CANADA RACE KILLINGS -GENOCIDES
கனடா பூர்வகுடி குழந்தைகள் பள்ளியில் பல நூறு சவக்குழிகள்: புதைந்து கிடந்த அதிர்ச்சி
24 ஜூன் 2021
,
இறந்த பூர்வகுடி குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்கள் படித்த பள்ளியில் சமீப வாரங்களாக தங்கள் குழந்தைகளின் காலணிகளை வைத்து வருகின்றனர் கனடிய மக்கள்
கனடாவின் சஸ்கட்செவான் மாகாணத்தில் உள்ள ஒரு முன்னாள் உறைவிடப்பள்ளி அமைந்திருந்த இடத்தில் விவரங்கள் குறிப்பிடப்படாத நூற்றுக்கணக்கான சவக்குழிகளை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக பூர்வகுடிகள் உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த சிறுவர்களை தங்கள் சமூகத்திற்குள் கலக்கச் செய்யும் முயற்சியாக 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டில் கனடிய அரசாங்கம் மற்றும் மத அமைப்புகளால் இத்தகைய கட்டாய உறைவிடப் பள்ளிகள் நடத்தப்பட்டன. அவர்களில் சுமார் 1.5 லட்சம் குழந்தைகள் மீண்டும் குடும்பத்துடன் சேரவில்லை.
அடுத்தடுத்த வாரத்தில் கிடைத்த கல்லறைகள்
இதுநாள் வரை கண்டுபிடிக்கப்பட்ட சவக்குழிகளிலேயே இதுதான் மிகவும் முக்கியத்துவம் பெறும் அளவுக்குக் கணிசமான எண்ணிக்கை உடைய கண்டுபிடிப்பு என்று தி கவொசெஸ் ஆஃப் ஃபஸ்ட் நேஷன்ஸ் (ஃபஸ்ட் நேஷன்ஸ் என்பது பல்வேறு பூர்வகுடி இனங்களின் வகைப்பாடு) எனும் பூர்வகுடிகள் உரிமை அமைப்பு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த உறைவிடப்பள்ளி அமைந்திருந்த இடத்தில் எத்தனை சவக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பதை அந்த அமைப்பு தெரிவிக்கவில்லை.
கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இதே போன்றதொரு முன்னாள் உறைவிட பள்ளியில் 215 குழந்தைகளின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வார காலத்துக்குப் பின்பு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மார்வெல் இந்தியன் உறைவிடப் பள்ளியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் விவரங்கள் குறிப்பிடப்படாத சவக்குழிகளை கண்டுபிடிப்பதற்காக நிலத்துக்கு அடியில் ஊடுருவிச் செல்லும் ரேடாரை பயன்படுத்த தி கவொசெஸ் அமைப்பு தனது தேடலை தொடங்கியது.
இந்தக் கண்டுபிடிப்பு கொடூரமானது மற்றும் அதிர்ச்சி அளிப்பது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமை நடத்தப்படவுள்ள செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த மேலதிகத் தகவல்கள் வெளியிடப்பட உள்ளது.
அசெம்ப்லி ஆஃப் ஃபஸ்ட் நேஷன்ஸ் அமைப்பின் தேசிய தலைவர் பெர்ரி பெல்லகார்டே, "இந்தக் சவக்குழிகள் கண்டுபிடிப்பு மிகவும் சோகமானது, ஆனால் வியப்பளிப்பதாக இல்லை," என்று தெரிவித்துள்ளார்.
#கட்டாய உறைவிடப் பள்ளி ஒன்றில் 1950இல் எடுக்கப்பட்ட படம்.
வீடு திரும்பாத ஒன்றரை லட்சம் குழந்தைகள்
1863 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பூர்வகுடி குழந்தைகள் தங்களது குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இத்தகைய கட்டாய உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்தப் பூர்வகுடி இனக் குழந்தைகளுக்கு தங்களுடைய தாய்மொழியை பேசவோ தங்களது பண்பாட்டை பின்பற்றவோ பெரும்பாலும் அனுமதி கிடையாது.
இந்தக் குழந்தைகளில் ஏராளமானோர் துன்புறுத்தப்பட்டனர் மற்றும் மோசமாக நடத்தப்பட்டனர்.
இத்தகைய அமைப்பு முறையின் விளைவுகள் குறித்து ஆவணப்படுத்த 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலான பூர்வகுடி குழந்தைகள் தங்களது தாய் சமூகத்திடம் சென்று சேரவில்லை என்று தெரியவந்தது.
இத்தகைய உறைவிடப் பள்ளிகளை நடத்தியதற்காக 2008ஆம் ஆண்டு கனடிய அரசு அலுவல்பூர்வமாக மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment