Thursday 26 August 2021

SASIKUMAR UNFORGETTABLE ACTOR 1944 DECEMBER 8 - 1974 AUGUST 24

 



SASIKUMAR UNFORGETTABLE ACTOR  

1944 DECEMBER 8 - 1974 AUGUST 24



*தென்னிந்திய திரையுலகில்*
*மறக்க முடியாத நடிகர்*
**சசிகுமார்!**
நினைவு நாள் கட்டுரை.
*(கரிகாலன்)*
தென்னிந்திய திரையுலகில் மறக்க இயலாத ஒரு சிறந்த
நடிகராக விளங்கியவர் *'சசிகுமார்'* ஆவார். இவரை 1970ஆம் ஆண்டு
*’திருமலை-தென்குமரி’* படத்தில் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து *’பணத்துக்காக’*, *’அவள்’*, *’ரோஷக்காரி’*, *’வெள்ளிக்கிழமை விரதம்’*, *’திருடி’*, *’தாய்க்கு ஒரு பிள்ளை’*, *’தெய்வாம்சம்’*, *’ராஜபார்ட் ரங்கதுரை’*, *’சமர்ப்பணம்’*, *’மனிதனும் தெய்வமாகலாம்’*, *’காசேதான் கடவுளடா’*, *’வீட்டுக்கு ஒரு பிள்ளை’*, *'டைகர் தாத்தாச்சாரி'*, *'பிராயச்சித்தம்'* போன்ற பலப் படங்களில் அவர் நடித்தார்.
சசிகுமார் *1944 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 8* ஆம் நாள் கும்பகோணத்தில்
பிறந்தார். அவர் இவ்வுலகில் வாழ்ந்தது மொத்தம் முப்பது ஆண்டுகள் மட்டுமே. சசிகுமார், இந்திய விமானப் படையில் பணியாற்றியவராதலால்
*"கேப்டன் சசிகுமார்"* என்ற சிறப்புப் பெயருடனும் விளங்கினார். இவரதுப்
பெற்றோர் பெயர் *ராதாகிருஷ்ணன் – சாவித்திரி* தம்பதியர். இவருக்கு குடும்பத்தினரால்
சூட்டப்பட்ட பெயர் *விஜய்குமார்* என்பதாகும். இவரது தந்தை, பெரியாரின்
தீவிர ஆதரவாளராக இருந்தவர்.
ஆதலால் *வெற்றி செல்வன்* என்றப் பெயரும் இவருக்கு இடப்பட்டது. இந்திய இராணுவத்தில் பணியாற்றிய போதும் இவரது பெயர் வெற்றி
செல்வன் என்பதாகத்தான் பதிவாகியிருந்தது. திரைப்படங்களில் நடிக்கத்

தொடங்கிய போது, மாற்றி வைக்கப்பட்ட பெயர்தான் சசிகுமார்.
( இதே போல *‘நீலமலைத்திருடன்’* படத்தில் நடித்த ரஞ்சன், விமான பைலட்டாகப் பணியாற்றியதால், அவருக்கும் கேப்டன் ரஞ்சன் என்றப் பெயர் உண்டு. இவ்விருவரும்ம் *‘ஒரிஜினல் கேப்டன்கள்’* ஆவர் ).
திரைப்படத் துறையில் மும்முரமாக இருந்த காலக் கட்டத்தில், 1974 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 21ஆம் நாள், சசிகுமார் எண்ணூரில்
நடைபெறவிருந்த காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து
கொள்வதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது பால் தயார்
செய்து தரும்படி மனைவி சசிகலாவிடம் கேட்க , அவரும் அடுப்பைப் பற்ற
வைத்துள்ளார். அப்போது திடீரென்று ஏற்பட்ட தீ, அவரது மனைவியின் சேலையில்
பற்றிக் கொண்டது.
அப்போது எழுந்த கூக்குரலைக் கேட்டு மறு அறையில் நின்றிருந்த
சசிகுமார், ஓடோடிச் சென்று விபத்தில் சிக்கிய தன் மனைவி சசிகலாவைக்
காப்பாற்றப் போராடினார். இவர்களது குழந்தைகளான மூத்த பெண் பிள்ளை
நந்தினிக்கு அப்போது வயது ஆறு. இளையவர் விஜயசாரதிக்கு வயது
நான்கு. இருவரும் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர். கணவனும் மனைவியும் தீவிபத்தில் சிக்கி பின் ராயப்பேட்டை மருத்துவமனையில்
தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டப் பின்னரும், சிகிச்சை
பலனின்றி முதலில் சசிகுமாரும்; அடுத்த இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர்
சசிகலாவும், ஒருவர் பின் ஒருவராக மரணத்தைத் தழுவினர்.

சசிகுமாரைக் காண்பதற்காக எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் மருத்துவர்களிடம் அவரைக் காப்பாற்றக் கோரி எவ்வளவோ முயன்றனர். பலத்த தீக்காயங்களுடன்
மூன்று நாட்கள் போராடியபோது, வாழை இலையில் கிடத்தப்பட்டு, நடிகை கே.ஆர்.விஜயாவின் செலவிலும், ஏவி.எம். சரவணனின் ஏற்பாட்டின்
பேரிலும், ஒரே அறையில் ஆறு ஏர்-கூலர்கள் பொருத்தப்பட்டு
சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி, *'24-8-1974'* அன்று அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர்.
பெருந்தலைவர் காமராஜர் இறுதி அஞ்சலி செலுத்தினார். இவர்களது
இறுதிச் சடங்குகள் இராணுவ மரியாதையுடன் கண்ணம்மா பேட்டை
இடுகாட்டில் நடத்தப்பட்டன. அந்நேரம் சின்னஞ் சிறுவனாக இருந்த
அவர்களின் ஒரே மகன் விஜயசாரதி-யும் அவரது அக்கா நந்தினியும்,
அப்போதைய நடிகர் சங்கத் தலைவராக இருந்த நடிகர் திலகம், செயலாளர்
மேஜர், பொருளாளர் வி.கே.ஆர். ஆகியோரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டார்கள்.
இவர்களது பாட்டி
பெரும் சிரமங்களின் மத்தியிலேயே, இவர்களை
வளர்த்து ஆளாக்கினார். (விஜயசாரதி இப்போது தொலைக்காட்சித் துறையில், பல அலைவரிசைகளில்
நடிகர் மற்றும் அறிவிப்பாளராக புகழ்பெற்று விளங்குகிறார்). இப்போதும்
சசிகுமாரின் திரைப்படங்களோ அல்லது பாடல் காட்சிகளோ ஏதேனும் ஒரு
தொலைக்காட்சியில் அன்றாடம் ஒளிபரப்பாகிக் கொண்டேயிருப்பதை
நாம் காணலாம்.
**நிறைவு!**

No comments:

Post a Comment