Tuesday, 26 December 2017

SEKIRIYA MOUNTAIN OF SRILANKA





SEKIRIYA MOUNTAIN OF SRILANKA 




சீகிரியா என்றதும் காசியப்ப மன்னனால் கட்டப்பட்டது. அஜந்தாவை ஒத்த ஓவியங்கள் தீட்டப்பட்டது என்பன மட்டும் தான் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அதில் மேலும் பல சுவாரஸ்யங்கள் ஒளிந்துக் கிடக்கின்றன.

தம்புள்ளை ஹபரைணை பிரதான வீதியில் இனாமலுவவிலிருந்து கிழக்கே 10 கிலோமீற்றர் சென்றதும் சீகிரியா குன்றை காணலாம். அதன் அடிவாரம் வரையில் வாகனத்தில் சென்று இருபுறமும் அடர்ந்த காட்டின் நடுவே கொஞ்ச தூரம் இயற்கையை ரசித்தவாறு நடந்துசெல்லும் போது சம தரையில் இரண்டு புறமும் புல்வெளிகள் , பூத்துக் குலுங்கும் மரங்களுக்கு நடுவே இருக்கும் நேர் பாதை சீகிரியா குன்றை சென்றடைகிறது. ஏறுவதற்கு ஒரு வழி இறங்கி செல்ல ஒரு வழி என இரண்டு வேறுப்பட்ட வழிகளில் உள்ளன. இத்தனை பிரமாண்டங்களை கொண்ட சீகிரியா குன்றின் வரலாறு காசியப்ப மன்னனால் உருவானது.
அனுராதபுரத்தை தலைநகராகக்கொண்டு இலங்கை முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த மன்னன் தான் தாதுசேனன். அவனுக்கு இரண்டு மனைவியர், மூன்று பிள்ளைகள். மூத்தவன் காசியப்பன் ஆனால் அவனின் தாய் தாழ்ந்த சாதிப்பெண் என்பதால் அவன் சிம்மாசனத்திற்கு அருகதையற்றவனானான்.
முகலன் தான் பட்டத்து ராணியின் மகன் முடிக்குரிய இளவரசன். மூன்றாவது மகள், சேனாதிபதியொருவனை மணந்துக்கொள்ள அவளுக்கு மாமியார் கொடுமை என அறிந்த தாது சேனன் சேனாதிபதியின் தாயை எரித்துக்கொலை செய்தான். இதனால் சேனாதிபதி தாதுசேனனுக்கு விரோதியானான். சிம்மாசனத்தை கைப்பற்ற நேரம் பார்த்துக்கொண்டிருந்த காசியப்பனுடன் கைகோர்த்துக் கொண்டான். சந்தர்ப்பம் பார்த்து காசியப்பன் தந்தையிடம் அரசுரிமையை கேட்டபோது அதை மறுத்த தாதுசேனனை உயிருடன் சிறைப்பிடித்து சிம்மாசனத்தைக் கைப்பற்றி தந்தையைக் கொன்றான்.
இதை அறிந்த முதலாம் முகலன் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றான். முகலன் திரும்பி வந்தால் தன்னை தாக்க கூடும் என எண்ணிய காசியப்பன் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கி.பி. 477-495 காலப்பகுதியில் அரண்மணையை சீகிரியா குன்றில் அமைத்துக்கொண்டான். கோட்டையைச் சுற்றி அகழியும், வாவிகளையும் கட்டுவித்து தனது இருப்பிடத்தை பாதுகாப்பு அரணாக மாற்றிக்கொண்டான். அதன் பின் சிகிரியாவைத் தலைநகராகக்கொண்டு அரசாட்சி புரிந்தான். இவன் சீகிரியா குன்றை அரண்மனையாக மாற்றுவதற்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
சிங்கள மன்னர்களின் வரலாற்றில் காசியப்ப மன்னனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தனது தந்தையை கொன்றதால் அவன் மகாவிகாரை பிக்குகளுக்கு கொடுத்த கொடைகளைகூட அவர்கள் ஏற்கவில்லை என சூளவம்சம் கூறுகின்றது. இதனால் தான் காசியப்ப மன்னன் தொடர்பிலும் சீகிரியா குன்று தொடர்பிலும் தெளிவான தகவல் இதுவரைக் கிடைக்கப்பெறவில்லை.
சீகிரிய ஓவியங்கள்

 இங்கு தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் அஜந்தா குகை ஓவியங்களை ஒத்தவை என்பது அனைவரும் அறிந்த விடயம் தான். ஆனால் இவை மேலும் பல சிறப்புகளைக் கொண்டமைந்தவை. 

மொத்தமாக 27 ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. தகுந்த கவனிப்புகள் இன்றி தற்போது ஏழு ஓவியங்கள் மட்டுமே மீதம் உள்ளன. இங்குள்ள அனைத்து ஓவியங்களும் காசியப்ப மன்னனினால் தான் வரையப்பட்டுள்ளளன.

சுண்ணாம்பு,  தேன், கபுக்கல் போன்றவற்றைக் கலந்து பாறைகள் மீது பூசப்பட்டு ஈரம் காய்வதற்குள் இங்குள்ள ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை ஈரச்சுதை முறை ஓவியங்கள் எனப்படும். இவற்றுக்கு இயற்கையில் பெறப்படும் நிறங்களையே பயன்படுத்தியிருக்கிறான் காசியப்பன். மரப்பட்டை சாயங்கள், மரங்களில் இருந்து கிடைக்கப்பெறும்  பசைவகைகள்,சாம்பல் 

போன்றவற்றைக்கொண்டுதான் இந்த ஓவியங்களுக்கு நிறம் தீட்டப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் இந்த ஓவியங்களின் நிறம் மங்காமல் இருக்கின்றமை வியக்கச்செய்கிறது.

இந்த ஓவியங்களில் சித்தரிக்கும் பெண்கள் தேவதைகள், காசியப்பனின் மனைவியர், மன்னனின் அந்தப்புரத்தை அலங்கரித்த பெண்கள் என வேறுப்பட்ட கருத்துக்கள் உள்ளன. இந்தப்பெண்களின் கைகளில் உள்ள அல்லி மலர்கள், அவர்களின் முகத்தில் வெளிப்படும் பக்தி உணர்வு இவற்றை வைத்துப்பார்க்கும் போது இவர்கள் புத்தரை வழிப்படச் செல்லும் காட்சியே
ஓவியமாகியுள்ளதாக வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். இவ் ஓவியங்களில் பெண்கள் சிலர் கையில் தட்டை ஏந்தியவாறும், சிலர் மலர்க்கொத்தை ஏந்தியவாறும் சிலர் மேலாடை இன்றியும், சிலர் மேலாடையுடனும், தனித்தும், கூட்டமாகவும் இந்த காட்சிகள் வரையப்பட்டுள்ளன.
 பளிங்குச் சுவர்/ கண்ணாடிச் சுவர்


சித்திரங்கள் கீறுவதற்காக இந்த பாறையில் சுண்ணாம்பு, தேன், கபுக்கல் போன்றவை கலந்து பூசப்பட்டுள்ளதாகவும் ஏதோ ஓரு காரணத்தினால் சித்திரங்கள் தீட்டபடவில்லை எனவும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
இச் சுவற்றுக்கு எதிர்ப் புறத்தில் தீட்டப்பட்டிருந்த ஓவியங்களில் மாலை வெயில் பட்டு இந்தக் கபில நிறப் பளிங்குச் சுவரில் தெறிப்பதால் இதற்குப் பளிங்குச் சுவர் என்ற பெயர் கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகின்றது.
சிங்க நுழைவாயில்



படிக்கட்டுக்கள் வழியே குன்றின் நடுப்பகுதிக்கு சென்றதும் அதிலிருந்து முன்னோக்கி செல்வதற்கு சிங்கத்தின் வாயினுள் செல்வது போன்ற பிரமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது சிங்க நுழைவாயில். அவற்றை பார்வையிடும் போது காசியப்பன் எத்தனை கலை நயம் மிக்கவன் என்பதை நாம் சிந்தித்துப்பார்க்கமுடியும்.
அரண்மனை


மலையின் உச்சிக்கு சென்றதும் அரண்மனையின் சிதைவுகளை காணமுடியும். காசியப்பன் வாழ்ந்தான் என்பதை இச் சிதைவுகள் பறைசாற்றுகின்றது.  இயற்கையில் மூன்று ஊற்றுக்கள், பூங்கா, மகாராணி குளித்த தொட்டி, அரச மண்டபம், சிம்மாசனம் என்பன  இன்றும் சீகிரியா குன்றில் பார்க்ககூடியதாகவுள்ளது.
தொல்பொருள் காட்சியகம்


சீகிரியாவை அண்மித்து புதிதாக அமைக்கப்பட்டுள்ளது சீகிரியா தொல் பொருட்சாலை. தொல்பொருளியல் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள், சின்னங்கள், அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இங்கு பாதுகாப்பாகப் பேணப்படுகின்றன.
இதில் பார்வையாளர்களின் வியக்கவைக்கும் சீகிரியாவின் மாதிரியில் பூந்தோட்டங்கள், அகழிகள், நீர்த் தடாகங்கள், புல்வெளிகள், சபா மண்டபம், பாதுகாப்புச் சுவர்கள் முதலான அனைத்து
அம்சங்களையும் உள்ளடக்கி கண்ணாடி மேற்பரப்பைக் கொண்டதாக நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளமை ஆச்சரியமானதே.
அது மட்டுமன்றி, கணினி நுட்பத்தைக் கொண்டு உண்மையான சீகிரியா அரண்மனையின் கட்டமைப்பையும் அதன் கட்டிடக்கலை நுட்பத்தையும் சித்தரிக்கும் ஒளிப்படக் காட்சி எங்களை காசியப்ப மன்னன் வாழ்ந்த காலத்திற்கே கூட்டிச்செல்கிறது.

No comments:

Post a Comment