KANADASAN - PART OF HIS LIFE
மாட்டுக்கார வேலன்’ படத்தில்,
‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’
என்ற இனிமை யான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகி யைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்
‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’
என்று வரும்.
பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’
என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன். நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை.
கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.
கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,
‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.
நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும்,
அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.
ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.
எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.
எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.
‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக் காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது.
கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார்.
கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.
எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும்
கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால்,
கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான்
செய்கிறது...
நினைவலைகள்
படித்தேன்
பகிர்ந்தேன்
‘பெருசா டியூன் போட்டுட்டாராம்.. உட்காருடா..’ – கண்ணதாசன் பற்றி விஸ்வநாதன்
“கவிஞரும், இசையமைப்பாளரும் கணவன் மனைவி போல் இருந்தாதான் நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும்” என்று மெல்லிசை மன்னன் விஸ்வநாதன் ஓர் மேடையில் பேசினார். அப்படி அவர் கண்ணதாசனோடு பயணித்ததால்தான் என்னவோ காலத்தால் அழிக்க முடியாத எண்ணிலடங்கா பாடல்களை இருவரும் நமக்கு பரிசளித்துச் சென்றனர். ‘இறக்கும் மனிதர்கள், இறவா பாடல்கள்’ வரிசையில் மனிதனின் ஒவ்வொரு உணர்வுகளையும் இசையாலும், எழுத்தாலும் அலங்கரித்த கண்ணதாசன் – விஸ்வநாதன் இருவரின் பிறந்தநாள் இன்று.
தான் எப்படி கண்ணதாசன் எனும் முத்தையாவை முதல் முதலில் சந்தித்தார், எப்படி சில ஹிட் பாடல்கள் உருவாகின உள்ளிட்ட பல சுவாரசிய பதிவுகளை மறைந்த கண்ணதாசன் பற்றி மெல்லிசை மன்னன் விஸ்வநாதன் ஓர் இசைக் கச்சேரியில் பகிர்ந்துகொண்ட தொகுப்பு இங்கே…
“1946-ம் ஆண்டில் நான் செந்தில் ஸ்டுடியோவில், மற்ற இசையமைப்பாளர்களிடம் நோட்ஸ் வாங்கி அதனைக் கவிஞர்களிடம் கொடுத்து பாட்டு எழுதி வாங்கும் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான், நெற்றியில் விபூதி, குங்குமம், நல்ல அங்கவஸ்திரம் அணிந்து முத்தையா என்பவர் பாட்டெழுத அந்த ஸ்டுடியோவிற்கு வந்தார்.
கண்ணதாசன் எப்போது சொந்தமா பாட்டு எழுதுவார். அதனால் சந்தத்துக்குப் பாட்டு வரலை. ஒரே டியூன் அதுவும் பல்லவி மட்டும்தான், அதையே மூன்று நாள்களாகத் தேய்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்குக் கோபம் வந்து அவரிடம் சென்று, ‘எவ்வளவு நாள்தான் இப்படி யோசிச்சுட்டே இருப்பீங்க’ என்று கேட்டேன். வந்தது பாருங்க அவருக்குக் கோபம். ‘என்ன இப்போ பாட்டுதானே வேண்டும். இந்தா வெச்சுக்கோ என்றுகூறி,
“காரணம் தெரியாமல் உள்ளம் களிகொண்டே கூத்தாடுதே…” என்றார்.
எனக்குக் கேட்டதும் கொஞ்சம்கூட பிடிக்கவேயில்லை. இது என்ன அசிங்கமா களி, கூத்துனு? நல்லாவே இல்லை. உடனடியாக வரிகளை மாற்றுங்கள் என்றேன். அவ்வளவுதான்.. எங்களுக்குள் வாக்குவாதம் வர, அப்போது அந்த வழியாகச் சென்ற உடுமலை நாராயணக்கவி என்னைக் கூப்பிட்டு விசாரித்தார். அவரிடம் நடந்தவற்றைக் கூறிவிட்டு, முத்தையாவின் வரிகளையும் கூறினேன். நான் சொன்ன அதே விஷயத்தை அவரும் சொன்னார்.
பிறகு, முத்தையாவைக் கூப்பிட்டு என்னை கைகாட்டி, ‘இந்த பசங்களுக்கெல்லாம் களி, கூத்து என்று சொன்னால் புரியாது. இவங்களுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் எழுதிட்டு போங்களேன்’ என்று சொன்னதோடு, “காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே…” என்று வரிகளை மாற்றியமைத்துச் சென்றார் நாராயணகவி. இப்படிதான் எனக்கும் கண்ணதாசன் அண்ணாவுக்கும் நட்பு ஆரம்பமானது.
அதன்பிறகு, ‘நான் படம் தயாரிக்க போறேன். அதுல 10 பாடல்கள் இருக்கு. நீதான் இசையமைக்கனும். நான்தான் எழுதுவேன்’ என்று சொன்னார். அப்படிதான், செந்தமிழ் தேன்மொழியாள்..’ பாடல்கள் எல்லாம் உருவானது.
பிறகு ‘பெரிய இடத்துப் பெண்’ திரைப்படத்தின்போது கண்ணதாசன், மற்ற எல்லோரும் அந்தப் படத்திற்கான பாடல்கள் டிஸ்கஷனில் இருந்தபோது, நான் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தேன். என் வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்தவர்களிடம், நான் உறங்கிக்கொண்டிருக்கும் விஷயத்தைக் கூறிவிட்டனர். இந்த வேகத்தில் அண்ணா எழுதிய பாடல்தான்,
“அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவோ…”
இப்படி அவருக்குள் நையாண்டியும், நக்கலும் அதிகம் கொட்டிக்கிடக்கும். அந்த வரிசையில், பாலச்சந்தர் படத்தில் வேலை செய்தபோது அவர் எப்போதும் வித்தியாச மெட்டு போடச் சொல்லுவார். அவர் நினைத்ததைப்போல ஒரு டியூனும் போட்டாச்சு. அதற்கு எப்படியாவது கண்ணதாசனிடம் வரிகளை வாங்கிவிடவேண்டும் என்கிற பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. அண்ணா வந்ததும், ‘நாநானானானா’ என்று சந்தத்தை பாடி காட்டினேன். ‘என்ன நா நா நா? எல்லாமே ‘நீ’ என்றால் நான் எதற்கு?’ எனக்கூறி வெளியேறினார் கண்ணதாசன்.
நானும் அவர் பின்னாடியே சென்று, அவரை கொஞ்சம் சீண்டினேன். “பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா…”, “வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை மனைவி…” என ஒரே போன்ற வரிகளுக்கு எத்தனை டியூன் நான் போட்டிருக்கேன். என்னுடைய ஒரு டியூனுக்கு உங்களால் எழுத முடியாதா? என்றுகூறி உசுப்பேத்தினேன். அவ்வளவுதான், ‘பெருசா டியூன் போட்டுட்டாராம். உட்காருடா. டியூன் போடு’ என்றார். இந்த முறை ‘நா’ என்று சொல்லாமல் ‘லாலலலல’ என்று பாடினேன். அப்புறம் என்ன வெறும் 15 நிமிடங்களில் பாடல் ரெடி. அதுதான், “வான் நிலா நிலா அல்ல…’ என்கிற பாடல். இப்படி எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்ததால்தான் அவ்வளவு அழகான பாடல்களை உருவாக்க முடிந்தது.
பிறகு, உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாகிட்டார். அப்போதும், நாங்கள் பாட்டெழுதி, மெட்டிசைப்பதுபோலதான் புலம்பிக்கொண்டிருக்கிறார் என்று எம்ஜிஆர் எனக்கு போன் செய்து சொன்னார். என்னைக் கண்ணதாசனை சென்று பார்க்கவும் வலியுறுத்தினார். ஆனால், என்னால் செல்ல முடியாத நிலை. அதனால், எங்களுடைய வேடிக்கை நிகழ்வுகளை ஒரு கேசட்டில் பதிவு செய்து அனுப்பினேன். ஆனால், அந்த கேசட் அவர் கைக்குக் கிடைப்பதற்குள், அவர் இறந்துவிட்டார் என்கிற செய்திதான் எனக்கு வந்தது.
அப்போது, ‘நான் பல தவறுகள் செய்திருக்கிறேன். ஆனால், யார் குடும்பத்தையும் கெடுக்கவில்லை. என்னைத்தான் அழித்துக்கொண்டேன். அதனால், என்னை ஒரு 5 ஆண்டுகள் விட்டுவை’ என்றுகூறி அவர் யமனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தை, அவர் இறந்தபிறகு போஸ்டராக அடித்து ஓட்டச் சொன்னார் எம்ஜிஆர். கண்ணதாசன் அண்ணாவின் உடலுக்கு நான்தான் முதலில் கொல்லி வைத்தேன். எனக்கு பிறகுதான் அவருடைய மகன்கள் வைத்தனர்.
அவருக்கு உடல்நிலை மோசமாக இருந்த காலகட்டத்தில், என்னைக் கூப்பிட்டு, ‘நாம் இருவரும் எத்தனையோ பாடல்களைப் படைத்திருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த பாடல், “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…” பாடல்தான். உனக்கு முன்பே நான் இறந்துவிடுவேன். அப்போது எனக்காக நீ அந்த பாட்டை பாடவேண்டும். நீ பாடும்போது நிச்சயம் அந்த கும்பலில் ஒரு ஓரமாய் நான் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பேன்’ என்று கூறினார்” என்று உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார் மெல்லிசை மன்னர்.
ஆயிரக்கணக்கான பாடல்கள் வந்தாலும், எந்த காலத்திற்கும் ஏற்றபடி மனிதனின் மனநிலையைப் பிரதிபலிக்கும் கருத்துக்களை மிகவும் ஆழமாகப் பதித்தவர் கண்ணதாசன். அவருடைய வரிகளை இசைமூலம் நம்மை முணுமுணுக்க வைத்தவர் விஸ்வநாதன். கண்ணதாசனின் பேனாவும் விஸ்வநாதனின் ஹார்மோனியமும் என்றைக்கும் முடிவில்லா கதைகள் சொல்லும்.
பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன்.
பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது.
சொன்னவர் கவியரசர் கண்ணதாசன்.
காலமெனும் தெய்வமகள் கையிலுள்ள துலாக்கோலில்
எந்த எடை எப்பொழுது எவ்வளவென்று யாரறிவார்?
மண்ணுமொரு காலமதில் மலையேற்றி வைத்தாலும்
பின்னுமொரு காலமதில் பெரும்பள்ளம் தோன்றிவிடும்.
ஒரு நாள் உடல் உனக்கு உற்சாகமிருக்கும் - மறுநாள்
தளர்ந்துவிடும்; மறுபடியும் தழைத்துவிடும்
ஆள் அம்பு சேனையுடன் அழகான வாழ்வு வரும்
நாள் வந்து சேர்ந்துவிட்டால் நாலும் கருகிவிடும்.
ஜாதகத்து ராசியிலே சனி திசையே வந்தாலும்
பாதகத்தை வழங்காமல் பரிசு தரும் காலம் வரும் .
எல்லோருக்கும் ஏடெழுதி இறைவன் வைத்திருக்க
பொல்லாத காலமென புலம்புவதில் லாபமென்ன ?
எவனோ ஒருவன் உனையேற்றி புகழ்வதுண்டு
மகனே தலையெழுத்தாய் மாற்றம் பெறுவதுண்டு.
பல்லாயிரம் ஆண்டு பாராண்ட தலைமுறையும்
செல்லாத காசாகி தெருவிலே அலைவதுண்டு.
மன்னர்கள் போனதுண்டு, மந்திரிகள் வருவதுண்டு
மந்திரிகளை அழித்துவிட்டு மாசேனை ஆள்வதுண்டு.
மாசேனை நடுவினிலே விளையாடும் காலமகள்
சதிசெய்வாள்
சில நேரம் தர்பாரிலும் ஏற்றிவைப்பாள்
இன்னதுதான் இப்படித்தான் என்பதெல்லாம் பொய்கணக்கு
இறைவனிடம் உள்ளதடா
எப்போதும் உன் வழக்கு.
நாளை பெரும் நன்மை
நடக்குமென விதி இருந்தால்
இன்று பொழுதெல்லாம் இடுக்கண்ணே
வந்து நிற்கும்.
போகிற வண்டியெல்லாம் ஊர் சென்று சேர்ந்துவிட்டால்
தேடுகின்ற கோவிலை
நீ தேடாமல் போய்விடுவாய்
காதலியாய் வேஷமிட்ட கட்டழகு நடிகையெல்லாம்
தாயாய் வேஷமிட்டு தடியூன்றி வருவதெல்லாம்
காலமகள் விட்டெறிந்த கல்லால் விளைந்த கதை.
சட்டியிலே வேகின்ற சரக்கெல்லாம் சத்தானால்
மட்டின்றி படித்து வந்த மருத்துவருக்கு வேலையென்ன?
ஆலமரம் தளருங்கால் அடிமரத்தை விழுது தொடும்
நீ இழந்த பெருமையெல்லாம் நின் மக்கள் பெறுவதுண்டு
நீ இழந்த செல்வமெல்லாம் நின் பேரன் அடைவதுண்டு
வளமான ஊருணி நீர் வற்றாமலே இருந்தால்
புதிதான நீர் உனக்கு பூமியிலே கிடைக்காது
இதனாலே சோர்வடைந்தால் அடுத்த கடை திறக்காது
ஞானத்திலே நீ ஒருவன் நடத்து உன் நாடகத்தை
காலத்தின் சிந்தனையின் கனவென்னவோ ?
நனவென்னவோ ?
கவிஞர்கண்ணதாசன்_94
காதலித்து மணந்த முதல் மனைவியைப் விபத்தில் பறிகொடுத்து விட்டு (சந்தர்ப்ப சூழ்நிலையால் அவள் இறந்துவிட்டதாக நினைத்து) பற்றற்ற வாழ்க்கை வாழும் ஒரு புற்று நோய் டாக்டர். தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாக (விருப்பமில்லாமல்) செய்து கொண்ட இரண்டாவது திருமணத்தில் மனம் ஈடுபடாத வாழ்க்கை. அவளோடு ஏற்ப்பட்ட வாக்குவாதத்தால் விபத்து நேர்ந்து கண்களையும் இழந்து தவிக்க, அசந்தர்ப்பமாக முதல் மனைவியே அவருக்கு நர்ஸாக வர, இரண்டாவது மனைவியோடு தன் கணவர் விரும்பாத வாழ்க்கை வாழ்வது அறிந்து அவரை அவள் பால் திருப்ப எடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, உடல் நலமில்லாத அவரை வாக்கிங் அழைத்துப்போகும்போது அவர் மனம் மாற்றம் ஏற்பட பாட, அதற்கு மறுப்பு தெரிவித்து கணவர் பாடும் பாடல்…
No comments:
Post a Comment