Thursday 7 April 2022

KOMALIGAL -CEYLON NATIONAL TAMIL CINEMA

KOMALIGAL -CEYLON NATIONAL TAMIL CINEMA




இலாபத்தை அள்ளித்தந்த கோமாளிகள்

இலங்கை தேசிய தமிழ் சினிமா வரலாறு

கலாபூஷணம், பேராதனை



ஏ. ஏ.ஜுனைதீன்


இன்று ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு ‘அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே... கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே...’ என்ற இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன வர்த்தக சேவையில் ஒலிபரப்பாகி வந்த குறியிசைப் பாடலை மறந்திருக்க மாட்டார்கள். எழுபதுகளின் நடுப்பகுதியில் பிரதி ஞாயிறு தோறும் பிற்பகல் ஒன்றரை மணியளவில் இப் பாடலுடன் மக்கள் வங்கியின் அனுசரணை நிகழ்ச்சி தொடங்கும். டி.வி. இல்லாத அக் காலத்தில் ஏறக்குறைய அனைத்து ரேடியோ வைத்திருந்த குடும்பங்களும் தவறாமல் கேட்ட நிகழ்ச்சி இது.


மரிக்கார் ராமதாஸ் எழுதிய கோமாளிகள் கும்மாளம் என்ற நகைச் சுவைத் தொடர் இதில் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக ஒலிபரப்பானது. மரிக்கார் ராமதாஸ் மரிக்கார் என்ற வேடத்திலும் அப்புகுட்டி, உபாலி என முஸ்லிம், சிங்கள மற்றும் தமிழ் கதாபாத்திரங்களின் நகைச்சுவைப் பேச்சுகள் மக்களின் உள்ளம் கவர்ந்தன. புதிய காற்றின் வெற்றியையடுத்து, கோமாளிகள் கும்மாளத்தை நகைச்சுவை படமாக எடுத்தால் இலாபம் பார்க்கலாம் அல்லவா? என்ற யோசனை மரிக்காருக்கு ஏற்பட்டது. அத்திரைப்படத்தில் முஸ்தபா என்ற ஒருவரும் நடித்தார். அவருக்கு நான்காம் குறுக்குத் தெருவில் பல சரக்கு மொத்த வியாபாரம் செய்து வந்த மொஹமட் முதலாளி நல்ல நண்பர். முஸ்தபாவும் ராமதாசும் மொஹமட்டை அணுகி படம் எடுக்கும் யோசனையை தெரிவித்தார்கள். அப்போது ராமதாஸ் கொலனியல் மோட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.


மொஹமட் ஒரு கோமாளி ரசிகர். அவருக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. படத்தயாரிப்பில் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டார். அடுத்ததாக ராமதாஸ் கோமாளிகள் படத்துக்கான ஒரு கதைக் கருவை உருவாக்கி வசனம் அமைத்தார்.


கோமாளிகள் ஒரு வீட்டில் குடியிருக்கிறார்கள். அந்த வீட்டின் உரிமையாளர் பெயர் டேவிட். ஒரு கிறிஸ்தவர். அவளது மகளாக தோன்றியவர் கமலினி செல்வராஜன். அவரை இந்துவான பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் காதலிக்க டேவிட்டாக நடித்த நடிகர் கே. சந்திசேகரன் எதிர்க்கிறார். இக் காதல் எப்படி கோமாளிகளின் உதவியால் கை கூடுகிறது என்பதுதான் கதை. இப்படம் ஒரு மாத காலத்தில் படமாக்கப்பட்டது. வத்தளை சமுத்ரா ஹோட்டலில் தான் பிரதான படப்பிடிப்பு நடைபெற்றது. காதல், பாடல் காட்சிகளுக்காக வெளிப்புற படப்பிடிப்பு நடைபெற்றது. இலங்கை அழகை வர்ணிக்கும் ஒரு அழகான பாடல் படத்தில் இடம்பெற்றிருந்தது. இதை சில்லையூர் எழுதியிருந்தார்.


ராமதாஸ், என்னடி ராக்கம்மா என்ற பாடலை ஒற்றியதாக ‘சித்தி பீபீ’ என்ற பாடலை எழுதி அழகாகப் பாடியிருந்தார். இது பிரபலமான நகைச்சுவைப் பாடலாக அக்காலத்தில் பேசப்பட்டது. 1976ஆம் ஆண்டு கோமாளிகள் வெளியானது. ஐந்து லட்சத்துக்கும் குறைவான பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்ட திரையோவியம் இது. இப் படம் செல்லமஹால் தியட்டரில் 96 நாட்களும் வெள்ளவத்தை பிளாஸா தி​ேயட்டரில் 56 நாட்களும் யாழ்ப்பாணம் வின்சர் தியட்டரில் 54 நாட்களும் ஓடியது. நல்ல இலாபம் சம்பாதித்தது. தமிழ் படம் எடுத்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையைத் தந்தது. ஆனந்த விகடனில் வெளியாகி இலட்சக்கணக்கான வாசகர்களின் அபிமானம் பெற்ற தில்லானா மோகனாம்பாள் எப்படி படமாகவும் வெளியாகி சக்கைபோடு போட்டதோ அப்படியே கோமாளிகளும் ரேடியோவில் புகழ்பெற்றது போலவே திரைகளிலும் வெற்றிபெற்றது.



இப் படம் இன ஒற்றுமையை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது விசேடமான அம்சம். இஸ்லாமியரான பி.எஸ். அப்துல் ஹமீத் ஐயராக பட்டை நெற்றி, பூணூம் என படத்தில் வலம் வர, பிராமணரான ராமதாஸ் இஸ்லாமியராக வேடம் பூண்டு சக்கை போடுபோட்டார். சிங்கள உபாலியாக செல்வசேகரன் நடித்திருந்தார். இதை அன்றைய ரசிகர்கள் விகல்பமின்றி ரசித்து சிரித்தார்கள். இன்றைக்கு பூணுல் பிராமணரான ஒருவர் முஸ்லிமாகவும், பீ.எச். அப்துல் ஹமீத் பட்டை தரித்த இந்துவாகவும் நடிப்பது சாத்தியமா தெரியவில்லை! அவ்வளவுக்கு நாம் பின்னேறியிருக்கிறோம்!


கோமாளிகள் படச் சுருள் இப்போது இல்லை. ராமதாஸ் தயாரித்த ஏனைய படங்களின் மூலப் பிரதிகளும் இல்லை. ஆனால், கோமாளிகள் பட சீ.டீ. ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு கொடுக்கப்பட்டதாகவும் அங்கே அந்த இறுவட்டு இருக்க வேண்டும் என்றும் நண்பர் நடிகர் கே. சந்திரசேகரன் கூறுகிறார்.


ராமதாஸ் இதன் பின்னர் மரிக்கார் ராமதாஸ் என்றே அழைக்கப்பட்டார்.


சரி, மரிக்கார் என்ற இஸ்லாமிய பாத்திரத்தை ராமதாஸ் எங்கே பிடித்தார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?


அநேகமாக அவர் ரொஸாரியோ பீரிஸ் என்ற நாடக நடிகரிடமிருந்தே இதை கொப்பி பண்ணியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கொட்டாஞ்சேனை குணானந்த மாவத்தையில் வசித்து வந்த ரொசாரியோ பீரிஸ் நாடகங்களில் நடித்து வந்தார். நகைச்சுவை பாத்திரங்களை நன்றாக கையாள்வார். அவர் நாடகங்களில் மரிக்கார் என்ற இஸ்லாமிய பாத்திரத்தை வெகு சிறப்பாக செய்து வந்தார். மஞ்சள் குங்குமம் படத்திலும் அவர் நடித்திருந்தார். அவர் மறைந்த பின்னர் அவரது மரிக்கார் பாத்திரத்தை ராமதாஸ் எடுத்துக் கொண்டு வடிவம் கொடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.


ஈழத்து தமிழ்ப்பட வரலாற்றில் கோமாளிகள் முக்கியமான படைப்பு.


No comments:

Post a Comment