Monday 8 January 2018

RADHIKA ,TAMIL ACRESS IN SERIALS ATTAINED NUMBER 1






RADHIKA ,TAMIL ACTRESS IN SERIALS 
ATTAINED NUMBER 1


திரை நட்சத்திரத்திலிருந்து சின்னத்திரை தொடர் தயாரிப்பாளராக - 
ஒரு பெண் கலைஞரின் விஸ்வரூபம்

ஆணாதிக்கம் மிகுந்ததாகக் கருதப்படும் தமிழ்த் திரையுலகிலும், சின்னத் திரையுலகிலும் பெண்கள் வெற்றி பெறுவது அரிதாகவே நடக்கிறது. அதிலும், பெண்களுக்கு என்று ‘ஒதுக்கி வைக்கப்பட்ட’ நடிப்பு , பாடல் போன்ற சில துறைகளை தவிர இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் போன்ற வேலைகளில் பெண்களின் செயல்பாடும் வெற்றி பெறுவதும் குறைவே.
ஆனால் ராதிகா ஒரு விதிவிலக்கான வெற்றிக்கதை.
எழுபதுகளின் இறுதியில் இளம் பெண்ணாக திரையுலகில் நுழைந்த ராதிகா சரத்குமார், 38 ஆண்டுகளுக்குப் பிறகும் சினிமா, தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் என வலம் வருகிறார்.

1993ல் வெளிவந்த கிழக்குச் சீமையிலே திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றிருந்த நேரம். விருமாயியாக அந்தப் படத்தில் நடித்திருந்த ராதிகாவுக்கு எல்லாத் திசைகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துகொண்டிருந்த. 94ஆம் வருடத்தில் 6 படங்கள்; 95ஆம் வருடத்தில் 8 படங்கள் என நடித்துக் குவித்தார் அவர்.
பாதை மாற்றம்
இம்மாதிரியான சூழலில் யாருமே தொடர்ந்து சினிமாவில்தான் தீவிர கவனம் செலுத்தியிருப்பார்கள். ஆனால், ராதிகா சற்று நிதானமாக யோசித்தார். இப்படியே எவ்வளவு நாள் ஓட முடியும்? முதல் குழந்தையான ரெயான் பிறந்து சில மாதங்களே ஆகியிருந்தன. பாதையை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தார் ராதிகா.

அந்த யோசனையில் பிறந்ததுதான் ராடன் டிவி. தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிக்கும் நிறுவனம். ஜெயா டீவியின் முந்தைய அவதாரமான ஜேஜே டிவியில் பாலைவனப் புயல் என்ற தொடரைத் தயாரித்தார் ராதிகா. ஏகப்பட்ட இழப்பு. எதிர்பாராத இழப்பு.
"நிறைய பேர் நான் டிவிக்கு செல்லக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால், என் தொழில்வாழ்க்கை என் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்று தோன்றியது. அப்படித்தான் டிவியில் நுழைந்தேன்" என்று துவங்குகிறார் ராதிகா.

ஆனால், ஒரு நடிகை தொலைக்காட்சி நிறுவனத்தைத் துவங்கி வெற்றிகரமாக தொடரைத் தயாரித்து அளிப்பார் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. வங்கிகள், சேனல்கள் யாரும் நம்பவில்லை.
"ஒரு நடிகையாக என்னை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், வேலை என்று வரும்போது நீங்கள்ளாம் என்ன செய்ய முடியும் என்று ஆரம்பிப்பார்கள். நடிகைகளால் எதுவும் முடியாது என்று நினைப்பா்கள். என்னால் முடியும் என்று நிரூபிப்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அந்த சவாலை நான் ஏற்றுக்கொண்டேன்" என்கிறார் ராதிகா.

ராதிகா முதலில் எடுத்த தொலைக்காட்சித் தொடர் தோல்வியில் முடிந்திருந்தது. அந்த காலகட்டத்தில்தான் இந்தி மெகா தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, வெளியாகிக்கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக மெகா தொடர்களின் முகம் மாறிக்கொண்டிருந்தது.
சித்தியில் தொடங்கிய சின்னத்திரை பயணம்
"கலாநிதி மாறன் என்னுடைய நல்ல நண்பர். ஆனால், என்னால் ஒரு சீரியலை தயாரிக்க முடியும் என்று நம்பவைக்க சில வருடங்கள் பிடித்தன" என்று நினைவுகூர்கிறார் ராதிகா.

அப்படி உருவான தொடர்தான் ’சித்தி’. சன் தொலைக்காட்சியில் தினமும் இரவில் ஒளிபரப்பான இந்தத் தொடர், மூன்று ஆண்டுகள் ஓடியது. இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட பிராந்திய மொழி தொலைக்காட்சித் தொடர் என்ற பெருமையும் இந்தத் தொடருக்கு உண்டு.
தெலுங்கு மற்றும் சிங்கள மொழிகளிலும் இந்தத் தொடர் மொழிமாற்றம்செய்யப்பட்டு ஒளிபரப்பானது. உண்மையில் அந்தத் தொடருக்குப் பிறகு ராடன் நிறுவனம் தொலைக்காட்சித் தொடர்களின் போக்கையே மாற்றியது.

அதற்குப் பிறகு, ராதிகாவுக்கு முன்னோக்கிய பயணம்தான்.
"இந்தப் பயணத்தில் நடிகையாக இருப்பது உதவியிருக்கும் என பலரும் நினைக்கலாம். ஆனால், அதுதான் எனக்கு பெரிய தடையாக இருந்தது. நடிகைகளுக்கு மூளையே இவ்வளவுதான் என்று பலரும் நினைத்தார்கள்" என்று நினைவுகூர்கிறார் ராடன் மீடியா ஒர்க்ஸின் நிர்வாக இயக்குனரான ராதிகா.
தொடர்’ வெற்றிகள்
அதற்குப் பிறகு, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி என தொடர்ச்சியாக 17 ஆண்டுகளாக தமிழ்த் தொலைக்காட்சியில் கோலோச்சிவருகிறார் ராதிகா. தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிக்கும் ராடன் மீடியா ஒர்க்ஸின் கடந்த ஆண்டு விற்று முதல் மட்டும் சுமார் 35 கோடி ரூபாய்.
1978ல் கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான ராதிகா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் 210க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இன்னமும் நடித்துக்கொண்டும் இருக்கிறார்.

1994ல் தனிநபர் நிறுவனமாக துவங்கப்பட்ட ராடன் டிவி, 1999ல் கார்ப்பரேட் நிறுவனமானது. இந்த நிறுவனத்தின் மிக வெற்றிகரமான தொடர்களில் மையப் பாத்திரமாக ஒரு வலிமையான பெண்ணே இருப்பதாக கதைகள் இருக்கும். "பெண்கள்தான் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கிறார்கள் என்பது இதற்குக் காரணமல்ல. உண்மையில் எங்கள் தொடர்களை அதிகம் பார்ப்பது ஆண்கள்தான்" என்கிறார் ராதிகா.
திட்டமிடலில் ராணி
விளையாட்டுப் பெண்ணாக சினிமாவில் நடிக்கத் துவங்கிய ராதிகா, தற்போது மிகத் திட்டமிட்டு வேலை பார்க்கும் ஒரு நபர். சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள், அலுவலகம் என்று மிக பரபரப்பாக இருந்தாலும் 6 மணிக்கு மேல் வேலை பார்ப்பதில்லை.

பல தொடர்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், நடிகை, ஒரு அரசியல் தலைவரின் மனைவி என பரபரப்பாக இருக்கும் ராதிகா, "ஆண்களைவிடப் பெண்களால் நேரத்தை சிறப்பாக கையாள முடியும்" என்கிறார்.
"என் வாழ்க்கையில் எதையும் திட்டமிட்டு செய்ததில்லை. நான் நடிகையானது, தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தது, தயாரிக்க ஆரம்பித்தது எல்லாமே அந்த நேரத்தில் முடிவெடுத்து உழைத்ததுதான். தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்." என்கிறார் ராதிகா.
உண்மையில் தான் எதிர்கொள்ளும் சவால்கள், தான் தேர்வு செய்த பாதையினால் வந்தவை என்கிறார் அவர். வெறும் நடிகையாக மட்டும் இருந்திருந்தால், இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்காது. ஆனால், இந்த உயரத்தையும் எட்டியிருக்க முடியாது என்கிறார் ராதிகா.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் எம்.ஆர். ராதாவுக்கும் இலங்கைத் தமிழரான கீதாவுக்கும் 1963ல் கொழும்பு நகரில் பிறந்தவர் ராதிகா. 1978ல் நடிக்க ஆரம்பித்து இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ராதிகா, சின்னத் திரை தொடர்களைத் தயாரிக்கும், டிவி கலை நிகழ்ச்சிகளை நடத்திக்கொடுக்கும் நிறுவனமான ராடன் மீடியா ஒர்க்ஸின் தலைவர்.

No comments:

Post a Comment