BABY UMA ACTRESS BIOGRAPHY
ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாக நடித்த மிகப்பெரிய வெற்றிச்சித்திரமான ’வண்ணக்கிளி’ [1959] படம் பார்த்துள்ள அன்றைய ரசிகர்களுக்கு அப்படத்தில் மனோகரின் (கதாபாத்திரத்தின் பெயர் பூச்சி) மகளாக, தாயில்லா பிள்ளையாக நடித்த குழந்தை நட்சத்திரத்தை நினைவிற்கு வரும். அச்சிறுமிதான் பேபி உமா. பிரேம் நசீரின் தங்கையான பி.எஸ்.சரோஜாவைக் கடத்தி வந்து திருமணம் செய்துகொண்டு சித்திரவதைகள் செய்வார் மனோகர். போதாக்குறைக்கு இச்சிறுமியும் போட்டுக் கொடுப்பாள். ஒரு கட்டத்தில் மனோகரின் சித்திரவதையைக் கண்டு துவண்டுபோய் தன் தாயாகவே ஏற்றுக்கொள்வாள். ‘சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா, சொன்னப் பேச்சைக் கேட்டாத்தான் நல்ல பாப்பா’ என்ற ஒரு இனிய பாடல்கூட உண்டு. இப்பாடலை பேபி உமாவுக்காக பி.எஸ்.சரோஜா பாடுவார்.
குழந்தை நட்சத்திரங்களுக்கென்றே உரிய துடுக்குத்தனமான, வயதை மீறிய பேச்சு, நடிப்பு இச்சிறுமியிடமும் உண்டு. 1958-இல் வெளிவந்த ’நீலாவுக்கு நெறஞ்ச மன்சு’ படத்தில் இவர் ஸ்ரீராமுவின் தங்கையாக நடித்திருப்பார். பள்ளிக்கட்டணத்தைக் கட்ட முடியாததால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படும் இச்சிறுமி அப்பள்ளி ஆசிரியை எம்.என்.ராஜத்தின் அக்காவான பண்டரிபாயைப் பார்த்து உதவி கோர தனது அண்ணனுடன் அவரது வீட்டுக்கு வருவார். அப்போது நடக்கும் உரையாடல்களும், அதன்பின் பண்டரிபாயைக் காணும்போதெல்லாம் இச்சிறுமி பேசும் பேச்சுக்களும் நடிப்பும் காண்போரை வியக்கவைக்கும்.
1955-இல் “குணசுந்தரி”, 1957-இல் வெளிவந்த ‘நீலமலைத் திருடன்’, 1957-இல் வெளிவந்த ‘புதையல்’, 1958-இல் வெளிவந்த ‘அவன் அமரன்’, 1959-இல் வெளிவந்த ‘தலை கொடுத்தான் தம்பி’ போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
No comments:
Post a Comment