Monday 19 July 2021

MGR AND THENGAI SEENIVASAN

 


MGR AND THENGAI SEENIVASAN



"தேங்காய் சீனிவாசன் மறைந்தபோது எம்.ஜி.ஆர் கொடுத்த நீண்ட தந்தி"

#

பழம்பெரும் நடிகர்களில் தேங்காய் சீனிவாசன் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமானவராக இருந்தார். 

வில்லனாக, நகைச்சுவையாக, குணச்சித்திரமாக நாயகனாகக்கூட நடித்து அசத்தியவர்.

காமெடியில் தனக்கென்று தனி பாணியை கடைபிடித்து ரசிக்க வைத்தவர். அவரது குடும்பத்திலிருந்து அவரது பேரன் ஆதித்யா நடிக்க வந்திருக்கிறார்.

இந்த நேரத்தில் தேங்காய் சீனிவாசனின் மகன் சிவசங்கர் அவரது தந்தையின் நினைவுகள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

“சின்ன வயசில் அப்பாவை நாங்கள் அதிகமாகப் பார்க்க முடியாது. பயங்கர பிஸியாக இருப்பார்.

70 களில் பல படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்.

அம்மாதான் எங்களைப் பார்த்துக்கொள்வார்கள். ஆன்மீகத்தில் அப்பாவுக்கு அதிகமான ஈடுபாடு. கோவில் கோவிலாக டூர் போகும்போது மட்டும் தான் நாங்கள் அப்பாவோடு இருப்போம்.

வீட்டில் இருக்கும்போது தரையில் பாய் போட்டு உட்கார்ந்து கொண்டு, நண்பர்களோடு அரட்டையடிப்பது அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.

அவருக்கு சினிமாவும் நண்பர்களும்தான் முக்கியமாக இருந்தது. மேஜர் சுந்தர்ராஜன், வெண்ணிறஆடை மூர்த்தி, ஜெய்சங்கர், நாகேஷ், சுருளிராஜன், அசோகன் போன்றோர் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

இரண்டாவது ஞாயிற்றுக் கிழமைகளில் அனைவரும் வீட்டுக்கு வந்து விடுவார்கள்.

நாங்கள் குழந்தைகளாக இருப்பதால் கதவுக்கு பின்னால் இருந்து பயந்து கொண்டு பார்ப்போம். ஒவ்வொருத்தருக்கும் பெரிய ரசிகர்கள் செல்வாக்கு இருந்தாலும் எளிமையாகப் பழகுவார்கள்.

சென்னைக்கு வெளியே காரில் போய்க்கொண்டிருக்கும் போது வழியில் எங்காவது வயல் வெளியைப் பார்த்து காரை நிறுத்தி தலையில் துண்டை போட்டுக்கொண்டு பம்ப் செட்டில் குளிப்பார். 

இளநீர் வெட்டிக் கொடுப்பார்கள் அதை சாப்பிட்டு விட்டு வருவோம். எங்காவது மசால் வடை வாசம் வந்தால் காரை நிறுத்தி சாப்பிட்டுவிட்டுதான் வருவார்.

ஒருநாள் ‘தர்மயுத்தம்’ படத்தில் நடித்த சமயத்தில் அந்த கோட் சூட்டோடு விட்டுக்கு வந்தார். நான் அழுது அடம் பிடித்தேன்.

அப்பா இந்த ட்ரெஸ்ஸில் உங்களைப் பார்த்தால் என் பிரண்ட்ஸ் எல்லாரும் சிரிக்கிறாங்கப்பா என்று அழுதேன். ஊரே  என்னைப் பாராட்டுது நீ என்னடான்னா அழற என்று கேட்டு சிரித்தார்.

ஒரே வருஷத்துல 35 படங்களில் நடித்துக் கொடுத்தார். நாலு மணிநேரம் ஒருகால் ஷீட், ஒரே ஸ்டுடியோவில் மாறி மாறி நடித்துக் கொடுத்தார்.

மேக்கப் போடும்போது உதவி இயக்குநர்கள் வந்து கேரக்டரைச் சொல்லி விட்டுப்போய் விடுவார்கள். ஸ்பாட்ல போய் தன் பாணியில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

சம்பளம் கூட கறாராகப் பேசி வாங்க மாட்டார். தயாரிப்பாளர் வந்து அண்ணே இந்தப் படம் சரியா போகலைண்ணே என்று சொன்னால் சரி பராவாயில்லை என்று விட்டு விடுவார்.

எம்.ஜி.ஆர். கூட நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். ஆனால் எந்தப் பதவியும் கேட்காமல் தேர்தல் நேரத்தில் அவருக்காகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார்.

கடைசிக் காலங்களில் உடல்நிலையைப் பார்த்துக் கொள்ள படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். வருஷம் ஒரு முறை படம் தயாரிக்கலாம் என்று நினைத்திருந்தார்.

அப்பா தயாரித்த முதல் படம் ‘கிருஷ்ணன் வந்தான்’. சிவாஜி, மோகன் ஆகியோர் நடித்திருந்தர்கள். அப்பாவிடம் சிவாஜி சம்பளம் வாங்கவே இல்லை.

அதே போல இளையராஜா சார் ‘கிருஷ்ணன் வந்தான்’ படத்திற்கு இசையமைத்தபோது அப்பாவிடம் “அண்ணே நான் உங்களிடம் சம்பளம் வாங்க மாட்டேன்.

நீங்கள் நாடகம் போட்டபோது நான் ஐநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு இசையமைத்திருக்கிறேன் அதை மறக்க மாட்டேன்.”  என்று சொன்னார்.

ஆனாலும் முதல் படம் விற்கமுடியாமல் போனது. இதனால் குறைந்த விலைக்கு விற்க வேண்டியதாகி விட்டது. அப்புறம் ரஜினி சார் அப்பாவுக்காக ஒரு படம் பண்ணித் தருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் அதற்குள் அப்பா மறைந்து விட்டார்.

அப்பா நவம்பர் 87-ல் மறைந்தார். அந்த நாளில்  எம்.ஜி.ஆரிடமிருந்து ஒரு பக்கத்துக்கு தந்தி வந்திருந்தது. அப்போது எம்.ஜி.ஆர். உடல்நிலை மோசமாக இருந்தது.

அதனால் தந்தி அனுப்பியிருந்தார். ஆனால் உடலை எடுக்க வேண்டிய நேரத்திற்கு முன்பு வீட்டுக்கு போலீஸ் வந்தது.

முதல்வர் வீட்டுக்கு வர இருக்கிறார். பாடியை மாடியிலிருந்து கீழே கொண்டு வந்து வைங்க என்றார்கள். நாங்களும் ஏற்பாடு செய்தோம்.

எம்.ஜி.ஆர். வந்து அப்பாவுக்கு பெரிய மாலையைப் போட வந்தார். அப்போது ஒரு செக்யூரிடி ஆபீஸர் மாலையை வாங்க வந்தார். ஆனால் அதை மறுத்து அவரே மாலையைப் போட்டார்.

அப்பா இறந்த அடுத்த டிசம்பர் மாதம் எம்.ஜி.ஆர். மறைந்து விட்டார். சினிமாவில் அப்பாவுக்கு வேண்டாதவர்களே கிடையாது.” என்று தேங்காய் சீனிவாசனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் சிவசங்கர்


No comments:

Post a Comment