Wednesday, 18 December 2019

கோவா (1947) 1961 HISTORY OF GOA




 HISTORY OF  GOA 1961



“கோவா தெரியுமா மாலு?” என்று கேட்டான் பாலு. “எனக்குத் தெரிந்து நிறைய கோவா இருக்கிறது. அதில் ரொம்பப் பிடித்தது பால் கோவா. இன்றைக்குக்கூட ஞாநி மாமா ஆவினிலிருந்து வாங்கி வந்து கொடுத்தார். கோவா என்கிற கொய்யாப்பழம் எனக்குப் பிடிக்காது. கோவா என்று நம் நாட்டில் ஒரு மாநிலம் இருக்கிறது. அங்கேதான் ஆண்டுதோறும் உலகத் திரைப்பட விழாவை இந்திய அரசு நடத்துகிறது. அண்ணாமலை மாமா தவறாமல் போகிறார். கோவாவில் வாடகைக்கு மோட்டார் சைக்கிள் தரும் வழக்கம் இருகிறது என்று அவர் சொன்னார். நீ எந்தக் கோவாவைப் பற்றி கேட்கிறாய்?” என்றேன்.
“அப்பாடா, ஒரு வழியாக விஷயத்துக்கு வந்தாய். கடைசியாக சொன்னாயே அந்த கோவாவைத்தான் தெரியுமா என்று கேட்டேன்.” என்றான் பாலு.
“அந்த கோவாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இருக்கும் சில தொடர்புகளைச் சொல்லட்டுமா?” என்றார் மாமா. 1965இல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது,
எம்.ஜி.ஆர். கோவாவில் படப்பிடிப்புக்குப் போய்விட்டாராம். இது அவர் கட்சிக்குள் பிரச்னையாக்கப்பட்டதாம். கோவாவை ஆண்ட போர்ச்சுகீசியர்கள்தான் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் லஸ் மாதா கோவில், சாந்தோம் சர்ச், சென்னையின் வட எல்லையாக இருக்கும் பழவேற்காட்டில் இருக்கும் கோட்டை எல்லாவற்றையும் கட்டியிருக்கிறார்கள்.

“போர்ச்சுகீசியர்களைப் பற்றித்தான் நான் பேசவந்தேன்” என்றான் பாலு. “இந்தியா முழுவதும் பிரிட்டிஷ்காரர்கள்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள் என்று நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் எல்லாம் கூட நம்மை அடிமையாக வைத்திருந்தார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.” என்றான் பாலு.
“போர்ச்சுகீசியர்கள், ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு நூறு ஆண்டுகள் முன்பே வந்துவிட்டார்கள். எல்லோருமே முதலில் வணிகத்துக்காக வந்தவர்கள்தான். இங்கே ஏதாவது ஒரு மன்னருடன் வணிக ஒப்பந்தம் போட்டுக்கொள்வார்கள். பிறகு அவருடைய எதிரியிடமிருந்து பாதுகாப்புத் தருவதற்கு, ராணுவ உதவி தருகிறோம் என்பார்கள். அடுத்து அந்த மன்னரையே டம்மி ஆக்கிவிடுவார்கள். வரி வசூலிக்கும் உரிமையை மன்னரிடமிருந்து வாங்கிக்கொள்வார்கள். இப்படித்தான் நாடு முழுவதையும் குட்டிக் குட்டி மகாராஜாக்களிடமிருந்து பறித்துக் கொண்டார்கள்.” என்றார் மாமா.
போர்ச்சுகீசியர்கள் முதலில் வந்தது கேரளத்துக்குத்தானாம். வாஸ்கோட காமா தான் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு முதலில் வந்த வணிக ஆக்கிரமிப்பாளர். 1498ஆம் ஆண்டு மே 20ஆம் நாள் அவர் கோழிக்கோட்டுக்கு கப்பலில் வந்து சேர்ந்தார். இங்கிருந்து ஏராளமான மிளகும் சுவையூட்டிப் பொருட்களும் எடுத்துக்கொண்டு போய் ஐரோப்பாவில் பெரும் லாபம் சம்பாதித்தார். போர்ச்சுகல் அரசு அவரை அடுத்தடுத்து மூன்று முறை கேரளத்துக்கு அனுப்பியது.
ஒவ்வொரு முறையும் கடற்படையுடன் வந்து இங்குள்ள மன்னர்கள், வணிகர்களை மிரட்டியும் கெஞ்சியும் ஒப்பந்தம் போட்டு கேரளத்தின் கோழிக்கோடு, கொச்சி, கொல்லம், முதலிய பகுதிகளை எல்லாம் போர்ச்சுகல் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். வணிகத்தையும் படைபலத்தையும் பயன்படுத்தி, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளையெல்லாம் அடிமை நாடுகளாக்கலாம் என்று பிரிட்டிஷ், ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு முதலில் வழி வகுத்துக் காட்டியவர் வாஸ்கோட காமாதானாம்.

“கோவா எப்படி போர்ச்சுகீசியர்கள் கைக்கு வந்தது?” என்று மாமாவைக் கேட்டேன்.
“கோவாவில் திம்மையா என்று ஒரு கடற்கொள்ளைக்காரன் இருந்தான். அவனிடம் ஒரு தனிப்படையே இருந்தது. அதை வைத்துக்கொண்டு, வெவ்வேறு ராஜாக்களுக்கு உதவுவது, வணிக ஒப்பந்தங்கள் செய்வது என்று இருந்து கொண்டிருந்த திம்மையா, பல முறை கடலில் போர்ச்சுகீசிய கடற்படையைச் சந்தித்திருக்கிறான். கோவா விஜயநகர மன்னர்கள் கையிலிருந்து பீஜப்பூர் சுல்தான்கள் கைக்கு மாறியிருந்தது. சுல்தான் அடில்ஷா பலவீனமாக இருப்பதால், கோவாவைத் தாக்கி எடுத்துக்கொள்ளலாம் என்று யோசனை சொன்னான். அப்படித் தாக்கி வசப்படுத்தும்போது, போர்ச்சுகீசியர்கள் விஜயநகர மன்னருடன் ஒப்பந்தம் செய்து கோவாவை எடுத்துக் கொண்டார்கள். இது நடந்தது 1510ஆம் ஆண்டில்!” என்றார் மாமா.
“1947 ஆகஸ்ட் 15இல் சுதந்திரம் கிடைக்கும் வரை, அங்கே போர்ச்சுகீசியர்கள் ஆட்சிதானா?” என்று கேட்டான் பாலு.
“கோவாவுக்கு சுதந்திரம் ஆகஸ்ட் 15இல் வரவில்லை. அங்கே போர்ச்சுகீசியர்கள்தான் ஆட்சி செய்தார்கள். ஆனால், சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதிகளில் 1522லிருந்து 1697வரை ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுகீசியர்களை, ஆங்கிலேயர்கள் முறியடித்து அந்தப் பகுதிகளைத் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள். அங்கெல்லாம்தான் சுதந்திரம் ஆகஸ்ட் 15இல்” என்றார் மாமா.

“கோவாவுக்கு எப்போதுதான் சுதந்திரம் வந்தது?” என்றேன்.
“இந்தியாவில் நாமெல்லாம் சுதந்திரம் பெற்று 14 ஆண்டுகள் கழித்து டிசம்பர் 19, 1961இல் தான் வந்தது. கோவாவிலிருந்து போர்ச்சுகல் வெளியேறவேண்டும் என்று பல இயக்கங்கள் அங்கே அமைதியாக போராட்டங்கள் நடத்தி வந்தன. இந்திய அரசு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுத்து, கோவாவை விடுவிக்க முயற்சித்தது. அதெல்லாம் எதுவும் நடக்கவில்லை. கடைசியில் போர் நடத்தித்தான் கோவாவுக்கு சுதந்திரம் வாங்க முடிந்தது.” என்றார் மாமா.
“அங்கே அகிம்சைப் போராட்டம் பயன் அளிக்கவில்லையா?” என்றேன்.
“அகிம்சை எல்லாம் 1947க்கு முன்னால்தான். அதுவும் ஆங்கிலேயரிடம்தான் எடுபட்டது. கோவாவில் 3,300 பேர் கொண்ட போர்ச்சுகீசியப் படைக்கு எதிராக, நாம் 30 ஆயிரம் பேர் கொண்ட விமானப்படை, கடற்படை தரைப்படை எல்லாவற்றையும் அனுப்பித்தான் கோவாவை விடுதலை செய்தோம். இந்தியாவுடன் இணைத்தோம். அதையும் போர்ச்சுகல் அரசு 1974 வரை ஒப்புக்கொள்ளவில்லை. பிறகுதான் ஒப்புக்கொண்டது. அதுவரை நமக்கும் போர்ச்சுகல்லுக்கும் ராஜாங்க உறவே கிடையாது.” என்றார் மாமா.
ஆக, இந்தியாவில் ஆங்கிலேயர்களைவிட அதிக காலம் ஆட்சி நடத்தியவர்கள்தான் போர்ச்சுகல்தான். 450 ஆண்டுகள் இங்கே இருந்திருக்கிறார்கள்.
“பாண்டிச்சேரியிலும் இப்படித்தானா? பிரெஞ்சுக்காரர்களும் போக மறுத்தார்களா?” என்றான் பாலு. “கிட்டத்தட்ட இப்படித்தான். ஹைதராபாத் நிஜாமுடனும் இப்படித்தான். அந்தக் கதையை எல்லாம் இன்னொரு சமயம் சொல்கிறேன்.” என்றார் மாமா.
“ஏன் எங்கள் பாடப் புத்தகத்தில் இந்தச் சரித்திரம் எல்லாம் சொல்லவில்லை?” என்றேன்.
“சொல்லாமல் விட்டது தப்புதான். இப்போது பாடப் புத்தகங்களை புதிதாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களிடம் கருத்துக் கேட்கிறார்கள். அவர்களுக்கு கடிதம் எழுது.” என்றார் மாமா.
“வாலு, கடிதம் சொல்கிறேன். டைப் செய்.” என்றேன்.
வாலு டைப் செய்ய ஆரம்பித்தது.

உலகத்திலேயே மிக அதிகமான கோவா பழங்கள் (கொய்யா) உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். ஓராண்டில் ஒரு கோடியே எழுபது லட்சம்
டன் விளைகிறது.

வாஸ்கோட காமா கேரளத்துக்கு பலமுறை வந்து ஆதிக்கத்தை நிலைநாட்ட தன் முரட்டுத்தனத்தால் முயற்சித்தபோது, அவரைக் கொல்ல அங்கே சதி நடந்து முறியடிக்கப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு 'உருமி' என்ற மலையாளப் படத்தை ஒளிப்பதிவாளர் இயக்குநர் சந்தோஷ் சிவன் உருவாக்கியிருக்கிறார்.

No comments:

Post a Comment