LYRICS WRITER VASAN
தொன்னூறுகளின் பிற்பகுதியில் தமிழ் பாடல் உலகில் கால்பதித்து இளையராஜாவுக்கு மிகவும் பிடித்து போன பாடலாசிரியர். வெறும் ஒன்றரை ஆண்டுகளில் 47 படங்களில் 147 பாடல்களை எழுதி குவித்து மறைந்தவர். யார் அந்த பாடலாசிரியர்..?
தஞ்சை மண்ணிலிருந்து கையில் கவிதைகளோடு கோடம்பாக்கம் நுழைந்து சட சடவென பெய்துவிட்டு நின்றுவிடும் மழைபோல பாடல்களை எழுதிவிட்டு ஓய்ந்த அவரது பெயர் #வாசன்
இந்த வாசன் நான் மேலே குறிப்பிட்டது போல இளையராஜாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. இளையராஜா இசையில் 'கிழக்கும் மேற்கும்' , 'தலைமுறை', 'தர்மா' உள்ளிட்ட சில படங்களில் பாடல் எழுதியுள்ளார்.
திரைத்துறைக்குள் நுழைந்து மள மளவென பாடல்களை எழுதிக் குவித்த வாசனின் சில வெற்றிப்பாடல்கள் குறித்து பார்க்கலாம்.
'சிம்மராசி' படத்தில் 'கும்பகோணம் சந்தையில் பார்த்த சின்ன பெண்தானா' பாடல், கார்த்திக் தேவையானி நடித்திருந்த 'நிலவே முகம் காட்டு' திரைப்படத்தில் 'தென்றலை கண்டுகொள்ள மானே..." பாடல் உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை எழுதியுள்ளார்.
'நிலவே முகம் காட்டு' படத்தில் பார்வையில்லாத தேவையானியை நோக்கி கார்த்திக் ஆறுதலாய் பாடுவதாய் அமைந்த பாடல்தான் "தென்றலை கண்டுகொள்ள மானே.." பாடல். அந்தப்பாடலில்..
"தென்றலைக் கண்டு
கொள்ள மானே கண்களின்
தேவை என்ன தேனே
உள்ளத்தில் பார்வை உண்டு
மானே உண்மைகள் கண்டு
சொல்லும் தேனே
நெஞ்சின் வண்ணங்களை
ஓடும் எண்ணங்களை காண கண்
வேண்டுமா... பேச சொல் வேண்டுமா
மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே"னு ரொம்ப அழகா எழுதிருப்பாரு.
அப்போ வேகமா வளர்ந்துகிட்டு இருந்த அஜித், விஜய், சூர்யா ஆகியோருக்கும் வெற்றிப் பாடல்கள் எழுதிருக்காரு. அஜித்துக்கு 90கள்ல வந்த எவர்கிரீன் பாடல்கள் வரிசையில இடம்பெறுகிற பாடல்கள்ல ஒன்னு 'இரட்டை ஜடை வயசு' படத்துல இடம்பெற்ற "காஞ்சிப்பட்டு சேலை கட்டி' பாடல். வருங்கால மனைவி குறித்த ஆசைகளை பாடுவதைபோல் அமைந்த அந்தப்பாடலில்...
"அவள் முகம் என் மகளுக்குமே
வரும்படி ஒரு வரம் கேட்பேன்
அவள் பெயர் தனை இன்ஷியலாய்
இடும்படி நான் செய்திடுவேன்"னு அழகாவும்
"கோவப்பட்டு திட்டிபுட்டிப்புட்டு கொல்லைபக்கம் போயி நின்னு அக்கம் பக்கம் பார்த்துவிட்டு மெல்ல நான் அழுவேன்னு"காதலாவும், "என் சில்மிஷ கணங்களில் சிதறிடும் ஜாக்கேட் ஹூக்கினை தைத்திடுவேன்னு" குறும்பாவும் எழுதிருப்பாரு.
சூர்யாவுக்கு "பெரியண்ணா" படத்துல "நிலவே நிலவே சரிகம பதனி பாடு"ங்குற பாட்டு எழுதிருக்காரு. அதுல "பகலும் இரவும் 18வருடம் வளர்ந்தது இந்த நிலா இது உனக்கே சொந்த நிலா", "அருகில் நானும் தொலைவில் நீயும் இருந்தால் காதல் எது..? மனம் கேட்கும் கேள்வி இது"னு சிறப்பான வரிகளை எழுதிருப்பாரு.
அவர் எத்தனையோ ஹிட் பாடல் எழுதுனாலும் அவருக்கு பெரிய பேர் வாங்கிக் கொடுத்த பாடல் 'ஆஹா' படத்துல இடம்பெற்ற 'முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே" பாடல்தான். அதுல எனக்கு ரொம்ப பிடிச்ச வரி ஒண்ணு இருக்கு.
"ஏழு ஸ்வரம் எட்டாய் ஆகாதோ நாம் கொண்ட காதலின் ஆழத்தைப் பாட... தேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ நீ என்னைப் பார்க்கையில் நாணத்தை மூட இருதயம் முறைப்படி துடிக்கவில்லை இதற்குமுன் எனக்கிது நிகழ்ந்ததில்லை"
நாணத்தை மூட உடம்பு முழுக்க கண்கள் வேணும்னு கேக்குற அந்த கற்பனை என்னை எப்போ அந்த பாடலை கேட்டாலும் ஒரு நொடி ஸ்தம்பிக்க வச்சிரும். வேக வேகமா பாடல் எழுதி குவிச்சிக்கிட்டுருந்த வாசன் தனது 28வது வயசுல மஞ்சள் காமாலை பாதிப்பால இறந்துட்டாரு.
'ஹலோ' படத்துல எல்லாப் பாடல்களும் வைரமுத்து எழுத ஒரு பாடல் சரியா வராததால வாசன் அந்தப் பாடலை எழுதுனாரு.. அந்தப் பாடலோட பல்லவிய மட்டும் எழுதிக்குடுத்துட்டு இறந்துடுறாரு. வாசன் இறந்த தகவலை ஒரு ஓட்ட சைக்கிளை எடுத்துக்கிட்டு வேகமா போயி 'ஹலோ' படத்தோட இயக்குநர் செல்வபாரதிட்ட சொல்றான் ஒரு பையன் எல்லாரும் அதிர்ச்சியாகுறாங்க.. அந்த விஷயத்தை சொன்ன பையன் நா.முத்துக்குமார்.
கொஞ்சநாள் கழிச்சு இயக்குநர் செல்வபாரதிய முத்துக்குமார் சந்திக்கிறாரு. டேய் வாசன் ஒரு பாட்டோட பல்லவி மட்டும் எழுதி குடுத்துட்டு எறந்துட்டாருடா. இத இப்போ எப்படி முடிக்கிறதுனு தெரியலைனு சொல்ல.. இதுக்கு ஏன் வருத்தப்படுறீங்க.. குடுங்க சரணத்தை நான் எழுதித் தாரேன்னு முத்துக்குமார் எழுதிக்குடுத்தாரு.
அதுக்கு முன்னால முத்துக்குமார் 'வீரநடை' படத்துல "முத்து முத்தா பூத்திருக்கும்" பாட்டு மட்டும்தான் எழுதிருந்தாரு. அந்தப் படமும் வெளிவரல. வாசனோட வாழ்க்கை இந்தப் பாடலோட முடியது. முத்துக்குமார் வாழ்க்கை இந்தப்பாடல்ல இருந்துதான் தொடங்குது.
அந்தப் பாடல் தான் "சலாம் குலாமுகுலாமு சலாம் குலாமு"
இப்போ வாசன் இருந்திருந்தா ஆயிரக்கணக்கான பாடல் எழுதி தமிழ் திரைத்துறையின் தவிர்க்க முடியாத பாடலாசிரியரா இருந்திருப்பாருங்குறது மட்டும் 100 விழுக்காடு உண்மை.
Lenin Ernesto
No comments:
Post a Comment