Sunday 27 June 2021

R.SUNDARAJAN ,DIRECTOR BORN 1950 JANUARY 9

 



R.SUNDARAJAN ,DIRECTOR 

 BORN 1950 JANUARY 9

வாய்ப்புகளைத் தேடிச் செல்பவர்கள் ஒரு வகை, வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்பவர்கள் இன்னொரு வகை. இதில் 2வது வகையைச் சேர்ந்தவர்களை வரலாறு வெற்றியாளர்களாக அடையாளம் காட்டத் தவறுவதில்லை.
கோவையில் விவசாய குடும்பத்தில் பிறந்து பின்பு எம்ஜிஆர் ஆ(ட்)சியில் எம்எல்ஏ வாக உயர்ந்த ஒரு அரசியல்வாதியை சந்தித்து ‘என்னிடம் நல்ல கதை இருக்கிறது நீங்கள் தயாரிப்பாளராக முடியுமா?‘ என்று கேட்டிருக்கிறார் ஒரு இளைஞர். இத்தனைக்கும் அந்த இளைஞர் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியதில்லை. 80களில் நேரடி சினிமா அனுபவம் இல்லாத யாரும் இயக்குநர் ஆவதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது.
அதையெல்லாம் மீறி, அந்த எம்எல்ஏவுக்கு அவர் சொன்ன கதை பிடித்துப் போனது. திரைத் துறையில் அனுபவம் இல்லாத காரணத்தினால் மிகுந்த யோசனைக்குப் பின்பே அந்தப் படத்தை தயாரிக்க ஒத்துக் கொண்டார், அவர்.
அப்படி உருவான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன், சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் 425 நாட்கள் ஓடி மிகப் பெரிய சாதனையை படைத்திருக்கிறது.
1980களில் ஆரம்பத்தில் வெளியான அந்தப் படத்துக்குப் பின், அப்போதைய காலகட்டத்தில் யார் புதிதாக டேப் ரெக்கார்டர் வாங்கினாலும் முதல் முதலில் வாங்கும் பாடல் கேசட் இந்தப் படத்தின் கேசட்தான். அது என்ன படம்? அந்த இளைஞர் யார்?
சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் வசதி வாய்ப்புகளோடு பிறந்து மும்பையில் எம்பிஏ முடித்து யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல் இயக்குநர் ஆனவர் என்று ‘சிலருக்கு‘ கொடுக்கும் புகழாரம் ஏனோ இன்றுவரை இவருக்கு கிடைக்காமலேயே போய்விட்டது.
அந்த ஆதங்கத்தோடுதான் இதை எழுத வேண்டியிருக்கிறது.
காமெடி நடிகராக மட்டுமே 2k கிட்ஸ்களுக்கு தெரிந்த ஆர். சுந்தர்ராஜன் பல வெற்றிப் படங்களையும் ரஜினி, விஜய் நடித்த படங்களையும் இயக்கியவர் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் தமிழ் சினிமாவை புரட்டிப் போடும் படங்களையோ கதைகளையோ படமாக்கிவிடவில்லை என்றாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்றும் மறக்க முடியாத பாடல்களையும் காமெடிகளையும் தந்திருக்கிறார்.
சுந்தர்ராஜனும் இயக்குநர் பாக்கியராஜூம் ஒரே ஊர்க்காரர்கள். பால்ய நண்பர்கள். பாக்கியராஜ்க்கு பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சுந்தர்ராஜனுக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை. அதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை.
பாக்கியராஜூடன் இணைந்து சினிமா ஸ்கிரிப்ட்கள் எழுதிய (ஏட்டுக் கல்வி) அனுபவத்தை மட்டுமே வைத்துக் கொண்டு நேரடியாக இயக்குநர் ஆக கிளம்பியவர்தான் ஆர்.சுந்தர்ராஜன்.
‘பயணங்கள் முடிவதில்லை‘ படத்தின் கதையைத்தான் அப்போது எம்எல்ஏவாக இருந்த கோவை தம்பியிடம் சொல்லி அவரைத் தயாரிப்பாளராக்கி இருக்கிறார். படம் சூப்பர் ஹிட்.
பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்கியராஜ் என்று அன்றைக்கு கொடிகட்டிப் பறந்த ‘பா‘ வரிசை இயக்குநர்களுக்கு சவால்விட்டு சாதித்துக் காட்டியவர்தான் ஆர்.சுந்தர்ராஜன்.
இளையராஜா இசையில் அந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப்பாடல்களும் ‘இளைய நிலா‘வாக என்னென்றும் ரசிகர்களின் காதுகளில் ‘பொழிந்து‘ கொண்டே இருக்கும்.
தமிழில் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே‘ படத்தின் மூலம் அறிமுகமான மோகனுக்கு ‘பயணங்கள் முடிவதில்லை‘ 2வது படம். பூர்ணிமாவுக்கு முதல் தமிழ்ப் படம். மோகன் பாடகராக நடித்திருப்பார். படத்தின் மிகப்பெரிய வெற்றியால் தொடர்ந்து சிங்கர் கேரக்டரில் சிக்கி சாதாரண மோகன் மைக் மோகனாகவே ஆகிவிட்டார்.
‘சென்னை மாநகரிலே‘ என்று கவுண்டமணி கத்திப் பேசியபடி இந்தப் படத்தில் தோன்றுவார். இந்தப் படத்துக்குப் பின்புதான் சவுண்ட் விட்டுப் பேசும் மானரிஸத்தை கவுண்டமணி பின்பற்றத் தொடங்கியிருக்கிறார். ஒரு முறை டான்ஸ் மாஸ்டர் சுந்தரமிடம் (பிரபுதேவாவின் தந்தை) பேசிக் கொண்டிருந்த ஆர்.சுந்தர்ராஜன், ‘உனக்கு என்னய்யா, 3 குரங்கு குட்டிகளை பெத்துப்போட்டிருக்கே. ஆடறா ராஜா ஆடறா ராஜானு ஊருக்குள்ள வித்தை காட்டியே பொழச்சுப்ப’ என்று சொல்ல, சுந்தரம் மாஸ்டரே விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்.
ஒரு படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு. சூட்டிங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, நடிகர் நடிகைகள் நடிக்க தயாராகிக் கொண்டிருக்க, படத்தின் தயாரிப்பாளர், சுந்தர்ராஜனிடம் தயங்கித் தயங்கி ‘இன்னும் படத்தின் கதையை எங்களிடம் சொல்லவில்லை? இப்போதவாது சொல்றீங்களா?‘ என்று கேட்டிருக்கிறார். அதற்கு சுந்தர்ராஜன், ‘கதை வச்சிருந்தா சொல்லியிருக்க மாட்டேனா? இனிமேதான்யோசிக்கணும்‘ என்று சொல்லி இருக்கிறார். இதுதான் சுந்தர்ராஜன். இந்த நக்கலையும் நையாண்டியையும் அவரது முதல் பாடத்தில் நடித்த கவுண்டமணி சுவீகரம் செய்து கொண்டார்.
சுந்தர்ராஜன் இயக்கிய ‘வைதேகி காத்திருந்தாள்‘ படத்திலிருந்து தான் அதுவரையில் தனித்தனியாக நடித்துக் கொண்டிருந்த செந்தில்- கவுண்டமணி என்ற சூப்பர் ஹிட் நகைச்சுவை ஜோடி உருவானது. இன்று வரை மீம் கிரியேட்டர்களால் பயன்படுத்தப்படும் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா‘,‘பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’, ‘கூடை வச்சிருக்கறவங்களுக்கெல்லாம் பெட்ரமாக்ஸ் லைட் கிடையாது’ போன்ற கவுண்டமணியின் வரலாற்று சிரிப்பு மிக்க பஞ்ச் லைன்கள் இடம்பெற்றதும் இந்தப்படத்தில்தான்.
எப்போதுமே, சுந்தர்ராஜன் படங்களில் வரும் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிவிடும். அதற்கு அவரது இசை ரசனையே காரணம். அவருக்கு முந்திய தலைமுறை இசையமைப்பாளரான கேவி மகாதேவனை இசையில் தன் 2வது படத்தையும் (அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை), அதே போல் இளையராஜா வருகைக்குப்பின் அவ்வளவாக வாய்ப்பு இல்லாமல் இருந்த எம்எஸ் விஸ்வநாதன் இசையில் 3வது படத்தையும் (சரணாலயம்) இயக்கினார். கேவி மகாதேவன், எம்எஸ்வி, இளையராஜா, தேவா போன்ற இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய ஒரே இயக்குநர் இவராகத் தான் இருக்க முடியும்!
இளையராஜா மெட்டமைத்து வைத்திருந்த பாடல்களுக்காகவே இவர் எழுதி இயக்கிய படம் தான், ‘வைதேகி காத்திருந்தாள்‘. அந்தளவுக்கு அவர் திரை இசையை காதலித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை தயாரிப்பதாக இருந்த ஏவிஎம் நிறுவனம் கூட விஜயகாந்த் நடிப்பதாக இருந்தால் படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக சொல்லி இவருக்கு கொடுத்த அட்வான்ஸை திரும்ப கேட்டிருக்கிறார்கள். அதன் பின்பு பஞ்சு அருணாசலம் தயாரித்த ‘வைதேகி காத்திருந்தாள்‘ அடைந்த வெற்றியை உலகம் அறியும். அதுவரை வெறும் ஆக்சன் ஹீரோவாக அறியப்பட்ட விஜயகாந்தினால் நடிப்புக்குத் தீனி போடும் கேரக்டர்கள் பண்ண முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய படம், ‘வைதேகி காத்திருந்தாள்‘.
ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘அம்மன் கோயில் கிழக்காலே‘ விஜயகாந்த் கேரியரில் மற்றொரு முக்கியமான படம்.
இவரது இசை ரசனைக்கு இன்னுமொரு சாட்சி. ‘மெல்ல திறந்தது கதவு‘ படத்தில் மிகப்பெரிய இசை சாம்ராஜ்ஜியங்களான எம்எஸ் விஸ்வநாதனும் இளையராஜாவும் இணைந்து இசையமைத்திருப்பார்கள். இன்றும் தமிழர்களை இரவின் மடியில் தாலாட்டி தூங்க வைப்பதில் இப் படத்தில் இடம்பெற்ற ‘ஊருசனம் தூங்கியிருச்சு‘க்கும், ‘குழலூதம் கண்ண‘னுக்கும் பெறும் பங்கு உண்டு.
ஆர். சுந்தர்ராஜனிடம் கொடுத்த அட்வான்ஸை திரும்பிக் கேட்ட அதே ஏவிஎம் நிறுவனம்தான் மெ.தி.கதவு படத்தைத் தயாரித்தது. அந்த காலகட்டத்தில் தவிர்க்க முடியாத இயக்குநராக இவர் வலம் வந்ததுதான் அதற்க்குக் காரணம்.
இளையராஜா தயாரித்து இசையமைத்த ரஜினி நடித்த ‘ராஜாதி ராஜா ‘ படத்தை இவர்தான் இயக்கினார். எப்போதும் இளையராஜாவின் ‘குட்புக்‘கில் இவருக்கென்று தனியிடம் இடம் உண்டு. ‘ராஜாதி ராஜா ‘ படமும் சூப்பர் ஹிட்.
இவர் இயக்கிய ‘திருமதி பழனிச்சாமி‘ படத்துக்குப் பின்புதான், சத்யராஜ்-கவுண்டமணி காமினேஷன் பிரபலமானது.
கேவி மகாதேவன், எம்எஸ்வி, இளையராஜா என்று பயணித்த ஆர்.சுந்தர்ராஜன், தேனிசைத் தென்றல் தேவாவையும் விட்டு வைக்கவில்லை.
இவரது ‘என் ஆசை மச்சான்‘, ‘சீதனம்‘, ‘காலமெல்லாம் காத்திருப்பேன்‘ படங்களுக்கு தேவாதான் இசை. ‘காலமெல்லாம் காத்திருப்பேன்‘ படத்தின் ஹீரோ விஜய். படம் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை.
அதன்பின்பு, ஆர்.சுந்தர்ராஜன் முழு நேர நடிகர் ஆகிவிட்டார். இவர் படங்களில் நான் கவனித்த ஒரு முக்கியமான விஷயம். படத்தில் வரும் எல்லா frame மும் கண்ணாடியை துடைத்து வைத்தது போல பளிச்சென்று இருக்கும். ‘ராஜாதி ராஜா‘ படத்தில் இருக்கும் அழகான ரஜினியை வேறுபடங்களில் நாம் பாத்திருக்க மாட்டோம். ‘அம்மன் கோயில் கிழக்காலே‘ படத்தில் விஜயகாந்த் அப்படியொரு அழகுடன் இருப்பார். நாயகன், நாயகிகள் இவர் படங்களில் மட்டும் கூடுதல் அழகுடன் தெரிவதன் ரகசியம் புரியவில்லை. இல்லை எனக்கு மட்டும்தான் அப்படி தோன்றுகிறதா என்றும் தெரியவில்லை.
கவுண்டமணி-செந்தில், கவுண்டமணி-சத்யராஜ் காமெடியில் நம்மையெல்லாம் சிரிக்க வைத்த ஆர். சுந்தர்ராஜன் இப்பொழுது உயிருடன் இல்லைஎன்ற வதந்தியோடு இன்னும் உலவிக்கொண்டிருக்கிறார்
‘ராசாவே உன்னக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது…‘
Like
Comment
Share

No comments:

Post a Comment