Saturday 3 July 2021

SHAKILA , DISAPPOINTED ABANDONED PERSON

 


SHAKILA , DISAPPOINTED 

ABANDONED PERSON

உடான்ஸ் Vs உண்மை (பாகம் 4)
கதாநாயகிகள் டூ பீஸ் உடையில் வந்தால்-முத்தக் காட்சியில் நடித்தால்- படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக இருந்தால் அதை தைரியம் என்று பாராட்டித் தள்ளும் நாம்தான், சிலரை மட்டும் செக்ஸ் நடிகைகள் என்று தள்ளி வைத்துப் பார்க்கிறோம்.
அது ஒரு படப்பிடிப்புத் தளம். டைரக்டர் ‘ஆக்சன்‘ என்று கத்துகிறார். குளித்து முடித்து ஈரத்துணியுடன் தேகத்தை மெல்ல சிலிர்த்தபடி மாடிப்படியில் சில்க் ஸ்மிதா இறங்கி வருகிறார். கீழே வரும் சில்க் ஸ்மிதாவுக்கு கோப்பையில் காபி கொடுக்க அவரது தங்கை கேரக்டரில் நடிக்கும் 16 வயது பெண் தயாராக நிற்கிறார்.
சில்க் ஒவ்வொரு படியாக இறங்கி வருகிறார். சில்க்கிடம் ‘அக்கா காபி‘ என்று சொல்லியடி கோப்பையை அவரிடம் நீட்ட, அப்போது சில்க் அந்தப் பெண்ணின் முகத்தில் அறைவதுதான் காட்சி.
சில்க் ஸ்மிதா நடந்து வரும் போது அவர் அணிந்திருந்த பேன்டீஸ் மிகத் தெளிவாக தெரிகிறது. கவனக் குறைவினால் அது நடந்துவிட்டதாக நினைத்த அந்தப் பெண், ஷாட் போய்க் கொண்டிருப்பதை பற்றிக் கூட கவலைப்படாமல் சில்கிமிடம், ‘எக்ஸ்க்யூஸ் மீ மேடம், ஐ கேன் சீ யுவர் பேன்டீஸ்‘ என்று சொல்லிவிட்டார்.
திடீரென அங்கே ஒரு நிசப்தம். நல்லதுதானே செய்தோம் என்ற எண்ணத்துடன் அந்தச்பெண் அப்பாவியாக எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. சில்க் மறுபடியும் இறங்கி வருகிறார். குட்டிப்பாவாடையும் டாப்ஸூம் அணிந்த அந்தப் பெண், ‘அக்கா காபி‘ என்று கப்பை சில்க்கை நோக்கி நீட்டுகிறார். காட்சிப்படி ஸ்மிதா அந்தப் பெண் முகத்தில் ஓங்கி ஓர் அறை விடுகிறார். அந்த அறையே நடுங்கும்படி ஓர் ஓசை கேட்டு அடங்குகிறது. அந்தப் பெண்ணின் கன்னம் சிவந்து போனது. அந்தப் பெண் வலியால் துடித்தபடி கதறி அழுதாள். கோபமும் துக்கமும் தொண்டையை அடைக்க அங்கிருந்து ஒரே ஓட்டமாக அந்தப் பெண் ஓடினாள்.
அந்தப் படம் ‘ப்ளே கேர்ள்ஸ்‘. சில்க்குடன் நடித்து உண்மையாகவே அவரிடம் அறை வாங்கிய அந்த நடிகை ‘ஷகிலா‘.
ஆண்களின் தூக்கத்தைக் கெடுக்கும் படங்களின் மூலம் தென்னிந்தியா முழுவதும் தன் உடலால் ஆக்கிரமித்திருந்த ஷகிலா வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் துயர் மிகுந்த வலியுடனே கடந்திருக்கிறது.
இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஷகிலாவின் அப்பாவும் அம்மாவும் மறுமணத்தில் இணைந்தவர்கள். ஷகிலாவின் அண்ணனும் அக்காவும் அப்பாவின் முதல் மனைவின் குழந்தைகள். ஷகிலாவுடன் பிறந்தவர்கள் 2 அண்ணன்கள். ஒரு தம்பி. ஒரு தங்கை. ஷகிலா பிறந்தது 1977.
ஷகிலா பள்ளியில் படிக்கும் போது மிகவும் சுட்டித்தனமான பெண்ணாக வலம் வந்திருக்கிறார். ஆண்கள் அதிகம் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ அவருக்கு பள்ளியில் ஆண் நண்பர்களே அதிகம். ஆண்களைப் போலவே உடை உடுத்துவது, ஆண்களை போலவே நடை உடை பாவனை என்று வலம் வந்திருக்கிறார். அப்பாவின் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு இவர் சுற்றி வராத கோடம்பாக்கத் தெருக்களே இல்லை.
ஷகிலா படித்தப் பள்ளியும் கோடம்பாக்கத்தில் தான் இருந்தது. அந்த காலகட்டத்தில் இந்தியாவின் முதல் 3D படமான ‘மைடியர் குட்டிச்சாத்தான்‘ படம் வெளி வந்திருக்கிறது. அந்தப் படத்தில் நடித்து பேபி சோனாவும் மாஸ்டர் டிங்குவும் அந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
‘மை டியர் குட்டிச்சத்தான்‘ வெற்றிகரமாக ஓடியதால் சோனாவும் டிங்குவும் பிரபலமாகி விட்டார்கள். அது எப்போதும் சுட்டித்தனமாக சுற்றிக் கொண்டிருக்கும் ஷகிலாவின் கண்களை உறுத்தியது. நானும் சினிமாவில் நடித்து இவர்களைபோல பிரபலமாக வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதுவும் சாவித்ரி போல் பெரிய நடிகை ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.
நண்பர்களுக்காக எதையும் செய்யத் துணிந்தவராக இருந்திருக்கிறார், ஷகிலா. ஒருமுறை நண்பர்களுக்காக பள்ளியில் இருந்து தேர்வுத்தாளை திருடியிருக்கிறார். அந்தப் பிரச்சனையால் பள்ளி ஆசியர்களுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. தன் தவறை உணர்ந்த ஷகிலா நேராக பள்ளி முதல்வரை சந்தித்து உண்மையை ஒப்புக் கொண்டார்.
தானே முன்வந்து உண்மையை ஒப்புக் கொண்டதால் மன்னிக்கப்படுவோம் என்று எதிர்பார்த்த ஷகிலாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதுவரை ஷகிலாவிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்த ஆசிரியர்கள் அவரை வெறுக்கத் தொடங்கினர். ஏற்கெனவே படிப்பில் சுமாராக இருந்த ஷகிலாவுக்கு இந்த சம்பவத்துக்குப் பின் படிப்பில் கவனம் செல்லவில்லை.
10ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. குடும்பத்தில் வறுமை தாண்டவம் ஆடத் தொடங்கிய காலம் அது. அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழியில்லை என்ற நிலையில் சொந்தத் தாயினால் தன் 16ம் வயதில் பாலியல் தொழிலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.
அதன்பின்பு, ‘DFT –Film institute‘ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். சன்டிவியில் வெளியான ‘நான்ஸி‘ என்ற மெகாத் தொடரில் கன்னியாஸ்த்ரியாக நடித்தார். அந்த காலகட்டத்தில்தான் நீங்கள் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் படித்த ‘ப்ளே கேர்ள்ஸ்‘ படம் வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தில் சில்க் ஸ்மிதா இவரை அறைந்தது ஏதேச்சையாக நடந்த ஒன்றுதான். அந்த சம்பவத்துக்குப்பின் ஷகிலா அந்தப் படத்தில் நடித்தார். சில்க் வீட்டில் அவருடன் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிடும் அளவுக்கு அந்தப் படம் அவர்கள் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
‘ப்ளே கேர்ள்ஸ்‘ பாலியல் கல்வி தொடர்பான படம். படம் சூப்பர் ஹிட்டானது. அதன்பின்பு சிறுசிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது பிசியாக இருந்த கவுண்டமணிக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு கவனிக்கப்படும் நடிகையாக வலம் வந்தார்.
90களின் இறுதியில், இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்துதான் மலையாள சினிமாவில் இவர் நடிக்கத் தொடங்கினார். இவர் முதல் முதலாக ‘கின்னாரத்தும்பி‘யில் நடிக்கும் போது இவருக்கு 22 வயது. அந்தப்படத்தில் இவரது சம்பளம் 25 ஆயிரம்.
மலையாள சினிமாவில் இவர் பிசியாக இருந்த நேரத்தில் மொத்தமாக 5 நாட்கள் கால்ஷீட் கேட்ட ஒரு தயாரிப்பாளிடம் ‘ஒரு லட்சம் தந்தால் நடிக்கிறேன்‘ என்று சொல்லி இருக்கிறார். ஒரு படத்துக்கு ஒரு லட்சம் கேட்டால், நடிக்க அழைக்க மாட்டார்கள் என்று நினைத்திருக்கிறார். ஆனால் அந்த தயாரிப்பாளரோ ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கிறார் என்று புரிந்து கொண்டு அதற்கும் சரிசென்று சொல்லி முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டார்.
அப்போதுதான் தன் மார்க்கெட் நிலவரம் என்னவென்றே ஷகிலாவுக்கேப் புரிந்திருக்கிறது. பின்பு இவரது சம்பளம் லட்சங்களாக உயர்ந்தது. தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. பல தயாரிப்பாளர்கள் இவர் படங்களால் சொத்துகள் வாங்கி குவித்தார்கள். ஒரு தயாரிப்பாளர் புதிதாகக் கட்டிய தன் வீட்டுக்கு ஷகிலாவின் பெயரை வைத்தார்.
துபாய், பஹ்ரைன், மஸ்கட் ஆகிய நகரங்களில் கலை நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டார். கலை நிகழ்ச்சிக்காக இவருக்கு பத்துலட்சம் சம்பளம் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் மலையாளத்தில் சூப்பர் ஸ்டார்களுக்கு மட்டுமே இந்தளவு சம்பளம் வழங்கப்படும்.
இவரது படங்கள் ரிலீஸ் ஆகும் தேதியில் மலையாளத்தில் வெளியாகும் மற்ற படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாகக் கூறி கேரளா நடிகர்கள் சங்கம் இவரை வைத்து படம் எடுக்க தடை விதித்தது.
இதனால், வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இந்த நேரத்தில் மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. தயாரிப்பாளரும் இயக்குநரும் சொன்ன கதை பிடித்திருந்ததால் அந்தப் படத்தில் ‘அமிர்தானந்தமயி‘ போன்ற ஒரு சாமியார் வேடத்தில் நடித்திருந்தார். ‘நானும் ஒரு நடிகையாகி விட்டேன். இனிமேல் நல்ல கேரக்டர்கள் தனக்குக் கிடைக்கும்‘ என்று எதிர்பார்ததிருந்தார்.
அந்தப் படம் கேரளாவில் வெளியாகி பெரும் பெரும் வெற்றி பெற்றதாக இவருக்கு தகவல் கிடைத்தது.
சில நாட்களில் அந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. ஷகிலாவின் மேக்கப்மேன் ரவி (இப்போது ஷகிலா ரவி) கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார்.
படத்தின் ரிசல்ட்க்காக காத்திருந்த ஷகிலாவை சந்தித்த ரவி, ‘மேடம், நீங்க நடிச்ச எந்த சீனும் அந்தப் படத்தில இல்ல. மொத்தமா ரெண்டு பெட்ரூம் சீனும் கொஞ்ச நேரம் நீங்க சாமியாரிணியா நடிச்ச சீனும்தான் இருக்கு. இது ‘பிட்டுப் படம்‘ மேடம். நம்மள ஏமாத்திட்டாங்க‘ என்று அழுதபடி சொல்லி இருக்கிறார்.
அன்று இரவு முழுவதும் அழுது தீர்த்த ஷகிலா காலையில் எழுந்ததும், பத்திரிகையாளர்களை சந்தித்து, ‘இனிமேல் மலையாளப் படங்களில் நடிக்க மாட்டேன்‘ என்று அறிவித்துவிட்டு ‘இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள்‘ என்று கிளம்பிவிட்டார்.
அங்கிருந்து வீட்டுக்கு வந்த பின்புதான் இதுவரை தான் சம்பாதித்த பணம் எதுவும் தன் கையில் இல்லை என்பதே ஷகிலாவுக்குப் புரிந்திருக்கிறது. தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் தன் (உடன்பிறவா) மூத்த சகோதரியிடமே கொடுத்து வைத்திருந்தார். நடிப்பதை நிறுத்தியதாக அறிவித்ததும் அவர் மொத்தப் பணமும் செலவாகிவிட்டது என்று கைவிரித்துவிட்டார் அவர்.
மொத்த குடும்பமும் தன்னை ஏமாற்றியதை நினைத்து வேதனைப்பட்டாலும் ‘சாவித்ரி‘ போல பெரிய நடிகை ஆகவேண்டும் என்ற கனவோடு சினிமாவுக்கு வந்த ஷகிலா அப்படியொரு வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
கேரளாவிலிருந்து இங்கு வந்தவர்களை பெரிய நடிகையாக்கி, நாம் அழகு பார்த்துக் கொண்டிருக்க, இங்கிருந்து கேரளா சென்ற ஒரு நடிகையை செக்ஸ் நடிகை என்று முத்திரை குத்தியது நியாயமா?
ஷகிலாவின் மார்புகளை மட்டுமே பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் ஆண் உலகம் அவற்றுக்குப்பின்னால் இதயம் என்று ஒன்று இருப்பதை உணருவது எப்போது?
Like
Comment
Share

No comments:

Post a Comment