Friday 16 July 2021

SAARUHAASAN CINEMA ACTOR ,LAWYER BORN 1931 JANUARY 5

 


SAARUHAASAN  CINEMA ACTOR ,LAWYER BORN 1931 JANUARY 5



அந்த நடிகர் ஒரு திருமணத்துக்கு போய் விட்டு காரில் ஏறுகிறார்.
"டேய்....இந்த ஆளு தான்டா தலைவருக்கு பெண் தரமாட்டேன்னு சொன்னவரு. மம்முட்டி கேட்டும் இல்லைன்னு சொன்ன ஆளு...யோவ்..என்னா தில்லு இருந்தா எங்க தலைவருக்கே பொண்ணு இல்லைன்னு சொல்லுவே...போடுடா..."
ஆம்..அப்படி ரஜினி ரசிகர்களால் கூவப்பட்ட நடிகர் தளபதி படத்தில் ஷோபனாவுக்கு அப்பாவாக நடித்து பெண் தர மறுக்கும் சாரு ஹாசன்.
சாருஹாசனின் தந்தை சீனிவாசன் சுதந்திர போராட்டத்துக்கு சிறை சென்ற போது அங்கு மற்ற கைதிகளிடமிருந்து சீனிவாசனை காப்பாற்றிய சக கைதியின்பெயர் யாக்கூப் ஹாசன். அப்போதே தன் குழந்தைகளுக்கு ஹாசன் என பெயரிட முடிவெடுத்த சீனிவாசன் தன் முதல் குழந்தைக்கு வைத்த பெயர் 'சாருஹாசன்'. 1931 காலகட்டத்தில் இப்படி ஒரு இந்து-முஸ்லீம் பெயர் வைக்க எத்தனை துணிச்சல் வேண்டும்.
சீனிவாசன் அந்த மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் பெயர் பெற்ற வழக்கறிஞர். சுதந்திர போராட்ட வீரர். இந்திய தேசிய காங்கிரஸில் ஈடுபாடுடையவர். அந்த மாவட்டத்தின் கல்வியை கண்காணிக்கும் பொறுப்பில் சீனிவாசன் இருந்தாரென்றால் அவர் மதிப்பு புரியும். சாருஹாசன் ஐந்து வயதாகும் போது சிறிய விபத்து ஏற்பட்டதால் நடக்க முடியாமல் போனது. அதனால் சீனிவாசன் வீட்டிலேயே கல்வி கற்க டியூஷன் ஆசிரியரை ஏற்பாடு செய்தார். ஒன்பது வயதானதும் சாரு பள்ளிக்கு சென்றார். சீனிவாசன் சிபாரிசு செய்தாலும் சிறிய தேர்வுக்கு பின்னர் நேரடியாக ஐந்தாம் வகுப்பில் சேர்ந்தார் சாரு. படிப்பில் கெட்டி.
தந்தையைப் போலவே பெல்காமில் சட்டம் படித்து வழக்கறிஞரானார் சாரு. சில வழக்குகளில் அப்பாவையே எதிர்த்து வாதிடுவார். இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கில் முத்துராமலிங்கத்தேவருக்கு ஆதரவாக வாதிட்டார் சாருஹாசன். ஆச்சர்யம் என்னன்னா இம்மானுவேல் உயிரோடு இருந்த போது அவர் வழக்குகளுக்கும் சாரு தான் ஆஜராகி இருந்தார். இவ்வழக்கில் முத்துராமலிங்கத்தேவருக்கு பெயில் எடுத்தவர் சாரு தான். மிகப்பெரிய பேசப்படும் வழக்குகளில் ஆஜரானவர்.
சீனிவாசன்-ராஜலக்ஷ்மி தம்பதிக்கு 31ல் சாருஹாசன், 36ல் சந்திராஹாசன், 46ல் நளினி பிறந்தனர். 1953 வாக்கில் அம்மா ராஜலக்ஷ்மி நான்காவது முறை கர்ப்பமான போது சாருவுக்கு 23 வயது. கர்ப்பமான தாயை பிரசவத்துக்கும் பிறகு பார்த்துக்கொள்ள ஆள் தேவைப்பட சாரு திருமணம் செய்து கொள்ள ஏற்பாடாயிற்று. சாருஹாசன் கோமளம் என்கிற மன்னியை திருமணம் செய்து கொள்ள 54ல் கமல் பிறந்தார். கமலுக்கு இரண்டு தாயார். அம்மாவும், மன்னியும். மன்னி கோமளத்துக்கு மாமியார், கணவர், குழந்தை கமல் என மனம் நோகாமல் கவனித்துக்கொள்ள எந்த தயக்கமும் இருந்ததில்லை.
கமல் வளர்ந்ததும் அவரை கலையுலகில் பெரியாளாக்கி பார்க்க வேண்டும் என ராஜலக்ஷ்மி நினைத்தார். சீனிவாசனோ இந்த ஊர் கலெக்டரை விட என் மகன் பேசப்பட வேண்டும் என நினைத்தார். அதனால் சாருவை கமலோடு சென்னைக்கு அனுப்பினார் சீனிவாசன். அப்படித்தான் சாருஹாசன் சென்னைக்கு தம்பியோடு வந்தார்.
களத்தூர் கண்ணம்மா முதல் தன் தம்பி கமலை தோளில் சுமந்த சாருஹாசன் அவரது முழு முதல் காவலனாக இருந்தார். சாரு-கோமளம் தம்பதிக்கு நந்தினி, சுஹாசினி, சுபாஷிணி என மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர்.
79ல் மகேந்திரன் உதிரிப்பூக்கள் எடுத்த போது நண்பர் சாரு தான் அஸ்வினிக்கு தந்தையாக நடிக்க வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றார் மகேந்திரன். தயக்கத்தோடு சம்மதித்தார் சாரு. மகேந்திரன் நொந்து போகும் அளவுக்கு ரீடேக்குகள் வாங்கினார் சாருஹாசன். அவரது அமைதியான பேச்சும், மெதுவான உடல்மொழியும் அவரை நல்ல நடிகராக பின்னாளில் பார்க்க வைத்தன. அப்படி முதல் சினிமா வாய்ப்பு வந்த போது அவர் வயது 49.
தொடர்ந்து நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு, அழகிய கண்ணே, நிழல்கள் என நடித்துக்கொண்டே இருந்தார். 1987ல் கிரிஷ் காஸரவல்லி என்கிற கன்னட இயக்குனர் எடுத்த 'தபரண கதே' என்கிற படத்தில் நாயகனாக நடித்ததோடு தேசியவிருதும் பெற்றார் சாருஹாசன். தபரா என்கிற வாட்ச்மேன் கிரேடிலுள்ள அரசு ஊழியர் வெகு சின்சியர். ஆனால் அவர் ரிட்டயரானதும் அவரது பென்ஷன் பணத்தை வாங்க அவர் படும் பாடு தான் கதை. நோய்வாய்ப்பட்ட மனைவியின் சிகிச்சைக்கு பணத்துக்காக அவரது பென்ஷன் வராததால் சிகிச்சை செய்ய முடியாமல் தவிப்பதும், பின் க்ளைமாக்ஸில் பணம் வரும் போது அவரது மனைவி சிகிச்சை கிடைக்காமல் இறந்தே போயிருப்பார். இப்படத்தை பார்த்த அன்றைய முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே அப்போதே பென்டிங் இருந்த எல்லா பென்ஷன் கோப்புகளையும் கிளியர் செய்தாரென்றால் சாருவின் நடிப்பின் ஆழம் எப்படிப்பட்டது..
தளபதியிலும்,வேதம் புதிது படத்திலும் அவர் ஏற்றிருந்த நாயகியின் அப்பா பாத்திரங்கள் பேசப்பட்டவை. வேதம்புதிதுவின்நீலகண்ட சாஸ்திரி தான் அன்றைய பிராமணர்களின் மன ஓட்டத்துக்கு எடுத்துக்காட்டு. அதுவும் தளபதியில் அவர் ரஜினிக்கு பெண் தரமாட்டேன் என்றதும் அவர் மேல் கோபம் வரும் பாருங்க...தூக்கி போட்டு மிதிக்கிற அளவுக்கு வரும்... படத்தின் மெயின் வில்லனிடம் கூட அவ்வளவு கோபம் வராது ரசிகர்களுக்கு.
இவ்வளவு சிறந்த நடிகர் நண்பராக இருந்தும், தன் ஆதர்ச சிஷ்யன் கமலின் அண்ணனாக இருந்தும், பாலச்சந்தர் தன் ஒரு படத்தில் கூட சாருஹாசனை நடிக்க வைக்கவில்லை. தலைமகன் என்கிற பிரபு படத்தில் சாருஹாசனும், சந்திரஹாசனும் இணைந்து நடித்தனர். மலையாளத்தில் அதிகம் நடித்த சாருஹாசன் 'அதர்வம்' என்கிற படத்தில் மம்முட்டி, சில்க்கோடு நடித்தது பேசப்பட்டது.
1982லேயே சாருஹாசன் பிரபு-சுஹாசினியை வைத்து 'புதிய சங்கமம்' என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். ஆச்சர்யமான விஷயம் இப்படத்தின் தயாரிப்பாளர் பழம்பெறும் நடிகர் எம்.கே.ராதா. 2013ல் IPC215 என்கிற படத்தையும்இயக்கினார்.
சமீபத்தில் 'தாதா89' என்கிற படத்தில் பேட்டை தாதாவாக நடித்திருந்தார் சாருஹாசன். கமல் நடித்த சத்யா படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்பட்டது. சத்யா கமல் ரோல் தான் வயதாகி சாரு நடித்து எடுக்கப்பட்டது. சாரு ஜோடியாக(அமலா) நடித்தது மேனகாவின் அம்மாவும், கீர்த்தி சுரேஷின் பாட்டியுமான சரோஜா. திரையுலகம் ஏனோ அவரை சரியாக பயன்படுத்தவில்லையென்றே தோன்றுகிறது.
மிகச்சிறந்த நடிகரான சாரு கடவுள் நம்பிக்கை அற்றவர். பெரியார் இவரை சிஷ்யா என அழைக்கப்பெற்றவர் சாரு.
சாருவின் வாழ்க்கையை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கும். எல்லாமே லேட்டாகவே கிடைத்தது அவருக்கு. ஆனாலும் லேட்டஸ்ட் தான் இந்த 90 வயதிலும். தன் தந்தை, அம்மா, தம்பிகள், மனைவி, குழந்தைகள் எல்லோருக்கும் நல்லவனாக வாழ்வது நமக்கெல்லாம் ஆகும் காரியமா?
தமிழ் சினிமா கண்ட நடிகர், இயக்குனர்....
May be an image of 1 person
பாண்டியன் and 19 others

No comments:

Post a Comment