SECRET LANGUAGE OF CHINA - NOOSU FOR LADIES ONLY
ஆணுக்கு தெரியாமல் பெண் பேசிய ரகசிய மொழி
உலகில் வித்தியாசமான நாடு என்றால் அது சீனாதான். நம்மை வியக்க வைக்கும் பல்வேறு தகவல்களை சரித்திரம் முழுவதும் தனக்குள் வைத்திருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த 'பெண்ணின் மொழி'.
மனித நாகரிக வளர்ச்சியில் எழுத்துக்கள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்களை ஆண்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் பெண்களை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள். இதை புரிந்து கொண்ட பெண்கள் எதுவும் தெரியாத அப்பாவிப் பெண்கள் போல் நடிக்கத் தொடங்கினார்கள்.
சீனப் பெண்கள் ஒருபடி மேலே போய் தங்களுக்கு எழுதப் படிக்கக் கூட தெரியாது என்பது போல் நடித்தார்கள். ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல. பல நூற்றாண்டுகள் இந்த நடிப்பு தொடர்ந்தது. அப்போது பெண்கள் தங்களுக்கு என்று தனி எழுத்து வடிவம் பயன்படுத்த தொடங்கினார்கள்.
பெண்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் என்று தனியாக ஒரு மொழியை உருவாக்கினார்கள். அந்த மொழிக்கு 'நுஷு' என்று பெயர் வைத்தார்கள். நுஷு என்றால் சீன மொழியில் 'பெண்ணின் எழுத்து' என்று அர்த்தம்.
தங்கள் பெண்கள் இப்படி எழுத்துரு கொண்ட மொழியை பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் என்பதை 700 வருடங்களாக எந்த ஆணாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யார் சொன்னார்கள் பெண்களால் ரகசியத்தை காப்பாற்றமுடியாது என்று.
சீன மொழி எழுத்துக்கள் பெரிதாகவும் கம்பீரமாகவும் இருக்கும். 'நுஷு' எழுத்துக்கள் பெண்களால் உருவாக்கப்பட்டதால், மெலிதாகவும் நிறைய அழகோடு கிறுக்கியது போல் இருக்கும். ஓவியங்களிலும் தலையணை எம்பிராய்டரி வேலைப் பாடுகளிலும் இந்த எழுத்துக்களை பார்க்கலாம். பார்டர் போல் எழுத்துக்களை பயன்படுத்தி தகவலை சொல்லிவிடுவார்கள்.
பெண்கள் ஆண்களின் கண்ணில் படும்படியே ஓவியங்களில் இந்த எழுத்துக்களை பயன்படுத்தினார்கள். திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு போன பெண்கள் அங்கு தங்களுக்கு நேரும் கொடுமைகளையும் அரவணைப்பையும் தன் தாய்க்கு இந்த எழுத்தின் மூலம் ரகசியமாக தெரிவித்தார்கள்.
ஒவ்வொரு பெண்ணும் இந்த மொழியை தனது மகளுக்கும் பேத்திக்கும் கற்று தந்து வழிவழியாக காப்பாற்றி வந்தார்கள். பெண்ணுக்கு மட்டுமே இருக்கும் பல தனிப்பட்ட விஷயங்களை கூசாமல் பேசிய மொழி இது.
தற்போது நுஷு மொழி தெரிந்த ஒரு பெண் கூட உலகில் இல்லை என்பது வேதனையான ஒன்று. யாங் ஹுஅன்ய் என்ற 98 வயது பெண் 2004-ம் ஆண்டு இறந்த போது நுஷு மொழியும் இறந்தது. இவர்தான் நுஷு மொழி தெரிந்த கடைசி பெண்.
பெண்களின் வலிகளையும் காதலையும் திகட்ட திகட்ட சொன்ன ஒரு மொழி இன்று உயிர்ப்போடு இல்லை. நூற்றாண்டுகள் கடந்து ரகசியமாக வளர்ந்த மொழியை இப்படி சாக விட்டுவிட முடியுமா..! அதற்காகத்தான் சீன அரசு நுஷு மொழியை பாரம்பரிய மொழியாக அறிவித்து அதற்காக ஒரு அருங்காட்சியகம் அமைத்துள்ளது.
ஏகப்பட்ட கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் இருக்கும் இன்றைய பெண்கள் கூட இப்படி ஒன்றை உருவாக்கமுடியுமா என்பது சந்தேகமே! அதனால் தான் சீன ஒரு வித்தியாசமான நாடு.
No comments:
Post a Comment