EE .VE . RAA .PERIYAAR DIED
1973 DECEMBER 24
சமூகத்தின் சமத்துவவாதி ஈ.வே.ரா!
தமிழகத்தின் போற்றப்படும் தலைவர்களில் பெரியார் மிக முக்கியமானவர். அவரின் சமூக சீர்திருத்தக் கொள்கைகள் சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை களைந்துள்ளது. மூட நம்பிக்கைகளை உடைத்தெரிந்து ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கப் போராடியவர் ஈ.வெ.ராமசாமி பெரியார். அவரின் நினைவு தினமான இன்று அவரை நினைவு கூறுவோமே!
இளமைக் காலம்
ஈ. வெ. இராமசாமி பெரியார் 1879ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவரின் சீர்த்திருத்தக் கொள்கைகளில் முக்கியமானது பெயருக்குப் பின்னர் உள்ள சாதியை நீக்குவது.தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார். நவம்பர் 13ஆம் தேதி 1938ல் சென்னையில் நடந்த 5000க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துகொண்ட தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டிலேயே ‘பெரியார்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டார். பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை, மட்டுமே கல்வி பயின்றார். அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தந்தையின் வணிகத்தொழிலை 12 ஆம் வயது முதல் மேற்கொண்டார். பெரியாரின் 19 வது வயதில், சிறுவயது முதல் நேசித்த 13 வயது நாகம்மையாரை மணந்து கொண்டார். நாகம்மையார் தன் கணவரின் புரட்சிகரமான செயல்களுக்குத் தன்னை முழுவதுமாக ஆட்படுத்திக்கொண்டார். இருவரும் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபட்டார்கள்.
பெரியாரை மாற்றிய
காசிப் பயணம்
1904ல் பெரியார் இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் காசி விசுவநாதரை தரிசிக்கச் சென்றார், அங்கு நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள், பிச்சை எடுத்தல், கங்கை ஆற்றில் மிதக்கவிடப்படும் பிணங்கள் போன்ற அவலங்களையும், சுரண்டல்களையும் கண்டு மிகவும் வருத்தமுற்றவரானார். இந்து சமயத்தின் வேற்றுமை காணும் உணர்வினை எதிர்க்கும் நோக்கத்தை அன்றே காசியில் தன்மனதில் இருத்திக்கொண்டார். அதன் விளைவாக அதுவரை இறைப்பற்றுள்ளவாரக இருந்த பெரியார் காசி யாத்திரைக்குப் பின் தன்னை ஒரு இறைமறுப்பாளராக மாற்றிக்கொண்டார்.
சமூகத்தின் சமத்துவவாதி!
அரசியல் வாழ்வு
பெரியார் 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இணைவதற்கு முன் தான் வகித்து வந்த அனைத்து பொதுப்பதவிகளையும் விட்டு விலகினார். அவர் வகித்து வந்த முக்கியப் பதவியான ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியைத் துறந்தார். காந்தியின் கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டது மட்டுமில்லாமல், பிறரையும் உடுத்தும்படி செய்தார்,
கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார், வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார். தீண்டாமையை வேரறுக்கப் பெரும்பாடுபட்டார். 1921இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காகப் பெரியார் சிறைத்தண்டனைப் பெற்றார். அம்மறியலில் அவரும் அவர் துணைவி நாகம்மையார் மற்றும் அவர் சகோதரி கலந்து கொண்டனர். இதன் பலனாக அன்றைய ஆங்கில அரசு நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் செய்தார். இவற்றுக்காக கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக், காங்கிரஸ் கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத் தீவிரமாக முன்னிறுத்தினார். அவரின் முயற்சி அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களின் போக்கால் தோல்வியுற்றது. அதனால் 1925 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
வைக்கம் போராட்டம்
கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகர் திருவாங்கூர் சமத்தானத்தில் உள்ளது. கேரள வழக்கப்படி அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்கள் கோயிலுக்குள் நுழையவும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924ல் சாதி எதிர்ப்புகள் வலுத்திருந்த சமயமாதலால் சாதி எதிர்ப்புப் போராட்டத்தைக் காந்திய வழியில் நடத்த வைக்கம் சிறந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. வைக்கம் போராட்டத்திற்கு முப்பதாண்டு கால வரலாறு உண்டு. நாடெங்கிலும் இருந்து காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் அதில் பங்குகொண்டார்கள். தமிழகத்தில் இருந்து ஈ.வே.ரா அவர்களுள் போராட்டத்தில் ஈ.வே.ரா முக்கியமான பங்கு வகித்து சிறைசென்றார். பெரியார் கைது செய்யபட்ட போதிலும் பெரியாரின் தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தைத் தொடர்ந்ததால் இச்சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. அதுமுதல் பெரியார் வைக்கம் வீரர் என தமிழ் மக்களால் அழைக்கப்படலானார்.
சுயமரியாதை இயக்கம்
சுயமரியாதை இயக்கம் 1925 இல் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கைப் பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திற்கு உரிய மூடப் பழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையிலிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன. பகுத்தறிவுச் சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின.
பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாகப் பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது. சுயமரியாதையாளர்கள் பிரமாணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர். ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது சாதி மறுப்பு திருமணத்தையும், கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.கோயில்களில் சட்டத்திற்குப் புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தைத் திருமணத்தையும் தடை செய்தது. இதனினும் முக்கிய கொள்கையாக அரசு நிர்வாகப் பணி, கல்வி இவற்றில் இடவொதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க மதராஸ் அரசு நிர்வாகத்தை (தமிழ்நாடு உட்பட) 1928 லேயே வலியுறுத்தியது. இந்த பரப்புரை மற்றும் தத்துவங்களை முழுநேரச் செயல்பாடுகளாகப் பெரியார் 1925 இலிருந்து செயல்படுத்தி வந்தார். இதைப் பரப்புவதற்கு ஏதுவாக குடியரசு நாளிதழை 1925 முதல் துவக்கினார். ஆங்கிலத்தில், ரிவோல்ட் என்ற நாளிதழ் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காகப் பிரசாரம் செய்தார். சுயமரியாதை இயக்கம் வெகு வேகமாக மக்களிடையே வளர்ந்தது. மேலும் ராஜாஜி மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபோது, இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது. நீதிக்கட்சியின் தமிழ் தேசியவாதிகளான சர். ஏ. டி. பன்னீர் செல்வம் மற்றும் பெரியார் இப்போராட்டத்தினை முன்னின்று நடத்தினர். இப்போராட்டம் 1938 இல் பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவுடன் முடிவுற்றது.
திராவிடர் கழகம்
1944 இல் நீதிக்கட்சித் தலைவராகப் பெரியார் முன்னின்று நடத்திய நீதிக்கட்சிப் பேரணியில் திராவிடர் கழகம் எனப் பெரியாரால் பெயர் மாற்றப்பட்டு, அன்று முதல் திராவிடர் கழகம் என அழைக்கப்பட்டது. இருப்பினும் பெரியார் நீதிக்கட்சியைத், திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றியதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். திராவிடர் கழகத்தின் கொள்கை நகர மக்களிடமும், மாணவ சமுதாயத்தினரிடமும் வெகு விரைவாகப் பரவியது. இக்கட்சியின் கொள்கைகளும் இதன் சார்ந்த செய்திகளும் வெகு விரைவிலேயே கிராமத்தினரிடமும் பரவியது. 1949 முதல் திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்படலாயினர்.
மார்க்சியமும் பெரியாரும்
பெரியாரின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைளுக்கு மேலும் மெருகூட்டி அவற்றின் செயல்பாடுகளை மேலும் வலுவடையச் செய்தன. ரஷ்யாவின் பொதுவுடமைக் (கம்யூனிசம்) கொள்கை இவருடையக் கொள்கையை ஒத்ததாகவே இருந்தது. பலவிடங்களில் பெரியாரின் கருத்துக்கள் மார்க்சியத்தின் சமூகப் பொருளாதாரக் கருத்துக்களுடன் ஒத்துபோவதாக இருந்தது. பெரியார் திரும்பியதும் உடனே மார்க்சியத் தலைவர் எம்.சிங்காரவேலு செட்டியாருடன் சமூக அரசியல் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். இதன் மூலம் பெரியாரின் கொள்கை சோசலிசத்துடன் கூடிய சுயமரியாதைக் கொள்கையாக மாறியது. இதனால் தமிழகத்தில் பெரும் வளர்ச்சியையும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தையும் உருவாக்கிட இதுவே காரணமாயிற்று. பெரியாரின் கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில் நடந்தது. அதுதான் பெரியார் கலந்துகொண்ட கடைசி கூட்டமாகும்.அக்கூட்டத்தில் சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துக் கொண்டார். அதுவே அவரின் கடைசிப் பேச்சு ஆகும். குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்றப் பெரியார், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், உறுதியான பகுத்தறிவுச் சிற்பி என அனைவராலும் போற்றப்பட்ட பெரியார், சிகிச்சை பலனின்றி 1973ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி தனது 94 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.
இவரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் “புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி” என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. அன்று தந்தை பெரியார் இட்ட விதைதான் இன்று நாம் அனுபவிக்கும் பல திட்டங்கள் விருட்சமாக வளர துணைபுரிந்தது. மேலும் சுய சிந்தனை உள்ளவர்களாகவும், சுய மரியாதையுடனும் வாழ வழிவகுத்தது என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment