Wednesday 6 April 2022

HISTORY OF OLYMPIC SPORTS

 


HISTORY OF OLYMPIC SPORTS

ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய ஒரு முழுமையான வரலாறு.........

ஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது.

ஒலிம்பிக்கின் தோற்றம் பற்றிச் சரியாகத் தெரியாவிட்டாலும், அது குறித்துப் பல கதைகள் உள்ளன. ஜியஸ் கடவுளின் மகனான ஹெர்குலிஸ் தனது தந்தையைக் கௌரவிப்பதற்காக ஒலிம்பிக் விளையாட்டு அரங்கைக் கட்டினானாம். இது முடிவடைந்ததும், ஒரு நேர்கோட்டில் இருநூறு அடிகள் நடந்து அத் தூரத்தை ஒரு சுட்டேடியன் என அறிவித்தான். இது பின்னர் தூரத்தின் அளவாகக் கொள்ளப்பட்டது. கிமு 776 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டுகள் தோன்றியதாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஓட்டப் போட்டிகளுடன், பாய்தல் போட்டிகள், வட்டம் எறிதல், ஈட்டி எறிதல், மற்போர், குதிரை ஓட்டம் போன்ற போட்டிகளும் இடம் பெற்றன. மரபுக் கதைகளின்படி எலிசு என்னும் நகரைச் சேர்ந்த கொரோயெபசு என்னும் பெயர் கொண்ட சமையற்காரன் ஒருவனே முதல் வெற்றியாளன் ஆவான்.

zeus
ஒலிம்பிக் விளையாட்டு கிமு ஆறாம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் அதன் உச்சநிலையில் இருந்தது. ரோமானியரின் பலம் அதிகரித்துக் கிரேக்க நாட்டில் அவர்களின் செல்வாக்கு வலுப் பெற்றபோது ஒலிம்பிக்கின் முக்கியத்துவமும் படிப்படியாகக் குறையத் தொடங்கிற்று. இவ்விளையாட்டுக்கள் எப்போது நிறுத்தப்பட்டன என்பது குறித்து அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லாவிட்டாலும், முதலாம் தியடோசியஸ் எல்லாச் சிலை வணக்கச் சமயங்களையும், அவை தொடர்பான சடங்குகளையும் தடை செய்த ஆண்டான கிபி 393ல் நிறுத்தப்பட்டது என்பதே பெரும்பான்மைக் கருத்தாகும். அவனது வாரிசான இரண்டாம் தியடோசியஸ், எல்லாக் கிரேக்கக் கோயில்களையும் இடிக்கக் கட்டளையிட்டான்.


ரோமச் சக்கரவர்த்தி முதலாம் தியோடியோஸ் என்பவரால் தடைசெய்யப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் 1500 வருடங்களின் பின் 1896 ஏப்ரல் 6ம் தேதி அன்று திரும்பவும் தொடக்கப்பட்டது. ஏதென்ஸில் தொடக்கப்பட்ட இந்த ஒலிம்பிக் போட்டிகளின் முதல் நாள் 13 நாடுகளிலிருந்து வந்த விளையாட்டு வீரர்களை 60,000 ரசிகர்களுடன் கிரேக்க மன்னரான முதலாம் ஜோர்ஜியாஸ் வரவேற்று சிறப்பித்தார்.

கிரேக்கர்களின் கடவுள்களில் ஒருவரான ஜியஸ் கடவுளை போற்றும் வகையில் கொண்டாடப்பட்ட திருவிழாவின் ஒரு பிரிவுதான் ஒலிம்பிக்போட்டி. ஆரம்பத்தில் இந்த போட்டியில் கிரேக்க மரபினர் மட்டுமே கலந்து கொண்டனர். கி.மு 776 கிரேக்கத்தின் மாகாணங்களில் ஒன்றான எலிஸ்ஸின் ஒலிம்பியா நகரில் நடந்த விளையாட்டுப் போட்டியே முதலாவது ஒலிம்பிக் போட்டி என வரலாற்றுப் பதிவுகளில் காணப்பட்டாலும் அப்போட்டியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ள அப்போது 500 வருடங்களானது. புரதான ஒலிம்பிக் போட்டிகளும் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தான் நடத்தப்பட்டது. இந்த ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்கரின் முக்கிய கடவுளான ஸீஸஸ் (Zeus) என்பவருக்கு எடுக்கப்படும் திருவிழாக்காலங்களிலேயே நடத்தப்பட்டன.


அப்போதைய கிரேக்க சாம்ராஜ்யம் ஸ்பெயின், துருக்கி வரை பெரியாதாக
இருந்தது.

கி.மு 8ம் நூற்றாண்டில் 12க்கும் மேற்பட்ட கிரேக்க நகரங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் காலம் செல்ல செல்ல போட்டியாளார்கள் 100க்கும் அதிகமான நகரங்களிலிருந்து வந்து கலந்து கொள்ள தொடங்கினர். முதலில் தடகள ஓட்டப்பந்தயங்களால் மட்டும் ஆரம்பிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் பிற்காலத்தில் மற்றைய விளையாட்டுக்களான மல்யுத்தம், குத்துச் சண்டை, குதிரையோட்டம், மற்றும் இராணுவம் சம்மந்தமான வீர விளையாட்டுகள் போன்றவையும் சேர்க்கப்பட்டன, பெந்தலோன் ( The pentathlon,) எனப்படும் யாரவதொரு விளையாட்டு வீரர் ஐந்து வெவ்வேறு வகை போட்டிகளில் வெற்றி பெற்று முன்னணி வீரராக கருதப்படும் விதி முறை ஒலிம்பிக்கில் கி.மு 708 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. புரதான காலத்தில் இவ் விளையாட்டுப் பிரிவில் ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டல், நீளம் பாய்தல், குண்டெறிதல், தட்டெறிதல், ஈட்டியெறிதல் , மல்யுத்தம் என்பவை சேர்க்கப்பட்டிருந்தனவாம்.
இவ்விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் காலங்களில் நகர அரசுகளுக்கு இடையேயான போர்கள் அனைத்தும் போட்டிகள் முடியும்வரை ஒத்திவைக்கப்பட்டதாகப் பலரும் எழுதி உள்ளனர். இது ஒலிம்பிக் அமைதி அல்லது ஒலிம்பிக் போர் நிறுத்தம் என கூறப்பட்டது. ஆனால் இது தற்காலத்தில் எழுந்த ஒரு உண்மையல்லாத கருத்து எனவும் கிரேக்கர்கள் என்றுமே தமக்கு இடையேயான போர்களை ஒத்திவத்தது இல்லை எனவும் கூறுகின்றனர்.



பழங்கால ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ஆலிவ் இலைகளால் ஆனா கிரிடம் சூட்டப்பட்டது.

பின்னாளில் ரோம சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சியில் கி.பி 393 அளவில் ரோமின் சக்கரவர்த்தியாகிய முதலாம் தியோடோசியஸ் என்ற கிறிஸ்தவ மன்னர் ஒலிம்பிக் போட்டிகளை தடை செய்தார்.


அதன் பின் பல நூற்றாண்டுகளாக ஒலிம்பிக் போட்டி நடத்தப்படாமல் வரலாற்றில் பிரபலமாகாது போய்விட்டது. ஆனால் பல நூற்றாண்களாக இடம்பெற்ற குடிபெயர்வு, கலாச்சார பரிமாற்றம் போன்றவற்றினால் திரும்பவும் ஐரோப்பாவில் ரோமானியர்களின் நாகரீகம், விளையாட்டுத் துறை போன்றவற்றினைப் பற்றிய வரலாற்று ஆய்வுகள் போன்ற பலதரப்பட்ட முனைப்புகள் 18ம், 19ம் நூற்றாண்டுகளில் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சாரங்களின் அடையாளங்களுடனான விளையாட்டுப் போட்டிக்கு அதே பழைய பெயரையே வழங்கி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்று தொடக்கப்பட்டு கௌரவிக்கப்பட வித்திட்டன.


ஒலிம்பிக் போட்டிகளை திரும்பவும் தொடக்கவேண்டும் என்று 1892 ஆம் ஆண்டு பிரெஞ் நாட்டுக்காரரான பைரே டீ கோப்பேர்டின் (Pierre de Coubertin) என்ற இளைஞரால் முன்னெடுக்கப்பட்ட கோரிக்கை முயற்சி வலுவடைந்து இறுதியில் பாரிஸில் 1894 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த அகில உலக விளையாட்டுத்துறை மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. 9 நாடுகளைச் சேர்ந்த 79 அங்கத்தவர்கள் அவரது கோரிக்கையை மனப்பூர்வமாக ஆதரித்து ஒலிம்பிக் போட்டிகளை திரும்பவும் தொடக்கலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். புரதான கால ஏற்பாட்டைப் போலவே நவீன ஒலிம்பிக் போட்டிகளும் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன் பின் அகில உலக ஒலிம்பிக் சங்கம் (IOC)ஆரம்பிக்கப்பட்டு முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி கிரேக்கத்தின் தலைநகரான ஏதென்ஸ் நகரிலேயே 1896 ஆம் ஆண்டு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.

Pierre de Coubertin
இந்த போட்டியை அப்போதைய கிரிஸ் அரசர் முதலாம் ஜார்ச் அரசன்
தொடங்கிவைத்தார்.

இந்த முதல் நவீன ஒலிம்பிக் போட்டியில் 280 விளையாட்டு வீரர்கள் 13 நாடுகளிலிருந்து வந்து 43 வகையான போட்டிகளில் பங்காற்றினர். தடகள போட்டிகளோடு, நீச்சல், ஜிம்னாஸ்டிக், துவிச்சக்கர வண்டியோட்டப் போட்டி, மல்யுத்தம், பளுதூக்கல், துப்பாக்கி சுடல், மற்றும் டென்னிஸ் போன்றவையும் இணைக்கப்பட்டன. அத்தனை விளையாட்டு வீரர்களும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கி.மு 330ல் கட்டப்பட்ட பனாத்தனிக் விளையாட்டு அரங்கை (Panathenaic Stadium) திரும்பவும் புதிப்பித்து 1896ம் ஆண்டின் தடகளப் போட்டிகளை அங்கேயே நடத்தப்பட்டனவாம்.


இந்த ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க விளையாட்டு வீரர்கள் 12 போட்டிகளில் 9 போட்டிகளை வெற்றிகண்டனர், 1896ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கி.மு 490 ஆம் ஆண்டு ரோமானியர்கள் பெர்ஸீயன்களை போரில் வென்ற வெற்றிச் செய்தியை மராத்தன் என்ற இடத்திலிருந்து ஏதென்ஸ் நகருக்கு 25 மைல் தொலைவை ஒடிச் சென்று சேர்ப்பித்த கிரேக்க போர்வீரனின் நினைவாக மரத்தான் என்ற ஓட்டப் போட்டியும் சேர்க்கப்பட்டது. 1924ம் ஆண்டு இந்த மராத்தன் ஓட்டப் பந்தயம் 26 மைலும் 385 யார்களுமாக விஸ்தரிக்கப்பட்டது. 1896 ஆம் ஆண்டின் முதலாவது மராத்தன் ஓட்டப் பந்தயத்தில் ஸ்பைரிடோன் லூயிஸ் (Spyridon Louis) என்ற கிரேக்க வீரர் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Panathenaic Stadium
1500 வருடங்களாக தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகளை திரும்பவும் நடத்த பெருமுயற்சி எடுத்த பைரே டீ கௌபேர்ட்டின் (Pierre de Coubertin) அவர்களே முதலாவது தலைவராக அகில உலக ஒலிம்பிக் சங்கத்தில் நியமிக்கப்பட்டு எத்தனையோ பல இடர்களுக்குள்ளும், சிரமங்களுக்குமிடையில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தினார் என்றால் மிகையாகாது. அந்த நேரங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகளைப் பற்றி உலக மக்களால் அதிகம் அறியப்படாமல் இருந்ததால் ஆரம்ப காலங்களில் பல சிரமங்களுக்கிடையில் தான் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தனவாம். 1924 ல் பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளைத் தான் உத்தியோகபூர்வமான வெற்றிகரமான முழுமையான ஒலிம்பிக் போட்டிகள் எனச் சொல்லலாம். இதில் 3000 விளையாட்டு வீரர்கள் 100க்கும் மேற்பட்ட பெண் விளையாட்டு வீராங்கனைகள் உட்பட 44 நாடுகளிலிருந்து கலந்து கொண்டனர். அவ்வருடம் தான் முதலாவது பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. 1925 ஆம் ஆண்டு ஒலிம்பிக் சங்கத்தின் முதல் தலைவரான பைரே டீ கௌபேர்ட்டின் (Pierre de Coubertin) ஓய்வு பெற்றார்.


1914-ம் ஆண்டு பைரே டீ கௌபேர்ட்டி ஒலிம்பிக் கமிட்டியின் 20-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் சங்க மாநாட்டின் போது வெள்ளை நிறத்திலான ஒலிம்பிக் கொடியை நிர்வாகிகளிடம் வழங்கினார்.

1920-ல் ஆன்ட் லெர்ப் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போதுதான் இந்தக் கொடி ஏற்றப்பட்டது. வெள்ளை நிறத்தில் அமைந்திருக்கும் ஒலிம்பிக் கொடியின் நடுவே அழகிய 5 வளையங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிபிணைந்தபடி அமைந்திருக்கும். இது ஒலிம்பிக்கில் பங்குபெரும் 5 கண்டங்களையும் குறிக்கும். மேல்புற வரிசையில் நீலம், கருப்பு, சிகப்பு நிறத்திலும் கீழ்வரிசையில் மஞ்சள், பச்சை நிறத்திலும் வளையங்கள் அமைந்திருக்கும்.

1920-ல் ஏற்றப்பட்ட கொடியைதான் 1984-ம் ஒலிம்பிக் வரை பயன்படுத்தினர். 1988 சியோல் ஒலிம்பிக்கில்தான் பழைய கொடி மாற்றப்பட்டது. புதிய கொடி ஏற்றப்பட்டது.


1896-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

1900-ம் ஆண்டு பாரிசில் நடந்த 2- வது ஒலிம்பிக் போட்டியில் கோல்ப், வில்வித்தை, டென்னிஸ் ஆகிய மூன்று விளையாட்டுகளிலும் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

1928-ல் தான் பெண்கள் தடகள போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது ஒலிம்பிக் பொட்டியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் ஒருசில நாடுகள் சர்வதேச போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ள தடை விதித்து உள்ளன.

1992- பார்சிலோனா ஒலிம்பிக் போட்டிகளின் போது ஈரான் நாட்டு கொடியை ஒரு ஸ்பானிய பெண் ஏந்திவர தேர்வு செய்யபட்டதால் அந்நாட்டு அணியினர்
ரகளை செய்துவிட்டனர்.

அல்ஜிரியா நாட்டு வீராங்கனை ஹஸிபா பவுஸ் மெர்கா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற போதுதிறந்த காலுடன் ஓடி அசிங்கப்படுத்தினார் என்று அந்நாட்டு பழமைவாதிகள் கூறினர். சிட்னி ஒலிப்பிக்கில் பெண்கள் சாதனைகளே அதிகமாக பேசப்பட்டது.


இப்போது ஒலிம்பிக் போட்டிகள் உலகம் முழுவதும் எல்லோராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகள் ஆகிவிட்டது. 2000ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த கோடை கால ஒலிம்பிக் போட்டிகளில் 4000 பெண் வீராங்கனைகள் உட்பட 10,000க்கும் மேற்ப்பட்ட விளையாட்டு வீரர்கள், 200 நாடுகளில் இருந்து கலந்து கொண்டனர், 2004 ஆம் ஆண்டு திரும்பவும் கிரேக்கத்தின் தலைநகரான ஏதென்ஸில் நடத்தப்பட்டது, இதில் 11,000 விளையாட்டு வீரர்கள், 202 நாடுகளிலிருந்து கலந்து கொண்டனர். இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரேக்கத்தின் பெருமையை ஆராதிக்கும் முகமாக தட்டெறிதல் போட்டியை பண்டைய கிரேக்கத்தின் ஒலிம்பியா நகரில் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டு சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் போட்டியில் 10 தங்கப் பதக்கங்களை வென்று அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ் என்பவர் சாதனை படைத்தார்.

Michael Phelps
ஒலிம்பிக் போட்டிகளை வெறும் விளையாட்டுப் போட்டிகளாக பார்க்காமல் கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் இதே ஒலிம்பிக் போட்டிகள் பல வழிகளில் சர்வதேச அளவில் அளப்பரிய மாற்றங்களை ஏற்ப்படுத்த அல்லது அடையாளம் காட்ட வழிவகுத்தது என்றால் மிகையாகாது. உலக அளவில் பெண்ணின ஒடுக்கல், இன, நிற, மத வெறி போன்ற சமூகத்தின் கசடுகளை புறந்தள்ளிய ஒரு பெரிய நிகழ்வுகளாக ஒலிம்பிக் போட்டிகளை கருதலாம்.

ஒடுக்கப்பட்ட பெண்ணினம் தனக்கான திறமைகளை வெளி உலகுக்கு அடையாளம் காட்ட ஒலிம்பிக் போட்டிகள் வழிகோலியது. 1900 ஆம் ஆண்டு முதன் முதல் ஒலிம்பிக் சர்வதேசப் போட்டிகளில் பெண்கள் விளையாட அனுமதிக்கப்பட்டது.


அந்த ஆண்டு சார்லஸ் கூப்பர் என்ற பெண் வீராங்கனை ஒலிம்பிக்கில் டென்னிஸ் விளையாட்டில் தங்கப்பதக்கம் பெற்ற முதல் பெண்ணானார்.


1948 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற ஆபிரிக்க -அமெரிக்க கறுப்பின பெண்மணி என்ற பெருமையை அலீஸ் கோச்மான்( Alice Coachman)என்ற வீராங்கனை சாதித்தார்.

Alice Coachman
1952 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் போலியோ நோயினால் செயலிழந்த முழங்கால் குறைபாட்டுடன் ஒரு பெண் ஆண்களுடன் போட்டியிட்டு வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் தான் லிஸ் கார்ட்டல் (Lis Hartel,) என்ற டென்மார்க் ஈக்குவெஸ்ட்டிரியன் (equestrian)  என்ற குதிரையேற்ற வீராங்கனை. அந் நாட்களில் இவ்விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான பிரிவு இருக்கவில்லை. ஆனால் பிரத்தியேகமாக தன்னை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்த பெண்மணியின் விண்ணப்பம் ஏற்றுகொள்ளப்பட்டு இப்போட்டியில் விளையாடிய ஆண்களுடன் இவரை போட்டியிட அனுமதியளிக்கப்பட்டது. இப்போட்டியின் இறுதிக்கட்டத்தில் இவர் குதிரையிலிருந்து கீழே தவறிவீழ்ந்ததால் தங்கப்பதக்கத்தை தவறவிட நேர்ந்தது. ஆனாலும் இவர் ஒருவர் தான் ஒலிம்பிக் வரலாற்றில் ஒலிம்பிக்கின் பதக்க மேடையை ஆண் விளையாட்டு வீரர்களுடன் பங்கிட்ட ஒரே ஒரு பெண்மணியாவார்.

Lis Hartel
மெக்சிக்கோ நாட்டில் 1968 ஆம் ஆண்டு தான் ஒலிம்பிக்கின் வரலாற்றில் முதன் முதலாக நோர்மா என்ரிக்குவெட்டா பாஸ்சிலியோ (Norma Enriqueta Basilio) என்ற மெக்சிக்கோ நாட்டுப் பெண் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிய முதல் பெண் வீராங்கனை என்ற பெருமைக்குரியவரானார்.

Norma Enriqueta Basilio
முதன் முதலாக 1984 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தான் பெண்களுக்கான மராத்தன் ஓட்டப் போட்டி சேர்க்கப்பட்டது. இப்போட்டியில் தங்கப்பதக்கத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஜொவான் பெனொய்ட் ( Joan Benoit) என்ற பெண் பெற்றதன் மூலம் ஒலிம்பிக்கின் முதல் மராத்தன் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.


ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை நடந்தே தங்கம் வென்றவர்.

இந்த சுவாரசிய சம்பவம், 1908ம் வருட ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்றது. Wyndham என்கின்ற இவர், முதலில் நன்றாகவே போட்டியில் ஓடிய போதும், இவருடன் ஓடிய ஒருவர் இவரை முழங்கையால் இடித்துத் தள்ளியதால், போட்டி மீண்டும் வைக்கப்பட்டது. இவரை முழங்கையால் இடித்தவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். போட்டியில் இருந்த மற்றைய இருவரும் தாங்களாகவே விலகிக் கொண்டனர். இதனால் போட்டி எதுவுமின்றி களமிறங்கிய இவர், நடந்தே தங்கத்தை வென்றார்.

Wyndham
ஒலிம்பிக் போட்டிகள் பல சமயம் அரசியல், மனித உரிமை மீறல் போன்றவற்றுக்கு எதிரான எதிர்ப்பையும் பல சமயங்களில் காட்ட உதவியிருக்கிறது.

1936 ஆம் ஆண்டு அடல்ப் ஹில்டரின் ஆட்சிக்காலத்தில் ஜேர்மனியில் நடந்த ஒலிம்பிக் போட்டி உலகத்தின் கவனத்தை திசைதிருப்பிய ஒன்று. அகில உலக ஒலிம்பிச் சங்கத்தினதும் , மற்றைய நாடுகளினதும் வேண்டுகோளை ஹிட்லர் நிராகரித்து தனது நாஸிக் கொள்கையை அங்கும் நிலை கொள்ள முயன்ற ஒரு அடையாளம். ஹிட்லர் தனது நாட்டு வீரர்களின் வெற்றியை நாஸிக் வெற்றியாக உலகுக்கு காட்ட விரும்பினார். ஆனால் அமெரிக்காவின் ஜெஸி ஓவ்ன்ஸ் (Jesse Owens) என்னும் கறுப்பின வீரர் 4 தங்கப்பதக்கங்களை வென்றது ஹிட்லரின் முகத்தில் கரி பூசியதற்கு சம்மாக அவ் வெற்றி இன்றளவும் கருதப்படுகிறது. இப்போட்டியின் வெற்றி மூலம் ஜெஸி அடிடாஸ் கம்பனியின் விளம்பரதார மாடலாக பிரபலமானது மட்டுமல்ல இவர் தான் முதன் முதலாக விளம்பர உலகில் அடையாளம் காட்டப்பட்ட முதல் ஆபிரிக்க - அமெரிக்க கறுப்பின ஆணுமாவார். அவருடைய நான்கு தங்கப்பதக்கம் வென்ற சாதனையை 1984ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கார்ல் லூயிஸ் இதே போட்டிகளில் வென்று முறியடித்தார்.

Jesse Owens
1940 & 1944 ஆம் ஆண்டுகளில் நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் இரண்டாம் உலகப் போரின் காரணமாக நடைபெறவில்லை.

1968 ஆம் ஆண்டு மெக்சிக்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வென்ற தடகள வீரர்களான டொமீ ஸ்மித் (Tommie Smith ) , ஜோன் கார்லோஸ்(John carlos) ஆகிய இருவரும் அமெரிக்காவில் அப்போது நடந்து கொண்டிருந்த நிறவெறிக்கும், கறுப்பினமக்களின் மனித உரிமை ஒடுக்கலுக்கும் எதிராக தமது ஆட்சேபத்தை அமெரிக்காவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பதக்க மேடையில் தெரிவித்தார்கள்.ஒலிம்பிக் போட்டிகள் தற்போது ஊனமுற்றவர்களுக்காகவும் பிரத்தியேகமாக நடத்தப்படுவது எந்தவொரு மனிதப் பிறவியும் எத்தகைய வழியிலும் சாதிக்கும் வல்லமை படைத்தவர்கள் என்பதை நிரூபிக்க இது உதாரணமாக இருக்கின்றது எனலாம்.

Jesse Owens
இப்படி பல வழிகளிலும் சமூக விழிப்புணர்வுக்கு பெரிதும் வழிகோலும் இப்போட்டிகளுக்கு கூட தற்போது உலகமெங்கும் பரவியிருக்கும் பயங்கரவாதம் அச்சுறுத்தலாக இருப்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இருப்பினும் விளையாட்டுத் துறை என்பது சர்வதேச அளவில் தேசப்பற்று ஒன்றை மட்டுமே முன்னிறுத்தி மற்றைய விரோதங்கள், வேற்றுமைகள், முரண்பாடுகளை கடந்த ஒரு அற்புதமான களம்.

இதுவரை ஒலிம்பிக் போட்டி நடந்த இடங்கள்:

1896 ஏதென்ஸ், கிரேக்கம் 
1900 பாரிஸ், பிரான்சு
1904 செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா 
1908 லண்டன், இங்கிலாந்து
1912 ஸ்டாக்ஹோம், சுவீடன் 
1920 ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
1924 பாரிஸ், பிரான்சு 
1928 ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
1932 லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா 
1936 பெர்லின், ஜெர்மனி
1948 லண்டன், இங்கிலாந்து 
1952 ஹெல்சின்கி, பின்லாந்து
1956 மெல்போர்ன், ஆஸ்திரேலியா 
1960 ரோம், இத்தாலி
1964 டோக்கியோ, ஜப்பான் 
1968 மெக்ஸிகோ சிட்டி, மெக்சிக்கோ
1972 ம்யூனிச், ஜெர்மனி 
1976 மாண்ட்ரீல், கனடா
1980 மாஸ்கோ, சோவியத் ஒன்றியம் 
1984 லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா
1988 சியோல், தென் கொரியா 
1992 பார்சிலோனா, எசுப்பானியா
1996 அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா 
2000 சிட்னி, ஆஸ்திரேலியா
2004 ஏதென்ஸ், கிரேக்கம் 
2008 பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு
2012 லண்டன், ஐக்கிய இராச்சியம் 
2016 ரியோ டி ஜனேரோ, பிரேசில்

உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை.

இன்றைய ஒலிம்பிக்ஸ் 1896ல் ஏதென்ஸ் நகரில் தான் துவங்கியது. கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 2016ம் ஆண்டில் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனேரோ நகரில் தற்போது நடந்துகொண்டு இருக்கிறது. அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் 2020ம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடக்கவுள்ளது.

பனி ஒலிம்பிக் போட்டிகள் நடந்த இடங்கள்

1924 சாமொனிக்ஸ், பிரான்ஸ் 
1928 செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து
1932 ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா 
1936 கார்மிஷ்ச், ஜெர்மனி
1948 செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து 
1952 ஆஸ்லோ, நார்வே
1956 கார்டினா, இத்தாலி 
1960 ஸ்குவாவ் வேலி, ஐக்கிய அமெரிக்கா
1964 இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா 
1968 க்ரெநோபில், பிரான்ஸ்
1972 சாப்போரோ, ஜப்பான் 
1976 இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா
1980 ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA 
1984 சாராஜெவோ, யுகோஸ்லாவியா
1988 கால்கேரி, கனடா 
1992 ஆல்பர்ட்வில்லே, பிரான்ஸ்
1994 லில்லேஹாம்மர், நார்வே 
1998 நாகானோ, ஜப்பான்
2002 சால்ட் லேக் சிட்டி, ஐக்கிய அமெரிக்கா 
2006 தோரீனோ, இத்தாலி
2010 வான்கூவர், கனடா
2014 சோச்சி, இருசியா

உலகப் போர் சமயங்களில் மட்டும் (1940 & 1944) பனி ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.

1992 வரை பனி ஒலிம்பிக் போட்டிகளும் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளும் ஒரே ஆண்டிலேயே நடைபெற்று வந்தது. இதை மாற்ற வேண்டி 1994ல் மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக் போட்டிகளை நடத்தினார்கள். அதன்படி தற்பொழுது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து 2 ஆண்டுகள் கழித்து பனி ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏன் ஒலிம்பிக் போட்டிகள் நடை பெறுகின்றன என தெரிய வேண்டுமா? இங்கே கிளிக் செய்து படிக்கவும்.

No comments:

Post a Comment


No comments:

Post a Comment