Monday 11 December 2017

DEATH IS A CELEBRATION , -OSHO BORN DECEMBER 11,1931


DEATH IS A CELEBRATION , 
-OSHO BORN DECEMBER 11,1931


ஓஷோ 1931 டிசம்பர் 11 இல் மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தார். குச்வாடா ஓஷோவுடைய தாய் வழி தாத்தா, பாட்டி வாழ்ந்து வந்த ஊர். முதல் ஏழு வருடங்கள் அங்கேதான் வளர்ந்தார். ஓஷோவுடைய பெற்றோர்கள் கடர்வாடாவில் வசித்து வந்தார்கள். தாத்தா இறந்த பிறகு பாட்டியுடன் கடர்வாடா வந்து விட்டார்.
ஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ தன்னுடைய இருபத்து ஒன்றாவது வயதில் அதாவது 1953 மார்ச் 21 இல் ஞானம் அடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும் கெளதமபுத்தர், கபீர், இரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர்.
கல்வி[மூலத்தைத் தொகு]

1956 ல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் பல்கலைகழகத்திடமிருந்து முதுகலை பட்டம் பெறுகிறார். அவர் தனது பட்ட படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவனாவார்.
1957 ல் ரெய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ஓஷோ பேராசிரியராக நியமனம் பெறுகிறார். 1958 ல் ஜபல்பூரில் உள்ள பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராக நியமனம் பெற்ற ஓஷோ 1966 வரை அங்கேயே கல்வி கற்பிக்கிறார்.
1966 ல் ஒன்பது வருட பேராசிரியர் வேலையை விடுத்து, மனித குலத்தின் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார். 1970 ஏப்ரல் மாதம் 14ந் தேதி அவர் தனது ஒப்புயர்வற்ற தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகம் செய்கிறார்.
பம்பாய் வருடங்கள்[மூலத்தைத் தொகு]

1970 ஜூலையில் மும்பைக்கு வந்த அவர் 1974 வரை அங்கேயே வசித்தார். இந்த கால கட்டத்தில் பகவான் ஸ்ரீ ரஜனீஷ் என்று அழைக்கப்பட்ட அவர் ஆன்மீக சாதகர்களுக்கு தீட்சை அளித்து சிஷ்யர்களாக்கினார். தன்னை கண்டறிதலும் தியானமும் கொண்ட புது சந்நியாசம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பாதையில் வெளி உலகை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கடந்த காலத்தை, ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை மேல் சுமத்தும் மனக்கட்டுத் திட்டங்களை, நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பு முறையைத்தான் துறக்க வேண்டுமெனச் சொல்கிறார்.
ரஜனீஷ்புரம்[மூலத்தைத் தொகு]

தரிசு நிலமாக பாழடைந்துள்ள மத்திய ஓரேகானின் பகுதியிலிருந்து ரஜனீஷ்புரம் என்ற நகரம் உருப்பெறுகிறது. அதில் 5000 பேர் வசிக்க ஆரம்பிக்கின்றனர். கோடைகால கொண்டாட்டம் அங்கு நடத்தப்படுகிறது. அதில் உலகம் முழுவதிலும் இருந்து 15,000 பேர் பங்கேற்கின்றனர். வெகு விரைவிலேயே அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் ரஜனீஷ்புரம் மிகப் பெரிய அதே சமயம் மிகவும் சர்ச்சைக்கிடமான ஒரு ஆன்மீக்குடியிருப்பாக மலர்கிறது. கம்யூனிற்க்கும் புதுநகருக்கும் அதன் வளர்ச்சியோடு கூடவே எதிர்ப்பும் வலுக்கிறது.
கம்யூன் அழிக்கப்படுகிறது[மூலத்தைத் தொகு]

1985 செப் 14ந் தேதி ஓஷோவின் அந்தரங்க காரியதரிசியும் மற்றும் கம்யூனின் பொறுப்பில் உள்ள சில அங்கத்தினர்களும் திடீரென கம்யூனை விட்டு வெளியேறுகின்றனர், அவர்கள் செய்த கொலை முயற்சி, டெலிபோன் உரையாடலை பதிவு செய்தல், விஷம் கொடுத்தல், தீ வைத்தல் போன்ற சட்ட விரோதமான பல செயல்கள் அம்பலமாயின நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஓஷோ போலீஸ் துறையினரை அழைக்கிறார். ஆனால் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் இந்த புகாரை கம்யூனை அழித்துவிட கிடைத்த தங்கமான வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்கின்றனர்.
அக்டோபர் 28 - எந்தவித வாரண்ட்- டும் இல்லாமல் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரியும் உள்ளூர் போலீஸும் சேர்ந்து ஓஷோவையும் மற்றவர்களையும் துப்பாக்கி முனையில் நார்த் கரோலினாவில் உள்ள சார்லெட்டில் கைது செய்கின்றனர். மற்றவர்களை விடுதலை செய்துவிட்டு ஓஷோவை மட்டும் பனிரெண்டு நாட்களுக்கு ஜாமீன் கொடுக்காமல் பிடித்து வைத்திருக்கின்றனர்.

அங்கே சிறையில் இருந்த போதுதான் அவருக்கு ‘தாலியம்' என்ற கொடுமையான விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
உலக சுற்றுப் பயணம்[மூலத்தைத் தொகு]
1986 ஜன, பிப்ர - ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வருகிறார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுக்கிறது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் புறப்படுகிறார்.
பிப்ர, மார்ச் - முதல் நாடாக அவர் முப்பது நாட்கள் சுற்றுலா விசாவில் கிரீஸில் தங்குகிறார். ஆனால் பதினெட்டு நாட்களுக்கு பின் மார்ச் 5ந் தேதி அவர் தங்கியிருந்த வீட்டிற்க்குள் கதவை உடைத்து உள்ளே வந்த போலீஸ் அவரை துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்துச் சென்று அவரை நாட்டை விட்டு வெளியேற்றுகிறது. அரசாங்கம் மற்றும் சர்ச் ஆகியவையே போலீஸை இந்த செயல் செய்யத் தூண்டின என கிரீஸ் பத்திரிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன.

இதைத் தொடர்ந்து அவர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயண அனுமதி கேட்கவோ, சுற்றுப்பயணமாக செல்லவோ முயற்சிக்கிறார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றன. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை.
21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடைபோட்டன அல்லது அவர் வந்திறங்கி விட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. 1986 ஜூலை 29ந் தேதி அவர் இந்தியா பம்பாய்க்கு திரும்ப வந்துசேர்கிறார்.
ஓஷோ மரணம்[மூலத்தைத் தொகு]
1990 ஜனவரி 19 மாலை 5 மணிக்கு ஓஷோவின் உடலை விட்டு உயிர் பிரிந்தது.
சொத்துக்காக சொந்த சீடர்களால் கொல்லப்பட்டாரா ஓஷோ? 26 வருடத்திற்கு பிறகு துரத்தும் வழக்கு

மும்பை: தத்துவ ஞானி ஓஷோ சொத்துக்காக கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் கிளம்பியுள்ளது. ஓஷோவின் சீடர் ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த ஓஷோ எனும் ரஜ்னீஷ், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் சீடர்களை பெற்றார். இவரது தத்துவங்கள் மனிதர்களை குழப்பி அதன்பிறகு உண்மையை கண்டறிய வழிகாட்டுபவை என்பதால் ஓஷோ மீது ஈர்ப்பு அதிகரித்தது
ஐரோப்பா, அமெரிக்காவில் ஓஷோ மாற்று மதத்தை பரப்புவதாக அங்குள்ள மத குழுக்கள் கடும் ஆத்திரம் அடைந்தன. இந்நிலையில், அமெரிக்காவில் ஒரேகான் பகுதியில் ரஜ்னீஷ்புரம் என்ற ஆன்மிக நகரத்தை ஓஷோவின் சீடர்கள் உருவாக்கினார்கள்.
அவரை விட்டுவைக்க கூடாது என கருதிய அமெரிக்கா, புரட்சிகரமான கருத்துகளைப் பரப்பியதாகக் கூறி, அவரைக் கைது செய்தது. எந்த நாடு புரட்சி, நாகரீகம் என பேசுகிறதோ அதே நாடு, புரட்சி பேசுவதாக கூறி ஆன்மீகவாதி ஓஷோவை கைது செய்ததுதான் இதில் கவனிக்க வேண்டியது.
அமெரிக்கச் சிறையில் இருந்து விடுதலையான ஓஷோவுக்கு பல நாடுகளும் தடை விதித்தன. எனவே, கடைசியாக புனே ஆசிரமத்துக்குத் திரும்பினார். பூனே ஆசிரமத்தில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த ஓஷோ, 1990ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி மரணமடைந்தார்.

சிறையில் இருந்தபோது, உணவில் அவருக்கு கொஞ்சம், கொஞ்சமாக கொல்லும் 'ஸ்லோ பாய்ஷன்' கொடுக்கப்பட்டாதாக அமெரிக்கா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த ஸ்லோ பாய்ஷன்தான் ஓஷோவின் உயிரைப் பறித்தது என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், ஓஷோவின் நெருக்கமான ஜான், ஜெயேஷ் என்ற இரு சீடர்கள், ஓஷோவின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு அவரைக் கொன்றதாக யோகேஷ் தாக்கர் என்ற மற்றோரு சீடர் 26 வருடங்கள் கழித்து இப்போது குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஓஷோவின் மர்ம மரணம் பற்றி விசாரிக்க வேண்டும் என்று யோகேஷ் தாக்கர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். ஓஷோவின் மரணச் சான்றிதழை வழங்கிய டாக்டர் கோகனியின் பிரமாண பத்திரத்தையும் இணைத்துத் தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த பிரமாண பத்திரத்தில் டாக்டர் கோகனி கூறியிருப்பது: '1990 ஜனவரி 19-ம் தேதி மதியம், பூனே ஓஷோ ஆசிரமத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. 'உடனே ஆசிரமத்துக்கு வாருங்கள்' என போனில் பேசியவர் என்னிடம் கூறினார். உடனே நான், ஆசிரமத்துக்குச் சென்றபோது ஓஷோவின் சீடர்கள் ஜான் அன்டிவ் மற்றும் ஜெயேஷ் ஓஷோ அருகில் அமர்ந்திருந்தனர்.
'ஓஷோ உடலைவிட்டுச் சென்றுக்கொண்டிருக்கிறார்' என்று ஜான் கூறினார். நான் ஓஷோவின் உடலைத் தொட்டுப் பார்த்தபோது, உடல் வெதுவெதுப்பாக இருந்தது. ஆனால் ஜானோ, 'ஓஷோ இறக்கப்போகிறார். சீக்கிரம் மரணச் சான்றிதழை எழுதுங்கள்' எனக் கூறி என்னை அவரசப்படுத்தினார்.
போஸ்ட்மார்டத்தைத் தவிர்க்க, 'இதயம் தொடர்பான காரணத்தால் ஓஷோ இறந்தார்' என என்னை அறிக்கை தரச் சொன்னார்கள். ஜானும், ஜெயேஷும் ஏன் ஓஷோ இறப்பதற்காகக் காத்திருந்தர்கள் எனத் தெரியவில்லை.
அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால், ஆசிரமத்தில் இருக்கும் மருத்துவர்களை அழைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் என்னை அழைத்தது மரணச் சான்றிதழை வாங்கவே அவர்கள் முற்பட்டனர். இவ்வாறு டாக்டர் கோகனி கூறியுள்ளார்.
ஓஷோ இறந்த ஒரு மணி நேரத்தில் அவரது உடலைத் தகனம் செய்ய வேண்டும்' என ஜானும், ஜெயேஷும் அவசர அவசரமாக வேலையில் இறங்கியுள்ளனர்.
ஓஷோவின் பூனே ஆசிரமத்தின் மதிப்பு ரூ.1,000 கோடி இருக்கும். இந்த ஆசிரமம் மூலம் ஜானுக்கும், ஜெயேஷுக்கும் வருடத்துக்கு ரூ.100 கோடி வருமானம் வருகிறது. ஜானும், ஜெயேஷும் சேர்ந்து வெளிநாடுகளில் 20 நிறுவனங்களைத் தொடக்கி, ஓஷோவின் ரூ.800 கோடி சொத்துக்களை அபகரித்துள்ளனர். இவ்வாறு யோகேஷ் தாக்கர் கூறியுள்ளார்.

யோகேஷ் தாக்கர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், வெளிநாட்டில் ஒருக்கும் ஓஷோவின் உயிலை இந்தியாவுக்குக் கொண்டுவந்து சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மரணத்தை கொண்டாட்டமாக பார்க்க சொன்ன, ஓஷோவின் மரண விவகாரம் இப்போது திண்டாட்டமாகியுள்ளது.




ஓஷோ தன் உரைகளில் மனதின் இரட்டை நிலைகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் காந்தியை இழுக்கிறார் என்றே தோன்றுகிறது. மனம் நிச்சயமாக ஒருவழிப்பாதை இல்லை என்று ஏராளமான விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.
இந்தியாவின் பழமைவாத ஒழுக்கம் என்பது எப்பொழுதும் மனதின் ஒருவழிப்பாதையைப் பற்றி மட்டுமே பேசி வந்துள்ளது. ஒரே ஆணை வாழ்நாளெல்லாம் பூஜித்து வருவது, ஒருவனுக்கு ஒருத்தி, எத்தனையோ பொய் சொல்ல வேண்டிய தருணங்களிலும் வற்புறுத்தி உண்மையே பேசுவது, கோபம் பொத்துக்கொண்டு வரும் போதெல்லாம் அதை அடக்கி வைப்பது, சாந்தமாகப் பேச முயற்சி செய்வது. இதன் உச்சநிலையாக இயல்பாகக் கடந்து செல்ல வேண்டிய பாலுணர்வை, அடக்கி, காயப்படுத்தி, ஒரு நோயாளி போல் திரிவது. இந்த ஒருவழிப்பாதையில் மனம் பயணம் செய்தால்தான் வாழ்க்கை ஒரு நேர்கோடு போல சரியாக இருக்கும் என்பது தர்க்க மனதின் ஒரு தேற்றம்.


ஆனால் நிஜத்தில் மனம் இரட்டை நிலையைக் கொண்டுள்ளது. அதற்கு செக்ஸ் தேவைப்படுகிறது. கோபம், பொய், கபடம், வஞ்சம், வன்மம் எல்லாம் அதில் கலந்துள்ளது. ஒன்றின் இருப்பை இன்னொன்று ஞாபகப்படுத்துவது போல், சரியானது எப்பொழுதும் தவறானதை ஞாபகப்படுத்தி விடுகிறது. அதனால் இரட்டை நிலையைப் புரிந்துகொண்டவர்கள் சமன்நோக்கு பற்றி சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள்.
காந்தி தனது சுயசரிதையில் சொல்வதாக எப்பொழும் ஓஷோ குறிப்பிடுவது, தான் 20 ஆண்டுகளாக பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து வந்தாலும் இப்பொழுதும் தூங்குவதற்கு முன்னால் பாலுணர்வு எண்ணங்களில் இருந்து மனதைக் காக்க புத்தகங்களை கண்சொக்கும் வரை படிக்க வேண்டியதிருக்கிறது என்று காந்தி கூறியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு மனிதன் மனதின் இரட்டை நிலையை இத்தனை வருடங்களாகப் புரிந்து கொள்ளாமல் இப்படியா பாலுணர்வை ஒரு குளவிக்கூடு போல ஆக்கிக் கொள்வான் என்கிற ஆதங்க நிலையாகக் கூட இருக்கலாம்.
காந்தி உடலையும், மனதையும் வற்புறுத்துவதில் மட்டுமே தேர்ச்சி பெற்றவர். அவர் நிச்சயமாக ஒரு ஆன்மீக எடுத்துக்காட்டாக இருக்க முடியாது. ஆனால் காந்தி தான் எடுத்துக்கொண்ட ஒரு விஷயத்துக்காக எடுத்துக்கொண்ட நேர்மை அதீதமானது. அந்த அளவுக்கே அவரைக் கொண்டாடலாம்.
தன் பிரியத்திற்குரிய நானி இறந்தபோதுகூடக் கண்ணீர்விடாத ஓஷோ, காந்தி இறந்தபோது தாரை தாரையாகக் கண்ணீர் விட்டதாகக் கூறியுள்ளார். எதனால் அப்படி என்று தனக்கே விளங்கவில்லை என்று கூறியுள்ளார். காந்தியின் உடலைப் பார்ப்பதற்காக ரயிலேறிச் சென்றதாகக் கூறியுள்ளார். ஓஷோவின் தந்தை இந்தக் காட்சியை எல்லாம் பார்த்துவிட்டு உன்னை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று கூறியதாகக் கூட எழுதியுள்ளார்.
ஓஷோவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியில்,
காந்தி ஏன் தனக்குத் துணையாக இரண்டு பெண்களை அருகில் வைத்துக் கொண்டார், என்று கேட்கப்பட்டது. அதற்கு ஓஷோவின் பதில்,
இது காந்தி பிரம்மச்சரியத்தில் செய்த மாபெரும் புரட்சி என்று எழுதியுள்ளார்.
அதாவது பிரம்மச்சரியத்தின் உச்சம் என்பது பெண்கள் மீதான முழுதான காமம் கடந்த நிலை, அந்நிலையில் பெண்களை அருகில் வைத்துக் கொள்வதில் எந்தவிதமான உள்மனக் குத்தலும், தயக்கமும் இல்லாமல் இயல்பாக காந்தியைப் போல் இருக்கமுடியம் என்பதாக அதன் அர்த்தம் என்றே நினைக்கிறேன்.

ஓஷோவின் காந்தி மீதான சில நுண்மையான வாதங்களை அவதானிக்கும்போது, அவருக்கு காந்தியின் நேர்மை மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்ட ஆதங்கம் மட்டுமே விரவலாக அவருடைய பேச்சில் தெரிவதால் காந்தியை வசைபாடுகிற ஓஷோவே பரவலாகக் காணப்படுகிறார்.
காண்டேகரின் யயாதி நாவலில் ஒரு இடத்தில் முகுலிகை (பணிப்பெண்) கூறுவாள், தன்னிடம் வரமாட்டேன் என்று முதல்நாள் கூறிவிட்டுச் சென்ற யயாதி (அரசன்), மறுநாள் அவளிடம் சரசம் செய்வதற்காக வந்து நிற்பான், ஆனால் முகுலிகை அவன் வரவை எதிர்பார்த்து தன்னை தயார்செய்து கொண்டு வாசலிலேயே நிற்பாள். யயாதி கேட்பான்,‘நான்தான் வரமாட்டேன் என்று சொன்னேனே, நீ எப்படி எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாய்”? அதற்கு முகுலிகை கூறுவாள்,

‘ஆண்களைப் பொறுத்தவரை பெண்களிடம் அவர்களின் பதில் வாயிலிருந்து வருவதில்லை கண்களிலிருந்துதான் வருகின்றன, நேற்று நீங்கள் பார்த்த பார்வையில் வருவேன் என்றுதான் கூறினீர்கள்.’
முகுலிகையைப் போல் அவதானிக்கத் தெரிந்தால், ஓஷோவுக்கு காந்தியின் நேர்மை மீதான மதிப்பு வெளிப்படையாகத் தெரியும் என்றே நினைக்கிறேன். அவரின் காந்தி மீதான வசவு, மனதின் இரட்டை நிலை மீதான வசவு என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
-சூர்யா


அன்புள்ள சூர்யா,
உங்கள் கடிதத்தில் பெரும்பாலும் எனக்கு உடன்பாடே. சில மேலதிகக் குறிப்புகளை மட்டும் கொடுக்க விரும்புகிறேன், நான் முன்பே எழுதியவைதான்.
காந்தி கடைப்பிடித்த காமம் சார்ந்த நோக்கு என்பது இந்தியாவின் பழமைவாத அணுகுமுறை அல்ல. இந்தியாவின் மரபு காமத்தைப் பார்த்த விதம் மூன்று தளங்களில் இருந்தது எனலாம்.
ஒன்று சாதாரண மனிதர்களுக்கான அன்றாட ஒழுக்க நோக்கு. அது காமத்தை ஒரு பெரும்பாவமாக எண்ணி அதற்கு எதிராக புலன்களை இறுக்கி மனதை நெருக்குவதல்ல. முடிந்தவரை அதைச் சீண்டாமல் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது மட்டுமே. மனதை வேறுவிஷயங்களில் திசைதிருப்புவதும், காமத்தைக் கலையாக உன்னதப்படுத்திக்கொள்வதும் அதன் உத்திகள்.
இரண்டாவது தளம் துறவிகள் மற்றும் யோகிகளுக்குரியது. அது முழுமையான ஒரு பயிற்சியாக பல படிகளாக இங்கே வளர்ந்திருந்தது. காமத்தை அவதானிப்பது, அதைக் காமத்தைவிட பெரிய மனநெகிழ்வுகள் மூலம் விலக்குவது, சிந்தனைத்தளத்தில் அதை அற்பமானதாக சுருக்கிக்கொள்வது, அதற்கான உடல்சார்ந்த பயிற்சிகள், அதற்குரிய அக-புறச்சூழல்களை உருவாக்கிக் கொள்வது எனப் பல நடைமுறைவழிகள் அதற்குண்டு.
மூன்றாவது தளம் தாந்த்ரீகம். காமத்தைக் குறியீடாக ஆக்கிக்கொள்வது, அக்குறியீட்டுச் செயல்பாடுகள் மூலம் அதைக் கடந்துசெல்வது என அதற்கான வழிகள் இருந்தன.
இம்மூன்று வழிகளுக்குள்ளும் காந்தியின் காமம் சார்ந்த எண்ணங்களும் சோதனைகளும் அடங்காது. காந்தியின் காமம் சார்ந்த மனப்படிமம் அவரது குடும்பத்தின் சமணப்பின்னணியில் இருந்து வந்தது. அவரது ஆரம்பகால குருவான ராஜ் சந்திராவிடமிருந்து கற்றுக்கொண்டது. ஆனால் அவரிடமிருந்து புலனடக்கத்தை ஒரு யோகமாக முழுமையாகக் கற்க காந்திக்கு வாய்க்கவில்லை.
காந்தி இளவயதிலேயே பழகிய மேலைச்சூழலே காமம் சார்ந்த அவரது சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் வடிவமைத்ததில் பெரும்பங்கு வகித்தது. அவர் சமணத்தின் தரிசனத்தை விக்டோரிய ஒழுக்கவியலுடன் கலந்துகொண்டார். பிரம்மசரியம் என்பது யோகம். காந்தி அதைக் கிறித்தவமரபின் மூர்க்கமான புலனொறுத்தலுடன் இணைத்துக்கொண்டார்.
காந்தியின் பிரம்மச்சரிய சோதனைகளில் நிகழ்ந்த கொந்தளிப்புகளின் காரணம் இதுவே. ஒரு யோகமாகச் செய்யவேண்டியதை வெறும் பயிற்சியாகச் செய்தார். கடைசி காலத்தில் யோகப்பயிற்சிகளை முறையான குருவழிகாட்டல் இல்லாமல் செய்ய ஆரம்பித்தார்.
ஆனால் ஒன்றுண்டு, காமத்தைப்பற்றிய அறிதலில் காந்தி எந்த அளவுக்குத் தவறான முன்னுதாரணமோ அந்த அளவுக்கு ஓஷோவும் தவறான முன்னுதாரணம்தான். ஓஷோ சொன்னவை எல்லாமே எதிர்வினைகள். அதாவது காமத்தை அஞ்சி ஒடுங்கிய ஆசாரவாத மனதுக்கு அவர் அளித்த எதிர்ப்பு மட்டும்தான் அவை.
ஓஷோ காமம் பற்றிச் சொல்பவை எல்லாமே வெறுமே வாசிக்கவும் அரட்டையடிக்கவும் மட்டுமே உகந்தவை. அதற்கு அப்பால் எவராவது அதை முயற்சி செய்தால் முதல்படியிலேயே படுதோல்வியை உணர்வார். அது அவரை மனச்சிக்கல்களுக்கே கொண்டுவந்து சேர்க்கும்.
அதாவது காந்தி சொன்ன மூர்க்கமான காம ஒடுக்குதல் எந்த அளவுக்கு அபத்தமானதோ அதே அளவுக்கு அபத்தமானது ஓஷோ சொன்ன காமத்தை விடுதலைசெய்து அவதானிக்கும் வழிமுறை. ஓஷோவை வாய்க்கு அவலாக இல்லாமல் உண்மையாக அவதானித்தவர்கள் மிக விரைவிலேயே இதை அறிவார்கள்.
காந்தியின் வழிமுறையைக் கடைப்பிடித்தவர் இறுக்கமான மனிதராக ஆவார். ஆனால் அவர் அந்த அர்ப்பணம் காரணமாக பல தளங்களில் வெற்றியை சாதிக்க முடியும். ஆன்மீகதளத்திலும் மக்கள்சேவை தளத்திலும். அப்படி சாதித்த பலரை நாம் காணமுடியும்.
ஆனால் ஓஷோ சொல்லும் வழியைக் கடைப்பிடித்தவர் தன் ஆளுமையை இழப்பார். வெறும் கேளிக்கையாளராக, உணர்வடிமையாக ஆவார். காமத்தால் முற்றாக விழுங்கப்படுவார். ஓஷோவின் மாணவர்களில் ஒருவர் கூட எதையும் அடையவில்லை. மிகப்பெரும்பாலானவர்கள் மிகச்சீக்கிரத்திலேயே அவரை நிராகரித்தனர். மிச்சப்பேர் போலிகளாக ஆனார்கள்.
சொல்லப்போனால் காந்திக்கும் அவருக்கு நெருக்கமான பெண்களுக்கும் இடையேயான உறவை விட ஓஷோவுக்கும் அவரது பெண்களுக்கும் இடையேயான உறவென்பது வன்முறையும் சுரண்டலும் நிறைந்ததாக இருந்தது. ஒரு பெண்ணிடமும் ஓஷோ நல்லுறவை அடையமுடியவில்லை. முதல்முதலாக மா ஆனந்த ஷீலா ஓஷோவைப்பற்றி அளித்த பேட்டி என்னை அதிரச்செய்ததை நினைவுகூர்கிறேன்.
ஏன்? காமம் ஒருபோதும் தனித்துச் செயல்படுவதல்ல. காமம் எப்போதும் அகங்காரத்துடன் கலந்தது. உங்கள் சொந்த அந்தரங்கப் பகற்கனவுகளை மட்டும் கவனியுங்கள் புரியும். காமம் மட்டும் என்றால் அதற்கு ஓர் எல்லை உண்டு. அகங்காரம் அதை எல்லையற்றதாக ஆக்கிவிடுகிறது. ஒரு கண்ணாடி முன் இன்னொரு கண்ணாடியை வைத்தால் இரண்டுமே எல்லையற்றதாக ஆகிவிடுவதுபோல.
காமத்தின் இந்த எல்லையற்ற தன்மையே அதை அபாயகரமானதாக ஆக்குகிறது. ஓஷோ சொன்னார் என வெள்ளந்தியாக காமத்தை அறிவதற்காக அதில் இறங்குபவன் கடலில் இறங்கிய உப்பு பொம்மையாகவே ஆவான்.
காமத்தை அறிவால் அவதானிக்க மனிதனால் முடியாது. அகங்காரத்தால்தான் அவதானிப்பான். காமம் மனித மனத்தின் அகங்காரத்தைச் சீண்டி அதை விதவிதமான பாவனைகள் கொள்ளச்செய்கிறது. காமத்தை வெல்கிறேன், காமத்தை அவதானிக்கிறேன் என்ற பாவனைகளும் அவற்றில் சிலவே.
காமத்தைக் கடந்துசெல்ல இந்திய மரபு உருவாக்கிய வழிமுறைகள் நூற்றாண்டுகள் பழமையானவை. பல்லாயிரம் பேரால் பல கோணங்களில் பயிலப்பட்டு மேம்படுத்தப்பட்டவை. அவை நூல்வடிவில் இல்லை. கொள்கைகளாக இல்லை. அவை ஆசாரங்களாகவும் பயிற்சிகளாகவும் உள்ளன. ஒரு நேரடிகுரு இன்றி அவற்றுக்குள் எவரும் செல்லமுடியாது.
ஓஷோவின் நூல்களின் சிக்கலே இதுதான். அவை இந்திய தாந்த்ரீக மரபில் மிக நுட்பமாகச் சொல்லப்பட்டவற்றின் மிக எளிமைப்படுத்தப்பட்ட வடிவங்கள். அவற்றை மேலோட்டமாகப் புரிந்துகொண்டு சும்மா பேசிக்கொண்டிருக்கலாம்.
பெரும்பாலானவர்கள் பேசிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதுதான் ஆறுதலானது. பேச்சு பேச்சாக இருக்கும் வரை ஆபத்தில்லை.

No comments:

Post a Comment