Hulagu Khan biography




Hulagu Khan biography





ஹுலாகு கான் (ஹுலேகு என்றும் உச்சரிக்கப்படுகிறார்) (மொங்கோலியம்: Хүлэгү/ᠬᠦᠯᠡᠭᠦ; பாரசீகம்: هولاکو خان; சீனம்: 旭烈兀; பின்யின்: Xùlièwù; c. October 15,1218 – 8 பிப்ரவரி 1265), மங்கோலிய ஆட்சியாளர் ஆவார். இவர் மேற்கு ஆசியாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றினார். இவரது தந்தையார் பெயர் டொலுய். இவரது தாயார் பெயர் சோர்காக்டனி பெகி. இவரது தாயார் கெரயிடு பழங்குடியினத்தைச் சேர்ந்த இளவரசி ஆவார். இவர் மங்கோலியத் தலைவர் செங்கிஸ் கானின் பேரன் ஆவார். இவருக்கு அரிக் போகே, மோங்கே கான் மற்றும் குப்லாய் கான் ஆகிய சகோதரர்கள் உண்டு.
ஹுலாகு கான்
இல்கானேட்டின் இல்கான்
Hulagu Khan.jpg
14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரஷித்-அல்-தின் ஹமதானியால் வரையப்பட்ட ஹுலாகு கானின் ஓவியம்.
ஆட்சி1256– 8 பிப்ரவரி 1265
பின்வந்தவர்அபகா கான்
அரசி
  • டோகுஸ் கதுன்
  • யெசுன்சின் கதுன்
வாரிசு(கள்)
  • தேகுதர்
  • அபகா கான்
  • தரகை
  • மெங்கு டிமுர்
அரச குடும்பம்போர்சிசின்
தந்தைடொலுய்
தாய்சோர்காக்டனி பெகி
பிறப்பு15 அக்டோபார் 1218
இறப்பு8 பெப்ரவரி 1265(அகவை 46)
அடக்கம்ஷஹி தீவு, உர்மியா ஏரி
சமயம்நெசுத்தோரியக் கிறித்தவம். மரணப் படுக்கையில் பௌத்த மதத்திற்கு மாறினார்.

ஹுலாகுவின் இராணுவம் தென்மேற்குப் பகுதியில் மங்கோலிய பேரரசை பெரிதும் விரிவாக்கம் செய்தது. இவர் பெர்சியாவில் இல்கானேடு எனும் பேரரசைத் தோற்றுவித்தார். இல்கானேடு சஃபவிட் வம்சத்தின் முன்னோடியாகும். இதன் மூலம் நவீன ஈரானின் உருவாக்கத்திற்கு இவர் காரணமாக இருந்துள்ளார். ஹுலாகுவின் தலைமையின் கீழ் மங்கோலிய இராணுவமானது, பாக்தாத் முற்றுகைகையை கி.பி. 1258ல் நடத்தியது. இதன் காரணமாக இஸ்லாமிய சக்தியின் மிகப் பெரிய மையம் அழிக்கப்பட்டது. மேலும் மற்றுமொரு முக்கிய நகரமான டமாஸ்கஸ் பலவீனமானது. இதனால் இஸ்லாமிய உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களாக கெய்ரோவில் இருந்த அடிமை வம்சத்தினர் (மம்லுக் சுல்தானகம்) மாறினர்.


பின்புலம்[மூலத்தைத் தொகு]

ஹுலாகு, டொலுய் மற்றும் சோர்காக்டனி பெகி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். டொலுய் செங்கிஸ் கானின் மகன் ஆவார். சோர்காக்டனி பெகி ஒரு செல்வாக்கு மிகுந்த கெரயிடு இளவரசி ஆவார். சோர்காக்டனி பெகி மங்கோலிய அரசியலில் வெற்றிகரமாகச் செயல்பட்டார். தனது மகன்கள் அனைவரும் மங்கோலியத் தலைவர்களாக ஏற்பாடு செய்தார். அவர் ஒரு நெசுத்தோரியக் கிறித்தவர் ஆவார். ஹுலாகு கிறித்தவ மதத்திற்கு நட்பானவராக இருந்தார். ஹுலாகுவின் விருப்பத்திற்குரிய மனைவி டோகுஸ் கதுன், நெருங்கிய நண்பர் மற்றும் நைமர் இனத்தளபதியான கித்புகா ஆகியோரும் கிறித்தவர்கள் ஆவர். எனினும் தனது மரணப்படுக்கையில் இவர் பௌத்த மதத்திற்கு மாறியதாக வரலாற்றில் பதிவு உள்ளது.[1] இது டோகுஸ் கதுனின் விருப்பத்திற்கு எதிராக நடைபெற்றது.[2] கோய் என்ற இடத்தில் இவர் எழுப்பிய புத்த கோயில் பௌத்த மதம் மீதான இவரது ஆர்வத்திற்குச் சான்றாக உள்ளது.[3]

ஹுலாகுவுக்குக் குறைந்தது மூன்று குழந்தைகள் இருந்தனர். அவர்கள் அபகா கான், தேகுதர் மற்றும் தரகை. அபகா, ஈரானின் இரண்டாவது இல்கானாக (1265-82) பதவி வகித்தார். தேகுதர் அஹ்மத் மூன்றாவது இல்கானாக (1282-84) பதவி வகித்தார். தரகையின் மகன் பய்டு 1295ல் இல்கான் ஆனார்.[4] மிர்-கிவந்த் எனும் பெர்சிய வரலாற்றாளர் தனது ஆரம்ப மொழிபெயர்ப்பில் மேலும் இரண்டு குழந்தைகளைக் குறிப்பிடுகிறார். அவர்கள் கியக்சமத் மற்றும் டாண்டன் ஆகியோர் ஆவர். கியக்சமத் ஆரம்பத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜானின் ஆளுநராகப் பணியாற்றினார். டாண்டன் தியர்பகிர் மற்றும் ஈராக்கின் ஆளுநராகப் பணியாற்றினார்.[5] அவர்கள் பிறந்த வரிசையானது அபகா, கியக்சமத், டாண்டன், தேகுதர் மற்றும் தரகை என்று பட்டியலிடப்பட்டுள்ளது. 1263ல் இவரது மருமகள் அபஷ் கதுன் ஷிராஸை ஆள அனுப்பப்பட்டார்.[6]


இராணுவப் படையெடுப்புகள்[மூலத்தைத் தொகு]


1256ல் அலமுத் நகர முற்றுகை









அலமுத் நகர முற்றுகை பற்றிய ஒரு முகலாய ஓவியம்.


1251ல் ஹுலாகுவின் சகோதரர் மோங்கே கான் பெரிய கான் ஆகப் பதவியேற்றார். 1255ல் மோங்கே, தென்மேற்கு ஆசியாவில் மீதமிருந்த இசுலாமிய நாடுகளை வெல்ல அல்லது அழிக்க முடிவு செய்தார். இதற்காக ஒரு பெரும் மங்கோலிய இராணும் திரட்டப்பட்டது. இதற்குத் தலைமையேற்கும் பொறுப்பு ஹுலாகுவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஹுலாகுவின் படையெடுப்பின் நோக்கமானது தெற்கு ஈரானின் லுர்களை அடிபணியச் செய்தல், “அசாசின்”களை அழித்தல், பாக்தாத்திலுள்ள அப்பாசியக் கலீபகத்தை அடிபணியச் செய்தல் அல்லது அழித்தல், சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள அயூப்பிய வம்சத்தை அடிபணியச் செய்தல் அல்லது அழித்தல் மற்றும் இறுதியாக எகிப்தின் பஹ்ரி அடிமை வம்சத்தை (மம்லுக் சுல்தானாகம்) அடிபணியச் செய்தல் அல்லது அழித்தல்.[7] மோங்கே அடிபணிபவர்களை அன்புடன் நடத்தவும், எதிர்ப்பவர்களை அழிக்கவும் ஹுலாகுவிற்கு உத்தரவிட்டார். ஹுலாகு இதில் பின் பகுதியைத் தீவிரமாக மேற்கொண்டார். ஹுலாகு முன் எப்போதும் இல்லாத வகையிலே ஒரு பெரிய மங்கோலிய இராணுவத்தை அணிவகுத்தார். மோங்கேயின் ஆணைப்படி மங்கோலியப் பேரரசின் பத்தில் இரண்டு பங்கு போர்வீரர்கள் ஹுலாகுவின் படைக்காகக் கூடினர்.[8] இவர் எளிதாக லுர்களை அழித்தார். அசாசின்கள் சண்டை ஏதும் போடாமல் தங்களது அசைக்க முடியாத கோட்டையான “அலமுத்” உடன் சரணடைந்தனர். ஒரு ஒப்பந்தத்தின் காரணமாக அவர்களுடைய மக்களின் உயிர் தப்பியது.


பாக்தாத் முற்றுகை[மூலத்தைத் தொகு]

ஹுலாகுவின் மங்கோலிய இராணுவம் பாக்தாத்தை நோக்கி நவம்பர் 1257ல் தனது பயணத்தைத் தொடங்கியது. நகரை நெருங்கியதும் அச்சுறுத்துவதற்காக இவர் தனது படைகளை டைகிரிசு ஆற்றின் கிழக்கு மற்றும் மேற்கு கரையில் நிறுத்தினார். ஹுலாகு சரணடையக் கோரினார் ஆனால் கலீப், அல்-முஸ்தசிம், மறுத்தார். கலீப்பின் இராணுவம், மேற்கில் இருந்து தாக்கிய படையின் ஓரு பகுதியை முறியடித்தது ஆனால் அடுத்த போரில் தோல்வியடைந்து. தாக்கிய மங்கோலியர்கள் அணைக்கரைகளை உடைத்து வெள்ளம் ஏற்படுத்தினர். வெள்ளமானது கலீப் இராணுவத்தின் பின்பகுதியைத் தாக்கியது. கலீப்பின் பெரும்பகுதி இராணுவம் படுகொலை செய்யப்பட்டது அல்லது மூழ்கடிக்கப்பட்டது.

சீனத் தளபதி குவோ கன் தலைமையிலான மங்கோலியர்கள் நகரத்தின் மீது 29 ஜனவரி, 1258 அன்று முற்றுகை நடத்தினர்.[9] இதனை ஒரு சிறிய முற்றுகைப் போர் எனலாம். பிப்ரவரி 5ம் தேதி மங்கோலியர்கள் ஒரு பகுதி சுவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தமுறை கலீப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தார் ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டது. பிப்ரவரி 10ம் தேதி பாக்தாத் சரணடைந்தது. மங்கோலியர்கள் நகருக்குள் பிப்ரவரி 13 அன்று நுழைந்தனர். ஒரு வாரத்திற்கு நகரை அழித்தனர். பாக்தாத்தின் பெரும் நூலகம் அழிக்கப்பட்டது. இது மருத்துவம், வானியல் போன்ற பாடங்கள் சம்பந்தப்பட்ட எண்ணற்ற விலையுயர்ந்த வரலாற்று ஆவணங்கள் மற்றும் புத்தகங்களைக் கொண்டிருந்தது. உயிர் பிழைத்தவர்கள், டைகிரிசு ஆற்றின் நீரானது பெருமளவில் மூழ்கடிக்கப்பட்ட புத்தகங்களின் மையினால் கருப்பானது என்று கூறினர். குடிமக்கள் ஓட முயற்சித்தனர் ஆனால் மங்கோலிய வீரர்களால் இடைமறிக்கப்பட்டனர்.



ஹுலாகு (இடது), கலீப் பட்டினி கிடந்து இறப்பதற்காக கலீப்பை அவரது பொக்கிஷங்களுடன் சிறையில் அடைக்கிறார். “லே லிவ்ரே டெஸ் மெர்வெயில்லெஸ்” இல் இருந்து நடுக்காலச் சித்தரிப்பு, 15 ஆம் நூற்றாண்டு.











இறந்தவர்களின் எண்ணிக்கை எளிதாக உறுதிப்படுத்தப்பட முடியாத வகையில் பரவலாக மாறுபடுகிறது: ஒரு குறைந்த மதிப்பீடு 90,000 பேர் இறந்ததாகக் குறிப்பிடுகிறது;[10] உயர் மதிப்பீடுகள் 200,000ல் இருந்து 10 இலட்சம் பேர் வரை இறந்ததாகக் குறிப்பிடுகிறது.[11] மங்கோலியர்கள் சூறையாடிய பின்னர் அழித்தலைத் தொடங்கினர். மசூதிகள், அரண்மனைகள், நூலகங்கள், மருத்துவமனைகள் – பல தலைமுறைகளாகக் கட்டப்பட்ட பெருமைமிகு கட்டடங்கள் - எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. கலீப் கைதுசெய்யப்பட்டு அவரது குடிமக்கள் கொல்லப்படுவதையும், அவரது கருவூலம் கொள்ளையடிக்கப்படுவதையும் கட்டாயப்படுத்தி பார்க்கவைக்கப்பட்டார். வெனிஸ் நகர வணிகர் மார்கோ போலோவின் பயணங்களைப் பற்றிய புத்தகமான “இல் மிலியோன்” ஹுலாகு கலீபை பட்டினிபோட்டுக் கொன்றதாகக் கூறுகிறது, ஆனால் அதற்கான ஆதாரங்கள் இல்லை. 


பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் மங்கோலிய மற்றும் முஸ்லிம் பதிவுகளை நம்புகின்றனர். 


கலீப் ஒரு கம்பளிப்போர்வையில் உருட்டப்பட்டு, மங்கோலியர்கள் அப்போர்வையின் மீது தங்கள் குதிரைகளை ஓடச் செய்தனர். ஏனெனில் அரச இரத்தம் பூமியில் பட்டால் பூமி புண்பட்டுவிடும் என்று மங்கோலியர்கள் நம்பினர். 


கலீப்பின் ஒரு மகனைத் தவிர அனைவரும் கொல்லப்பட்டனர். பாக்தாத் மக்கள்தொகையை இழந்து, பல நூற்றாண்டுகளுக்குப் பாழான நகரம் ஆனது. இப்பகுதியில் இருந்த சிறிய அரசுகள் ஹுலாகுவிடம் அவர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்த விரைந்தன. மங்கோலியர்கள் 1259ல் சிரியாவின் பக்கம் தங்கள் கவனத்தைத் திரும்பினர். அயூப்பிய வம்சம் வெல்லப்பட்டது. காசா வரை மங்கோலியர்கள் ரோந்துக்களை அனுப்பினர்.


ஆயிரம் சிறு படைகளாக வடக்கு சீனவைச் சேர்ந்த சுரங்கம் தோண்டுவோர்கள் மங்கோலிய கான் ஹுலாகுவுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றனர்.[12][13]


சிரியாவின் மீது படையெடுப்பு (1260)[மூலத்தைத் தொகு]


புதிய கான்ஸ்டன்டைன் மற்றும் ஹெலன் ஆக ஹுலாகு மற்றும் டோகுஸ் கதுன். ஒரு சிரியாக் பைபிளில் இருந்து.[14][15]

1260ல் மங்கோலியப் படைகள் அப்பகுதியில் தங்களுக்குக் கப்பம் கட்டிய கிறித்தவ நாடுகளின் படைகளுடன் இணைந்தன. ஹேதும் I தலைமையிலான ஆர்மீனியாவைச் சேர்ந்த சிலிசிய அரசின் படை மற்றும் ஆன்டியாக்கின் பொஹேமொண்ட் VI தலைமையிலான ஃபிராங்குகளின் படை ஆகியவை கிறித்தவப் படையில் அடங்கும். இந்த படை அயூப்பிய வம்சத்தின் ஒரு பகுதியான முஸ்லிம் சிரியாவை வென்றது. இவர்கள் அலெப்போவை முற்றுகை மூலம் கைப்பற்றினர். மார்ச் 1, 1260 அன்று கிறித்தவத் தளபதி கித்புகா தலைமையில் டமாஸ்கஸ் கைப்பற்றப்பட்டது.[16][17][18] உமயாத் மசூதியில் ஒரு கிறித்தவக் வெகுஜன கொண்டாட்டம் நடைபெற்றது. பல மசூதிகள் அவமரியாதை செய்யப்பட்டன. பல வரலாற்று பதிவுகள் மூன்று கிறித்தவ ஆட்சியாளர்கள் ஹேதும், பொஹேமொண்ட், மற்றும் கித்புகா டமாஸ்கஸ் நகரத்திற்குள் ஒன்றாக நுழைந்ததாக விவரிக்கின்றன.[18][19] என்றாலும் டேவிட் மோர்கன் போன்ற சில நவீன வரலாற்றாசிரியர்கள் இது கட்டுக் கதையோ எனக் கேள்வி எழுப்புகின்றனர்.[20]

இந்தப் படையெடுப்பு அயூப்பிய அரசை அழித்துவிட்டது. அயூப்பிய அரசு அது வரை லெவண்ட், எகிப்து, அரேபியத் தீபகற்பத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்த சக்திவாய்ந்த வம்சம் ஆகும். கடைசி அயூப்பிய அரசர் அன்-நசிர் யூசுஃப், 1260ல் ஹுலாகுவினால் கொல்லப்பட்டார்.[21] இஸ்லாமிய அதிகார மையமான பாக்தாத் அழித்துவிட, டமாஸ்கஸ் பலவீனமடைந்துவிட, இஸ்லாமிய அதிகார மையம் மம்லுக் சுல்தான்களின் தலைநகரமான கெய்ரோவிற்கு மாற்றப்பட்டது. ஹுலாகு தெற்கு நோக்கி பாலஸ்தீனத்தைக் கடந்து கெய்ரோவிலிருந்த மம்லுக்குகளுக்கு எதிராக போரிட வேண்டும் என்று எண்ணினார். கெய்ரோவிலுள்ள மம்லுக் சுல்தான் குதுஸிற்கு அச்சுறுத்தும் கடிதத்தை இவர் அனுப்பினார். குதுஸிடம் கெய்ரோவைத் திறக்குமாறும் அல்லது அது பாக்தாத்தினைப் போல அழிக்கப்படும் என்று எழுதியிருந்தார். அந்த நேரத்தில் மோங்கே கான் இறந்தார். ஹுலாகுக்கு பெரிய கான் ஆகும் தகுதியிருந்தது. எனவே ஹுலாகு, ஒரு புதிய கானைத் தேர்ந்தெடுக்க மங்கோலியாவுக்கு திரும்ப வேண்டிய கடமை ஏற்பட்டது. ஹுலாகு தனது விருப்பமான தளபதி கித்புகா தலைமையில் 2 தியுமனை (20,000 வீரர்கள்) மட்டும் விட்டுச்சென்றார். ஹுலாகு புறப்படும் செய்தியைப் பெற்றவுடன், குதுஸ் விரைவில் கெய்ரோவில் ஒரு பெரிய இராணுவத்தை கூட்டி, பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தார். குதுஸ் தன்னை ஒரு சக மம்லுக் ஆன பைபர்களுடன் இணைத்துக் கொண்டார். பைபர்கள் டமாஸ்கஸை கைப்பற்றியதற்காக, பாக்தாத்தை சூறையாடியதற்காக, சிரியாவை வென்றதற்காக மற்றும் இஸ்லாமிற்காக மங்கோலியர்களைப் பழிவாங்க விரும்பினார்.


மங்கோலியர்களும், தங்கள் பங்கிற்கு, அந்நேரத்தில் “ஏக்கரில்” மையமிட்டிருந்த எருசலேமின் சிலுவைபோர் இராச்சியத்தின் மீதமுள்ள படைகளுடன் ஒரு ஃபிராங்கிய-மங்கோலிய கூட்டணியை உருவாக்க (அல்லது குறைந்தபட்சம், சரணடைய வைக்க வேண்டும் என) முயற்சித்தனர், ஆனால் போப் அலெக்ஸாண்டர் IV அத்தகைய கூட்டணியைத் தடைசெய்தார். ஃபிராங்குகளில் ஒருவரான சிடோனைச் சேர்ந்த ஜூலியன், கித்புகாவின் பேரன்களில் ஒருவரது மரணத்திற்குக் காரணமான ஒரு சம்பவத்தை ஏற்படுத்தினார். இதனால் ஃபிராங்குகளுக்கும் மங்கோலியர்களும் இடையே பதட்டங்கள் அதிகரித்தன. கோபமான கித்புகா, சிடோனைப் பதவி நீக்கம் செய்தார். மங்கோலியர்களால் தொடர்புகொள்ளப்பட்ட ஏக்கரின் பெருந்தலைவர்கள் மம்லுக்குகளாலும் தொடர்புகொள்ளப்பட்டனர். மம்லுக்குகள் மங்கோலியர்களுக்கு எதிராக இராணுவ உதவி வேண்டி அணுகினர். மம்லுக்குகள் ஃபிராங்குகளின் பாரம்பரிய எதிரிகளாக இருந்தபோதிலும், ஏக்கரின் பெருந்தலைவர்கள் மங்கோலியர்களை உடனடி அச்சுறுத்தலாக அங்கீகரித்தனர். ஏதாவது ஒரு பக்கம் சேருவதற்குப் பதிலாக சிலுவைப்போர்வீரர்கள், இரு படைகளுக்கும் இடையில் எச்சரிக்கையுடன் நடுநிலை வகித்தனர். ஒரு அசாதாரணமான நடவடிக்கையாக சிலுவைப்போர்வீரர்கள், எகிப்திய மம்லுக்கள் தங்கள் பிரதேசத்தின் வழியே தடையின்றி அணிவகுத்துச் செல்ல அனுமதித்தனர். மேலும் ஏக்கருக்கு அருகே மம்லுக் படைவீரர்கள் முகாமிட்டுத் தங்கள் உணவு, உபகரணங்களை புதுப்பித்துக் கொள்ளவும் அனுமதித்தனர்.


ஐன் ஜலுட் போர்[மூலத்தைத் தொகு]


ஹுலாகு கான் தனது இராணுவத்தை வழிநடத்துதல்.

1260 ஆம் ஆண்டில் மங்கோலியர்கள் ஜோர்டான் ஆற்றை கடந்தனர். இச்செய்தி வந்தபோது, சுல்தான் குதுஸ் மற்றும் அவருடைய படைகள் (பெரும்பாலும் எகிப்தியர்கள்), ஜெசுரீல் பள்ளத்தாக்கின் ஐன் ஜலுட்டிலுள்ள “ஸ்ப்ரிங் ஆஃப் கோலியத்” என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டன. அவர்கள் சுமார் 20,000 பேர் அடங்கிய மங்கோலியப் படையைச் சந்தித்தனர். போரானது பல மணிநேரங்களுக்கு இடைவிடாமல் நடந்தது. மம்லுக் தலைவர் பய்பர்ஸ், மங்கோலியப் படைகள் அவரை துரத்திச் செல்வதற்கான ஒரு முயற்சியாக பெரும்பாலும் சண்டையிடுதல் மற்றும் ஓடும் தந்திரங்களை நடைமுறைப்படுத்தினார். பய்பர்ஸ் மற்றும் குதுஸ் மலைகளில் தங்கள் படைகளின் பெரும்பகுதியை மறைத்துவைத்திருந்தனர். மங்கோலியர்கள் தங்கள் பகுதிக்குள் வந்ததும் தாக்கக் காத்திருந்தனர். மங்கோலியத் தலைவரான கித்புகா, ஏற்கனவே பய்பர்ஸ் மற்றும் அவரது துருப்புகள் அடிக்கடி தாக்கிவிட்டு ஓடியதால் தூண்டிவிடப்பட்டிருந்தார். தப்பி ஓடும் எகிப்தியர்களைப் பிடிக்க அவர்கள் செல்லும் பாதையில் அனைத்து துருப்புகளுடனும் அணிவகுத்துச் செல்ல முடிவு செய்தார். மங்கோலியர்கள் உயர்ந்த மலைகளை அடைந்தபோது, எகிப்தியர்கள் மறைவிலிருந்து தோன்றினர், மங்கோலியர்கள் எதிரி படைகளால் சூழப்பட்டனர்; மறைந்திருந்த துருப்புக்கள் அவர்களைப் பக்கவாட்டில் தாக்க, குதுஸ் மங்கோலியப் படையைப் பின்புறமாகத் தாக்கினார். எகிப்திய இராணுவத்தின் அளவு 24,000 முதல் 120,000 வரை இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மங்கோலியர்கள் பொறியை உடைத்து தற்காலிகமாக வெற்றிகரமான எதிர்ப்பைக் காட்டினர், ஆனால் அவர்களது குறைவான எண்ணிக்கை காரணமாக முடிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. இறுதியாக போர் முடிவடைந்தபோது, எகிப்திய இராணுவம் இதுவரை நடக்காததை நடக்கவைத்திருந்தது. அதாவது மங்கோலிய இராணுவத்தை நெருங்கிய போரில் தோற்கடித்தது. அந்த பிராந்தியத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கித்புகா உட்பட கிட்டத்தட்ட மொத்த மங்கோலியப் படையினரும் அந்நாளில் கொல்லப்பட்டனர் அல்லது கைதுசெய்யப்பட்டனர். இப்போர் ஐன் ஜலுட் போர் எனப்படுகிறது. ஐன் ஜலுட் போர் மங்கோலியப் படையெடுப்புகளில் ஒரு கரும்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது. கிழக்கு மற்றும் தெற்கு நோக்கிய மங்கோலியப் படையெடுப்பு ஐன் ஜலுட்டிற்குப் பிறகு நிறுத்தப்பட்டது.

உள்நாட்டு போர்[மூலத்தைத் தொகு]


ஹுலாகு நாணயம், ஒரு முயல் சின்னத்துடன்.

இவரது சகோதரர் குப்லாய் கான் பெரிய கான் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிறகு, 1262ம் ஆண்டு ஹுலாகு தனது பகுதிகளுக்குத் திரும்பினார். ஐன் ஜலுட் போருக்காக மம்லுக்குகளைத் தாக்கிப் பழிவாங்குவதற்குத் தனது படைகளை ஹுலாகு கூட்டினார். ஆனால் அதற்குப் பதிலாக இவர் படு கானின் சகோதரர் பெர்கேயுடன் உள்நாட்டுப் போருக்கு இழுக்கப்பட்டார். பெர்கே கான் முஸ்லிமாக மதம் மாறியவர் ஆவார். ஹுலாகு பாக்தாத்தைத் தாக்கியதற்குப் பழிவாங்குவதற்காக பெர்கே மம்லுக்குகளுடன் இணைந்தார். செங்கிஸ் கானின் முதல் மகனான சூச்சியின் 7வது மகன் பால் அல்லது தேவல் கான் என அழைக்கப்படுகிறார். இவரது பேரன் நோகை கான் ஆவர். பெர்கே, ஹுலாகுவின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் நோகை கான் தலைமையிலான தொடர்ச்சியான சிறு சூறையாடல்களை ஆரம்பித்தார். 1263 ஆம் ஆண்டில் காக்கேசியாவுக்கு வடக்கே எடுத்த படையெடுப்பில் ஹுலாகு கடுமையான தோல்வியைச் சந்தித்தார். மங்கோலியர்களுக்கு இடையிலான முதல் பகிரங்கப் போர் இதுவாகும். இது ஒன்றுபட்ட மங்கோலியப் பேரரசின் முடிவின் தொடக்கத்தைக் காட்டியது.

பெர்கே முஸ்லிமாக இருந்தபோதும், மங்கோலிய சகோதரத்துவத்தை விட்டுவிட்டு ஹுலாகுக்கு எதிராகப் போரிட விரும்பவில்லை. அவர் கூறியதாவது “மங்கோலியர்களின் வாள்களால் மங்கோலியர்கள் கொல்லப்படுகிறார்கள். நாம் ஒன்றுபட்டிருந்தால், இந்த உலகையே நாம் வென்றிருப்போம்”. ஆனால் இல்கானேட்டின் நடவடிக்கைகள் காரணமாக கோல்டன் ஹோர்டேயின் பொருளாதார நிலைமை பாதிக்கப்பட்டிருந்தது. இது ஜிகாத் அறிவிக்க வழிவகுத்தது. ஏனெனில் இல்கானேடு வடக்கு ஈரானின் செல்வம் முழுவதையும் தனக்குத் தானே வைத்துக் கொண்டது. மேலும் இல்கானேடு கோல்டன் ஹோர்டேயிடம் மம்லுக்குகளுக்கு அடிமைகளை விற்கக் கூடாது என்ற கோரிக்கையையும் வைத்தது.[22]


ஐரோப்பாவுடன் தொடர்பு[மூலத்தைத் தொகு]


ஹுலாகுவின் தேம்கா (முத்திரை).

முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு ஃபிராங்கோ-மங்கோலியக் கூட்டணியை நிறுவும் முயற்சியில் ஐரோப்பாவிற்கு பல தகவல்தொடர்புகளை ஹுலாகு அனுப்பி வைத்தார். 1262 ஆம் ஆண்டில், இவர் செயலாளர் ரைசல்டுஸையும், தூதர்களையும் "வெளிநாடுகளிலுள்ள அனைத்து அரசர்களுக்கும் இளவரசர்களுக்கும்" அனுப்பினார். சிசிலியின் அரசர் மன்ஃப்ரெட், மம்லுக் சுல்தானுடன் இணைந்திருந்தார். மேலும் போப் அர்பன் IV உடன் மோதலில் இருந்தார். தூதர்கள் சிசிலியில் தடுத்து நிறுத்தப்பட்டு கப்பல் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்.[23]

ஏப்ரல் 10, 1262 இல், ஹுலாகு, ஹங்கேரிய ஜான் எனும் நபரிடம், பிரான்சின் லூயிஸ் IXக்கு கூட்டணிக்காக ஒரு கடிதத்தை அனுப்பினார்.[24] கடிதம் கடைசிவரை பாரிசில் இருந்த லூயிஸ் IX ஐ அடைந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை - இருப்பதாக அறியப்பட்ட ஒரே கையெழுத்துப்பிரதி தற்போது வியன்னா, ஆஸ்திரியாவில் உள்ளது.[25] இந்த கடிதம் எருசலேமை போப் ஆண்டவரின் நன்மைக்காகக் கைப்பற்றுவது ஹுலாகுவின் நோக்கம் என்றும், எகிப்துக்கு எதிராக ஒரு கப்பற்படையை அனுப்புமாறும் லூயிஸைக் கேட்டுக் கொண்டது:


கிறித்தவ நம்பிக்கையுடையோரின் நன்னம்பிக்கை ஆதரவுடன், சரசன்களின் நம்பிக்கை துரோக தேசத்தை அழிக்க ஆர்வமாக இருக்கும் மங்கோலிய இராணுவத்தின் தலைவரிடத்திலிருந்து (...) கடலின் மறுபுறத்தில் கடலோர ஆட்சியாளர்களாக நீங்கள் இருக்கிறீர்கள், உங்கள் குடிமக்களை கடல் ரோந்து செல்லுமாறு செய்வதன் மூலம், உங்களது மற்றும் எங்களது எதிரிகளான, கடவுள் நிராகரிப்பாளர்களுக்கு புகலிடம் மறுக்க முயலுங்கள்.


—ஹுலாகுவிடம் இருந்து புனிதர் லூயிஸுக்கு கடிதம்.[26]

மங்கோலியக் கலாச்சாரத்தைப் பற்றி 13ம் நூற்றாண்டு ஐரோப்பா தெரிந்து வைத்திருந்தது. பல முயற்சிகள் இருந்த போதிலும், ஹுலாகு மற்றும் அவரது வாரிசுகளால் ஐரோப்பாவுடன் ஒரு கூட்டணியை உருவாக்க முடியவில்லை. இத்தாலியில் பிறந்த பல புதிய குழந்தைகளுக்கு ஹுலாகு உட்பட மங்கோலிய ஆட்சியாளர்களது பெயர்கள் சூட்டப்பட்டது: கான் கிராண்டே ("பெரிய கான்"), அலான் (ஹுலாகு), அர்கோன் (அர்குன்) மற்றும் கசானோ (கசன்) ) பதிவு செய்யப்பட்டுள்ளது.[27]

இறப்பு[மூலத்தைத் தொகு]


ஹுலாகு கானின் இறுதிச்சடங்கு.

ஹுலாகு கான் 1265 ஆம் ஆண்டில் இறந்தார். உர்மியா ஏரியில் ஷஹி தீவில் புதைக்கப்பட்டார். இல்கானேட்டில் இவரது இறுதிச் சடங்கு மட்டுமே நரபலி கொடுக்கப்பட்ட இறுதிச் சடங்காக இருந்தது.[28] இவரது மகன் அபகா கான் இவருக்குப் பின் அரசரானர்.

மரபு[மூலத்தைத் தொகு]

ஹுலாகு கான் இல்கானேட்டிற்கான அடித்தளங்களை அமைத்தார். இது சஃபவிட் வம்ச அரசுக்கு வழிவகுத்தது. இறுதியில் நவீன ஈரான் நாட்டின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. ஹுலாகின் படையெடுப்பு ஈரானை மேற்கிலிருந்து ஐரோப்பிய செல்வாக்கிற்கும் கிழக்கிலிருந்து சீன செல்வாக்கிற்கும் அறிமுகப்படுத்தியது. இது, இவரது வாரிசுகளின் ஆதரவோடு இணைந்து, கட்டடக்கலையில் ஈரானின் தனிச்சிறப்புமிக்க வரலாற்றை வளர்த்தது. ஹுலாகு வம்சத்தினரின் கீழ், ஈரானிய சரித்திராசிரியர்கள் அரபு மொழியில் அல்லாமல் பாரசீக மொழியில் எழுதத் தொடங்கினர்.[29]

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER