ்ரீகாந்த், மற்றவன் ரஜினிகாந்த். ஸ்ரீகாந்த் என்ற பெயரை ஏற்கனவே ஒருவருக்கு வைத்தாகிவிட்டது. ரஜினிகாந்த் என்ற பெயரை யாருக்கு வைக்கலாம் என்று ரொம்ப நாளா நினைத்துக் கொண்டிருந்தேன். அதை உனக்கு வைக்கிறேன். இவ்வாறு பாலசந்தர் சொன்னதும், அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டேன். “நல்ல வில்லனா வரணும் என்று ஆசிர்வாதம் செய்யுங்க’ என்றேன். ‘வில்லன் எதுக்கப்பா’ நீ பெரிய நடிகனாக வருவே பார்த்துக் கொண்டே இரு’ என்றார் பாலசந்தர் சேர்.
எனக்குத் தாங்க முடியாத உற்சாகம். நேராக மெரீனா கடற்கரைக்கு ஓடினேன். கடற்கரை மணலில் உட்கார்த்து நீலக்கடலை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு மனக்கஷ்டம் வந்தாலும் உற்சாகம் வந்தாலும் கடற்கரைக்குச் சென்று தனியாக உட்கார்ந்து சிந்தனையில் மூழ்கிவிடுவேன். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

1975ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம்திகதி அபூர்வராகங்கள் ரிலீஸ் ஆயிற்று.

மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம். பாலசந்தர் தன் படங்களில் தனி முத்திரை பதித்துக் கொண்டிருந்த காலக்கட்டம்.எனவே, அதை டைரக்டர் படமாகத்தான் ரசிகர்கள் நினைத்தார்கள். சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரிலும் இப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. படம் பார்க்கப் போனார் ரஜினி. டிக்கெட் கிடைக்கவில்லை.
தியேட்டர் மனேஜரை சந்தித்து நான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன் எனக்கு ஒரு டிக்கெட் வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அவரை மேலும் கீழுமாகப் பார்த்த மனேஜர் இரக்கப்பட்டு ஒரு டிக்கெட் கொடுத்தார். துள்ளிக்குதித்து ஓடிய ரஜினி திரையில் தன் உருவத்தைப் பார்த்து மகிழ்ந்தார். நம்கனவு நிறைவேறிவிட்டது. வில்லன் வேடங்களாவது தொடர்ந்து கிடைக்கும்” என்று நினைத்தார்.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER