Wednesday 9 June 2021

RAJA PARVAI -REVIEW

 


RAJA PARVAI -REVIEW


`ராஜபார்வை' கமலின் முதல் ரிஸ்க் தெரியும்; ஆனால் இந்தக் குறியீடுகள் தெரியுமா?

சுரேஷ் கண்ணன்


`ராஜபார்வை' கமலின் முதல் ரிஸ்க் தெரியும்; ஆனால் இந்தக் குறியீடுகள் தெரியுமா?

சினிமாத் துறையில் கமல்ஹாசன் செய்த பல பரிசோதனை முயற்சிகள், முன்னோடியான ஆக்கங்கள் போன்றவற்றை இன்று நாம் வியக்கிறோம் அல்லவா? ஆனால் இதன் குறிப்பிடத்தக்க முதல் மைல் கல் என்று ‘ராஜ பார்வையை’ சொல்லலாம்.

இது கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ‘ஹாசன் பிரதர்ஸ்’ தயாரித்த முதல் திரைப்படம். (பின்பு இந்த நிறுவனத்தின் பெயர் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலாக மாறியது).

கமல் நடன உதவி இயக்குநராக திரைப்படத்துறையில் நுழைந்த விஷயம் நமக்குத் தெரியும். அவர் மெல்ல மெல்ல நடிகராக முன்னேறிய சமயத்தில் இயக்குநர் பாலசந்தரின் பார்வையில் பட்டு மேலதிகமாக பிரகாசிக்கத் தொடங்கினார். ஆனால் உள்ளுக்குள் அவருக்கு ஓர் ஆசை இருந்தது. அது திரைப்பட இயக்குநராவது.

ஆனால் அப்போது அவரது விருப்பத்திற்கு முட்டுக்கட்டையிட்டார் பாலசந்தர். “நீ எப்போது வேண்டுமானாலும் இயக்குநராகலாம். ஆனால் நடிகன் என்கிற வாய்ப்பைத் தவறவிட்டால் பின்பு கிடைக்காது. பொருளாதார ரீதியாக உன்னை நிலைநிறுத்திக்கொண்ட பிறகு உன் விருப்பமான திரைப்படங்களை உருவாக்கு” என்று மிக முக்கியமானதோர் அறிவுரையைத் தந்தார் பாலசந்தர்.

குருநாதரின் பேச்சைத் தட்டாமல் கேட்டதால் கமல் என்கிற அற்புதமான நடிகர் நமக்குக் கிடைத்தார். அல்லாமல் அன்றே அவர் இயக்குநராக முயற்சி செய்திருந்தால் ஒருவேளை அப்போதே காணாமல் போயிருக்கக்கூடும்.




இளம் வயதிலேயே கமல்ஹாசனுக்கு உலக சினிமாக்களின் பரிச்சயம் இருந்தது. ஆர்.சி. சக்தி, சந்தானபாரதி என்று கமலுக்கு நெருக்கமாக இருந்த நண்பர் குழு ‘சாம்கோ ஹோட்டலில்’ அமர்ந்து தாம் கண்ட சிறந்த அயல் திரைப்படங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். பாலசந்தரிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்த அனந்து உலக சினிமாவில் தனக்கிருந்த ஆர்வத்தைக் கமலிடம் அவ்வப்போது கடத்திக்கொண்டிருப்பார்.

கோடார்ட், ஃபெலினி என்று மிகச்சிறந்த ஐரோப்பிய இயக்குநர்களின் படைப்புகளை கமல் கண்டிருப்பதும் அதைப் பற்றி விவாதிப்பதும் சுஜாதாவின் பத்தி எழுத்துக்களின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. எனவே அவை போன்ற நல்ல சினிமாக்களின் குறைந்த பட்ச முயற்சியையாவது தமிழில் நிகழ்த்த வேண்டும் என்கிற தணியாத ஆர்வம் கமலுக்குள் கனன்று கொண்டிருந்திருக்க வேண்டும்.

இப்படியோர் உள்ளார்ந்த விருப்பத்தை ஒருபுறம் உள்ளே வைத்துக்கொண்டு மரத்தைச் சுற்றி டூயட் பாடும் சாதாரணப் பாத்திரங்களில் நடிப்பதென்பது ஒரு கலைஞனுக்கு மனஉளைச்சலைத் தரும் விஷயம். சினிமாவில் தன் இருப்பை வலுவாக நிலைநிறுத்திக் கொள்வதற்காக கமல் செய்த சமரசம் என்று இதைச் சொல்லலாம்.

ராஜபார்வை - கமலின் 100வது படம்!




உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்த நெருப்பு முதல் கனலாக வெளிவருவதற்கு 99 திரைப்படங்கள் வரை கமல் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆம். ‘ராஜபார்வை’ கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்த நூறாவது திரைப்படம்.

பார்வையற்ற ஓர் இசைக்கலைஞன், ஓர் அழகான பெண்ணுடன் காதலில் விழுவதும் அவர்களின் திருமணத்தில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களும்தான் இந்தத் திரைப்படம். இதைக் கலைப்படம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்துகொண்டிருந்த பெரும்பாலான வெகுசன சினிமாக்களிலிருந்து கணிசமான அளவு விலகி நின்ற மாற்று முயற்சியாக இருந்தது.

பொதுவாக தமிழ் சினிமாவின் காதலர்களுக்குத் தடையாக இருப்பது சாதி அல்லது வர்க்கமாக இருக்கும். ஆனால் இதில் நாயகனுக்கு இருக்கும் குறைபாடு தடையாக இருந்தது.

அதுவரையான இந்திய சினிமாக்களில் பொதுவாக கண் பார்வையற்ற கதாபாத்திரம் என்றால் கையில் குச்சியைக் கொடுத்து கறுப்புக்கண்ணாடியை மாட்டி விட்டு விடுவார்கள். ஆனால் இந்தத் திரைப்படத்தில் கறுப்புக் கண்ணாடி அணியாமல் பார்வையற்றவர்களின் உடல்மொழியைச் சிறப்பாக வெளிப்படுத்திருந்தார் கமல்.

பொதுவாக கமல் சிறந்த திரைப்படத்தை உருவாக்கினாலும் அதில் எந்தவொரு ஹாலிவுட் திரைப்படத்தின் வாசனையாவது இருக்கிறதா என்று திரை ஆர்வலர்கள் தேடுவது உண்டு. ‘ராஜ பார்வை'யும் இதற்கு விதிவிலக்கில்லை.

ஆம். 1972-ல் வெளிவந்த ‘Butterflies Are Free’ என்கிற அமெரிக்கத் திரைப்படத்தின் அழுத்தமான சாயலை ராஜபார்வை கொண்டிருந்தது. இதன் க்ளைமாக்ஸ் காட்சி, 1967-ல் வெளிவந்த ‘The Graduate’ என்கிற திரைப்படத்தின் க்ளைமாக்ஸின் அப்பட்டமான பாதிப்பில் உருவாக்கப்பட்டிருந்தது.

`Butterflies Are Free’

இந்தத் திரைப்படமானது, லியோனார்ட் கெர்ஷே என்கிற அமெரிக்க நாடக ஆசிரியர் எழுதிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

டான் என்கிற கண் பார்வையற்ற இளைஞன், தன்னை மிகவும் கட்டுப்படுத்தும் தாயிடமிருந்து விலகி ஒரு விடுதியில் தங்கியிருக்கிறான். அவன் ஒரு கிட்டார் வாத்தியக்காரன். அங்கு பக்கத்து அறைக்குக் குடிவருகிறாள் ஜில் என்கிற இளம்பெண். ஜில் ஏறத்தாழ ஒரு ஹிப்பி வாழ்க்கையை வாழ்பவள். திருமணமாகி ஏழாம் நாளிலேயே விவாகரத்து பெற்றவள். சுதந்திரமாக வாழும் எண்ணத்தை உடையவள்.


டானுக்கும் ஜில்லுக்கும் குறைந்த நாள்களிலேயே மிக ஆழமான நட்பு உருவாகிறது. தனிமையில் உழலும் டான், ஜில்லின் களங்கமற்ற அன்பில் கரைந்து போகிறான். டானின் தாயின் வருகை இவர்களின் உறவில் ஒரு புயலை வீசுகிறது. ஜில் தன் சுபாவப்படி பிரிந்து போகத் தயாராக இருக்கிறாள். டான் மனதளவில் உடைந்து போகிறான். பிறகு என்னவாகிறது என்பதை நெகிழ்வுபூர்வமாக விவரிக்கிறது இறுதிக்காட்சி.

Butterflies Are Free (1972)

நாடகத்தை அடிப்படையாகக்கொண்ட திரைப்படம் என்பதால் பெரும்பாலான காட்சிகள் உள்ளரங்கிலேயே நடைபெறும். டானாக எட்வர்ட் ஆல்பர்ட்டும் ஜில் ஆக கோல்டி ஹானும் மிகச் சிறந்த நடிப்பைத் தந்திருந்தார்கள். டானின் தாயாக நடித்திருந்த எலைன் ஹெக்கார்டின் நடிப்பும் குறிப்பிடத்தகுந்தது. இவர் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார்.

ராஜபார்வையின் பிரதான பகுதி, இந்த அமெரிக்கத் திரைப்படத்தின் தூண்டுதலிலிருந்து உருவாகியிருக்கலாம் என்பதற்குப் பல காட்சிகள் சாட்சியமாக உள்ளன.

ராஜபார்வை திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க பல அம்சங்கள் உள்ளன. படத்தின் தொடக்கமே ஒரு சேஸிங் காட்சிதான். கெளபாய் உடை அணிந்த ஒருவன் குதிரையிலிருந்து தாவி ஒரு வண்டிக்குள் ஏறுகிறான். பின்னணியில் டிரம்ஸ்ஸும் வயலின்களும் பரபரப்பான இசையைத் தருகின்றன. வண்டியில் வீரமுடன் தாவி ஏறியவன், பயணிகளின் கையால் அடிவாங்கி பரிதாபமாக விழுகிறான்.

திரை அப்படியே பின்னுக்குச் செல்லும் போது அது ஒரு ரீ-ரெக்கார்டிங் காட்சி என்பதை அறிகிறோம். இசைக்கலைஞர்கள் அந்தக் காட்சியின் மிகைத்தன்மையைக் கண்டு சிரிக்கிறார்கள். இது வெகுசன சினிமாக்களின் மீது கமலுக்கு இருந்த உள்ளார்ந்த கிண்டலின் வெளிப்பாடு என்று கருதலாம்.

இசையமைப்பாளாக ஜி.வெங்கடேஷ் தோன்றி டிரம்ஸ் வாசிப்பவரிடம் (அபஸ்வரம் ராம்ஜி) சில திருத்தங்களைச் சொல்கிறார்.

அனைத்து இசைக்கலைஞர்களின் முன்னாலும் இசைக்குறிப்பு எழுதப்பட்ட தாள் இருக்க, ஒருவரின் முன்னால் மட்டும் அது இல்லை. நாயகனுக்குக் கண்பார்வையில்லை என்கிற செய்தி ‘நச்’சென்று பார்வையாளர்களுக்கு ஒரு சிறு அதிர்ச்சியுடன் சொல்லப்படுகிறது.

டிரம்ஸ் ஒலிக்க பின்னணியில் டைட்டில் ஒடுகிறது. எந்தெந்த துறையை யார் கையாண்டார்கள் என்கிற குறிப்புடன் டைட்டில் காட்டப்படுவதுதான் அதுவரையான வழக்கம். (இன்றும் கூட). ஆனால் முதலிலேயே இந்த ஒழுங்கு கலைக்கப்படுகிறது. இயக்குநர், ஒளிப்பதிவாளர் என்று எந்தத் துணைக்குறிப்பும் இல்லாமல் பெயர்கள் மட்டும் வரிசையாக ஓடுகின்றன. நாம்தான் யூகித்துக் கொள்ள வேண்டும்.

பார்வையற்ற நாயகனைக் கொண்ட திரைப்படத்தின் தலைப்பு அதற்கு முரணாக ‘ராஜபார்வை’ என்று வைக்கப்பட்டிருப்பதே சுவாரஸ்யம். படத்தின் உள்ளே இதற்கொரு லாஜிக் சொல்லப்பட்டிருக்கிறது. நீதி தேவதையின் கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டிருப்பதன் காரணமாக எப்படி பாரபட்சமின்றி நீதி வழங்கப்படுகிறதோ, பார்வையற்றவர்களும் அப்படியே மற்றவர்களை சமமாக ‘பார்க்கிறார்களாம்’.

இதன் casting வரிசையும் சுவாரஸ்யமானது. மிக அழகான கண்களைக்கொண்டிருக்கும் மாதவியை இதன் நாயகியாக இட்டிருப்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது. பல ஃபிரேம்களில் இவருடைய கண்களின் அழகு மனதைக் கொள்ளை கொள்கிறது.

எல்.வி.பிரசாத் – இந்திய சினிமாத்துறையில் ஒரு முக்கியமான பெயர். ‘தாதாசாகிப் பால்கே விருது’ பெற்ற இவருக்கு தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், ஸ்டூடியோ உரிமையாளர் என்று பல முகங்கள் உண்டு. குறிப்பாக தெலுங்கு சினிமாவின் முக்கியமான அடையாளம்.

இவர் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும் பல ஆண்டுகள் கழித்து ‘ராஜபார்வைக்காக’ அணுகிய போது நடிக்கத் தயங்கினாராம். பிறகு, ‘ஒரு நாள் மட்டும் நடிக்கிறேன். அது எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்த்த பின்புதான் நடிப்பதைத் தொடர்வேன்’ என்று நிபந்தனை விதித்தாராம்.

இந்தத் திரைப்படத்தில் குறும்பும் நகைச்சுவையும் பேத்தியின் காதலுக்கு ரகசியமாக உதவும் தாத்தாவாக இவரின் பாத்திரம் சுவாரஸ்யமானது. வயதை மறக்க வைத்த துள்ளலுடன் இவர் நடித்திருந்தது சிறப்பாக இருந்தது.

ராஜபார்வை அதே சமயத்தில் தெலுங்கிலும் தயாராகிக் கொண்டிருந்ததால், தெலுங்கு ரசிகர்களுக்காக இவரின் பாத்திரம் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று யூகம். தங்களுக்குப் பரிச்சயமான ஒரு முகம் இருந்தால் இதர மாநிலங்களின் ரசிகர்கள் அந்நியமாக உணர மாட்டார்கள். பிற்காலத்தில் மிகவும் பரவலாக உபயோகிக்கப்பட்ட இந்த வணிக உத்தியை முதலில் பயன்படுத்தியவராக கமலைச் சொல்லலாம்.

நாயகனின் சித்தியாக K. P. A. C.லலிதா அட்டகாசமாக நடித்திருந்தார். நாயகனிடமுள்ள சொத்துதான் இவரது நோக்கம் என்றாலும் அதை மறைத்து தேனொழுக பேசி அன்பு காட்டும் பாத்திரத்தை மிகச் சிறப்பாக கையாண்டிருந்தார். மலையாள ரசிகர்களுக்காக இவரின் பாத்திரம் சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் இதர தென்னிந்திய மொழிகளில் கமல் ஏற்கெனவே பார்வையாளர்களை கணிசமாக சம்பாதித்து வைத்திருந்தார் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

இது தவிர கமலின் சகோதரர்களான சந்திரஹாசன், சாருஹாசனும் சிறிய பாத்திரங்களில் தோன்றியிருந்தார்கள். சந்தானபாரதி, கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வி.கே.ராமசாமி, சித்ரா, டெல்லி கணேஷ் ஆகியோரும் வந்து போனார்கள்.

கமலின் நண்பனாக நடித்திருந்த ஒய்.ஜி.மகேந்திரன் தனது நகைச்சுவையின் மூலம் காட்சிகளின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தினார். இவர் கமலுக்கு முகச்சவரம் செய்து கொண்டே.. ‘அப்படின்னா.. நானெல்லாம் எதுக்கு இருக்கேன்.. செரைக்கறதுக்கா..?” என்று தன்னிச்சையாகக் கேட்டு விடும் காட்சி நகைப்புக்குரியது.

‘ரிடிகுலஸ்.. ரிடிகுலஸ்’.. என்று ஹைப்பர் டென்ஷன் ஆசாமியாக மகளின் காதலை எதிர்த்து அவ்வப்போது வெடிக்கும் தந்தை பாத்திரத்தை தனுஷ்கோடி ஏற்றிருந்தார்.

பார்வையற்றவர்களின் நடைமுறை வாழ்வியல் இந்தப் படத்தின் காட்சிகளில் மிக அருமையாகச் சொல்லப்பட்டிருக்கும்.

இந்தத் திரைப்படம் உண்மையிலேயே ‘ராஜ பார்வை’யைப் பெற்றிருந்தது எனலாம். ஆம். இதற்கு இசை இளையராஜா.

பார்வையற்றோர்களின் பள்ளியில் சிறார்கள் பாடும் மிக நெகிழ்வான வரிகளில் தொடங்கி அப்படியே அதை ரொமான்ஸின் உச்சிக்குக் கொண்டு செல்ல ராஜாவால்தான் முடியும். ‘அந்திமழை பொழிகிறது’ என்னும், இன்றைக்கும் தன் இளமையை இழக்காத பாடல்தான் அது.

இளையராஜா + வைரமுத்து என்னும் புதிய காவியக்கூட்டணி பட்டையைக் கிளப்ப ஆரம்பித்திருந்த நேரம். ‘சிப்பியில் தப்பிய நித்திளமே… ரகசிய ராத்திரி புத்தகமே’ என்று வார்த்தைகளில் மதுவைக் கலந்து கிறக்கத்தை ஏற்படுத்தினார் வைரமுத்து. எஸ்.பி.பி & எஸ்.ஜானகி என்னும் கூட்டணி இந்தப் பாடலை அதன் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது.

சோகமான பாடலின் இடையே உற்சாகம் கொப்பளிக்கும் இடையிசையை உறுத்தல் இல்லாமல் மிக ஒத்திசைவுடன் கலக்கும் லாகவம் ராஜாவிற்கே உரியது. ‘விழியோரத்துக் கனவும் வந்து’ என்கிற பாடலில் இந்த மாயாஜாலம் நிகழ்ந்திருக்கும். ‘விடியும் எனும் பொழுதில் வந்து இருள் மூடிடுதே’ என்கிற மிக அருமையான வரியுடன் கூடிய இந்தப் பாடலை எழுதியிருந்தவர் கங்கை அமரன். கமல்ஹாசன் மற்றும் சசிரேகா இந்தப் பாடலை உருக்கமாகப் பாடியிருந்தார்கள். சசிரேகாவின் மிக இயல்பான குரல் இந்தப் பாடலுக்குத் தனி அடையாளத்தைக் கொடுத்தது.

‘அழகே அழகு’ என்னும் பாடலை எழுதியிருந்தவர் கண்ணதாசன். பார்வையற்ற நாயகன், தன் இணையின் அழகை தொட்டுத் தடவி விவரிக்கும் பாடல். ‘ஒரு அங்கம் கைகள் அறியாதது’ என்பதில் கவிஞரின் குறும்பு வெளிப்பட்டிருக்கும். ஜேசுதாஸ் இந்தப் பாடலை மிக அருமையாகப் பாடியிருந்தார்.

இந்தித் திரைப்படங்களில் பணிபுரிந்துகொண்டிருந்த பரூன் முகர்ஜி என்கிற வங்காளக்காரர்தான் இதன் ஒளிப்பதிவு. ‘அந்திமழை பொழிகிறது’ என்கிற மாண்டேஜ் பாடலில் ஒளிப்பதிவு பிரமாதமாக அமைந்திருக்கும். மரத்தில் சாய்ந்து நின்றிருக்கும் கமலின் ஓவியம் அப்படியே மெல்ல மெல்ல காட்சியாய் மாறுவதை பிற்காலத்திய கிராஃபிக்ஸ் ஜாலங்களின் முன்னோடி பரிசோதனை எனலாம்.

இதைப் போலவே மாதவி, தன் காதலைச் சந்திப்பதற்காக மிக பரபரப்பாக காத்துக்கொண்டிருக்கும் போது அவருக்கு மட்டும் நேரம் மிக மிக மெதுவாக ஓடுவது போன்று சித்திரிக்கப்பட்டிருக்கும் காட்சிக் கோர்வை சுவாரஸ்யமானது. ஒரே ஃபிரேமில் மாதவியின் அசைவு இயல்பாக அமைந்திருக்க, மற்றவர்களின் அசைவு ஸ்லோ மோஷனில் வருவது ஒளிப்பதிவாளரின் திறமைக்குச் சான்று.

கமலின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாசராவ் இந்தத் திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருந்தார். கமல்ஹாசனோடு இணைந்து சந்தானபாரதி, அனந்து, பாலகுமாரன் ஆகியோரும் வசனம் எழுதுவதில் தங்களின் பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

இப்படியொரு திறமைசாலிகளின் கூட்டணியால் உருவானதின் காரணமாக, இன்றைக்கும் ‘ராஜபார்வை’ தன் இளமை உற்சாகத்தை இழக்கவில்லை என்பதை இப்போதைய தலைமுறையினர் இந்தத் திரைப்படத்தைப் பார்ப்பதின் மூலம் உணர முடியும்.

இந்தப் படம் பார்த்த உங்களின் முதல் அனுபவத்தையும் இந்தப் படம் குறித்த உங்களின் கருத்தையும் கீழே பதிவு செய்யுங்கள்.


No comments:

Post a Comment