Monday 7 June 2021

T.M.SOUNDARAJAN - ABOUT BIOGRAPHY

 

T.M.SOUNDARAJAN - ABOUT BIOGRAPHY


டி.எம்.எஸ்.பால்ராஜ் தனது அப்பா டி.எம்.செளந்தரராஜனைப்பற்றி சில சில பல பல வரிகள்
அப்பாவின் உலகம் மிகச் சிறியது. வீடு... வீடுவிட்டால் ஒலிப்பதிவுக்கூடம். அதைத்தவிர்த்து, இசை மேடைகள்... இதற்குள்ளாகத்தான் அவருடைய 63 ஆண்டுகால வாழ்க்கை உழன்றது. திரையுலகத்திலும் சரி, பொது வெளியிலும் சரி, அவர் எப்போதும் தன் ஆளுமையை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பியது இல்லை. அதே நேரம், தன் கருத்தை வெளிப்படுத்தவும் தயங்கியது இல்லை. யாரிடமும் அவருக்கு எதிர்பார்ப்பும் இல்லை. தனக்கான அங்கீகாரங்கள் மறுக்கப்பட்ட தருணங்களில்கூட, இதுவல்ல என் இலக்கு என்று இயல்பாகவே இருந்தார். 63 வருடங்களுக்குப் பிறகு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டபோதும். “எனக்குமா கொடுத்திருக்காங்க...” என்று சிறு புன்னகையில் அதைக் கடந்தார்.
இப்போது அப்பா இல்லை... அவர் இருந்திருந்தால், மகிழத் தகுந்த இரண்டு நல்ல விஷயங்கள்
காற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன்! - டி.எம்.எஸ்.பால்ராஜ்
நடந்திருக்கின்றன. சம்ஷத் பேகம், கீதா தத், தலத் முகமது, முகமது ரஃபி, முகேஷ், மன்னா டே, கிஷோர் குமார், ஹேமந்த் குமார், புபென் ஹஸரிகா போன்ற வட இந்திய இசை ஆளுமைகளோடுச் சேர்த்து, ஒற்றைத் தென்னிந்தியராக அப்பாவுக்குமான அஞ்சல்தலையை வெளியிட்டுக் கௌரவப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு. காலம் கடந்தாலும் அப்பாவுக்குச் செய்யப்படும் மிகச்சிறந்த மரியாதை என்று இதைக் கருதுகிறோம்.
இன்னொரு மகிழ்ச்சியான நிகழ்வு, கடந்த 12 ஆண்டுகளாக அப்பாவோடு பயணித்து, இயக்குநர் விஜயராஜ் எடுத்த முழுநீள வாழ்க்கைச் சித்திரம் முழுமை பெற்றிருக்கிறது. அவர் இந்தப் பணியை ஒரு தவம்போலச் செய்தார். அப்பா பயணிக்கும் இடமெல்லாம் பயணித்து, சக இசைக்கலைஞர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, அப்பாவின் வாழ்க்கையைத் தேர்ந்த ஆவணமாக்கி இருக்கிறார். அப்பா இருந்தபோதே பெருமளவு நிறைவுசெய்து அவருக்குத் திரையிட்டும் காட்டினார். அதைப் பார்த்து நெகிழ்ந்துபோன அப்பா, தான் உயிராக மதித்த ஒரு பொருளை அவருக்குப் பரிசாகத் தந்தார். அதுதான் நேஷனல் கம்பெனியின் தயாரிப்பான இந்த டேப் ரெக்கார்டர். தலைமாட்டில், அவருக்குக் கையெட்டும் தூரத்தில் இருந்து, எப்போதும் அவர் பாடிய பாடல்களைப் பாடிக்கொண்டே இருந்த டேப் ரெக்கார்டர் இது. “என் மரணத்துக்குப் பிறகும் காற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன்” என்று கூறி இதை விஜயராஜுக்கு வழங்கினார்.
அப்பாவுக்கு ரேடியோக்கள், டேப் ரெக்கார்டர்களைச் சேகரிப்பது பிடிக்கும். இருபதுக்கும் மேற்பட்ட ரேடியோக்கள் வைத்திருந்தார். எல்லாவற்றையும் அடுக்கி வைத்து அழகு பார்ப்பார். ரசிகர்களும் அன்புப் பரிசாக வானொலிப் பெட்டிகளையும் டேப் ரெக்கார்டர்களையும் வழங்குவார்கள். சிலவற்றை மட்டும் தனக்கு நெருக்கமாக வைத்துக்கொள்வார். 1990-ல் மலேசியாவில் ஓர் இசை நிகழ்ச்சிக்காகச் சென்றபோது, ரசிகர் ஒருவர் கொடுத்த டேப் ரெக்கார்டர் இது. இதில் பாடல்களை விரும்பிய விதத்தில் கேட்கும் Equaliser சிஸ்டம், பேஸ், ஷார்ப் சிஸ்டம் இருந்ததால், அவருக்கு இது மிகவும் பிடித்திருந்தது. அப்பா வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் இதில் அவர் பாடிய ஏதேனும் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
காற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன்! - டி.எம்.எஸ்.பால்ராஜ்
ஒலிப்பதிவு நுட்பத்தில் அவருக்கு பெருமளவு ஞானம் இருந்தது. எந்தப் பாடலை எப்படிக் கேட்க வேண்டும் என்று ஓர் ஆசிரியரைப்போல வகுப்பு எடுப்பார். வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு பாடல்
களைப் போட்டுக் காண்பிப்பார். கண்ணை மூடிக்கொண்டு புதிதாய்க் கேட்பதுபோல அவர் பாடிய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருப்பார். நானறிந்து, வேறு யார் பாடிய பாடலையும் அவர் கேட்டது இல்லை.
நிவிகோ என்ற கையடக்க டேப் ரெக்கார்டர் ஒன்று எப்போதும் அப்பாவின் கையில் இருக்கும். அப்பாவுக்கு மிகவும் பிடித்த டேப் ரெக்கார்டர்களில் ஒன்று அது. ஒலிப்பதிவுக் கூடத்தில் தான் பாடிய பாடலை அந்த டேப் ரெக்கார்டரில் பதிவு செய்துகொண்டு வந்து வீட்டில் பலமுறை போட்டுக் கேட்பார். இசைக் கோவையில், அல்லது தான் பாடிய விதத்தில் ஏதேனும் குறை தெரிந்தால் உடனடியாக கிளம்பிச் சென்று, ‘பாட்டில் கொஞ்சம் பிரச்னை இருக்கிறது...’ என்று இசையமைப்பாளரிடம் சுட்டிக்காட்டி மீண்டும் பாடிக் கொடுக்கும் வழக்கமும் அவரிடம் இருந்தது. அவருக்கு அடையாளமாக காலம் கடந்து நிற்கும் சில பாடல்கள் அப்படிப் பாடப்பட்டவைதான். அந்த டேப் ரெக்கார்டரையும் ஒரு நண்பருக்குப் பரிசாக அளித்துவிட்டார்.
அப்பா இயல்பில் ஒரு கர்நாடக இசைக் கலைஞர். இசைமேதை காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் சங்கீதம் பயின்றவர். நாடக நடிகரும்கூட. தியாகராஜ பாகவதர்மேல் தீவிரப் பற்று உண்டு. பாகவதரின் குரல் போலவே அப்பாவின் குரலும் இருந்தது ஒரு வரம். பாகவதரைப் போல பாடகராக வேண்டும் என்ற எண்ணமே அவரைப் பாரம்பர்ய சங்கீதத்தின் பக்கம் திருப்பியது. ஆனால், அவரது கனவுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அப்போது குடும்பச்சூழல் இல்லை. எங்கள் தாத்தா, அழகர் கோயிலில் புரோகிதராக இருந்தார். கர்நாடக இசை கற்றுக்கொண்டிருக்கும்போதே, வறுமையை விரட்டுவதற்காக கோயில் நிகழ்ச்சிகள், வீட்டு சுபகாரியங்களில் எல்லாம் அப்பா பாடுவது உண்டு. அப்படி, ஒரு நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கும்போது, அந்தப் பக்கமாக பயணம் செய்த தியாகராஜ பாகவதர், தன் குரல் போன்றே ஒரு குரல் ஒலிப்பதைக் கேட்டு நின்று ரசித்துப் பாராட்டிச் சென்றாராம்.
பின்னர், சில வருடங்கள் கழித்து, பாகவதர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் அப்பா பாகவதரைப் போய்ப் பார்த்திருக்கிறார். அவரைப் பாடச் சொல்லிக் கேட்ட பாகவதர், “எனக்குப் பிறகு இவன் என் இடத்தைப் பிடிப்பான்” என்று சொல்லி வாழ்த்தியதாக அப்பா நெகிழ்ந்துபோய் சொன்னார்.
அப்பா சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நூற்றுக்கணக்கான கர்நாடக இசை மேடைகளில் பாடியிருக்கிறார். அகில இந்திய வானொலியில் பல நிகழ்ச்சிகள் செய்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் ஒரு பெரிய வால்வு ரேடியோ வைத்திருந்தார். அவருடைய நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் தருணத்தில் மிகவும் கவனமாக தான் பாடியதைக் கேட்பார். ஏதேனும் பிரச்னைகள் தெரிந்தால் குறித்துக்கொள்வார். வழக்கமாக இசை மரபு வரம்புகளைத் தாண்டத் தயங்கவே மாட்டார். தனக்குத்தானே நிறைய கேள்விகள் எழுப்பிக்கொள்வார். ‘ராம நன்னு புரோவரா’ என்று ஒரு கீர்த்தனை தொடங்கும். ‘ராமா என்னைக் காப்பாற்று’ என்று பொருள். அதைப் பெரும்பாலான பாடகர்கள் கம்பீரமாக தோள் நிமிர்த்தி உச்சஸ்தாயியில் பாடுவார்கள். “ராமா என்னைக் காப்பாற்று” என்று இறைஞ்சும்போது சிரம் தாழ்த்தி வணங்க வேண்டுமே ஒழிய, கம்பீரத்தைக் காட்டக் கூடாது என்பார். அவர் பாடும்போது உருகி, நெகிழ்ந்து பாடுவார். ஆனால், அதைச் சில பாடகர்கள் ‘சினிமாவில் பாடுபவருக்கு என்ன தெரியும்?’ என்று கேலி செய்வார்கள்.
அப்பாவிடம் நாங்கள் கற்றுக்கொண்ட நல்ல பழக்கங்களில் ஒன்று, தனக்குத்தானே, சமரசமற்ற கறாரான ஆசிரியராக இருப்பது. அப்பா, பெரும்பாலும் வெளியில் இருந்து வரும் விமர்சனங்களுக்கு செவி சாய்க்க மாட்டார். ஒரு பாடலைப் பாடுவதற்கு முன்பாக பலமுறை பயிற்சி செய்வார். பல விதங்களில் பாடிப் பார்ப்பார். வார்த்தைகளின் பொருள் உணர்ந்து அவற்றின் உணர்ச்சிக்கு ஏற்றவாறு ஏற்ற இறக்கங்களை அமைத்துப் பாடுவார். தவறு என்று அவர் உணர்ந்துவிட்டால் அதை ஏற்றுக்கொண்டு சரிசெய்யவும் தயங்க மாட்டார். இசையமைப்பாளர்களோடு பலமுறை முரண்பட்டிருக்கிறார். கவிஞர்களோடு சமர் செய்திருக்கிறார். பாடல் வரிகள் பொருத்தமற்று இருந்தால் மாற்றச் சொல்லத் தயங்க மாட்டார்.
‘பாகப்பிரிவினை’ படத்துக்கு அசோகா ஓட்டலில் வெற்றி விழா நடந்தது. பொதுவாக அப்போதெல்லாம் வெற்றி விழாக்களில் இசையமைப்பாளர் வரைக்கும்தான் கேடயம் கொடுப்பார்கள். பாடகர்களைக் கண்டுகொள்வதே இல்லை. பாகப்பிரிவினை வெற்றி விழாவில் அப்பாதான் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடினார். தேசிய கீதம் பாடி முடித்ததும் எல்லோரும் கிளம்ப முனைந்தார்கள். ஒரு நிமிடம் என்று சொல்லி எல்லோரையும் அமரவைத்துவிட்டு, ‘இந்தப் படத்தில் நடித்த நாயின் உரிமையாளருக்குக் கூட ஷீல்டு கொடுத்துப் பாராட்டி யிருக்கிறீர்கள். ஆனால், பாடகனைக் கண்டுகொள்ளவே இல்லை. தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடத்தான் வந்தேனா...? இன்று முதல் நான் சினிமாவுக்குப் பாடவே போவது இல்லை’ என்று கூறிவிட்டு இறங்கி வந்துவிட்டார். மறுநாள் தயாரிப்பாளர் வேலுமணி உள்ளிட்ட பெரும்பாலானோர் கிளம்பி வந்து, ‘இனிமேல் நடக்கும் எல்லா வெற்றி விழாக்களிலும் பாடகர்களுக்கு ஷீல்டு கொடுத்து கௌரவிப்போம்... நீங்கள் சினிமாவில் தொடர்ந்து பாட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.
காற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன்! - டி.எம்.எஸ்.பால்ராஜ்
அப்பாவிடம் நாங்கள் கண்டு வியந்த விஷயம், அவரது அர்ப்பணிப்பு. சிவாஜி என்றால் அடிவயிற்றில் இருந்து, எம்ஜிஆர் என்றால் தொண்டைக்கு மேலிருந்து, ஜெய்சங்கர் என்றால் நெஞ்சிலிருந்து பாடுவார். பாமா விஜயம் படத்தில், ‘வரவு எட்டணா’ பாட்டை பாலையா, முத்துராமன், சுந்தர்ராஜன், நாகேஷ் நால்வருக்கும் அவரவருக்கு ஏற்ற விதத்தில் பாடினார். கௌரவம் படத்தில் அப்பாவுக்கு ஒரு மாதிரியும், மகனுக்கு ஒரு மாதிரியும் பாடுவார். ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று பாடும்போது இன்ஸ்பெக்டர் தெரிவார். ‘உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது’ என்று பாடும்போது அப்பாவியான சிவாஜி தெரிவார். இதெல்லாம் யாரும் செய்யாதது. இதற்காக அவர் எந்த அளவுக்கு உழைத்தார், ஹோம் ஒர்க் செய்தார் என்பதெல்லாம் உடனிருந்த எங்களுக்குத்தான் தெரியும். அப்போதெல்லாம் சிங்கிள் ட்ராக் ரெக்கார்டிங்தான். லைவாகப் பாட வேண்டும். பாடிக்கொண்டிருக்கும்போது லேசாக யாரும் இருமினால்கூட திரும்பவும் முதலில் இருந்து பாட வேண்டும். பத்து முறை, இருபது முறையெல்லாம் பாட வேண்டி வரும். வார்த்தைகளை இசை விழுங்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார். பாடியதைப் பலமுறை போட்டுக் கேட்பார். சிறு தவறு தெரிந்தாலும் மீண்டும் அதைப் பாடிக்கொடுத்துவிட்டே அமைதியடைவார். அந்த வகையில் அவர் தன்னைத்தானே செதுக்கிக்கொள்ள அவருக்கு உற்ற துணையாக இருந்தது ரேடியோவும் டேப் ரெக்கார்டரும்தான்.
அப்பாவைப் பாடகராகவே பலர் அறிந்திருக்கிறார்கள். சுதர்சன், தேவகி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். பட்டினத்தார் படத்தில் பட்டினத்தாரே அவர்தான். நள தமயந்தி என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்திருக்கிறார். ‘பலப்பரீட்சை’ என்ற படத்துக்கு இசையும் அமைத்திருக்கிறார். தவிர, சுமார் 3000 பக்திப் பாடல்களுக்கு இசை அமைத்தவர் அவர். ‘உள்ளம் உருகுதையா’, ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’, ‘அழகென்ற சொல்லுக்கு முருகா’ போன்ற பாடல்களெல்லாம் அவர் இசையமைத்ததுதான். அவற்றிலும் நிறைய புதுமைகள் செய்திருக்கிறார். முதன்முதலில் பக்தி பாடல்களில் வெஸ்டர்ன் நுட்பத்தைப் பயன்படுத்தியது அவர்தான். ‘மண்ணானாலும் திருச்செந்தூரில்’ பாடலுக்கு சாக்ஸபோன், வயலின் போன்ற வெஸ்டர்ன் கருவிகளைப் பயன்படுத்தினார்.
காற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன்! - டி.எம்.எஸ்.பால்ராஜ்
1995-ம் ஆண்டுகளுக்குப் பிறகு, அப்பா பாடுவதைக் குறைத்துக்கொண்டார். அதன்பிறகு, அவருக்கு உற்ற தோழனாக இருந்தது இந்த டேப் ரெக்கார்டர்தான். அப்பா தான் பாடிய எல்லாப் பாடல்களின் கேசட்டுகளையும் வைத்திருந்தார். மதியம் இலங்கை வானொலியில் அப்பாவின் பாடல்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும். கே.எஸ்.ராஜா என்ற அறிவிப்பாளர் அப்பாவின் தீவிர ரசிகர். அவர் அப்பாவின் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் அப்பா முகத்தில் அவ்வளவு பெருமிதம் தெரியும். தொலைக்காட்சிப் பெட்டி அப்பாவை எப்போதும் ஈர்த்தது இல்லை. ஒருமுறை அப்பாவைச் சந்தித்த ரஜினி சார், ‘ராணா படம் எடுக்கப்போகிறேன்... அதில் நீங்கள் பாடுகிறீர்கள்...’ என்று சொன்னார். அப்பா மிகவும் உற்சாகமாகிவிட்டார். 91 வயதில் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நாட்களில்கூட, ‘நான் ரஜினிக்குப் பாடப்போறேன்... ரஜினிக்குப் பாடப்போறேன்...’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் உணர்வில்லாமல் இருந்த காலத்தில் விஜயராஜ் இந்த டேப்ரெக்கார்டரைக் கொண்டுவந்து அவருக்கு விருப்பமான பாடல்களைப் போட்டுவிட்டு பக்கத்திலேயே அமர்ந்திருந்தார்.
இன்றைக்கும் இந்த டேப் ரெக்கார்டரைப் பார்க்கும்போது நான் அப்பாவின் நெருக்கத்தை உணர்வேன். ஏதோ ஒரு எஃப்.எம்-ல் எப்போதும் அவர் பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதை இந்தப் பெட்டியில் கேட்கும்போது, அப்பாவும் நம் அருகில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு கேட்பது போல் இருக்கிறது.
May be an image of 1 person and car
25
4 Comments

No comments:

Post a Comment