JEYALALITHA AND HER FIRST TAMIL MOVIE VENNIRA AADAI
வெண்ணிற ஆடை படத்தின் கதையை சந்தியாவிடமும், ஜெயலலிதாவிடமும் சொன்ன போது, வீட்டிற்கு போய் சொல்வதாக கூறினர்.
வீட்டிற்கு போனதும், எனக்கு போன் செய்து, 'கோபு சார்... தப்பாக நினைக்க வேண்டாம், இதற்கு முன், ஒரு கன்னட படம், அதிலும் கைம்பெண் வேடம். தொடர்ந்து இந்த படத்திலும் கைம்பெண் வேடம் எனும்போது, மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. அதனால், இந்த படம் வேண்டாம்; இயக்குனர்கிட்ட சொல்லிடுங்க...' என்றார், சந்தியா.
நான், 'சரி...' என்று சொல்லி எழுவதற்குள், இன்னொரு போன்.
இந்த முறை, ஜெயலலிதாவே பேசினார்.
'நடிப்பது தான், என் தொழில் என்றாகி விட்டது. அதன் பிறகு, இந்த வேஷம் தான் வேண்டும் என்றால் எப்படி... அம்மாவை நான், 'கன்வின்ஸ்' செய்து கொள்கிறேன். நீங்கள், இயக்குனரிடம், என் சம்மதத்தை சொல்லி விடுங்கள்...' என்றார்.
அந்த படத்தில் பிரமாதமாக நடித்து, புகழ் பெற்றார், ஜெயலலிதா.
அப்போது முதலே, ஜெயலலிதா மீது எனக்கு ஒரு மரியாதை ஏற்பட்டது. அவரது தொழில் பக்தி பாராட்டக் கூடியது. எனக்கும், அவருக்கும் அதன் பிறகு, பல படங்களில் நட்பும், பாசமும் நீடித்தது. சுமதி என் சுந்தரி படத்தின் கதையை சொன்ன போது, 'எனக்காவே எழுதினீர்களா, கோபு...' என்று, மகிழ்ந்து போனார்.
படப்பிடிப்பு இடைவேளையின் போது, எப்போதும் கையில் ஒரு ஆங்கில புத்தகத்தை வைத்து படித்தபடி இருப்பார். என்னை பார்த்தால் போதும், புத்தகத்தை மூடி வைத்து, ரொம்ப நேரம் பேசிக் கொண்டு இருப்பார். என்னுடைய நகைச்சுவையை மிகவும் ரசிப்பார்.
சில புத்தகங்களை படிக்கச் சொல்லி சிபாரிசு செய்தார். எந்த காலத்திலும் என் நகைச்சுவையை விட்டுவிடக் கூடாது என்பார்.
இவரை சந்தோஷப்படுத்துவதற்காக, நான், என் அம்மா கதையை எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். என் அம்மா கதையை கொஞ்சம் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்...
என் அம்மா செல்லம்மாள், நல்ல பாடகி. முற்போக்கு சிந்தனையும், நகைச்சுவையும் கொண்டவர். அவரிடம் இருந்து தான், நான் உருவானேன்.
'டி.கே.பட்டமாள் போல பாடுகிறாய்; எங்கள் கொலுவில் வந்து கொஞ்சம் பாடேன்...' என்று வரும் அழைப்பை ஏற்று, தோழியின் வீட்டுக்கு பாட போவாள், அம்மா. கொஞ்சம் சங்கீத ஞானமும், நிறைய சுண்டலும் கிடைக்கும் என்பதற்காக, நானும் கூட போவேன்.
இவர் மூலமாக பெற்ற சங்கீத ஞானம் தான், பிற்பாடு சினிமாவில் எனக்கு கை கொடுத்தது. நீங்கள் கேட்ட, கேட்டுக் கொண்டு இருக்கும் பல பழைய பாடல்களின் உருவாக்கத்தில், நான் இருந்திருக்கிறேன்.
ஸ்ரீதரின் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படப்பாடல் பதிவின்போதும், பெரும்பாலும் நான் தான் இருப்பேன்.
'ராஜரத்தினம் பிள்ளை நேற்று பிரமாதமாய் வாசித்தார்; நீ கேட்டியா...' என்று, என் அப்பா, துரைசாமி, அம்மாவிடம் சீரியசாக கேட்டார். அதற்கு அம்மாவோ, 'நான் வாசிப்பை கேட்கவில்லை. ஆனால், நாதஸ்வரத்தில் தொங்கிக் கொண்டு இருந்த தங்க டாலர்களில் ஒன்று கேட்டேன். அதைத் தருவதில்லை என்று சொல்லி விட்டார்...' என்றார் சிரிக்காமல்...
கேட்ட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.
இந்த சம்பவத்தை வைத்து தான், சாந்தி நிலையம் படத்தில், நாகேஷ் சம்பந்தப்பட்ட நகைச்சுவை காட்சி ஒன்றை உருவாக்கினேன். அதில், நாகேஷிடம் சங்கீதம் பற்றி பேசுவார், அவருடைய நண்பர்.
'நேத்து ரேடியோவுல மாலி புல்லாங்குழல் இசையை கேட்டியோ?' என்பார், நண்பர்.
'கேட்டேன்; தரமாட்டேன்னு சொல்லிட்டார்...' என்பார், நாகேஷ்.
இந்தக் காட்சியின்போது, சிரிப்பில் அரங்கமே அதிர்ந்தது.
இதே போல, என் மாமியார் இறந்து, மூன்றாவது நாள், உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தோம்.
என் மனைவியிடம், 'இப்பத்தாண்டியம்மா ஞாபகம் வந்தது, உன் அம்மாகிட்ட இருந்து எல்லாத்தையும் எழுதி வாங்கிட்டியா?' என்றார், என் அம்மா.
சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் உட்பட, அனைவரும் அதிர்ந்து, அம்மாவை நிமிர்ந்து பார்த்தோம்.
ஜெயலலிதா பார்க்காத படம்!
வெண்ணிற ஆடை படம் வெற்றிகரமாக ஓடியது. முதன்மை கதாநாயகியான, ஜெயலலிதாவின் நடிப்பும், பேச்சும் பிரமாதமாக பேசப்பட்டது. அந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சிக்காக, படத்திற்கு, 'ஏ' சான்றிதழ் கொடுத்திருந்தது, 'சென்சார் போர்டு!'
இப்போது போல, 'டிவி' - 'ஐபேட்' போன்ற சாதனங்கள் இல்லாத காலம் என்பதால், படத்தை தியேட்டரில் தான் போய் பார்க்க வேண்டும். ஆனால், ஜெயலலிதாவிற்கு அப்போது, 18 வயது ஆகாததால், தியேட்டரில் போய் படம் பார்க்க அனுமதி கிடையாது.
'எல்லாரும் பார்த்துவிட்டு வந்து, மகளை பாராட்டுகின்றனரே. ஆனால், மகள் படம் பார்க்காமல் இருக்கிறாரே...' என்ற ஆதங்கத்தில், 'பிரிவியூ' தியேட்டரில், தனி காட்சி ஏற்பாடு செய்தார், சந்தியா. ஆனால், 'அங்கும் வரமாட்டேன்...' என்று சொல்லி, 18 வயது பூர்த்தியான பிறகே படத்தைப் பார்த்தார், ஜெயலலிதா.
No comments:
Post a Comment