Tuesday 8 June 2021

AJINAMOTTO - BUSINESS TRICKS

 


AJINAMOTTO - BUSINESS TRICKS



நவீன உணவுகள் பற்றி நாம் பேசத் துவங்கும் போதெல்லாம் உடனடியாக நம் நினைவுக்கு வரும் பெயர்களில்ஒன்று ,அஜினோ-மோட்டோ.
*அஜினோமோட்டோ ஆபத்தான சுவை கூட்டும் உப்பு.
*அஜினோமோட்டோ மூளையில் கேன்சரை உருவாக்கும் தன்மை கொண்டது.
*அஜினோமோட்டோ கலக்கப்பட்ட உணவுகள், தீராத நோய்களை ஏற்படுத்தும்.
- இப்படி விதம்விதமான கருத்துக்கள் அஜினோ மோட்டோவைப் பற்றி உலா வருகின்றன. பல ஹோட்டல்களில் ‘இங்கு அஜினோமோட்டோ பயன்படுத்துவது இல்லை’ என்று பெயர்ப் பலகை வைக்கும் அளவிற்கு இந்த பயம் பரவலாக இருக்கிறது. ஆனாலும் இதை யெல்லாம் மீறி நம்முடைய அன்றாட உணவுகளில் வீடுகளிலும், ஹோட்டல்களிலும் அஜினோ மோட்டோ பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2008ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் பயன்படுத்தப்படும் அஜினோமோட்டோவின் அளவு, ஆண்டிற்கு 5000 டன் ஆகும். உலகம் முழுவதும் பயன்படும் அஜினோ மோட்டோவின் அளவு பத்தரை லட்சம் டன். பயம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதை விட பல மடங்கு அஜினோமோட்டோவின் உற்பத்தியும், விற்பனையும் அதிகமாகிக் கொண்டே போகிறது.
உண்மையில் அஜினோமோட்டோ அவ்வளவு ஆபத்தானதா?
அஜினோமோட்டோவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால் உப்புக்களைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம்... பொதுவாக உணவின் சுவையைக் கூட்டுவதற்காகவும், அதன் வேதியியல்சமநிலைக் காகவும் உப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உப்பை உணவில் பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள் அன்றைய மக்கள். எகிப்தில் உப்பு வணிகம் துவங்கி ஐரோப்பிய நாடுகளில் அதன் புகழ் உயர்ந்ததாக வரலாறு கூறுகிறது.
இந்தியாவிலும் உப்பு பற்றிய குறிப்புகள் கெளடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் கிடைக்கின்றன. சைந்தவா, சமுத்ரா, உத்பேஜா, ரோமகா, ஒளத்பதா போன்ற ஐந்து வகை உப்புக்களைப் பற்றி அந்நூல் குறிப்பிடுகிறது. பாறைப் படிகங்களிலிருந்து எடுக்கப்படும் உப்பு,கடலில் இருந்து கிடைக்கும் உப்பு,மண்ணில் இருந்து எடுக்கப்படும் உப்பு,உறைந்த படிகங்களிலிருந்து எடுக்கப்படும் உப்பு... இப்படி பல வகையில் உப்புக்கள் எடுக்கப்பட்டிருக் கின்றன.
அந்தக் காலத்தில் உப்புப் பாறைகளை நாணயங்களாகப் பயன்படுத்தும் வழக்கமும் சில நாடுகளில் இருந்தது. எந்த உணவுக்கும் கிடைக்காத பெரிய மரியாதை இது. பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தபோது, அதை எதிர்த்து மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் செய்தார். இப்படி உப்பு, அரசியல் போராட்டக் கருவியாகவும் இருந்தது.
சமைத்த உணவிற்கும் உப்பிற்குமான தொடர்பு பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.
‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழியும் இங்கு வழக்கில் இருந்து வருகிறது. ‘உப்பை சாப்பிட்ட வீட்டுக்கு துரோகம் நினைக்கக்கூடாது’ என உப்பில் நன்றியைக் குறிக்கும் மாண்பு நம் மண்ணில் உண்டு.
இயற்கையான ஒரு உணவுப் பொருளை அப்படியே சாப்பிடும் போது அதில் உப்பு அவசியம் இல்லை. ஆனால் அதனை சமைத்து சமப்படுத்தும்போது சுவையை வெளிப்படுத்து வதற்காகவும், சமநிலைப் படுத்துவதற்காகவும் உப்பு பயன்படுகிறது.
ஒரு பொருள் நன்மையா அல்லது தீமையா என்பது அதன் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டிலிருந்து அறியப்படுகிறது. இப்போது வரலாம் அஜினோமோட்டோவின் கதைக்கு...
அஜினோமோட்டோ 1908ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் டாக்டர் கிகுனே இகடே என்ற ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. உணவின் வேதிச்சமநிலை மற்றும் சுவை வெளிப்பாட்டு ஆய்வில் அவர் இதனைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு சீனா மற்றும் ஜப்பானில் ‘யுமாமி’ (‘இனிமையான சுவை’ என அர்த்தம்!) என்ற செல்லப் பெயரோடு அஜினோமோட்டோ வலம் வந்தது. உலகம் முழுவதும் வேகமாக அதன் புகழ் பரவியது.
அஜினோமோட்டோ எங்கிருந்து வருகிறது? கடல் நீரைச் சேகரித்து அதிலிருந்து பெறும் படிமங் களிலிருந்து நாம் சமையல் உப்பைப் பெறுகிறோம். அதேபோல பாறைகளில் இருந்து பெறப்படுவது இந்துப்பு. நாம் பயன்படுத்தும் சர்க்கரை, கரும்பில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு அப்புறம் வெண்மையாக்கப் படுகிறது.
கடல் நீரிலோ, பாறையிலோ, கரும்பிலோ ஏதாவது உடல்நலக் கேட்டை உருவாக்கும் காரணி இருக்கிறதா என்ன?
இவை எதிலும் தீங்கு விளைவிக்கும் விஷயம் இல்லை. இவற்றை தயாரித்து வெண்மை யாக மாற்றுவதற்காகச் செய்யப்படும் ப்ளீச்சிங் ப்ராசஸ் இப்போது வரை சர்ச்சைக்குரிய விஷயம். ஆனாலும் மேற்கண்ட பொருட்கள் விஷம் என்றோ, கொடூரமானது என்றோ பிரசாரம் செய்யப் படவில்லை.
இவற்றைப் போலவே அஜினோமோட்டோ ஒரு வகைக் கிழங்கிலிருந்து (டாபியோகா) தயாரிக்கப்படுவதுதான். நம்முடைய சாதாரண உப்பில், சர்க்கரையில், இந்துப்பில் இல்லாத எந்த புதிய பொருளும் அஜினோமோட்டோவில் சேர்க்கப்படுவதில்லை.
அப்புறம் ஏன் அஜினோமோட்டோ மோசமானது என்று கூறுகிறார்கள்?
அஜினோமோட்டோவின் பின்னால் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய அரசுகளுக்கு இடையேயான அரசியல் இருக்கிறது. ஜப்பானின் கண்டு பிடிப்பான அஜினோ மோட்டோ சீனாவில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் அதிக அளவில் விற்பனையாகிறது. அமெரிக்க வியாபாரத்தில் அஜினோமோட்டோ தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தது.அஜினோ மோட்டோ பற்றிய ஒரு கட்டுரையில் டாக்டர் ஃபஸுர் ரஹ்மான் இவ்வாறு குறிப்பிடுகிறார்...
‘‘சீனர்களின், ஜப்பானியர்களின் பொருளாதார பலம் அமெரிக்கா வில் சகிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சி பெற்று விட்டது. அதை முறியடிப்பதற்காக அமெரிக்க மருந்துக் கம்பெனி விஞ்ஞானிகள் உலகத்தைக் குழப்பும் தங்களுடைய முடிவுகளை, ஆய்வுகள் என்ற பெயரில் பரப்பினர். இது விஷமப் பிரசாரம்.”
‘மோனோ சோடியம் க்ளூடமேட்’ என்ற ரசாயனம் அஜினோ மோட்டோவில் உள்ளது. எனவே அது விஷத்தன்மை உடையது என்று ஒரு கருத்து பரப்பப் படுகிறது. நாம் பயன்படுத்தும் சாதாரண உப்பின் வேதியியல் பெயர், சோடியம் குளோரைடு. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படும் இந்துப்பின் வேதியியல் பெயரும் சோடியம் குளோரைடு தான்.
இந்தப் பெயர்களைக் கேட்டுவிட்டு ‘உப்பு எல்லாம் கெமிக்கல். அது உடலிற்கு தீங்கு விளைவிக்கும்’ என்று சொல்ல முடியுமா என்ன? அது போலத்தான் இதுவும். அஜினோ மோட்டோவின் வேதியியல் பெயர் மோனோ சோடியம் க்ளூடமேட். அவ்வளவுதான்!
இந்த வேதியியல் பெயரையும் நம் விஞ்ஞானிகள் யாரும் கண்டு பிடிக்கவில்லை.
அஜினோ மோட்டாவை தயாரிக்கும் நிறுவனமே அதன் பாக்கெட்டில் வெளியிட்டிருக்கிறது. நம் அன்றாட உணவிலுள்ள எந்தப் பொருளையுமே அளவுக்கு மீறிப் பயன்படுத்தினால் பல விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியது வரும். அது போலத்தான் அஜினோ மோட்டாவின் விளைவுகளும்.
ஜப்பானியர்கள், சீனர்களைப் போல வேக வைக்கப்படும் உணவுகளில் அஜினோ மோட்டோவை அளவோடு சேர்த்துக் கொள்ளலாம். எல்லா உணவுகளிலும் பயன்படுத்த வேண்டியதில்லை. அதே போல அசைவ உணவுகளில் அஜினோமோட்டோ பயன்படுத்தலாம். எண்ணெய்ப் பயன்பாடுள்ள உணவுகளில் தவிர்ப்பது நல்லது. அளவு மிக முக்கியம்.
நன்மை செய்யும் ஒரு உணவை தீமை செய்வதாக மாற்றுவது அதன் பயன்பாடும், அளவும்தான். அஜினோமோட்டோவைப் பற்றி நாம் சொல்வதை விட ஆபத்தான விஷயங்கள், நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பல உணவுகளில் இருக்கின்றன.
வாருங்கள்... நவீன உணவுகளின் உண்மையான சிக்கல்களைப் புரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment