Friday, 1 December 2017

V.M.KOTHAI NAYAKI ,WRITER WITHOUT EDUCATION FREEDOM FIGHTER BORN 1901 DECEMBER 1 DIED FEBRUARY 20,1960




V.M.KOTHAI NAYAKI ,WRITER 
WITHOUT EDUCATION FREEDOM FIGHTER 
BORN 1901 DECEMBER 1 DIED FEBRUARY 20,1960


வை.மு. கோதைநாயகி

வை.மு.கோ 1901ம் வருஷம் டிசம்பர் மாதம் முதல் தேதி, நீர்வளூர் வெங்கடாச்சாரி, பட்டம்மாள் தம்பதியருக்கு செல்வ மகளாகப் பிறந்தவர்
வை.மு.கோ.வைப் பற்றி குமுதத்தில் மறக்க முடியாத மங்கைகள் என்ற சீரிஸில் வந்த கட்டுரையை இங்கே காணலாம். அந்த கட்டுரை இதற்கும் ஆதாரமாக பயன்பட்டிருக்கிறது.

ஒரு மடிசார் புடைவை மாமி, பள்ளிக்கூடம் சென்று படிக்காதவர், தன்னுடை ஐந்தாம் வயதில் ஒன்பது வயது சிறுவனை மணம் செய்து கொண்டவர். தேசீயவாதி, காந்தி அடிகளின் பக்தை, 1932ம் ஆண்டிலேயே சுதந்திர இயக்கத்தில் ஆறு மாதம் சிறை சென்றவர். தன்னந்தனியாகவே ஒரு தமிழ்ப் பத்திரிகையை முப்பத்தைந்து ஆண்டுகள் நடத்திக் காட்டியவர், பெண்ணியவாதிகளின் முன்னோடி, மேடைப் பேச்சாளர், பாடகி, கவிஞர், 115க்கும் மேலாக நாவல்கள் எழுதியவர். சமூக ஊழியர். இவ்வளவு குணாதிசயங்களையும் கொண்டவர்தான் வை.மு. கோதை நாயகி.


 ஆசாரமானதோர் வைஷ்ணவ குடும்பத்தைச் சேர்ந்த இவர் இள வயதில் கோதை என்றும் ஆண்டாள் என்றும் அழைக்கப் பட்டவர். தன்னுடைய ஐந்தாவது வயதில், திருவல்லிக்கேணி வைத்தமா நிதி முடும்பை குடும்பத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற ஒன்பது வயது சிறுவனை மணம் செய்து கொண்டார்.

பெண் என்பதால் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டாம் என்ற ஒரு தடை இருந்த காலம் அது. அந்தக் காரணத்தினாலேயே கோதைநாயகி பள்ளி சென்று படிக்கவில்லை. எழுதவும் படிக்கவும் தெரியாது. ஆனால் சிறு வயதிலேயே தன்னுடன் பழகிய மற்ற குழந்தைகளுக்குப் பழைய கதைகளைச் சொல்லி வந்தார். பழைய கதைகள் எல்லாம் சொல்லித் தீர்ந்தவுடன், தானே புதுக் கதைகளைக் கற்பனை செய்து சொல்ல ஆரம்பித்தார். இவர் கதை சொல்லும் அழகைக் கண்டு, பெரியவர்களும் இவரது கதைகள் கேட்கத் தொடங்கி விட்டனர். புகுந்த வீட்டில் இருந்த ஒரு பக்திச் சூழ்நிலை – எப்போதும் திருவாய்மொழி, பாசுரங்கள் முதலியன ஒலித்துக் கொண்டே இருக்கும் – அவருக்குத் தமிழ் நடையை இயல்பாகவும் சரளமாகவும் வரச் செய்தது.

தனக்கு எழுதத் தெரியாதென்பதால், இவர் தன் தோழி பட்டம்மாளை, தான் சொல்பவற்றை எழுதித் தரச் சொல்லுவார் – இவ்வாறு இவர் சொல்லி, பட்டம்மாள் எழுதி உருவானது தான் இந்திர மோகனா என்ற நாவல். தொடர்ந்து பட்டம்மாளிடமே அவர் தமிழை எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டார்.

அந்தக் காலத்தில் பெண்கள் கதை எழுதுவது, பத்திரிகை நடத்துவதென்பது, அங்குள்ள பலருக்குப் பிடிக்கவில்லை. அடுப்பு ஊத வேண்டிய பெண்ணிற்கு, இந்த வேலைகள் எதற்கு என்று சில பெண்களும் கூட விமர்சித்தனர். இந்த எண்ணங்களையும், விமர்சனங்களையும் மீறி வை.மு.கோ. தன் பணியைத் தீவிரமாகத் தொடங்கினார்.


அப்போது சென்னையில் வெளியாகி வந்த ஜகன்மோகினி என்ற பத்திரிகை நஷ்டத்தில் நடந்து கொண்டிருந்தது. அதை வாங்கி வெற்றிகரமாக நடத்தலாம் என்றெண்ணிய வை.மு.கோ.விற்கு கணவர் பார்த்தசாரதி உறுதுணையாக நின்றதோடு, 1925ல் அதை வாங்கித் திறம்பட நடத்தவும், விற்பனை அதிகரிக்கவும் உதவினார். இதன் பிறகு ஜகன்மோகினி தமிழ் நாட்டின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றாக முன்னேறியது.

இந்தக் காலத்தைத் தமிழ் நாவல்களின் தொடக்க காலம் என்றும்கூறலாம்.. சக எழுத்தாளர்களில், ஜே.ஆர். ரங்கராஜு, வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் முதலானோரைக் குறிப்பிடலாம். கல்கி என்னும் தாரகை இன்னம் இலக்கிய வானில் ஒளி விடவில்லை. ஜகன்மோகினியில் வெளியான வை.மு.கோ.வின் முதல் நாவல் வைதேகி – துப்பறியும் நாவல்கள் எழுதிய முதல் தமிழ்ப் பெண்மணியும் இவர்தான். நூற்றுப் பதினைந்திற்கும் மேலான நாவல்கள் எழுதி வாசகர்கள் மனத்தில் அழியா இடம் பெற்றவர்.

சிறந்த மேடைப் பேச்சாளர் – பேசும்போது இடையிடையே குட்டிக் கதைகள் சொல்லிக் கூட்டத்தைக் கவரும் திறமை இவருக்கிருந்தது. கர்னாடக இசையிலும் இவர் ஆற்றல் பெற்றவர். தான் பாடியதுமல்லாமல், பல இளம் இசைக் கலைஞர்களை – முக்கியமாக டி.கே.பட்டம்மாள் – ஊக்குவித்தார். ராஜாஜியின் தலைமையில் ஒரு பொதுக் கூட்டத்தில் இவர் பேசியதைக் கேட்டு, தான் பேசும் கூட்டங்களிலெல்லாம் இவரையும் பேசச் சொல்லி அன்பாக உத்தரவிட்டார் ராஜாஜி.


வை.மு.கோ. மேடைகளில் பாடுவதன்றி பல பாட்டுகளையும் புனைந்துள்ளார். இவர் சில அபூர்வ ராகங்களில் இயற்றிய கிருதிகள் எல்லாம் சமீபத்தில் இசை மார்க்கம் என்ற புத்தகமாக வெளி வந்துள்ளன. முப்பதுகளில் வை.மு.கோ வீட்டில் வசித்த பி.ராமபத்ரன் என்பவர் இப்புத்தகத்தைப் பதிப்பித்துள்ளார். அம்பா மனோஹரி,கங்கணாலங்காரி, அம்சப்ரமாரி, தவளி ஹம்சி போன்ற அபூர்வ ராகங்களிலுள்ள இந்த கிருதிகள் ரஞ்சனி-காயத்ரி, கு.பாலமுரளிகிருஷ்ணா முதலியோரால் இப்போது மேடைகளில் பாடப்பட்டு வருகின்றன.

சுப்பிரமணிய பாரதியார், வை.மு.கோ.விற்காகவே தம் ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே என்ற பாட்டைப் புனைந்ததாகவும், பின்னர் டி.கே. பட்டம்மாள் இந்தப் பாட்டினால் பிரபலமானார் என்பது இன்னோர் செய்தி. (சாருகேசி – ஹிந்து பத்திரிகையில் 13-2-2009) இவரொரு சிறந்த  சமூக சேவகி – திருவல்லிக்கேணியில், காந்தியடிகளின் நினைவாக, மஹாத்மாஜி சேவா சங்கம் 1948ம் வருடம் மார்ச் ஏழாம் தேதி நிறுவப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு உதவும் பல நுண்கலைகள் கற்றுத் தரப்பட்டன. முதலில் ஒரு வாடகை இடத்தில் இருந்த இச்சங்கத்திற்கு, கக்சேரிகள் நாடகங்கள் மூலம் நன்கொடை வசூலித்து, ஒரு சொந்த இடமும் பெற்றுக் கொடுத்தார்.

ராஜ்மோகன், அனாதைப் பெண் , தயாநிதி (சித்தி என்ற பெயரில்) ஆகிய இவரது நாவல்கள் வெள்ளித் திரையில் வெளிவந்தன. பத்மினி நடித்த சித்தி என்ற படம் ஆறு விருதுகளைப் பெற்றது. அதில் சிறந்த கதையாசிரியர் விருது வை.மு.கோ.வுக்கு வழங்கப்பட்டது.
வை.மு. கோதைநாயகி 1960ம், வருஷம் ஃபிப்ரவரி 20 தேதி சென்னையில் காலமானார்.

வை.மு. கோதைநாயகி படைப்புகள்
வைதேகி (1925 – 4) — பத்மசுந்தரன் (1926 – 3) — சண்பகவிஜயம் (1927 – 2) — ராதாமணி (1927 – 4) — கௌரிமுகுந்தன் (1928 – 2) — நவநீதகிருஷ்ணன் (1928 – 2) — கோபாலரத்னம் (1929) — சியாமளநாதன் (1930 -2) சுகந்த புஷ்பம் (1930) – ருக்மணிகாந்தன் (1930) — வீர வசந்தா அல்லது சுயேச்சையின் பரிபவம் (1930)
— நளினசேகரன் அல்லது செருக்கா
லழிந்த சீமாட்டி (1930) — உத்தமசீலன் (1932 – 3 ) கதம்பமாலை (1932 – 2) — பரிமள கேசவன் (1932 – 2) — மூன்று வைரங்கள் (1932 -2 ) — காதலின் கனி (1933 – 2) — சோதனையின் கொடுமை (1933 – 2) — படாடோபத்தின் பரிபவம் (1933 -2 ) — சாருலோசனா (1933 – 3) — தியாகக்கொடி (1934 – 2) — புத்தியே புதையல் (1934 – 2) — ஜயசஞ்சீவி (1934 – 4) — அமிர்த தாரா (1935 – 4) — ஆனந்தசாகர் (1935 -3) — பட்டமோ பட்டம்(1935 – 2) — பிச்சைக்காரக் குடும்பம் (1935 – 2) — பொங்கும் காதல் அல்லது மங்களபாரதி (1935 – 2) — அநாதைப் பெண் (1936 – 4) — இன்பஜோதி (1936 – 2) — பிரேம பிரபா (1936 – 2) — ராஜமோஹன் (1936 – 2) அன்பின் சிகரம் (1937 – 2) — சந்திர மண்டலம் (1937 – 2) — மாயப் பிரபஞ்சம் (1937 – 2) — உளுத்த இதயம் (1938) — மகிழ்ச்சி உதயம் (1938 – 4) — மாலதி (1938 – 3) — வத்ஸகுமார் (1938 ) — வாழ்க்கையின் நாதம் அல்லது வானக்குயில் (1938 ) ஜீவியச்சுழல் (1938 -2 ) கலா நிலையம் (1941 – 4) — க்ருபா மந்திர் (1934 -4) — மதுர கீதம் (1943 – 4) — வாத்சல்யம் அல்லது வாக்குத் தத்தம் (1943 – 3) — அமுத மொழி (1944) — பிரார்த்தனை (1945 ) — அபராதி (1946 – 2) — தெய்வீக ஒளி (1947 -2) – புதுமைக் கோலம் (1947) — தபால் வினோதம் (1945 – 2) — கானகலா (1950) — தூய உள்ளம் (1950) — நியாய மழை (1950) – ப்ரபஞ்ச லீலை (1950) ப்ரேமாஸ்ரமம் (1950) — மனசாட்சி (1950) — ஜீவநாடி (1950) — சௌபாக்கியவதி (1950) — நம்பிக்கைப் பாலம் (1951 -2) — பாதாஞ்சலி (1951) — ரோஜாமலர் (1951) — தைரியலக்ஷ்மி (1952) — சுதந்திரப் பறவை (1953) — நிர்மல நீரோடை(1953) — கிழக்கு வெளுத்தது (1958)


No comments:

Post a Comment