Thursday 3 June 2021

WORLD CYCLE DAY JUNE 3

 

WORLD CYCLE DAY JUNE 3



இந்த ஊரடங்கில் தத்தித் தத்தி ஒரு சிறுமி வீதியில் மிதிவண்டி ஓட்டிப் பழகுகிறார். அதைக் காணும்போது, பால்யகால மிதிவண்டி நாள்கள் நினைவுக்கு வருகிறது.
'சைக்கிள் என்பது ஓர் இரும்புக் கழுதை' என்பார், மேலாண்மை பொன்னுசாமி. அத்தனை சுமைகளை அது சுமக்கும். இன்றைக்கு வீட்டில் கார் இருப்பது எப்படி கெளரவத்தின் அடையாளமோ அதுபோல் அன்று வீட்டில் சைக்கிள் இருப்பதும். அப்பாவின் சைக்கிளை ஆசை தீர கொஞ்சிய நாள்கள் அவை. ஆதார் கார்டு இல்லாதது மட்டும்தான் குறை... மற்றபடி குடும்பத்தில் ஒன்றாகப் பார்க்கப்பட்ட காலம்.
#வாடகை சைக்கிள்
90-களில் சைக்கிள் ஓட்டிப் பழகிய அத்தனை பேருமே வாடகை சைக்கிள் வாடிக்கையாளர்களே. ஒருமணி நேரத்திற்கு ஒரு ரூபாய், அரை மணிக்கு ஐம்பது காசு என நேரத்தை வீணாக்காமல் செலவிட்ட நிமிடங்கள் அவை. கடைசி 10 நிமிஷம் இருக்கும்போது 'அருணாச்சலம்' ரஜினி சொன்னதுபோல 10 நிமிஷத்துல 10 சுற்று வந்து சரியான நேரத்துக்கு கடைமுன் நிறுத்துவது ஓட்டப்பந்தயத்தில் கடைசிக் கோட்டைத் தொட்டு வெற்றியடைந்தது போல.

வாடகை சைக்கிளில் மஞ்சள், சிவப்பு, பச்சை என இருக்கும். கேரியர் இருப்பது, இல்லாதது, எது ராசியானது எனச் சுழி பார்த்து மாட்டை வாங்குவது போலத்தான் வாடகை சைக்கிளை வாடகைக்கு எடுப்பதும். இந்தச் சின்ன சைக்கிள் ஓட்டிப் பழகுவது பத்து வயதுக்கு உண்டான வளர்ச்சியை அடைவதுபோல அப்போது.
#பெரிய சைக்கிள் ஓட்டுவது
கீழே விழுந்தாதான் சைக்கிள் ஓட்டிப் பழக முடியும் என்பது மிதிவண்டி ஓட்டுதலில் பாலபாடம். சென்டர் ஸ்டாண்டு எடுத்ததும் கட்டுக்கடங்காத குதிரை நம் கையில் சிக்கியது போல. அதை முழுபலத்தையும் பிரயோகித்துத் தடுத்து நிறுத்தி, நம் கட்டுக்குள் கொண்டுவருவோம்.
முதலில் தள்ளிக்கொண்டு போவது, பெடலில் ஒரிரு மணித்துளிகள் நிற்பது, டக் அடிப்பது அப்படியே ஓரிருமுறை விழுந்து எழுந்தால் குரங்கு பெடல் ஓட்டிவிடலாம். இதுதான் சைக்கிள் ஓட்டுவதற்கான எல்.எல்.ஆர் போடுவது போன்றது.
பிறகு, காலுக்கு சிறகு முளைத்து, பார் கம்பியில் பாதம் தூக்கி போட்டும் போடாமல் இருப்பது, குழந்தை குப்புற விழுவது போல் குதூகலமானது. அப்படியே அமைதிப்படை அமாவாசை மாதிரி சீட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் உட்கார்ந்து நாகராஜ சோழன் ஆகிவிடுவோம்.
#டயர் வண்டி


ஓட்டுதல் சைக்கிள் ஓட்டாத காலங்களில் சைக்கிள் டயர் ஓட்டுவதும் பண்டைய சிறுவர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று. 90-களில் சைக்கிள் டயர் ஓட்டாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். வீட்டுக்கொரு டயர் கூரைமேலேயோ, ஆட்டுக் கல்லிடையோ கிடக்கும். பார்க்கும்போதெல்லாம், 'எங்காவது கூட்டிச்செல்' என புதுமனைவி அழைப்பது போல் இருக்கும்.
டயர் வண்டிகளில் பல ரகம் உண்டு!
நாய் வாலை நிமிர்த்துவது போல சில டயர்களை எவ்வளவு நிமிர்த்தினாலும் அவை கோணல் விழுந்தே ஓடும். சில புது டயர்கள், பைக் டயர்கள், ரிம் டயர்கள் என வகை வகையாய் இருக்கும். இவை ஒட்டுமொத்தமாக ஓரிடத்திலிருந்து போட்டிக்குக் கிளம்ப காத்திருக்கும். பாகுபலி படை போல ஒட்டுமொத்தமும் ஒரே நேரத்தில் வீதியை நிறைத்து ஓடுவது கண் கொள்ளாக்காட்சி. இதற்கான ஸ்டியரிங் ஒரு அடிக்குச்சி. இதை வலது கையிலும், எப்போதும் கழன்று விழத் தயாராய் இருக்கும் டவுசரை இடது கையிலும் பிடித்துக்கொண்டு ஓடுவோம்.
கருவேப்பிலை வாங்க கடைக்குப் போவது, ரேஷன் கடை திறந்துள்ளதா எனப் பார்ப்பது என சகல வேலைக்கும் அந்த டயரே துணை.
#சைக்கிள் பராமரிப்பு
சைக்கிளைப் பராமரிக்கும்போது பியூட்டீஷியனாகவே மாறிவிடுவோம். ஹேண்டில் பார் கைப்பிடி உறை, சீட்டுக்கு முன்னே இருக்கும் பார் பகுதிக்கு ஒரு கவர், சீட்டுக்கு குஷன் கவர், இரண்டு வீல்களுக்கும் நடுவே கலர்கலராய் வளையம், சின்னச் சின்ன மணிகளை, வீல் ஸ்போக்ஸ் கம்பிகளுக்குள் வரிசையாகக் கோத்துவிடுவது என மாட்டுப்பொங்கலுக்கு மாட்டை அலங்கரிப்பது போல அழகுபடுத்துவோம்.
சுத்தம் என்பது நமக்கு சுத்தமான சைக்கிள்தான். அந்த வண்டியைத் துடைப்பது, தேங்காய் எண்ணெய் தொட்டு பாலீஷ் போடுவதும், உப்புத்தாள் கொண்டு வீல்கள் இரண்டையும் தேய்த்து பளிச்சென்று ஆக்குவதும் பிரதான வேலைகள்.
* சைக்கிள் செயின் கழன்றுவிட்டால் மாட்டிவிடுவதற்கு சில தொழில்நுட்ப வல்லுநர்கள் இருந்தார்கள்.
* முழு உடல் பரிசோதனை போலத்தான் சைக்கிள் ஓவராய்லிங் செய்வதும். ஐசியு-வில் இருந்து வந்தவரைப் போல ஓவராய்லிங் செய்த சைக்கிளை எல்லாரும் வந்து பார்த்துச்செல்வார்கள்
* எடிசன் பல்பு கண்டுபிடிச்சப்ப எவ்வளவு சந்தோஷப்பட்டாரோ அவ்வளவு மகிழ்ச்சி, டைனமோவில் லைட் எரிவதைப் பார்ப்பது
* தங்கமணி சவுண்டு சர்வீஸ், கத்தரிகளுக்கு சாணை பிடிக்கப்படும் என விளம்பரத்தை பார் கம்பி அடியில் தகரத்தில் வைத்திருப்பார்கள்.
* இன்னும் சிலர், சைக்கிள் சைடில் ஒரு பாக்ஸ் வைத்திருப்பார்கள்.
* பல சைக்கிள் செயின் மட்கார்டுகளில் தளபதி, குணா, கேப்டன் பிரபாகரன் என அதே ஃபான்டில் எழுதியிருப்பார்கள்
#ஒரு தலைமுறையின் பெருமை
குழந்தைக்கு பார் கம்பியில் சின்ன சீட், பின்னால் அம்மா நடுவில் அப்பா என மூன்று பேரை வைத்து மிதித்துள்ளனர் ஒரு காலத்தில் ஆண்கள். வெயிட் போட்டால் வீட்டுக்காரர் சைக்கிள் மிதிக்க கஷ்டப்படுவார் என ஒல்லியாகவே உடலை பராமரித்தனர் பெண்கள்.
எங்க வீட்ல வயல், மாடு கன்னு இருக்கே என்பது போல சைக்கிள் இருப்பதை பெருமை பொங்க பேசிய காலம் அது.
சிலர் பேசும்போதுகூட, சைக்கிள் சாவியை விரலில் கோத்து கையை ஆட்டி ஆட்டி பெருமை பொங்கப் பேசுவாங்க, அந்தக் காலத்து பெருசுகள்.
நான்கு பவுன் செயின் அடகு வைத்து 300 ரூபாய்க்கு சைக்கிள் வாங்கியதை இப்பவும் எங்க அம்மா பெருமை பொங்கக் கூறுவார். வீதியிலும் ராலே சைக்கிள்காரர் வீடு, மாப்பிளை ஹெர்குலஸ் சைக்கிள் வச்சிருக்கார் என்பதை காதால் கேட்ட காலம். காசு, பணம் கடன் கேட்பது போலவே சைக்கிளை கடன் கேட்கவும் அவ்வளவு யோசிப்பார்கள் அக்காலத்தில்.
முதன்முதலில் பெண்கள் பள்ளிகளுக்கு சைக்கிளில் வந்ததை சிலாகிப்பாகக் கூறுவார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்
அப்பா ஓட்டிய சைக்கிள், முதன்முதலில் வேலைக்குச் சென்ற போது வாங்கிய சைக்கிள் என்பதெல்லாம் மியூஸியம் போல் வீட்டில் வைக்கப்பட்டு, பிறகு அவற்றுக்கு இடமில்லை என்று காயலான் கடைக்குப் போடப்பட்டன.
இப்போதெல்லாம் ஒரு வீட்டில், இரண்டு அல்லது மூன்று டூவீலர்கள் இருக்கின்றன. அப்பாவுக்கு பைக், மனைவிக்கு ஆக்டீவா, மகளுக்கு ஸ்கூட்டி என்று நிற்கின்றன. குழந்தைகளுக்கும் பசங்களுக்கும் குட்டியூண்டு சைக்கிள் கூட பரிதாபமாகக் காட்சி தருகின்றன. வாகனத்துக்கும் நமக்குமான பந்தமோ செண்டிமெண்டோ இப்போதெல்லாம் இல்லை. ’ரெண்டு வருஷத்துக்கு ஒருதடவை வண்டியை மாத்திட்டே இருப்பேன். அதான் நமக்குக் கையைக் கடிக்காது’ என்று தோள் குலுக்கி புத்திசாலித்தனம் காட்டத் தொடங்கிவிட்டோம்.
காலச் சுழற்சியில்... தொப்பையைக் குறைக்கவும் சர்க்கரை அளவைக் குறைக்கவும் தினமும் சைக்கிளிங் செல்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். ஸ்டாண்ட் போட்டு, சைக்கிளிங் பண்ணுவதற்கு, காத்தாட வண்டி ஓட்டலாம் என்று சைக்கிள் வாங்கத் தொடங்கிவிட்டார்கள்.
சைக்கிளுக்கும் நமக்குமான பந்தம்... பால்யத்தில் இருந்தே இரண்டறக் கலந்தது. எத்தனை ராயல்பீல்டுகளும் யமஹாக்களும் இருந்தாலும், நமக்கும் நம் உடலுக்கும் எனர்ஜியையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிற சைக்கிளை, மறக்கமுடியுமா?
#களவாடிய காலம்
நாகரிக மாற்றத்தில் சைக்கிளை தொலைத்தபோதே ஆரோக்கியத்தையும் தொலைத்துவிட்டோம். பைக், கார் வந்தபோது அதைக் கேவலமாகப் பார்த்த நாம்தான், இப்போது செகண்டு ஹேண்டு சைக்கிள் வாங்கி உடல் எடை குறைக்க அதிகாலையில் ஊர் ஊராய் சுற்றுகிறோம் அல்லது வீட்டினுள் ஓட்டுகிறோம்.
பேலன்ஸ் வீல் வைத்த சைக்கிளை குழந்தைக்குக் கொடுத்து, முயன்று தவறிக் கற்றலை முளையிலேயே கிள்ளிவிடுகிறோம். சைக்கிள் ஓட்டும் வயதில் சைக்கிள் டெஸ்ட்டுக்கு படிக்க வைப்பதில் பெருமை காண்கிறோம்.
எவ்வளவு பரபரப்பான சாலையிலும் மிதிவண்டிஓட்டும் ஒருவன், அப்போது உலகத்தை நிதானமாக வைத்திருந்தான் என்பது எத்தனை நிதர்சனமான உண்மை. எவ்வளவு வண்டிகள் வந்தாலும் இயற்கைக் காற்றையும், ஆரோக்கியமான உடலையும் தந்த சைக்கிள், ஒரு நினைவு பெட்டகமாய் நீங்காமல் நம் நினைவில் இருக்கும்.
🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♂️🚴‍♂️🚴‍♂️🚴‍♂️🚴‍♂️🚴‍♂️🚴‍♂️

No comments:

Post a Comment