Tuesday 3 August 2021

KASETHAAN KADAVULADAA REVIEW

 


KASETHAAN KADAVULADAA REVIEW



காசேதான் கடவுளடா படம்.
கதை வசனகர்த்தாவாக இருந்த என்னை, இயக்குனர் அந்தஸ்துக்கு உயர்த்தியது, .
இதை நாடகமாக போட்ட போதே, நல்ல வரவேற்பு. நாடகத்தை, 20 நாட்களுக்கு சபாவில், 'புக்' செய்தனர்.
நாடகத்தை பார்த்த, ஏவி.எம்., நிறுவனத்தார், 'நாங்கள், இந்த நாடகத்தை படமாக்குகிறோம். ஒரு நிபந்தனை, இந்த படத்தை, நீங்கள் தான் இயக்க வேண்டும்...' என்றனர்.
ஆனால், எனக்கு இயக்குவதில் அப்போது ஆர்வம் கிடையாது.
'என் எழுத்தை சிதைக்காமல், சி.வி.ராஜேந்திரன், படமாக்குவார். அவரையே இயக்குனராக போட்டு விடுங்களேன்...' என்றேன். இருப்பினும், 'நீங்கள் தான் இயக்க வேண்டும்...' என்று சொல்லி விட்டார், ஏவி.எம்., செட்டியார்.
படம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது.
'ஜம்புலிங்கமே ஜடாதரா...' என்ற பாட்டு, பயங்கர, 'ஹிட்!' முத்துராமன் - லட்சுமி பாடும், 'மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்கக் கூடாது...' என்ற பாடலுக்காக போடப்பட்ட, 'மெகா சைஸ்' டெலிபோன், ஆபிஸ் மேஜை, ஸ்பீக்கர் போன்ற அரங்க அமைப்பு, பலரால் பாராட்டு பெற்றது.
இந்த படத்தில் இடம் பெற்ற, 'இன்று வந்த இந்த மயக்கம்...' என்ற பாடல், பாடகி சுசீலாவிற்கு, தேசிய விருதை பெற்றுத் தந்தது.
ஆங்கில படம் மட்டுமே ஓடும், பைலட் தியேட்டரில், இந்த படத்தை துணிந்து, வெளியீடு செய்தார், ஏவி.எம்.செட்டியார். படத்தில், போலி சாமியாராக வரும், தேங்காய் சீனிவாசனின் வசனத்தை கேட்டு, தியேட்டரில் பயங்கர கரகோஷம்.
இதை மக்களோடு மக்களாக உட்கார்ந்து ரசித்த, ஏவி.எம்., நிறுவனத்தார், தியேட்டர் வாசலில், அன்று இரவே, தேங்காய் சீனிவாசனுக்கு, 16 அடிக்கு, 'கட் - அவுட்' வைத்து விட்டனர்.
மறுநாள் காலையில், இதை கண்ணுற்ற, தேங்காய் சீனிவாசன், வேட்டி, சட்டை, பழத்துடன் என்னைப் பார்க்க வந்து விட்டார்.
'தெய்வமே... என்னை ஆசீர்வதியுங்கள். எல்லா புகழும் உங்கள் வசனம் பேசியதால் தான்...' என்று கூறி, ஆசீர்வாதம் பெற்றுச் சென்றார்.
அவர் போன கொஞ்ச நேரத்தில், முத்துராமன் வந்தார்.
சற்றே சோகமாக, 'என்ன சார்... நான் தான் படத்தோட, கதாநாயகன். ஆனால், தேங்காய் சீனிவாசனுக்கு, 'கட் - அவுட்' வைத்திருக்காங்க...' என்றார்.
'அதெல்லாம் தயாரிப்பாளர் விருப்பம்...' என்று சொல்லி, அவரை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தேன்.
இந்த படத்தின் மூலம் நட்பு வளையத்திற்குள் வந்த இன்னொரு நடிகர், எம்.ஆர்.ஆர்.வாசு.
'கோபு... நீ எடுக்கிற எல்லா படத்துலயும் நான் இருக்கணும்...' என்பார்.
ஒருமுறை, மிகவும் களைத்துபோய் காணப்பட்டார். என்ன ஏது என்று விசாரித்த போது, 'வீட்டுப் பிரச்னையில், பசங்கள போட்டு அடிச்சுட்டேன். மனசே சரியில்லை...' என்றார்.
நான் சும்மாயிருக்காமல், ஆறுதல் சொல்கிறேன் பேர்வழின்னு, 'கவலைப்படாதே, நாளை காலை, 7:00 மணிக்கு, என் வீட்டுக்கு வந்துடு... பக்கத்துல தான் பார்த்தசாரதி கோவில்... நான் அழைச்சுட்டு போறேன். போய்ட்டு வந்துட்டா, மனப்பாரம் இறங்கிடும். மறக்காம, உன் பிள்ளைகளையும் அழைச்சுட்டு வா...' என்றேன்.
மறுநாள் காலை, 7:00 மணிக்கு, வீட்டு வாசலில் வந்து நின்ற வாசு, அவருக்கே உரிய கட்டைக்குரலில், 'கோபு...' என்ற அழைப்பில், தெருவே திரும்பிப் பார்த்தது.
'கோபு... நான் கரீட்டா வந்துட்டேன். புள்ளைகள அழைச்சுட்டு வரச்சொன்னியே, அழைச்சுகிட்டு வந்துருக்கேன். இந்த பாரு எம் புள்ளைகளை...' என்று, அவரின் இரண்டு கையிலும் துாக்கி காட்டிய இடத்தில், இரண்டு மது பாட்டில்கள்.
பயங்கர அதிர்ச்சி. அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதற்குள், போதும் போதுமென்றாகி விட்டது.
நான் ரசித்து எழுதிய நாடகம், காசேதான் கடவுளடா என்றால், ரசித்து எழுதி, இன்றைக்கும் எனக்கு பிடித்த படமாக இருப்பது, உத்தரவின்றி உள்ளே வா தான்.
பணக்காரரான ரவிச்சந்திரன், நண்பர்கள் நாகேஷ், மாலி, மூர்த்தியுடன் ஒரே வீட்டில் தங்கியிருப்பார். அப்போது, அபலை பெண்ணான, காஞ்சனா வீட்டிற்குள் நுழைவது, மாலிக்கு குழந்தை கிடைப்பது, நாகேஷுக்கு பூர்வஜென்ம வாசனையும், வசனமும் கொண்ட, ரமாபிரபா, 'நாதா... நாதா...' என்று அழைத்தபடி அலைவது என்று, கடைசி வரை நகைச்சுவை குறையாமல், படம் விறுவிறுப்பாக செல்லும்.
'உனக்காக ஒரு படம், எனக்காக ஒரு படம்...' என்று, ஒரே நேரத்தில், இரண்டு படங்கள் எடுத்தார், ஸ்ரீதர். உத்தரவின்றி உள்ளே வா படம் எனக்கானது. அவளுக்கென்று ஒரு மனம் ஸ்ரீதருக்கானது; சோகமான படம். இரண்டு படத்திலுமே கதாநாயகி, காஞ்சனா தான்.
காலையில் வந்து, என் படத்தில் சிரி சிரி என்று சிரித்தபடி நடிப்பார்; மாலையில், ஸ்ரீதருக்கான படத்தில், பிழிய பிழிய அழுவார்.
எனக்கே எப்போதாவது மனக்கவலை வந்தால், இந்த படத்தை தான் போட்டு பார்ப்பேன். அந்த அளவிற்கு இன்றும் கூட பொருந்தக்கூடிய அளவிற்கு இந்த படத்தின் நகைச்சுவை அமைந்திருக்கும்.
நடிகர், ரஜினி, கமலுடனான அனுபவங்களை அடுத்த வாரம் சொல்கிறேன்.
பயமுறுத்திய, 'தேனாற்றங்கரையினிலே...'
தமிழில், 1971ல், வெளிவந்தது, உத்தரவின்றி உள்ளே வா நகைச்சுவை திரைப்படம். சித்ராலயா பிக்சர்ஸ் சார்பில், ஸ்ரீதர் தயாரிப்பில், என்.சி.சக்கரவர்த்தி இயக்கத்தில், கோபு கதை, வசனத்தில் வெளியானது. இப்படத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ், ரமாபிரபா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சச்சு, தேங்காய் சீனிவாசன் மற்றும் மாலி போன்ற பலரும் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் இடம் பெற்ற, 'உத்தரவின்றி உள்ளே வா...' பாடலை முணுமுணுக்காதவர்களே கிடையாது. அதே போல, 'தேனாற்றங்கரையினிலே தேய்பிறையின் நிலவினிலே...' என்ற பாடலை, அடிக்கடி அப்போது இரவு நேரத்தில், ரேடியோவில் ஒலிபரப்பி பயமுறுத்துவர். இந்த பாடலுக்காகவே, பெரும் வரவேற்பை பெற்றார், ரமாபிரபா.
May be an image of 5 people and people standing
Like
Comment
Share

No comments:

Post a Comment