Sunday 7 January 2018

sadako sasaki ,JAPANESE GIRL BORN JANUARY 7, 1943



sadako sasaki ,JAPANESE GIRL
BORN JANUARY 7, 1943





ஜனவரி 7: சடாகோ சசாகி பிறந்த தின சிறப்பு பகிர்வு

ஜப்பான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆரம்பித்தது. அப்பொழுதே அது காட்டிய மின்னல் பாய்ச்சல் சொற்களில் அடங்காதது. ரஷ்யாவை கடலில் அமிழ்த்தி நிமிர்ந்து நின்றது அது. அமெரிக்காவும் அதுவும் அடிக்கடி முட்டிக்கொண்டார்கள். ஜப்பானியர்கள் தன்னுடைய நாட்டுக்குள் நுழைவதற்கு எக்கச்சக்க கட்டுப்பாடுகள் போட்டது அமெரிக்கா. கூடவே ஜப்பான் சீனாவை தாக்கிய பொழுதும் அமெரிக்கா அதற்கு குடைச்சல் கொடுத்தது. பொருளாதார ரீதியாகவும் இரண்டு நாடுகளுக்கு இடையேவும் முட்டிக்கொண்டு இருந்தது. உலகப்போரில் ஹிட்லர் ஒருபக்கம் பிரிட்டனுக்கு தண்ணி காட்டிக்கொண்டு இருந்தார். அமெரிக்கா போரில் ஈடுபடாமல் வெளியே இருந்தது. அதை காலி செய்துவிட்டால் போதுமென்று பியர்ல் ஹார்பரில் பாய்ந்து குதறியது ஜப்பான். அதற்கு பதிலடி உலகப்போரின் முடிவில் ஹிரோஷிமா, நாகாசாகியில் அணுகுண்டாக கிடைத்தது.

அதில் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு வெடித்த பொழுது சடாகோ என்கிற இரண்டு வயது குட்டிப்பெண்ணும் இருந்தாள். ஜன்னலைத்தாண்டி தூக்கி வீசப்பட்டாலும்  அப்பொழுது எந்த காயமும் ஏற்படவில்லை. பன்னிரெண்டு வயதில் கழுத்து மற்றும் காதுகளில் வீக்கங்கள் ஏற்பட்டன. மருத்துவரிடம் அழைத்துப்போனால்  ஏ பாம் வியாதி என்று ஜப்பானியர்கள் அழைத்துக்கொண்ட ரத்த புற்றுநோயை அணுகுண்டு வீச்சு அவளுக்கு பரிசளித்து இருந்தது என்று
தெரிந்தது.


சடாகொவின் குடும்பம் ஏழ்மையால் மட்டுமே நிரம்பியிருந்தது. குழந்தையை காப்பாற்ற முடியுமென்று தோன்றவில்லை. சடாகோவிடம் விஷயத்தை மென்று விழுங்கி சொன்னார்கள். சாவது எப்படியிருக்கும் என்று புரியாததால் பெரிதாக
அலட்டிக்கொள்ளவில்லை சடாகோ. அம்மாவும்,அப்பாவும் அழக்கூடாது என்கிற எண்ணமும் காரணமாக இருக்கலாம். தன்னிடம் இருந்த பட்டுத்துணியால் ஜப்பானிய கிமோனோ உடையை சடாகோவுக்கு அவளின் அம்மா தைத்து தந்த பொழுது அதை கண்ணீரோடு அணிந்து கொண்டு ,"எனக்காக எவ்ளோ செய்யுறே அம்மா நீ ?" என்று கேட்டாள்
சடாகோ


அப்பொழுது தான் சடாகோவின் தோழி சிஜுகோ பார்க்க வந்தாள். அவளிடம் அன்பும், கூடவே ஜப்பானிய நம்பிக்கை ஒன்றும் சேர்ந்து வந்திருந்தன. ஆயிரம் கொக்குகளை ஒரிகாமி முறையில் செய்து முடித்தால் கடவுள் நினைப்பதை தருவார் என்கிற நம்பிக்கை தான் அது. சடாகோவுக்கும் தான் பிழைத்துவிடுவோம் என்கிற நம்பிக்கை பொங்கியது. இருக்கிற தாள்கள் எல்லாம் தீர்ந்து போனபின் மருந்து தாள்களில் கூட நம்பிக்கை மாறாமல் கொக்குகளை அவள் உருவாக்கினாள். . 644 கொக்குப் பொம்மைகளை அவள் கைப்பட செய்தாள்.

இன்னமும் 356 கொக்குகள் முடிக்கப்படும் முன்னரே இறுதியாக அரிசியோடு டீ சேர்த்து சுவைத்து சாப்பிட்டுவிட்டு ,"நல்லா இருக்கே !" என்றபடியே பன்னிரெண்டு வயதில்  கண்மூடினாள் அவள். அவளின் சவப்பெட்டியில் மிச்ச கொக்குகளை செய்து அவளின் நண்பர்கள் பிரியா விடை கொடுத்தார்கள்

ஹிரோஷிமா அமைதி நினைவுப்பூங்காவில் அவளின் சிலைக்கு கீழே இப்படியொரு நெஞ்சை உருக்கும் வாசகத்தை அவளின் தோழர்கள் வடித்துவிட்டு போயிருக்கிறார்கள். உலகில் அமைதி வேண்டும். இதுவே எங்களின் பிரார்த்தனை இதுவே எங்களின் கதறல் !". வருடாவருடம் எண்ணற்றோர் அவளின் நினைவிடத்தில் அணுகுண்டு வீசப்பட்ட தினத்தன்று கூடி ஆயிரம் கொக்குகளை செய்து பறக்கவிடுகிறார்கள். எல்லாரின் நம்பிக்கையும் உலகம் அமைதியால் நிறையும் என்பது தான். பட்டு கிமோனோ அணிந்து கொண்டு,டீயோடு அரிசியை கலந்து சுவைத்தபடி அது நடக்கும் என்று கொக்குகள் செய்தபடி காத்திருக்கிறாள் சடாகோ சசாகி ! அவளின் பிறந்தநாள்  ஜனவரி ஏழு

No comments:

Post a Comment