Tuesday 17 December 2019

MAADI VEETTU ELAI - DROPPED MOVIE


MAADI VEETTU ELAI - DROPPED MOVIE




அது, 1961ம் ஆண்டு -
நண்பரும், வினியோகஸ்தருமான, ஜூப்ளி பிலிம்ஸ், வி.கோவிந்தராஜுலுவுடன் அவரது அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தார், சந்திரபாபு. அவரை, சுருக்கமாக, வி.ஜி., என்று அழைப்பார், சந்திரபாபு.
'நான் ஒரு படம் தயாரிக்கப் போறேன்; அதை, நீங்க தான் செய்து தரணும்...' என்றார், வி.ஜி.,
'பண்ணலாமே...' என்றார் சந்திரபாபு.
'நீங்களே ஒரு கதை சொல்லுங்க; ஒரு நகைச்சுவை படத்தை தயாரிப்போம்...' என்றார், வி.ஜி.,
அதற்கு சந்திரபாபு சம்மதிக்க, சில நாட்கள் கழித்து மீண்டும் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, பரிசு படத் தயாரிப்பாளர், கே.டி.சுப்பையா அங்கு வந்தார். படம் எடுப்பது பற்றி பேசுகின்றனர் என்று தெரிந்ததும், 'உங்கள் படத்துக்கு நானே பணம் போடுறேன்; குறுகிய காலத்தில் எடுத்து முடிப்போம்; சம்மதமா?' எனக் கேட்டார்.
'சம்மதம்...' என்றனர் இருவரும்!
'ஆனால், ஒரு நிபந்தனை...' என்றார் சுப்பையா.
'என்ன?' என்று கேட்டார், சந்திரபாபு.
'இப்போது, எம்.ஜி.ஆருக்குதான் நல்ல மார்க்கெட். அதனால், அவரை வைத்து படம் எடுத்தால், பணமும், புகழும் நிறைய கிடைக்கும்; என்ன சொல்றீங்க...' என்றார், சுப்பையா.
சந்திரபாபுவும் சினிமா உலகில் உச்சத்தில் இருந்த காலம் அது!
'நான் தான் டைரக்டர், கதாசிரியர் என்றால், எம்.ஜி.ஆர்., கண்டிப்பாக மறுக்க மாட்டார்...' என்ற எண்ணத்தில், சுப்பையாவின் யோசனைக்கு சம்மதித்தார், சந்திரபாபு.
'என்ன கதை?' என்று கேட்டார், சுப்பையா.
தான் முடிவு செய்து வைத்திருந்த மாடி வீட்டு ஏழை கதையைச் சொல்லத் துவங்கினார், சந்திரபாபு.
'இது, சமுதாயத்தின் ஏற்ற, இறக்கங்களை சாடும், புரட்சிகரமான கதை; இக்கதையில், ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர். அவருக்கு ஏழையைப் போல், குடிசையில் வசிக்க ஆசை. அதனால், தன் பணத்தை எல்லாம் ஒரு பரம ஏழையிடம் ஒப்படைத்து, குடிசைக்கு போக நினைக்கிறார். இதில், நானும், மிஸ்டர் எம்.ஜி.ஆரும் இரு கோமாளிகள்...' எனத் துவங்கி, முழுக் கதையையும் சொல்லி முடித்தார் சந்திரபாபு. கதை, வி.ஜி.,க்கும், சுப்பையாவுக்கும் மிகவும் பிடித்துப் போனது.
எம்.ஜி.ஆருடன் பேச நேரம் வாங்கப்பட்டது.
எம்.ஜி.ஆரின் ராமவரம் தோட்டத்தில், அவர்களின் சந்திப்பு நடைபெற்றது.
படத்தைப் பற்றி பேசி முடித்ததும், கதையை, மறுநாள் மாலை, 6:00 மணிக்கு கூறுவதாக சொன்னார், சந்திரபாபு.
சொன்னபடி, மறுநாள், கதை சொல்ல சென்றார்.
கடந்த கால நிகழ்வுகளைப் பற்றி இருவரும் சிறிது நேரம் பேசினர். அப்போது, 'பாபு சார்... என்னைப் பற்றி ஒரு பத்திரிகையில் தாறுமாறாக எழுதியிருந்தீங்க. அதற்காக நான் வருத்தப்படல; அது, உங்க சொந்த எண்ணம்; அதை நான் எப்படி கட்டுப்படுத்த முடியும்...' என்றார், எம்.ஜி.ஆர்.,
'உங்களப் புண்படுத்தும் எண்ணத்தில், அந்தக் கட்டுரைய எழுதல; அது, உங்களப் காயப்படுத்தியிருந்தால் மிகவும் வருந்துறேன்...' என்றார்.
'சரி விடுங்க; படத்தோட கதைய சொல்லுங்க...' என்றார், எம்.ஜி.ஆர்.,
விரிவாக கதையை சொல்லத் துவங்கினார், சந்திரபாபு. டைட்டில், பின்னணி இசை, பாடல்கள் என, விளக்கமாக சொல்லி முடித்த போது, இரண்டரை மணி நேரம் கடந்திருந்தது.
எல்லாவற்றையும் அமைதியாக கேட்ட, எம்.ஜி.ஆர்., 'பாபு சார்... அருமையான கதை; நீங்க எனக்கு ரெண்டு சத்தியம் செய்து தரணும்; ஒண்ணு, இக்கதைய வேறு யாரிடமும் சொல்லக் கூடாது...' என்றார்.
'நாம்தான் படம் எடுக்கப் போவது முடிவாகி விட்டதே... நான் வேறு யாரிடம் சொல்லப் போறேன். சரி, ரெண்டாவது சத்தியம் என்னன்னு சொல்லுங்க...' என்றார்.
'நீங்க கொஞ்சம் காலம் பொறுமையாக காத்திருக்கணும்...' என்றார், எம்.ஜி.ஆர்.,
'பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா...' என, கேலியாக சொல்லிச் சிரித்த சந்திரபாபு, 'நீங்க இந்த படத்திற்கு எவ்வளவு எதிர்பாக்கிறீங்க... முன் தொகை எவ்வளவு, எப்போது பூஜை வைச்சுக்கலாம்...' என்று கேட்டார்.
ஆறு இலக்கத்தில், பெரிய தொகையைச் சொன்ன எம்.ஜி.ஆர்., அதில் பெரும் பகுதியைக் கறுப்பாகவும், மீதியை வெள்ளையாகவும் கேட்டார். (இதை பிலிமாலயா பத்திரிகையில், தான் எழுதிய, மாடி வீட்டு ஏழையின் கண்ணீர் கதையில் குறிப்பிட்டுள்ளார், சந்திரபாபு.)
'சரி; நீங்க பூஜைக்கு தேதி சொல்லும்போது, முன்பணம் தர்றேன்...' என்று பேரம் ஏதும் பேசாமல் ஒப்புக்கொண்டார், சந்திரபாபு.
'அதற்கென்ன பாபு... உங்க இஷ்டப்படி செய்யுங்க...' என்றார் எம்.ஜி.ஆர்.,
அதற்குப் பின், வி.ஜி.,யையும், சுப்பையாவையும் சந்தித்து, நடந்தவற்றையெல்லாம் சொன்னார், சந்திரபாபு. இங்குதான் விதி விளையாடத் துவங்கியது.
அவர்கள் சந்திரபாபுவிடம், 'நாம் மூவரும் பங்குதாரர்கள்; நாங்கள் பணம் போடுறோம். நீங்கள் நடிப்பு, கதை, வசனம், டைரக் ஷனுக்கான தொகைக்கு பதிலாக ஒரு பார்ட்னராகி விடுங்கள்...' என்று கூற, அதற்கு ஒப்புக்கொண்டு, பத்திரங்களில் கையெழுத்திட்டு, பங்குதாரர் ஆனார், சந்திரபாபு.
அதன்பின் நடந்ததை சந்திரபாபுவே சொல்கிறார்:
பூஜைக்கு தேதி குறிக்கப்பட்டது; சாவித்திரியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தோம். கண்ணதாசனை அழைத்து, இரு பாடல்களை எழுதி வாங்கினோம். இரு பாடல்களுக்கும், 10 ஆயிரம் ரூபாய் வாங்கினார், கண்ணதாசன். எம்.ஜி.ஆருக்கு முன் பணம், 25 ஆயிரம் ரூபாய் தரவேண்டும்; சுப்பையாவுக்கு போன் செய்து, பணம் கேட்டேன்.
நல்ல நிலையில் இருந்த சுப்பையா, மிக குறுகிய காலத்தில், ஏழு படங்களை தயாரிக்கப் போவதாக விளம்பரப்படுத்தி, அகலக் கால் வைக்க, அது, முதலுக்கே மோசமாகி விட்டது.
அவர், 250 ரூபாய்க்கே கஷ்டப்பட்டார்; 25 ஆயிரம் ரூபாய்க்கு எங்கே போவார்... வி.ஜி.,யும் கையை விரித்து விட்டார். 'பூஜை முடியட்டும்; ஏரியாக்களை விற்று பணம் புரட்டி விடுகிறேன்...' என்றார் சுப்பையா.
அதை நம்பி நானே பணத்துக்கு ஏற்பாடு செய்யத் துவங்கினேன்.
எந்த நேரத்திலும், அன்போடு உதவுகிற சாவித்திரியிடம், என் வீட்டின் பேரில், 25 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டேன். மறுப்பு சொல்லாமல் பணம் கொடுத்தார், சாவித்திரி.
பணத்துடன், எம்.ஜி.ஆரின் தோட்டத்துக்கு சென்றேன். அங்குள்ள ஒரு அவுட் ஹவுசில் என்னை சந்தித்தார், எம்.ஜி.ஆர்., பூஜைக்கான தேதியை குறித்துக் கொண்டு, 25 ஆயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்தேன்.
'பாபு சார்... அருமையாக செய்துடுவோம்...' என்று கூறி, பணத்தைப் பெற்று,
'சரி, புறப்படுங்கள்; மற்ற வேலைகளைப் பாருங்கள்...' என்று சொல்லி, ஒரு மரத்தடிக்கு சென்று, சுற்றும் முற்றும் பார்த்து, யாரும் இல்லை என்பதை உறுதி செய்து, ரூபாய் நோட்டுகளை இடுப்பில் செருகிக் கொண்டு உள்ளே போனார், எம்.ஜி.ஆர்.,
— தொடரும்.

No comments:

Post a Comment