Friday 12 January 2018

MGR ,THE GREAT IN SEVERAL ACTS




MGR ,THE GREAT IN SEVERAL ACTS


பெண் வேடம் முதல் சிங் வேடம் வரை... எம்.ஜி.ஆர் போட்ட கெட்டப்ஸ்!

நடிப்புத் திறனைக் காட்ட மாறு வேடங்கள் புனைந்த எம் ஜி ஆர்!

எம்.ஜி.ஆர் இளைஞனாக நடித்தது அவருக்கு வெற்றியைக் கொடுத்தாலும் அது அவரது கலை ஆர்வம் அல்லது நடிப்பு ஆர்வத்தை நிறைவு செய்யவில்லை. அதனால் அவர் வேறு பல கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்பி தன் படங்களில் அவற்றை மாறு வேடக் காட்சிகளாக அமைத்தார். மாறு வேடத்தில் நடிக்கும்போது அதற்கேற்ற உடை, குரல், நடிப்பு என அனைத்தையும் நேர்த்தியாகச் செய்தார். காதல் சண்டை எனக் காட்சிக்குக் காட்சி துள்ளிச் செல்லும் ஹீரோவாக நடிக்கும் எம்.ஜி.ஆர் கிழவனாகவும் பெண்ணாகவும் பல்வேறு தொழில் செய்பவராகவும் நடிப்பதையும் ஆடிப் பாடியதையும் ரசிகர்கள் மிகவும் ரசித்தனர்.

பெண் வேடத்தில் எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் புதுமைப்பித்தனில் நடன மங்கையாகவும் காதல் வாகனம் படத்தில் நவீன மங்கையாகவும் சில காட்சிகளில் வருவார். கவுன் போட்ட இளம்பெண்ணாக எம்.ஜி.ஆரின் வேடப் பொருத்தமும் பெண்ணைப் போல அவர் கொஞ்சிப் பேசுவதும் நளினமாக் நடப்பதும் ரசிகரகளை வெகுவாக கவர்ந்தன. சங்கே முழங்கு படத்தில் பெண்ணாக வேடம் போடாவிட்டாலும் திருமண சம்பந்தம் பேசும் பெண்ணைப் போல நடித்துக் காட்டியிருப்பார். அதைப் போல மாட்டுக்கார வேலனில், வேலன் எம்.ஜி.ஆர் தன்னை ரகு என நினைத்து காதலிக்கும் ஜெயலலிதாவைப் பற்றி தெரிவிக்கும்போது,

''ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா''
என்று பாடி ஒரு பெண்ணைப் போல ரகு எம்.ஜி.ஆரிடம் நடித்துக் காட்டுவார். அந்தப் பாட்டில் அவர் நடிப்பை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர். இந்தக் காட்சிக்கு திரையரங்கில் கைதட்டலும் விசில் சத்தமும் காதைப் பிளக்கும்.
சாமியாராக எம்.ஜி.ஆர்

நல்லவன் வாழ்வான், ஆனந்த ஜோதி, இதய வீணை போன்ற படங்களில் சாமியாரைப் போல வருவார். நல்லவன் வாழ்வான் படத்தில் கொலை பழி சுமந்து ஒளிந்து வாழும் நிலையில் உண்மைக் கொலைகாரனை அறிய அதே ஊரில் எம்.ஜி.ஆர் சாமியாராக வந்து தங்கியிருப்பார். அப்போது ‘‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்’’ என்ற பாட்டுப் பாடுவார்.
இதய வீணையில் திருட்டு பழி சுமந்த அண்ணனான எம்.ஜி.ஆர் தன் தங்கை லட்சுமியின் கல்யாணத்துக்கு சாமியார் வேடத்தில் வந்து ‘‘திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி – திருமணம் கொண்டாள் இனிதாக’’ என்று பாடி வாழ்த்துவார். இந்தப் படப்பிடிப்பின் போது எம்.ஜி.ஆர் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த ஜி சகுந்தலாவிடம் என் கடைசிக்காலம் இப்படிதான் (ஆன்மிக வழியில்) இருக்கப் போகிறது என்று தன் சாமியார் கோலத்தைக் காட்டினாராம். 
அதன் பிறகு அவர் திமுக கட்சியிலிருந்து வெளியேற்ற ப்பட்டார். ரசிகர்கள் ஆங்காங்கே தாமரை கொடியை ஏற்றி அவர்களாகவே புது கட்சி தொடங்கினர். பின்பு எம்.ஜி.ஆர் அவர்களை ஒருங்கிணைத்து ஓர் அரசியல் தலைவராகிவிட்டார். அவரை திமுகவிலிருந்து வெளியேற்றாமல் விட்டிருந்தால் ஒரு வேளை அவர் ரஜினியைப் போல ஓர் ஆன்மிகவாதியாகி இருப்பார். திமுக தன் சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்டது.
முஸ்லிம் வேடத்தில் எம்.ஜி.ஆர்

மலைக்கள்ளன், மகாதேவி, சங்கே முழங்கு, போன்ற படங்களில் எம்.ஜி.ஆர் துப்பு துலக்குவதற்காக பட்டாணி முஸ்லிம் வேடமிட்டு வந்தார். மலைக்கள்ளனில் அப்துல் ரஹீம் என்னும் வடநாட்டு முஸ்லிம் வேடம் ஏற்றிருப்பார். தமிழை அன்றைய வடநாட்டுக்காரர் போல பேசுவார். இன்ஸ்பெக்டர் நடத்தும் விசாரணையில் அவரது திருட்டுப் பார்வையும் உடல்மொழியும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுத் தந்தது. 
மகாதேவியில் லப்பை முஸ்லிம் போல மாறு வேடமிட்டு வந்து மக்களுக்கு இளவரசன் உயிரோடு இருக்கும் உண்மையை தாயத்து மூலமாக வெளிப்படுத்துவார். தாயத்தை விற்பதற்காக ‘‘தாயத்து தாயத்து – சில சண்டாளர் வேலைகளை சனங்களின் மத்தியிலே தண்டோரா போட வரும் தாயத்து’’ எனப் பாடுவார். அப்போது அவர் தலைப்பாகையில் காதோரத்தில் சொருகிய பத்தி புகைந்துகொண்டிருக்கும். கண் இழந்தவர் போல வருவதால் கண்களைச் சுற்றி கறுப்பாகத் தோன்றும். உடையும் வெகு பொருத்தமாக இருக்கும். கழுத்தில் தாயத்து அணிந்திருப்பார். கையில் டேப் வைத்து அடித்துக்கொண்டு வருவார். கைலியை உயர்த்திக் கட்டியிருப்பார். தோளில் ஒரு துணி மூட்டை தொங்கும்.

சங்கே முழங்கு படத்தில் வீண் கொலைப் பழியேற்று ஊரை விட்டு முஸ்லிம் பாய் வேஷத்தில் ரயிலேறிவிடுவார். அப்போது தன் காதலி லக்ஷ்மியை அதே வேஷத்தில் சந்தித்து அவருடன் பேசுகின்ற காட்சிகளில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் வசனங்கள் உருக்கமானவை. வசதியான முஸ்லிமாக வருவதால் தலையில் குஞ்சம் தொங்கும் உயரமான குல்லா, கையில் ஒரு ப்ரீஃப் கேஸ் மற்றும் சிறு கைத்தடி வைத்திருப்பார், கண்ணில் கூலிங் கிளாஸ் அணிந்திருப்பார். கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி மேக்கப், உடை, உடல் மொழி ஆகியவற்றில் சின்னச் சின்ன விஷயங்களில் கூட எம்.ஜி.ஆர் மிகுந்த கவனம் செலுத்தியிருப்பார்.
பஞ்சாப் சிங்காக எம்.ஜி.ஆர்

சங்கே முழங்கு படத்தில் எம்.ஜி.ஆர் கொலைப்பழியிலிருந்து தப்பிக்கவும் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும் பஞ்சாப் சென்று கிருபால் சிங் எனத் தன் பெயரையும் உருவத்தையும் மாற்றிக்கொள்வார். அங்கேயே ஐ.பி.எஸ் முடித்து தமிழகம் வந்து காவல்துறை அதிகாரியாகி உண்மையான கொலையாளியைக் கண்டு பிடிப்பார்... (சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா கதையும் இது போன்றதுதான்) எம்.ஜி.ஆருக்கு சிங் வேஷம் மிகவும் பொருத்தமாக இருக்கும். சிங்குகளைப் போல அவரும் தலையில் டர்பன், முகத்தில் சிறிய கருந்தாடி என வருவார். இவ்வேடம் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். 
குடியிருந்த கோயிலில் ஆனந்த் எம்.ஜி.ஆர், திருடன் பாபுவாக கொள்ளைக்கூட்டத்தில் சேர்ந்தபோது ஒரு முறை மட்டும் சிங் வேடம் போடுவார். இந்த வேஷத்துடன்தான் எல்.விஜயலட்சுமியுடன் இணைந்து ‘ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதில் தான் சுகம் சுகம் சுகம்’ என்ற பாட்டுக்கு பங்க்ரா நடனம் ஆடியிருப்பார். அதிலும் வேஷப் பொருத்தும் மிகச் சரியாக இருக்கும்.
பூட்டுக்காரராக எம்.ஜி.ஆர்
தெய்வத்தாய் படத்தில் எம்.ஜி.ஆர் கள்ள நோட்டு அடிக்கும் கும்பலைத் தேடும் காவல்துறை அதிகாரி மாறனாக நடித்தார். இதில் பூட்டு விற்பவரை போல மாறு வேடம் போட்டு கள்ளநோட்டு மாற்றும் கும்பலைக் கண்டுபிடிக்க ஊரைச் சுற்றி வருவார். அவரது பம்பை க்ராப், முறுக்கு மீசை, ஏற்றிக்கட்டிய கைலி, கையில்லாத ஓவர் கோட், தோளில் தொங்கும் இரும்புப்பெட்டி, ஒரு கையில் பெரிய இரும்பு வலையத்தில் கோக்கப்பட்ட பல தினுசு சாவிகள் இத்துடன் காலை அகட்டி வைத்து நடக்கும் நடை எனப் பொருத்தமாக மாறு வேடம் போட்டிருப்பார். பூட்டுச் சாவி ரிப்பேர் என்று தொடங்கும் ஒரு பாட்டைப் பாடுவார். அதில் பூட்டும் சாவியும் என்ற சொற்கள் சமூக சிந்தனையோடு இடம்பெற்றன. காங்கிரஸ்காரர்களின் வெற்றுப்பேச்சுக்கு வாய்ப்பூட்டு போட வேண்டும் என்றும் பாடுவார்.
வளையல்காரராக எம்.ஜி.ஆர்

படகோட்டி நம்பியாரால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் சரோஜா தேவியைச் சந்திக்க எம்.ஜி.ஆர் வளையல்காரராக வருவார். அந்த வீட்டில் நம்பியார் – சரோஜாதேவி திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் அப்போது எம்.ஜி.ஆர் கறுப்பு மேக்கப்பில் தலையில் வட்டக் குடுமி, பெரிய வயிறு, மேலே கனத்த கோட், முகத்தில் ஒரு கறுப்பு மரு, பெரிய உருண்ட மீசை, தோளில் வளையல் பெட்டி கையில் வளையல் சரம் எனத் தன் குண்டு உடம்பைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து ஒரு சோபாவில் பொத் என விழுவார். அந்தத் தோற்றத்தில் அவரைப் படம் பார்க்கும் புதியவர்களால் அடையாளம் கண்டுகொள்ள இயலாது. 
‘‘கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு - கொண்டாடி வரும் வளையல் – அம்மா பூவோடு வருமே பொட்டோடு வருமே - சிங்காரத் தங்க வளையல்’’ என்ற பாட்டும் பாடி வளையல்களை அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு விற்பார். இந்தக் காட்சியில் வயதான ஒரு தம்பதியர் வரும்போது ‘மாமனாரை மாமியாரை சாமியாரா மாத்திவிட மந்திரிச்சு தந்த வளையல்’ மற்றும் ‘இளங்காளையர்கள் கெஞ்சிவர கன்னியர்கள் கொஞ்சி வர தூதாக வந்த வளையல்’ என்ற வரிகள் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றன.
மின்சாரத்துறை ஊழியர்
காதல் வாகனம் படத்தில் மின் பயன்பாட்டைப் பதிவுசெய்யும் மின்சாரத் துறை ஊழியராக வயதான தோற்றத்தில் வருவார். தலையில் தொப்பி, கண்ணில் ஒரு காந்தி கண்ணாடி, கையில் ஒரு பதிவேடு, குடு குடு நடையுடன் அவரது நடிப்பும் தோற்றமும் பாராட்டும்படியாக இருக்கும். துப்பறியும் நோக்கில் எம்.ஜி.ஆர் மாறுவேடத்தில் வரும் இக்காட்சி நகைச்சுவைக் காட்சியாக அமைந்திருக்கும்.
வெஸ்டெர்ன் டான்ஸ் மாஸ்டராக எம்.ஜி.ஆர்

'என் கடமை' படத்தில் எம்.ஜி.ஆர் ஒரு கடமை தவறாத போலீஸ் அதிகாரி. அவருக்கு எம்.ஆர்.ராதாமீது சந்தேகம் இருப்பதால் அவர் வீட்டுக்குள் போய் வந்து துப்பு கண்டுபிடிக்க வழி தேடுவார். அப்போது சரோஜாதேவிக்கு வெஸ்டெர்ன் டான்ஸ் கற்றுத்தர ஒரு மாஸ்டர் வேண்டும் என்ற விளம்பரத்தைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் அவர் வீட்டுக்குப் போய் பணியில் சேர்ந்துவிடுவார். அவரை அடையாளம் கண்டுகொண்ட சரோஜாதேவியிடம் உனக்காகத்தான் இந்த வேடத்தில் வந்தேன் என்று சொல்லிவிடுவார். கடைசியில் குற்றவாளி எம்.ஆர்.ராதா அல்ல அவருக்கு வைத்தியம் பார்க்க வரும் டாக்டர் என்பதை கண்டுபிடிப்பார். டாக்டர் வேடத்தில் பாலாஜி நடித்தார். அவர் எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் இதுதான். யாரது யாரது தங்கமா என்ற பாடலுக்கு எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் வெஸ்டெர்ன் டான்ஸ் ஆடுவார்கள். படிக்கட்டில் சுற்றி வந்து ஸ்டெப் போட்டு இருவரும் ஆடுவது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எம்.ஜி.ஆர் கறுப்புத் தாடி கறுப்புக் கண்ணாடி என வித்தியாசமான கெட்டப்பில் வருவார். அடிக்கடி தாடியைத் தடவிக்கொள்வார். ஹீல்ஸ் ஷூ போட்டு தன்னை நல்ல உயரமாகக் காட்டியிருப்பார்.
கதா காலட்சேபம் செய்பவராக எம்.ஜி.ஆர்


எங்கள் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர் போலீஸுக்கு பயந்து ஒரு காலட்சேபம் நடத்தும் இடத்துக்கு வந்து அங்கு சந்தர்ப்பச் சூழ்நிலையால் அவரே காலட்சேபம் செய்வார். இந்து சமயத்தின் பார்ப்பனியக் கருத்துகளுக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவரது காலட்சேபன் வழக்கத்துக்கு மாறானதாக இருக்கும். 1967-ல் வெளிவந்த படம் என்பதால் அப்போது அமெரிக்கா விண்வெளிவீரரான நீல் ஆம்ஸ்ட்ராங்க் சந்திர மண்டலத்தில் கால் வைத்த நிகழ்ச்சி பிரபலமாகியிருந்தது. எனவே அதையே தம் காலட்சேபப் பாடுபொருளாக்கி மூட நம்பிக்கைகளைக் கேலி செய்து ஒரு கலகலப்பான நிகழ்ச்சியை நடத்துவார். முழுக்க முழுக்க பின்னணி குரல் கொடுக்கப்பட்டிருக்கும். இருப்பினும் இவரது நடிப்பும் முக பாவனைகளும் காண்போர் மனதைக் கவரும். மேலும் இவரது வேடப் பொருத்தம் வியக்க வைப்பதாக அமையும். மொட்டைத் தலை அதில் பட்டை விபூதி, சிவந்த நிறம், மேல் அங்கவஸ்திரம், கைகளில் தப்பளா கட்டை, கழுத்தில் மாலை என வெகு நேர்த்தியாக அவரது மேக்கப் அமையும். அவர் தலையைத் திருப்பி இரு பக்கம் இருப்பவரையும் பார்த்துப் பேசுவதும் கைகளை வீசி வீசி பாடுவதும் அவரது முக பாவமும் நொடிக்கு நொடி மாறும் முக பாவங்களும் அந்நிகழ்ச்சியை ரசிக்க வைக்கும் அவரது நடிப்புத் திறனுக்கு இக்காட்சி ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும். 

கலை மக்களுக்காக 


எம்.ஜி.ஆர் தனது நடிப்பார்வத்துக்கு தீனி போடவே பல படங்களிலும் மாறு வேடக் காட்சிகளை அமைத்து நடித்துள்ளார். இக்காட்சிகளின் வெற்றி இவர் இதே கதாபாத்திரங்களில் படம் முழுக்க நடித்திருந்தாலும் இப்படித்தான் வெகு சிறப்பாக நடித்திருப்பார் என்பதை நமக்கு உறுதி செய்கிறது. ஒரு படம் முழுக்க அவர் ஒரு சாமான்யனை போல நடிப்பதை மக்கள் விரும்பவில்லை. எனவே எம்.ஜி.ஆர் தன்னுள் இருந்த கலைஞனை ஒதுக்கிவிட்டு கலையார்வத்தை மட்டுப்படுத்திவிட்டு மக்களின் மகிழ்ச்சி ஆதரவு என்ற இலக்கை மட்டும் நோக்கிப் பயணித்ததால் அவர் வெற்றி திருமகன் ஆனார். இங்கு ஒரு கலைஞனின் தனிமனித ஆர்வத்தை விட அவன் சார்ந்திருக்கும் சமூக அக்கறையே முக்கியத்துவம் பெறுகிறது. எந்த ஒரு கலையும் கலைஞன் என்ற ஒருவனுக்கானது அல்ல அது கலைஞனை வாழவைக்கும் சமூகத்துக்கானது என்பதை எம்.ஜி.ஆரின் கலை வாழ்க்கை புரிய வைக்கிறது. எம்.ஜி.ஆர் கலை கலைக்காக என்ற கூட்டத்தைச் சேர்ந்தவரல்ல; கலை மக்களுக்காக என்ற சித்தாந்தத்தை அவர் நம்பினார். மக்களை மகிழ்விக்கின்ற அவர்களுக்கு படிப்பினை தருகின்ற படங்களை உருவாக்கினார். அதன் மூலமாக மக்கள் மனம் கவர்ந்த மக்கள் திலகம் ஆனார். பின்பு மக்கள் முதல்வர் ஆனார். அவர் இறந்து முப்பது வருடங்கள் ஆனாலும் இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார்.





No comments:

Post a Comment